ஞாயிறு, 20 மார்ச், 2011

போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்ட இரத்மலானை நந்தீஸ்வரம் ஆலயம்




போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்ட இரத்மலானை நந்தீஸ்வரம் ஆலயம்

தமிழ் மூவாயிரம் பாடிய சுந்தரமூர்த்தி நாயனாரால் ‘சிவபூமி’ எனப் போற்றப்பட்ட நாடு இலங்கைத் திருநாடு- நாற்புறமும் கடலால் சூழப்பட்ட இந்தப் புண்ணிய பூமியில் கொழும்பு மாவட்டத்தில் இரத்மலானை ஜயசுமனாராமயில் அமைந்துள்ளது திரு நந்தீஸ்வரம்.

இந்தத் திருநந்தீஸ்வரத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வருபவர் அருள்மிகு ஸ்ரீசொர்ணா அம்பிகா சமேத ஸ்ரீ நந்தீஸ்வர சுவாமி. திருக்கேதீஸ்வரம், திருக்கோணஸ்வரம், முன்னீஸ்வரம், தொண்டீஸ்வரம் ஆகிய தொன்மைமிகு சிவாலயங்களுடன் இந்த இரத்மலானை திருநந்தீஸ்வரமும் இணைந்து பஞ்ச ஈஸ்வரங்களைக் கொண்ட திருநாடாக இலங்கைத் திருநாடு விளங்குகின்றது.

இந்த ஆலயம் யாரால், எப்பொழுது எழுப்பப்பட்டது? எவ்வாறு தோன்றியது? என்பதை கண்டறியக்கூடிய சான்றுகள் இல்லாததால் இது ஆதியும் அந்தமும் இல்லாத ஆலயமாக விளங்குகிறது.

எனினும் கோட்டை அரசனாக விளங்கிய ஆறாம் பராக்கிரமபாகு காலத்தில் அதாவது 1454 ஆம் ஆண்டு தொடகமுவே ஸ்ரீ ராகுல தேரர் என்ற சிங்கள பெளத்த துறவி ‘சலலிஹினி சந்தேசய’ என்ற சிங்கள மொழி காவியத்தில் இந்த நந்தீஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும் பூஜை, வழிபாட்டு முறைபாடுகளை பற்றி பாடியுள்ளார்.

பக்தர்கள் விரும்பும் இனிமையான தமிழ் மொழியில் இத்தலத்தின் மீது தோத்திரங்கள் பாடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனை அடிப்படையாக வைத்து பார்க்கும்போது தொன்மையும் பழமையும் மிகு இத்திருத்தலம் ஆறாம் பராக்கிரமபாகு காலத்திற்கு முற்பட்டது என்பதுடன் இந்த அரசரது காலத்தில் இது பெருமையும் சிறப்பும் பெற்றும் விளங்கியது என்பது புலனாகிறது.

இரத்மலானையிலிருந்து கடற்கரையோரமாக சுமார் ஒன்றரை கிலோ மீற்றர் தொலைவில் எழுந்தருளி உள்ளது இந்த நந்தீஸ்வரம் எனும் திருத்தலம்.

இலங்கையில் உள்ளவர்களுக்கும், ஏன் கொழும்பில் உள்ளவர்களுக்கும் இரத்மலானையில் உள்ளவர்களுக்கும் கூட இவ்வாறானதொரு நந்தீஸ்வரர் ஆலயம் இருப்பது இங்கு தெரியாமல் இருக்கலாம்.

1515 ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்த போர்த்துக்கேயர் திருக்கேதீஸ்வரம், திருக்கோணேஸ்வரம், முன்னீஸ்வரம், தொண்டீஸ்வரம் போன்ற பழம்பெரும் சிவாலயங்களை சிதைத்ததுடன் 1518 ஆம் ஆண்டு இந்த நந்தீஸ்வரத்தையும் சேதமாக்கி அழித்தனர்.

அங்கு பூஜைகள் நடத்தி வந்த குப்புசாமி என்ற குருக்களையும் அவரது குடும்பத்தினரையும் அதே இடத்திலேயே போர்த்துக்கேயர் கொலை செய்துள்ளனர்.

அவரது மகனை மதம் மாறுமாறு கூறி பலாத்காரமாக இழுத்துச் சென்றனர். அதன்பின் அப்பகுதியில் ‘பெர்னாண்டோ’ என்ற பரம்பரை பெயருடன் வாழ்ந்து வந்த சிங்களவர் இந்த ஆலயத்தை பராமரித்து வந்துள்ளார்.

கலைநயம் மிகு தெய்வங்களின் திருவுருவங்களும் சிற்பங்களும் சிறப்புற விளங்க வேண்டிய இத்திருத்தலத்தில் போர்த்துக்கேயர் இத்திருத்தலத்தை நிர்மூலமாக்கியதை நினைவுறுத்தும் வண்ணம் சித்திரங்கள் வரையப்பட்டுள்ளன.

இராமாயண காலத்தில் இராமபிரான் வழிபட்ட சிவத்தலமாக இந்த நந்தீஸ்வரர் திருத்தலம் விளங்குகிறது.

குளுகுளுவென்ற கடல்காற்று வீசி வரும் மிகவும் அமைதியான சூழலில் இந்தத் திருத்தலம் அமைந்துள்ளது. இந்த ஆலயம் மிகவும் பழமையும் தொன்மையும் வாய்ந்த ஆலயம் என்பதற்கு சான்றாக விளங்குகிறது இந்த ஆலயத்தின் தல விருட்சமாகிய ஆலமரம். இந்த ஆலமரத்தின் அடிவாரத்திலே வீற்றிருந்து அருள் பாலித்து வந்தவர் வினை தீர்க்கும் விநாயகப் பெருமான்.

இந்தத் தல விருட்சமாகிய ஆல மரத்தையும் ஆலயம் பற்றிய சான்றுகளையும் வைத்துப் பார்க்கும்போது ஐந்தாறு நூற்றாண்டுகள் பழமைவாய்ந்ததாக இவ்வாலயம் விளங்குகிறது. கொழும்பு ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தில் ஐம்பது வருடங்களுக்கு மேல் பிரதம சிவாச்சாரியராக இருந்து சிவனுக்கு பூஜை புனஸ்காரங்களை செய்து வந்தவர் குஞ்சிதபாத குருக்கள். இவரது கனவில் தோன்றி, தனக்கு ஆலயம் எழுப்புமாறு கூறிய எம்பெருமானாகிய சிவபெருமான் இருப்பது இந்த ஆலய வளாகத்தில்தான் என்று கூறுப்படுகிறது.

இந்த ஆலயத்தை பராமரித்து வந்த பெர்னாண்டோ குடும்பத்தினரின் அனுமதியுடன் 1980 ஆம் ஆண்டு சிவன் ஆலயம் அமைப்பதற்கு நிலத்தை அகழ்ந்தபோது ஆவுடையாகும் உடைந்த நிலையிலுள்ள நந்தியும் சிவலிங்கத்தின் உடைந்த மேல் பகுதியும் மேலும் பல கோயிற் படிமங்களும் கிடைத்தன. இவ்வாறு அகழ்ந்தபோது கிடைத்த அம்மன் சிலையொன்று தொல்பொருள் காட்சியகத்தில் உள்ளது. அகழும்போது ஏற்பட்ட தாக்கத்தினால் அத்திருவுருவச் சிலை சேதமுற்றது.

தாமரை மலரின் மீது அமர்ந்து அருளாட்சி புரியும் அம்மனை ஒத்ததாக அத்திருவுருவச் சிலை அமைந்துள்ளது. அத்திருவுருவச்சிலையை ஆராய்ந்து பார்த்த உதவித் தொல்பொருள் ஆணையாளர் செனரத் திசாநாயக்க அத்திருவுருவச்சிலை 11, 12 ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தது என சான்றுபடுத்தியுள்ளார். இதற்கான சான்றிதழும் வழங்கியுள்ளார். இதனை வைத்து பார்க்கும்போது ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட தொன்மை வாய்ந்த பெருமையைக் கொண்ட சிவத்தலம் இது என்பது புலனாகிறது.

ஆதிகால எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் இது ஆதிச் சிவத்தலமாக உள்ளது என்பதற்கு சான்று பகிர்கின்றது. இந்த கல்வெட்டுக்கள் இன்னும் அப்பகுதிகளை அலங்கரித்த வண்ணமுள்ளன. இத்திருத்தலம் அமைந்துள்ள பகுதியில் கோவிலுக்கு அருகில் ஒரு மிகப் பெரிய குளம் ஒன்று இருந்ததாகவும் அத்தீர்த்தக் கேணி இப்பகுதி மக்களின் தீர்த்தமாக விளங்கியதாகவும் பெர்னாண்டோ குடும்பத்தினர் குறிப்பிடுகின்றார்கள்.

சிவாலயம் இருந்த இந்த இடத்திலே 1717 ஆம் ஆண்டு தமிழ்க் கடவுளான முருகப் பெருமானுக்கு ஆலயமொன்று அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இது நந்திதேவருடன் விளங்கிய முருகப் பெருமானின் ஆலயமாக விளங்கியதால் இதனை இப்பகுதியில் உள்ள சிங்களவர்கள் கொனாபெந்தி கத்தரகம தேவாலய என்று அழைக்க தலைப்பட்டனர். இன்று இதனை கோணாகோயில் என்று அழைக்கின்றனர்.

1984 ஆம் ஆண்டு நிலத்தை அகழ்ந்தபோது கிடைத்த ஆவுடையார் இவ்வாலயத்தின் மூலமூர்த்தியானார். பெர்ணான்டோவுக்குப் பின். இவ்வாலத்தை அவரது பரம்பரையிலே வந்த பெளத்த மதத்தைச் சார்ந்த காமினி பெர்ணாண்டோ பராமரிந்து வந்தார்.

2004 ஆம் ஆண்டு ஆனி மாதம் 25 ஆம் திகதி ஆனி உத்திரத்தன்று பழமையான ஆவுடையாருக்கு பதிலாக கருங்கல்லால் உருவாக்கப்பட்ட புதிய சிவலிங்கம் பிரதிஷ்டை செய்ய திட்டமிடப்பட்டது. இந்த சிவலிங்கத்தோடு நந்தி, பலிபீடம் என்பவற்றையும் பிரதிஷ்டை செய்ய திட்டமிடப்பட்டது. இது அரும்பெரும் கைங்கரியத்தை நிறைவேற்ற காரைநகரைச் சேர்ந்த கனகசபை நிர்மலகாந்தன் திருவுளம் கொண்டு பொறுப்பேற்றுக்கொண்டார்.

திருநந்தீஸ்வரத்தில் காணப்பட்ட பழமையான கலைநயம் கொண்ட கருங்கல்லான வாயிற் தூண்கள் ஆலயத்திற்கு அருகிலுள்ள புகையிரத வேலைத் தளத்தில் புதையுண்டு போனதாகவும் ஆலயத்தின் தீர்த்தக் கேணியாகத் திகழ்ந்த திருக்குளம் மூடப்பட்டுள்ளதாகவும் ஆலய வரலாறுகள் பறைசாட்டுகின்றன.

ஆலயத்தின் தல விருட்சகமாகத்திகழும் ஆலமரம் தனக்கே உரிய கம்பீரத்துடன் சிவனின் திருவருளை பெற்றுக்கொண்ட பெருமையோடு வளங்குவதை இன்னும் நாம் எம் கண்களால் காணலாம். இந்த ஆலமரத்தின் அடிவாரத்திலே ஆனைமுகன் விநாயகப் பெருமான் வீற்றிருந்து அருள்பாலிக்க காரணகர்த்தாக்களாக விளங்கியவர்கள் பெளத்த பெருமக்கள்.

இவர்கள் தங்களது இந்தத் திருப்பணிகளை விநாயகரோடு நிறுத்திக் கொள்ளாது நவக்கிரக நாயகர்களையும் அழைத்து அவர்களது திருவருளையும் பெற்றுக்கொள்வதற்காக நவக்கிரகங்களையும் பிரதிஷ்டை செய்யத் தலைப்பட்டனர். இவ்வாறு இஷ்ட மூர்த்திகளான பரிபாலகர்களுக்கு தனித்தனி திருக்கோயில்கள் எழுப்பியதுடன் இந்த உலகை இயக்கும் சக்தியாகவும் எல்லாம்வல்ல சிவனின் சரிபாதியாகவும் விளங்கும் பெளத்தர்களின் பத்தினி தெய்யோ வான அம்மனுக்கும் திருக்கோயில் அமைத்தனர்.

பெளத்தர்கள் ‘கத்தரகம தெய்யோ’ என்று போற்றித் துதிக்கும் முருகனுக்கும் இங்கு திருக்கோயில் அமைத்து வழிபடத் தொடங்கியதால் இவ்வாலயத்தின் பெருமை பெளத்தர்கள் மத்தியிலும் மேலோங்கி விளங்கியது. காரைநகரைச் சேர்ந்த திருமதி இராஜலட்சுமி கனகசபை குடும்பத்தினர் இவ்வாலய திருப்பணிகளை செவ்வனே நிறைவேற்றி எதிர்வரும் 2011.04.10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.21 மணிக்கு கும்பாபிஷேகம் நடத்தவுள்ளனர்.

2011.04.09 ஆம் திகதி சனிக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை பக்தர்கள் எண்ணெய் சாத்துதல் இடம்பெறும். கும்பாபிஷேகத்தை தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டலாபிஷேகம் நடைபெறும். 8 ஆம் திகதி இரவு 11.50 மணி முதல் யந்திர விம்பஸ்தாபனம், அக்ஷட பந்தனம் தைலாப்பியங்கம் என்பன நடைபெறும்.

ஆலய நிர்மாணத் திருப்பணிகளை தமிழ்நாட்டைச் சேர்ந்த விஸ்வஸ்ரீ சீ. எஸ். சந்தனக்குமார் ஆசாரியும் திருத்தலத் திருப்பணியை முகத்துவாரம் தியாகராஜா சற்குணநாதன் ஆசாரியும் செய்துள்ளனர். சிவஸ்ரீ குஞ்சிபாதக் குருக்கள், யாழ். இணுவில் காயத்திரி குருகுல அதிபர் சிவஸ்ரீ தானு மஹாதேவக் குருக்கள், பொன்னாலை வரதராஜப் பெருமாள் தேவஸ்தானத்தின் பிரதம குரு சிவஸ்ரீ க. ச. சோமாஸ் கந்தக்குருக்கள் ஆகியோரின் அருளாசிகளோடு கொழும்பு பொன்னம்பலவானேஸ்வரர் தேவஸ்தான குருக்கள் சிவஸ்ரீ சி. சந்திரகுமாரக் குருக்கள் தலைமையில் இவ்வாலய கும்பாபிஷேகம் நடைபெறும்.

சிவஸ்ரீ பாலசுப்பிரமணியக் குருக்கள் (பொன்னம்பலவானேஸ்வரர் கோவில்), சிவஸ்ரீ சி. பாலசண்முகக் குருக்கள் (சண்டிலிப்பாய்), சிவஸ்ரீ க. சிவராஜக் குருக்கள் (வவுனியா), சிவஸ்ரீ பத்மஜெயராமக் குருக்கள் (உடப்பு திரெளபதி அம்மன் ஆலய பிரதம குரு), சிவஸ்ரீ சுகுமாரக் குருக்கள் (வவுனியா) ஆகியோர் கும்பாபிஷேக கிரியைகளை நடத்துவார்கள்.

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவிலின் மஹோற்சவ குரு சிவஸ்ரீ சதாயோகீஸ்வரக் குருகள் சர்வபோதகம் செய்ய, வவுனியா பண்டாரிகுளம் அம்மன் கோவில் பிரதமருக்கு ப்ரம்மஸ்ரீ செளந்தரராஜக் குருக்கள், கொழும்பு சிவஸ்ரீ ந. பிரதீபக் குருக்கள் ஆகியோர் சர்வ சாதகர்களாகவும் பிரம்மஸ்ரீக்களான சிவா சர்மா, சுரேஷ்சர்மா, சுதாசர்மா, ரிசிகேச சர்மா ஆகியோர் உபசாதகர்களாகவும், கிரியைகளை நடத்த உறுதுணையாவார்கள். சுவிஸ் பொன்னம்பலவானேஸ்வரர் கோவில் பிரதம குரு சிவஸ்ரீ வை. பாலசுந்தரக் குருக்கள், காரைநகர் மணற்காடு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ நா.

ஞானசம்பந்தக் குருக்கள், முகத்துவாரம் சிவன் கோவில் பிரதம குரு சிவஸ்ரீ செந்தில் நாதக் குருக்கள் ஆகியோரின் அருளாசியோடு இடம்பெறும் இக் கும்பாபிஷேகத்தில் ஸ்ரீ பொன்னம்பலவானேஸ்வரர் ஆலய ஓதுவார் ஆசிரியர் எஸ். உமாகாந்தன் திருமுறை பாராயணம் ஓதுவார். கே. என். சந்தன கிருஷ்ணனும் எம். வடிவேல் குழுவினரும் மங்கள வாத்தியம் இசைப்பார்கள்.


கே. ஈஸ்வரலிங்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என்றும் குறிப் பிடப்படுகிறது. பொதுவாக, ஆலய அமைப்பின் பிரமாண்ட தன்மையை ஒப்பிடும்போது கருவறை என்பது அளவில் சிறியதாக அமைக்கப்படுகிறது. அவ்வாறு அமைப்பதன் பின்னணியில் பல்வேறு சூட்சுமங்களும், தேவ ரகசியங்களும் அடங்கியிருப்பதாக ஆன்மிக சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதாவது, சம்பந்தப்பட்ட தெய்வ மூர்த்திக்குரிய ஆகம கணக்குவழக்கு முறைகளின்படி கோவிலுக்குரிய பிரகாரங்கள், மொத்த நீளம், அகலம் மற்றும் உயரம் ஆகியவை துல்லியமாக கணக்கிடப்பட்டு அமைக்கப்படும். குறிப்பாக, பிரபஞ்ச சக்திகளை கிரகிக்கும் மையப்பகுதியாக கருவறை அமைக்கப்பட்டது. அறிவியல் பார்வையில் கருவறை அமைப்பை விளக்குவதென்றால், பிரபஞ்சத்தில் உள்ள சக்தி அலைகள் அனைத்தும் ஒரு வகை மின்னூட்டம் பெற்ற துகள்களாக உலகம் முழுதும் இயங்கி வருகின்றன. அந்த அலை வீச்சுகள் கோவில் கரு வறைக்கு மேற்புறம் உள்ள விமானம் மீது பொரு த்தப்பட்டுள்ள சிறந்த மின் கடத்தியான செம்பால் செய்யப்பட்ட கலசங்களால் ஈர்க்கப்படுகின்றன. அவை கருவறைக்குள் இருக்கும் மூலவர் மூலமாக அதன் கீழ் அமைக்கப்பட்டுள்ள செம்பு யந்திரங்களில் நிலை பெறுகின்றன. அன்றாட பூஜைகளி ன்போது தக்க மந்திர சப்த அலைகளின் மூலமாக ஆலயம் முழுவதும் பரவி, அனைவருக்கும் நன்மைகளை அளிப்பதாகவும் ஆன்மிக பெரியோர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். மேலே குறிப்பிட்ட பிரபஞ்ச சக்தி அலைகளின் இயக்கம் சீராக அமைய வேண்டுமானால், தக்க பூகோள அமைப்பு உள்ள பகுதியில் கோவில்களை அமைக்கவேண்டும் என்று உணரப்பட்டது. அதன் அடிப்படையில் கோவில்கள் நிர்மாணிக்கும்போது, கருவறை அமைப்பில் பல்வேறு நுட்பமான வழிமுறைகளை நமது முன்னோர்கள் கடைப்பிடித்தனர். கோவில் கட்ட தேர்வு செய்யப்படும் இடத்தில் கருவறை அமைய உள்ள குறிப்பிட்ட பகுதியில் தானியங்கள் விதைக்கப்படும். மூன்று நாட்களுக்குள் அவை முளைத்தால் அந்த இடம் உத்தமமான இடம் என்றும், ஐந்து நாட்களுக்குள் முளைத் தால் அது மத்திய தரமான இ டமாகவும், அவை முளைப்பதற்கு ஆறு நாட்களுக்கும் மேல் ஆகும் பட்சத்தில் அந்த இடம் பொருந் தாது என்றும் கணிக்கப்பட்டன. மேலும், கருவறையின் தள மட்டத் திற்கு கீழே வைரம் உள்ளிட்ட நவரத்தினங்கள், ஐம்பொன் அல்லது செம்பு தகடுகள், சலித்து எடுக்கப்பட்ட சுத்தமான ஆற்று மணல் போன்றவை போட்டு நிரப் பப்படுவது வழக்கம். ஒரு சில இடங்களில் தேன் கலந்த சுண் ணாம்பு மற்றும் இதர வாசனாதி திரவியங்கள் கொண்டு அமைக் கப்பட்ட கருவறைகளும் இருப்பதாக தகவல்கள் உள்ளன. கர்ப்ப கிரகத்தின் மொத்த அளவை 1 தண்டம் என்று கணக் கிடப்பட்டு, அதன் அடிப்படையில் ஆலயத்தின் இதர பகுதிகளுக்கான அளவுகள் கணக்கிடப்பட்டு அமைக்கப்பட்டன. உள் பிரகா ரங்கள் மற்றும் வெளிப்பிரகாரங்கள் ஆகியவை கரு வறையின் மொத்த அளவுக்கேற்ப கணக் கிடப் பட்டு கட்டமைக்கப்படும். மன்னர்கள் காலத்தில் கோவில்கள் சிற்ப சாஸ்திர முறையில் மாடக் கோவில், பெருங்கோவில், கரக்கோவில், ஞாழற் கோவில், கொகுடி கோவில், இளங்கோவில், மணிக்கோவில், ஆலக்கோவில் என்று எட்டு விதங்களாக அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கோவிலின் கருவறை அமைப்பு சதுரம், வட்டம், முக்கோணம் என்று மூன்று விதங்களில் மட்டுமே வடிவமைக்கப்பட்டன. அதாவது, சதுர வடிவ அமைப்பானது தேவ லோகத்துடனும், வட்ட வடிவ அமைப்பு பித்ரு லோகத்துடனும், முக்கோண வடிவ அமைப்பு பூலோகத்துடனும் தொடர்பு பெற்றதாக கருதப்பட்டன. நமது பகுதிகளில் முக்கோண வடிவ ஆலய கருவறைகள் அமைக்கப்படுவதில் லை. ஆனால், ஓம்காரத்தை குறிப்பிடும் வகையில் வட்ட வடிவ கருவறைகள் ஒரு சில இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. கருவறையில் உள்ள சிலா ரூபத்துக்கு அபிஷே கங்கள் உள்ளிட்ட நைவேத்தியங்கள் செய்யும் போது அவை மகத்துவம் பொருந்தியதாக மாறு வதற்கு இறை ஆற்றல்கள் காரணமாகும். கோவில் நைவேத்தியங்கள் சுவை மிக்கதாக மாறுவதற்கும், அபிஷேகம் செய்யப்பட்ட நீர் நமது உடம்பில் பட்டதும் சிலிர்ப்பை ஏற்படுத்துவதற்கும் கருவறையில் தோன்றி ஆலயம் முழுவதும் பரவும் கண்களுக்கு புலப்படாத சக்தி அலைகளே காரணமாக உள்ளன என்று பலரும் கருதுகின்றனர். கருவறையில் உருவாகும் சக்தி அலைகளின் இயக்கம் இடமிருந்து வலமாக அமைவதாக அறியப்பட்டுள் ளது. அதை முன்னரே உணர்ந்த நமது ஆன்றோர் பெருமக்கள் நாம் கரு வறையை இடமிருந்து வலமாக பிரதட்சிணம் செய்யும்படி அறிவுறுத்தி இருப்பது கவனிக்கத்தக்கது. அதிகாலை நேரமான பிரம்மமுகூர்த்த சமயத்தில் கோவில்களில் பிரபஞ்ச சக்திகள் முழு அளவில் செயல்படுவதால், அந்த அலைகள் கோவிலின் பிரகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள சன்னிதிகள், கொடி மரம், பலி பீடம் போன்றவற்றிலும், கருவறையின் இயக்கத்துடனும் இணைந்து சிறப்பான சக்தி மண்டலத்தை கோவில் முழுக்கவும் ஏற்படு த்துகின்றன. அதன் அடிப்படையில் பிரம்ம முகூர்த்த காலத்தில் கோவில் வழிபாடுகளை செய்வது நமது பண்பாட்டில் முக்கியமாக கருதப்படுகிறது.

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என...