வியாழன், 23 ஆகஸ்ட், 2012
அறநெறி அறிவுநொடி
கே. ஈஸ்வரலிங்கம்
நல்ல நாள்
9352 பஞ்சாங்கத்தில் அடங்கியுள்ள ஐந்து அங்கங்களும் எவை?
நாள் (வாரம்), திதி, நட்சத்திரம், யோகம், கர்ணம்.
9353 பஞ்சாங்கத்தில் முதல் அங்கமாக வருவது எது?
வாரம் அதாவது கிழமை அல்லது நாட்கள்
9354 திருமணம், ஹோமம், சாந்திகள் போன்ற நற்காரியங்கள் செய்ய விசேஷமான நாட்கள் எவை?
ஞாயிறு, திங்கள், புதன், வியாழன், வெள்ளி.
9355 நெருப்பு கிரகம் என்பது எது?
செவ்வாய்.
9356 அக்னி சம்பந்தமான செயல்களுக்குரிய நாள் எது?
செவ்வாய்க்கிழமை.
9357 இயந்திர சம்பந்தமான பணிகளுக்கு உரிய நாள் எது?
சனிக்கிழமை.
9358 ஞாயிற்றுக்கிழமைக்குரிய அதிபதி யார்?
சூரியன்.
9359 சூரியன் எத்தகைய தன்மை வாய்ந்தவர்?
ஆரோக்கியத்தை அளிப்பவர்.
9360 நீண்ட கால பிணிகளுக்கு டொக்டரின் ஆலோசனை பெற்று மருந்து குடிக்க ஆரம்பிக்கக் கூடிய நாள் எது?
ஞாயிற்றுக்கிழமை.
9361 ஞாயிற்றுக்கிழமை எந்த திசையை நோக்கி பயணம் செய்யலாம்?
வடக்கு.
9362 அரச பணி தொடர்பான பணிகளுக்கு உரிய அலுவலர்களை நேரில் சந்திக்கக் கூடிய நாள் எது?
ஞாயிற்றுக்கிழமை.
9363 திங்கட்கிழமை எந்த திசையை நோக்கி பயணம் செய்யலாம்?
தென்திசை நோக்கி.
9364 திங்கட்கிழமை செய்யக்கூடிய மதம் சம்பந்தமான விசேஷமான நற்காரியங்கள் எவை?
காது குத்துதல், பெண் பார்த்தல், ருது சாந்தி செய்தல், சாந்தி முகூர்த்தம், சீமந்தம் விருந்து உண்ணல்
9365 திங்கட்கிழமை செய்யக்கூடிய பொதுவான நல்ல காரியங்கள் எவை?
ஆடுமாடு வாங்குதல், விதையிடுதல், உரமிடல், வியாபாரம் தொடங்குதல்.
9366 செவ்வாய்க்கிழமை எந்த திசையை நோக்கி பயணம் செய்யலாம்?
கிழக்கு
9367 செவ்வாய்க்கிழமை எதற்கு ஏற்ற நாள்?
வாங்கிய கடனை அடைந்தல், வயலுக்கு உரமிடல், செங்கல் சூளைக்கு நெருப்பிடுதல்.
9368 செவ்வாய்க்கிழமைகளில் பொருள் வாங்கினால் என்ன நடக்கும்?
அது வருவாயை பெருக்கும் அதனால் வீட்டில் செல்வம் பெருகும்.
9369 புதன்கிழமை எந்த திசையை நோக்கி பயணம் செய்யலாம்?
மேற்கு திசையை நோக்கி.
9370 புதன்கிழமை ஆற்றக்கூடிய நற்பணிகள் எவை?
புதிய ஆராய்ச்சி, எழுத்துப் பணிகளை தொடங்கலாம், வழக்குகள் சம்பந்தமாக சட்டத்தரணிகளை சந்தித்தல், புதுமனை புகுதுதல், கிணறு வெட்டுதல், உழுதல், விதையிடுதல், அறுவடை செய்தல், கல்வி கலை போன்றவற்றைக் கற்க ஆரம்பித்தல், காது குத்துதல், சீமந்தம், விருந்துண்ணல்.
கொம்பனித்தெருவை கோலாகலமாக்கி
பக்தி பரவசமூட்டிய தங்கத் தேர்விழா
இலங்கைத் திருநாட்டின் கொழும்பு மாநகரிலுள்ள கொம்பனித்தெரு ஆடிக் கிருத்திகை திருநாளான கடந்த 11 ஆம் திகதி சனிக்கிழமை பக்திபூர்வமான கோலகலமான நகரமாக காட்சி அளித்தது. வர்த்தக நிலையங்களும் தொழில் நிறுவனங்களும் நிறைந்து விளங்கும் நகரமாக கொம்பனித்தெரு திகழ்கிறது. அன்று இந்த நகரில் உள்ள வர்த்தக நிலையங்களிலும் கடைகளிலும் வாழைக்குலைகளுடன் வாழை மரங்கள் கட்டப்பட்டு மாவிலை தோரணங்கள் தொங்கவிடப்பட்டிருந்தன. ஒன்று விடாது அனைத்து தமிழ் கடைகளிலும் வர்த்தக நிலையங்களிலும் நிறைகுடம் என பூரண கும்பங்களும் பூஜைத் தட்டுகளும் வைக்கப்பட்டிருந்தன.
ஆடிக் கிருத்திகையை வரவேற்று அன்று விடியக்காலையில் அடைமழை அவ்வப்போது பொழிந்து கொண்டிருந்ததால் அன்று காலை வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது.
கொம்பனித்தெரு அருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயத்திலிருந்து ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை சமேதராய் தங்கத் தேரில் ஆரோகணித்து பவனி வந்து அருள்பாலிக்க புறப்படத் தயாராகும் போது மப்பும் மந்தாரமுமாக இருந்த வானம் வருண பகவானின் கடைக்கண் பார்வை பட சூரிய பகவான் வான வீதியில் பவனி வந்து அருள்பாலிக்கத் தொடங்கினார்.
இந்தத் தேர் திருவிழாவையொட்டி ஆலயத்தின் இராஜ கோபுரமும் மணிக் கோபுரமும் ஆலய உள் வீதி கோபுரங்களும் ஆலய உள் வீதிகளும் வெளி வீதிகளும் 20 ஆயிரம் மின் குமிழ்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. வாழை மரங்களாலும் மாவிலை தோரணங்களாலும் நந்தி மற்றும் தேசிய கொடிகளாலும் ஆலயமும் ஆலயத்தின் வெளி வீதிகளும் அலங்காரம் செய்யப்பட்டிருந்தன.
ஐந்து கரங்களையுடைய விநாயகப் பெருமானை போன்று ஐந்து யானைகள் ஊர்வலத்தில் முன்னிலையில் செல்ல முருகப் பெருமானின் வாகனமாகிய மயில்களைப் போல் அலங்கரித்துக் கொண்ட சிறுமிகள் சிலர் மயில் நடனமாடிக் கொண்டு சென்றனர். இதேபோன்று சிங்கங்களைப் போன்று வேடந் தரித்துக்கொண்ட சிறுவர்கள் அவர்களைத் தொடர்ந்து நடனமாடிக்கொண்டு வந்தனர். ஒளவையார், முருகப் பெருமான் போன்ற ஆன்மீக வேடந் தரித்த சின்னஞ்சிறு பாலகர்கள் பாலமுருகனைப் போன்று அடி மேல் அடி வைத்து நடந்துவர, வீர அனுமான்களைப் போல் வேடமிட்ட சிறுவர்கள் ஆடிக் கொண்டு வந்தனர்.
இலங்கையிலேயே நிறைய இந்து அமைப்புகள் உள்ளன. அந்த எந்த அமைப்புக்கும் இல்லாத ஒரு சிறப்பு, கொம்பனித்தெருவில் உள்ள பழம் பெரும் அமைப்பான சைவ முன்னேற்றச் சங்கத்துக்கு உள்ளது. அந்தசிறப்பு என்னவென்றால், அதற்கென பேண்ட் இசைக் கருவிகள் இருப்பது தான். இந்தத் தங்கத் தேர்த் திருவிழாவில் சைவ முன்னேற்றச் சங்க நால்வர் அறநெறி பாடசாலை மாணவர்கள் பேண்ட் வாத்தியம் இசைத்துக் கொண்டு செல்வதையும் காணக்கூடியதாக இருந்தது.
முருகப் பெருமானுக்கே உரித்தான கரஹ ஆட்டம், கோலாட்டம், ஆகியனவும் பக்தர்களின் உள்ளங்களைக் கவர்ந்தன. கூந்தலில் மலர்களை சூடிய மங்கையர்கள் ஒன்றுகூடி ஒரு புறம் வடமிழுக்க, மறுபுறத்தில் வேஷ்டி அணிந்த மேலாடைகள் ஏதுமில்லா ஆண்கள் வடமிழுத்தனர்.
நாதஸ்வர வாத்திய கலைஞர்களின் நாதஸ்வர மேள இசையும் கொம்பனித்தெரு முழுவதையும் தமிழ் மற்றும் சைவ மணம் கமழச் செய்தன. இந்தத் தேர்த்திருவிழாவில் பெருமளவு பக்தர்கள் கலந்துகொண்டதையும் காணக்கூடியதாக இருந்தது. தங்கத் தேர் பவனி வந்த வீதிகளில் உள்ள வர்த்தகர்கள் பக்தர்களின் தாக சாந்திக்காக பால் பக்கெட்டுக்களையும் குளிர்பானங்களையும் கொடுத்தனர்.
இந்த தங்கத் தேர் சிற்பசாரியார் சரவணமுத்து ஜெயகாந்தன் தலைமையிலான சிற்பக் கலைஞர்களால் அமைக்கப்பட்டது. 1998 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி இதன் வெள்ளோட்ட விழா நடைபெற்றது. 1998 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி தேர்த்திருவிழா நடைபெற்றது. அதன் போது வள்ளி, தெய்வானை சமேத சிவசுப்பிரமணிய சுவாமி இந்த புதிய தங்கத் தேரில் ஆரோகணித்து பவனி வந்தது குறிப்பிடத்தக்கது. முருகப் பெருமான் மீது தீவிர பக்திகொண்ட அப்போதைய அறங்காவலர் சபை உறுப்பினரும் தற்போதைய ஆலய அறங்காவலர் சபை தலைவருமான திருக்குமார் நடேசன் தலைமையிலான தேர்த்திருப்பணிச் சபையினரால் இத்தேர் அமைக்கப்பட்டது.
தமிழ் சைவமும் தழைத்தோங்கி வளரும் யாழ்ப்பாணம் நல்லூரில் கோயில் கொண்டு அருள்பாலித்து வருபவர் ஸ்ரீ கந்தசுவாமிப் பெருமான். நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழா வருடாந்தம் நடைபெறும் போது யாழ்ப்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்து கொழும்பில் வாழ்ந்த மக்களுக்கு அதில் கலந்துகொள்ள முடியாத நிலை இருந்தது.
இதனால் நல்லூர் கந்தனின் தேர்த்திருவிழாவை காண முடியாது கவலைப்பட்டனர். இவர்களது கவலையை போக்கும் வண்ணம் கொம்பனித்தெரு அருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் இந்த தேர்த் திருவிழா நடத்தப்படுகிறது. இந்த தங்கத் தேர் பவனியில் மெய்சிலிர்க்க வைக்கும் பக்திப் பரவசமுட்டும் பரவைக் காவடிகளும் இடம்பெற்றன. சைவ முன்னேற்ற சங்கத்தைச் சேர்ந்த பூமிநாதன் தலைமையிலான குழுவினர் பஜனை பாடிவந்தார்கள்.
பொதுவாக பக்தர்கள் ஆலய உள் வீதிகளில் அங்கப்பிரதட்சணம் செய்வார்கள். இந்தத் தேர்த் திருவிழாவில் பக்தர்கள் தேர் பவனி வந்த வீதிகளில் அங்கப்பிரட்சணம் செய்து வந்தனர். சில பக்தர்கள் நேர்த்திக்கடன் வைத்து அலகு குத்தி வேல்களை தமது முகங்களில் குத்தி தேருடன் வலம் வந்தனர். தேர்த்திருவிழாவைத் தொடர்ந்து மகேஸ்வர பூசை நடத்தப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. ஸ்ரீசிவசுப்பிரமணிய சுவாமி ஆலய அறங்காவலர் சபையினர், நல்லூர் தேர்த் திருவிழா நடைபெறும் அதே காலகட்டத்தில் இவ்வாலயத்திலும் தேர்த்திருவிழாவை நடத்தத் தலைப்பட்டனர்.
- லிஷாலி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
16258) அறநெறிக் கல்வியின் “மகுட வாசகம்” என்ன? “கல்வியின் சிறந்த குறிக்கோள் பண்புடைமையே” 16259) அதன் “இலட்சிய நோக்கு” என்ன? சிறார்களி...
-
நமசிவாய என்பதற்கு என்ன பொருள்? சிவனை வணங்குகிறேன் என்பது பொருள். இறைவனின் திருவருளைப் பெறுவதற்கு உறுதுணையாக இருப்பவ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக