
பிள்ளையார் கதை
இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்கள வெளியீடு
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆற்றும் பல்வேறு செயற்திட்டங்களுள் பல்துறை சார்ந்த நூற் பதிப்புக்களும் அடங்குகின்றன. அண்மையில் இத்திணைக்களத்தின் மூலம் “பிள்ளையார் கதை” எனும் சிறுகைநூலொன்று வெளியிடப்பட்டுள்ளதோடு இந்து ஆலயங்கள், இந்துசமய நிறுவனங்கள், இந்துப்பொது மக்கள் ஆகியோருக்கு இலவசமாக விறியோகிக்கப்படுகின்றது.
அழகிய நால்வர்ண விநாயகப் பெருமானின் அட்டைப் படத்துடன் இப்புத்தகம் அமைந்துள்ளது. நூலில் பிள்ளையார் கதை, கதைப் பொழிப்பு, போற்றித் திருவகவல், விநாயகர் அகவல், வருகைக் கோவை, காரிய சித்தி மாலை என்பன அடங்கியுள்ளன. திணைக்களப் பணிப்பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசன் இந்நூலுக்கு வழங்கியுள்ள வெளியீட்டுரையில் இந்நூல் பரவலாகக் கிடைப்பதில்லை என்ற இந்து மக்களின் கோரிக்கைக்கு அமையவே திணைக்களத்தால் வெளியிடப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் பூரணையும் கார்த்திகை நட்சத்திரமும் கழிந்த மறுநாள் பிரதமை முதல் மார்கழி மாதச் சுக்ல பட்ச ஷஷ்டி ஈறாக இருபத்தியொரு நாட்கள் பிள்ளையார் கதைக் காப்பு இந்து ஆலயங்களில் விரதமாக அநுட்டிக்கப்படுவதாகும். இக்காலங்களில் பிள்ளையார் கதை ஆலயங்களில் படிக்கப்படுவதோடு பொருள் சொல்லி விளங்கப்படுத்தப்படும்.
பக்தர்கள் பிள்ளையார் கதையைப் பக்தி சிரத்தையோடு கேட்டு மகிழ்வர். இந்நூலில் அடங்கும் பிள்ளையார் கதையின் பாடல் வரிகளுக்குரிய பொழிப்பினை மிகவும் எளிய தமிழ் நடையில் சைவப் புலவர் சு. செல்லத்துரை அவர்கள் எழுதி வழங்கியுள்ளார்.
விநாயகப் பெருமானின் பக்தர்கள் பயன் பெறும் பொருட்டு திணைக்களம் இந்நூலை இலவசமாக விநியோகிக்கின்றது. இதனைப் பெற்றுக்கொள்ள விரும்புவோர் திணைக்களத்திற்கு நேரிற் சமுகமளித்து பெற்றுக்கொள்ளலாம்.
தபால் மூலம் பெற விரும்புவோர் 10 x 7 அங்குல அளவுள்ள கடிதவுறையில் தமது சுய முகவரியை
எழுதி முப்பது ரூபா (30/=) பெறுமதியுடைய முத்திரையை ஒட்டி அதனை வேறொரு கடிதவுறையில் வைத்து,
பணிப்பாளர்,
இந்துசமய, கலாசார அலுவல்கள் திணைக்களம்,
248, 1/1, காலி வீதி, கொழும்பு - 04
என்ற முகவரிக்கு அனுப்பி வைப்பதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
இக்கடிதவுறையின் இடது பக்க மேல் மூலையில் “பிள்ளையார் கதை - இலவச வெளியீடு” என எழுதப்பட்டிருத்தல் வேண்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக