திங்கள், 6 ஜூன், 2011

கொழும்பு ஊறுகொடவத்தை ஸ்ரீ மஹா பத்திரகாளி அம்மன் ஆலயம்




திருமூலரால் சிவபூமி எனப் போற் றப்பட்ட இலங்கைத் திருநாட்டின் தலைநகரமாக விளங்கும் கொழும்பு மாநகரின் நுழைவாயிலில் வெல்லம்பிட்டிக்கும் கிராண்ட்பாஸ¤க்கும் இடையில் உள்ளது 'ஊறுகொடவத்தை' என்னும் வர்த்தகமயமான ஊர். அந்நியர் ஆட்சிக் காலத்திலிருந்து மலையும் மலை சார்ந்த இடமுமாகிய குறிஞ்சி நிலப்பரப்பில் உள்ள அவிசாவளைக்கு கொழும்பிலிருந்து செல்வதானால் இந்த ஊறுகொடவத்தையை ஊடறுத்துத்தான் செல்ல வேண்டும்.

குறிஞ்சி நிலப்பரப்புக்குரிய தெய்வம் குமரன். அம்பிகையின் இளைய மகனாகிய இந்த முருகப் பெருமானை காணச் செல்வதானால், இந்த அம்பிகையின் திருவருளை பெற்றுத்தான் செல்ல வேண்டும் என்பது போல் அமைந்துள்ளது ஊறுகொடவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீ மஹா பத்திரகாளியம்மன் ஆலயம்.

கிரேண்ட்பாஸ், தெமட்டகொடை, பேலியாகொடை, வெல்லம்பிட்டி என இந்த நான்கு நகரங்களையும் இணைக்கும் நாற்சந்தியில் அமைந்துள்ளது ஊறுகொடவத்தை எனும் சின்னஞ்சிறு நகரம்.

இது சின்னஞ் சிறு நகரமாக இருந்தாலும் தலைநகரை அண்டி இருப்பதால் தொழில் பேட்டைகளும் வர்த்தக நிலையங்களும் ஆங்காங்கே அருவியைப் போல் தோன்றி மருவி இருப்பதைக் காணலாம்.

இது வர்த்தக மயமான பகுதி என்பதால் எந்நேரமும் சுறுசுறுப்பாக சுழன்று கொண்டிருப்பதை அவதானிக்கலாம். இந்த நாற்புற சந்திக்கு அருகிலேயே வெல்லம்பிட்டிக்கு காலடி எடுத்து வைக்கும் தொலைவிலே அமைந்துள்ளது சாத்தம்மா எனும் தோட்டம்.

இந்தத் தோட்டத்தையும் தோட்டத்தை அண்டிய பகுதிகளையும் சுற்றி சுமார் 3000 குடும்பங்களைச் சேர்ந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வாழ்கின்றார்கள். இதில் பெரும்பான்மையாக வாழ்பவர்கள் தமிழர்கள். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களாக வாழ்ந்தாலும் இவர்களில் 50% சதவீதத்தினர் மதம் மாறிவிட்டனர். மேலும் மதம் மாறிவருகின்றனர். இப்பகுதிலேயே இதுவரை காலமும் இராஜ கோபுரத்துடன் கூடிய ஒரு ஆலயம் இல்லாதது இதற்கு ஒரு காரணமாகவும் இருந்திருக்கலாம்.

இந்தக் குறையை நிவர்த்திக்கும் முகமாக இந்த நாற்புறச் சந்தியிலிருந்து பார்க்கக்கூடிய வண்ணம் மிகவும் கம்பீரமாக காட்சியளிக்கிறது வெல்லம்பிட்டி, ஊறுகொடவத்தை, சாத்தம்மா தோட்டத்தில் குடிகொண்டுள்ள ஸ்ரீ மஹா பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் 18 அடி உயர இராஜ கோபுரம்.

வேண்டியோருக்கு வேண்டுவதெல்லாம் அருளி வரும் ஸ்ரீ மஹா பத்திரகாளியம்பாள் இங்கு சாத்தம்மா தோட்டத்தில் வந்து குடி கொண்டது எப்படி?

சாத்தம்மா என்ற தோட்டத்தின் நாமமே தமிழ் கிராமத்தின் மண்வாசனையை கொண்டுள்ளதை உணரலாம்.

இந்தத் தோட்டத்தின் ஊர் எல்லையில் அந்நியர் இலங்கையை ஆண்ட காலத்திலிருந்து அரச மர நிழலில் கொட்டில் ஆலயம் போல் தொட்டிலிட்டு தோன்றிய ஆலயம் காவல் தெய்வமான ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயம். வெள்ளை நாகமொன்றும் கரும் நாகமொன்றும் காடுமண்டிக்கிடந்த இந்த ஆலயச் சூழலைச் சுற்றி அன்று வலம் வந்தன. ஆரம்ப காலத்தில் கல்லொன்றை வைத்து வணங்கி வந்தவர்கள் காலப்போக்கில் திருவுருவப் படங்களையும் படிப்படியாக திருவுருவச் சிலைகளையும் வைத்து வழிபடத் தலைப்பட்டனர்.

சின்னஞ்சிறு கொட்டிலாக மடாலயமாக இருந்த ஆலயத்தில் எஸ். ஆறுமுகம் குரு அம்மா தம்பதிகள் ஆரம்ப காலத்தில் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தனர். இவர்கள் அம்மாளின் திருவடியை எய்தபின் இவர்களின் புதல்வியாகிய திருமதி நல்லம்மா இவர்களது பணியைத் தொடர்ந்து வந்தார்.

இந்த ஆலயம் ஊர் எல்லையில் ஓர் ஒதுக்குப்புறத்தில் இருந்ததால் இதன் மகிமை மங்கிப்போய் இருந்ததை உணர்ந்த இறைவன் இதனை ஊரின் முன்புறத்திற்கு கொண்டுவர திருவுளம் கொண்டார். இதற்கமைய ஆலயத்தை சாத்தம்மா தோட்டம் ஆரம்பிக்கும் இடத்திற்கு கொண்டுவர திருமதி நல்லம்மா எண்ணங்கொண்டார்.

இதற்கமைய இவர், தான் வசித்து வந்த சாத்தம்மா தோட்டத்தில் உள்ள 55/2 ஆம் இலக்கத்தைக் கொண்ட வீட்டை மடலாயமாக அமைத்து வழிபட்டு வந்தார். அன்று முனீஸ்வரர் ஆலயத்தைச் சுற்றி வந்த நாகம்மா அதன்பின் இங்கும் வலம் வரத் தொடங்கினார்.

அதனைத் தொடர்ந்து அயலில் உள்ளவர்கள் தமக்கு ஏதாவது நோய் நொடி ஏற்பட்டால் இங்கு வந்து நேர்த்தி வைத்து குணமடைந்தபின் நேர்த்திக்கடனை செலுத்திவிட்டுச் செல்வது வழமையாக இருந்தது.

'சக்தி இல்லையேல் சிவம் இல்லை' என்பார்கள். இந்த கூற்றுக்கமைய இங்கு அம்பாள் வந்து குடிகொள்ளும் வண்ணம் அவ்வப்போது அம்பாள் அசரீரீயாக வரத் தலைப்பட்டாள்.

இவ்வாறு இவரது இல்லத்தில் ஆலயம் அமைத்து வழிபடத் தலைப்பட்ட பின் இவருக்கு அம்பாளின் அருள் வரத் தொடங்கியது.

இவர் குறி சொல்லவும் தலைப்பாட்டார்.

எனவே மடாலயமாக இருந்த இந்த ஆலயத்தை சிறுக, சிறுக ஆகம விதிகளுக்கேற்ப ஆலயமாக கட்டியெழுப்ப முனைந்தபோது இவரை அறியாமலே ஸ்ரீ மகா பத்திரகாளியம்மன் இங்கு வந்து குடிகொண்டு விட்டாள்.

இங்கு வருடாந்தம் நேர்த்தியாக திருவிழாக்கள் நடந்தேறின. 1998 ஆம் ஆண்டு தை மாதம் இங்கு முதன் முதலாக கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதனையடுத்து இவ்வாலயத்தை நாடிவரும் பக்தர் கூட்டமும் சிறு சிறுகப் பெருகியது. அயலில் உள்ளவர்கள் தங்கள் பொருள் ஏதாவது திருட்டு போனால் அல்லது காணாமல் போனால் இவ்வாலயத்தை நாடி வந்து இந்த நல்லம்மாளின் அருள் வாக்கு கேட்டு அறிந்து கொள்வதுண்டு. நல்லம்மாவின் இரண்டாவது மகனுக்கு முருகப்பெருமானின் திருவருள் கிட்டியுள்ளதால் அவருக்கும் அவ்வப்போது அருள்வாக்குக் கூறும் ஆற்றல் உண்டு என்று அவர் கூறுகிறார்.

மடாலயமாக இருந்த ஆலயம் இன்று ஆகம விதிகளுக்கேற்ப ஆலயமாக கட்டி எழுப்பப்பட்டுள்ளது.

2004 ஜுனில் பாலஸ்தாபனம் செய்யப்பட்டதுடன் இவ்வாலயத்தின் கும்பாபிஷேகம் இந்தாண்டு ஜூன் 06 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

18 அடி உயரம் கொண்ட இவ்வாலயத்தின் மூல மூர்த்தியாக கருவறையிலே குடிகொண்டு அருள்பாலித்து வருபவள் ஸ்ரீ மகா பத்திரகாளியம்மன். இந்த அம்பாளுக்கு வலப் பக்கத்தில் முழு முதற் கடவுளாகிய விநாயகப் பெருமானும் இடப் பக்கத்தில் முத்தமிழ்க் கடவுளாகிய முருகப் பெருமானும் எழுத்தருளி அருள்பாலித்து வர ஆலய கருவறையைச் சுற்றி ஸ்ரீ திரெளபதை அம்பாளும் ஸ்ரீ சமயப் புரத்து அம்பாளும் ஸ்ரீ துர்க்கை அம்பாளும் எழுந்தருளி அருள்பாலித்து வருவது குறிப்பிடத்தக்கது.

உடப்பு, பாண்டிருப்பு என நீலக்கடலின் ஓரத்திலே அருள் பாலித்து வருபவள் ஸ்ரீ திரெளபதை அம்மன்.

அதுபோல் இந்த ஆலய கருவறையைச் சுற்றி வலம் வரும் போது முதலில் வருபவள் ஸ்ரீ திரெளபதை அம்மன்.

தமிழகத்தின் கிராமத்து தேவதையாக திகழ்பவள் மாரியம்மன். மழையை வாரி வழங்கும் இந்த மாரியம்மனை நெஞ்சில் நிறுத்தும் வண்ணம் இந்த ஆலய கருவறையை சுற்றி வலம் வரும்போது திரெளபதை அம்மனுக்கு அடுத்தபடியாக வீற்றிருந்து அருள் பாலிப்பவள் சமய புரத்தாள்.

தமிழும் சைவமும் தழைத்தோங்கி விளங்கும் யாழ் மண்ணின் தெல்லிப்பழையில் குடி கொண்டு அருள் பாலித்து வருபவள் வீரத்துக்கு அதிபதியான ஸ்ரீ துர்க்கை அம்பாள். இந்த ஆலய கருவறையை வலம் வரும்போது இறுதியாக இருந்து அருள்பாலிப்பவள் ஸ்ரீ துர்க்கை அம்பாள்.

நாற்கடலால் சூழப்பட்ட நயினை தீவில் குடி கொணடு நல்லருள் புரிந்து வருபவள் நவருபவள் நயினை நாகபூஷணி அம்மன். இந்த அம்மனின் அருளை வேண்டுவதற்காக ஆலய கருவறைக்கு எதிராக ஸ்ரீ நாகபூஷணி அம்மனின் திருவுருவச்சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கருவறை அம்மன்னுக்கு எதிராக திரிசூலம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த வேலுப்பிள்ளை சிற்பியின் கைவண்ணத்தில் இவ்வாலயம் புதுப்பொலிவு பெற்றது. சுமார் 40 லட்சம் ரூபாஇந்த ஆலயத்தின் திருப்பணி வேலைகள் யாவும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. திருமதி நல்லம்மா தான் வசித்து வந்த இல்லத்தில் அம்பாளுக்கு வளம் மிக்க சிறப்பான ஆலயமொன்றை அமைத்து விட்டு அவர் ஆலயத்திற்கு அருகிலேயே 2 1/2 லட்சம் ரூபா முற்பணம் செலுத்தி 8500 ரூபா மாதாந்த வாடகையை செலுத்தி வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

திருமதி நல்லம்மாவுடன் இந்த ஆலயத்தை ஆகம முறைப்படி புதுப்பொலிவுடன் கட்டியெழுப்புவதற்கு அரும்பாடுபட்டவர் ஆறுமுகம் செல்வராஜ் சாமி.

இவ்வாலய மஹா கும்பாபிஷேகத்தை நடத்த 5 இலட்சம் ரூபா செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஸ்ரீ மஹா பத்திரகாளியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் நாளை 06 ஆம் திகதி காலை 6.35 முதல் 7.16 வரையுள்ள சுபவேளையில் நடைபெறவுள்ளது. கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டலாபிஷேகம் நடைபெறும்.

இன்று 05ஆம் திகதி காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெறும்.

இன்று காலை 8.00 மணி முதல் கும்ப பூஜை, விசேட திரவிய ஹோமம், திரிசதி ஹோமம், தீபாராதனை, பிரசாதம் வழங்கல் என்பனவும் இன்று மாலை 5 மணி முதல் பிம்பசுத்தி, பூர்வ சந்தாம் கும்பபூஜை, ஹோமம் பாய்சிம சந்தானம், தீபாராதனை, பிரசாதம் வழங்கல் என்பனவும் நடைபெறும். 6ம் திகதி காலை 5.30 மணியளவில் கும்பபூஜை, ஹோமம், விசேட தீபராதனையும் நடத்தப்பட்டு காலை 6.35 மணி முதல் ஸ்தூபி அபிஷேகம், பிரதான கும்பம் வீதி வலம் வருதல், மஹா கும்பாபிஷேகம், தச சதர்சனம், எஜமானபிஷேகமும் திர, மஹா அபிஷேகம், தீபாரதனை, பிரசாதம் வழங்கல், மஹா ஆசிர்வாதம் என்பன நடைபெறும்.

கும்பாபிஷேக கிரியைகள் யாவும் சிவஸ்ரீ பா. ஷண்முகேஸ்வர குருக்கள் தலைமையில் நடைபெற உள்ளது. சிவஸ்ரீ சி. பாலசுப்பிரமணியக் குருக்கள், உதவி குருக்களாக கிரியைகளை செய்ய, முன்னேஸ்வரம் சிவஸ்ரீ இ. தேவசிகாமணிக் குருக்கள் சாதகாச்சாரியம் செய்வார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என்றும் குறிப் பிடப்படுகிறது. பொதுவாக, ஆலய அமைப்பின் பிரமாண்ட தன்மையை ஒப்பிடும்போது கருவறை என்பது அளவில் சிறியதாக அமைக்கப்படுகிறது. அவ்வாறு அமைப்பதன் பின்னணியில் பல்வேறு சூட்சுமங்களும், தேவ ரகசியங்களும் அடங்கியிருப்பதாக ஆன்மிக சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதாவது, சம்பந்தப்பட்ட தெய்வ மூர்த்திக்குரிய ஆகம கணக்குவழக்கு முறைகளின்படி கோவிலுக்குரிய பிரகாரங்கள், மொத்த நீளம், அகலம் மற்றும் உயரம் ஆகியவை துல்லியமாக கணக்கிடப்பட்டு அமைக்கப்படும். குறிப்பாக, பிரபஞ்ச சக்திகளை கிரகிக்கும் மையப்பகுதியாக கருவறை அமைக்கப்பட்டது. அறிவியல் பார்வையில் கருவறை அமைப்பை விளக்குவதென்றால், பிரபஞ்சத்தில் உள்ள சக்தி அலைகள் அனைத்தும் ஒரு வகை மின்னூட்டம் பெற்ற துகள்களாக உலகம் முழுதும் இயங்கி வருகின்றன. அந்த அலை வீச்சுகள் கோவில் கரு வறைக்கு மேற்புறம் உள்ள விமானம் மீது பொரு த்தப்பட்டுள்ள சிறந்த மின் கடத்தியான செம்பால் செய்யப்பட்ட கலசங்களால் ஈர்க்கப்படுகின்றன. அவை கருவறைக்குள் இருக்கும் மூலவர் மூலமாக அதன் கீழ் அமைக்கப்பட்டுள்ள செம்பு யந்திரங்களில் நிலை பெறுகின்றன. அன்றாட பூஜைகளி ன்போது தக்க மந்திர சப்த அலைகளின் மூலமாக ஆலயம் முழுவதும் பரவி, அனைவருக்கும் நன்மைகளை அளிப்பதாகவும் ஆன்மிக பெரியோர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். மேலே குறிப்பிட்ட பிரபஞ்ச சக்தி அலைகளின் இயக்கம் சீராக அமைய வேண்டுமானால், தக்க பூகோள அமைப்பு உள்ள பகுதியில் கோவில்களை அமைக்கவேண்டும் என்று உணரப்பட்டது. அதன் அடிப்படையில் கோவில்கள் நிர்மாணிக்கும்போது, கருவறை அமைப்பில் பல்வேறு நுட்பமான வழிமுறைகளை நமது முன்னோர்கள் கடைப்பிடித்தனர். கோவில் கட்ட தேர்வு செய்யப்படும் இடத்தில் கருவறை அமைய உள்ள குறிப்பிட்ட பகுதியில் தானியங்கள் விதைக்கப்படும். மூன்று நாட்களுக்குள் அவை முளைத்தால் அந்த இடம் உத்தமமான இடம் என்றும், ஐந்து நாட்களுக்குள் முளைத் தால் அது மத்திய தரமான இ டமாகவும், அவை முளைப்பதற்கு ஆறு நாட்களுக்கும் மேல் ஆகும் பட்சத்தில் அந்த இடம் பொருந் தாது என்றும் கணிக்கப்பட்டன. மேலும், கருவறையின் தள மட்டத் திற்கு கீழே வைரம் உள்ளிட்ட நவரத்தினங்கள், ஐம்பொன் அல்லது செம்பு தகடுகள், சலித்து எடுக்கப்பட்ட சுத்தமான ஆற்று மணல் போன்றவை போட்டு நிரப் பப்படுவது வழக்கம். ஒரு சில இடங்களில் தேன் கலந்த சுண் ணாம்பு மற்றும் இதர வாசனாதி திரவியங்கள் கொண்டு அமைக் கப்பட்ட கருவறைகளும் இருப்பதாக தகவல்கள் உள்ளன. கர்ப்ப கிரகத்தின் மொத்த அளவை 1 தண்டம் என்று கணக் கிடப்பட்டு, அதன் அடிப்படையில் ஆலயத்தின் இதர பகுதிகளுக்கான அளவுகள் கணக்கிடப்பட்டு அமைக்கப்பட்டன. உள் பிரகா ரங்கள் மற்றும் வெளிப்பிரகாரங்கள் ஆகியவை கரு வறையின் மொத்த அளவுக்கேற்ப கணக் கிடப் பட்டு கட்டமைக்கப்படும். மன்னர்கள் காலத்தில் கோவில்கள் சிற்ப சாஸ்திர முறையில் மாடக் கோவில், பெருங்கோவில், கரக்கோவில், ஞாழற் கோவில், கொகுடி கோவில், இளங்கோவில், மணிக்கோவில், ஆலக்கோவில் என்று எட்டு விதங்களாக அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கோவிலின் கருவறை அமைப்பு சதுரம், வட்டம், முக்கோணம் என்று மூன்று விதங்களில் மட்டுமே வடிவமைக்கப்பட்டன. அதாவது, சதுர வடிவ அமைப்பானது தேவ லோகத்துடனும், வட்ட வடிவ அமைப்பு பித்ரு லோகத்துடனும், முக்கோண வடிவ அமைப்பு பூலோகத்துடனும் தொடர்பு பெற்றதாக கருதப்பட்டன. நமது பகுதிகளில் முக்கோண வடிவ ஆலய கருவறைகள் அமைக்கப்படுவதில் லை. ஆனால், ஓம்காரத்தை குறிப்பிடும் வகையில் வட்ட வடிவ கருவறைகள் ஒரு சில இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. கருவறையில் உள்ள சிலா ரூபத்துக்கு அபிஷே கங்கள் உள்ளிட்ட நைவேத்தியங்கள் செய்யும் போது அவை மகத்துவம் பொருந்தியதாக மாறு வதற்கு இறை ஆற்றல்கள் காரணமாகும். கோவில் நைவேத்தியங்கள் சுவை மிக்கதாக மாறுவதற்கும், அபிஷேகம் செய்யப்பட்ட நீர் நமது உடம்பில் பட்டதும் சிலிர்ப்பை ஏற்படுத்துவதற்கும் கருவறையில் தோன்றி ஆலயம் முழுவதும் பரவும் கண்களுக்கு புலப்படாத சக்தி அலைகளே காரணமாக உள்ளன என்று பலரும் கருதுகின்றனர். கருவறையில் உருவாகும் சக்தி அலைகளின் இயக்கம் இடமிருந்து வலமாக அமைவதாக அறியப்பட்டுள் ளது. அதை முன்னரே உணர்ந்த நமது ஆன்றோர் பெருமக்கள் நாம் கரு வறையை இடமிருந்து வலமாக பிரதட்சிணம் செய்யும்படி அறிவுறுத்தி இருப்பது கவனிக்கத்தக்கது. அதிகாலை நேரமான பிரம்மமுகூர்த்த சமயத்தில் கோவில்களில் பிரபஞ்ச சக்திகள் முழு அளவில் செயல்படுவதால், அந்த அலைகள் கோவிலின் பிரகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள சன்னிதிகள், கொடி மரம், பலி பீடம் போன்றவற்றிலும், கருவறையின் இயக்கத்துடனும் இணைந்து சிறப்பான சக்தி மண்டலத்தை கோவில் முழுக்கவும் ஏற்படு த்துகின்றன. அதன் அடிப்படையில் பிரம்ம முகூர்த்த காலத்தில் கோவில் வழிபாடுகளை செய்வது நமது பண்பாட்டில் முக்கியமாக கருதப்படுகிறது.

கருவறை மனித உடல் அமைப்பில் தலைப்பகுதி பிரதானமாக இருப்பதுபோல, ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக விளங்குகிறது. அது, மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என...