செவ்வாய், 19 ஜனவரி, 2016

வத்தளை- ஹேகித்தை ஸ்ரீசிவசுப்பிரமணிய சுவாமி


தேவஸ்தான முத்தேர்    விழா

வத்தளை- ஹேகித்தை அருள்மிகு ஸ்ரீசிவசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானம் இன்று தலைநகரை அடுத்ததாக அமைந்துள்ள சிறந்த கோவில்களில் முதலிடத்தை பெற்றுள்ளது வத்தளை பிரதேச வாழ் இந்து மக்களின் தாய் கோவிலாக சகல அம்சங்களை கொண்டு விளங்கி வருவது பெருமைக்குரியதாகும்.
1960
களில் தொழு நோயளர்கள் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வந்த அரச வைத்தியசாலை இப்பகுதியில் அமைந்திருக்கின்றது. இங்கு தங்கியிருந்து சிகிச்சைபெற்ற அனைத்து இன மக்களினதும் மத வழிபாடுகளுக்கென ஒரு பன்சலை, ஒரு கிறிஸ்தவ தேவஸ்தானம் சிறியதாக ஒரு கோவில் அமைய பெற்றிருந்தன.
இங்கு அமையபெற்றிருந்த கோவிலை விவேகானந்த சபையினரால் நிறுவப்பட்டு 1960 களில் ஒரு கும்பாபிஷேகமும் அதனை தொடர்ந்து 1980 வரையிலான காலப் பகுதியில் சிறியளவிலான இரண்டு கும்பாபிஷேகங்கள் நடந்ததாக வரலாறு உண்டு.
1983
களில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகளின் நிமித்தம் இந்து தொழு நோயாளர்களின் எண்ணிக்கை குறைந்த நிலையில் ஆலயம் கவனிப்பாரற்ற நிலைக்கு தள்ளப்பட்டது.
1980
களில் பிற்பகுதியில் கவனிப்பாரற்று இருந்த இவ்வாலயத்தை விவேகானந்த சபையினரின் அனுமதியுடன் பொறுப்பேற்ற வத்தளை இந்து நற்பணி மன்றத்தினர் ஆலயத்தை புனரமைத்து பல இடையூறுகளுக்கு முகம் கொடுத்த நிலையிலும் தொடர்ந்து இயங்கி வந்தனர். பல இளைஞர்களின் அர்ப்பணிப்பால் சிறிய ஆலயமாக புனர் நிர்மாணித்து அன்றாட நித்திய பூஜைகளை செய்து வந்தனர். இப்பிரதேசத்தில் வாழ்ந்த ஏனைய மத குழுக்களால் பல்வேறுபட்ட வழியில் இடையூறுகள் தொடர்ந்த நிலையில் மீண்டும் சில காலம் கோவிலை மூடவேண்டிய நிலை ஏற்பட்டது.
அவ்வப்போது ஏற்பட்ட அரசியல் மாற்றங்களின் பிரதிபலனாக 1990 களில் ஆலய திருத்த வேலைகள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டு இயங்கத் தொடங்கியது. இப்பகுதி வாழ் இந்து மக்களின் பெரும் வரவேற்புடன் அத்தனை இடையூறுகளையும் களைந்து 1996 ஆம் ஆண்டு ஒரு பரிபூரண ஆலயமாக உருப்பெற்று முதலாவது மஹா கும்பாபிஷேகம் 1996 நவம்பர் 29 ஆம் திகதி சிறப்பாக நடைபெற்றது. இது வத்தளை சரித்திரத்தில பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நிகழ்வாக அமைந்தது.
மூலவராக வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமியை பிரதிஷ்டை செய்து அனைத்து பரிவார மூர்த்திகளை கொண்ட உயர்ந்த வாசல்கோபுரத்துடன் அமைந்த இவ்வாலயம் ஸ்ரீ சிவசுப்பிரமணி சுவாமி தேவஸ்தானமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டு வத்தளையில் அமைந்த முதல் கோவிலாக சிறப்பு பெற்று விளங்கியது.
இப்பிரதேசத்தில் வாழும் இந்து மக்களின் தொகை அதிகரித்து கொழும்பை அண்டிய பிரதான கோவிலாக பெயர்பெறத் தொடங்கினர்.
1996
ல் முதல் கும்பாபிஷேகத்தை தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் சிறப்பாக தேர் பவனி இடம்பெற்றது. ஒரு தேரில் வலம் வந்த முருகன் இரண்டாவது தேராக விநாயகருடனும் அடுத்த வருடத்திலேயே அம்மனையும் சேர்த்து 1998 ஆண்டிலிருந்து முத்தோர் பவனியாக பரிணமித்து இன்று வத்தளையில் சிறப்பானதொரு தேர்த்திருவிழாவாக மட்டுமன்றி பிரதேச வாழ் அனைத்து இன மத மக்களையும் கவர்ந்த ஒன்றாக நடைபெற்று வந்துள்ளதை இங்கு கூறவேண்டும்.
சகல வழிகளில் முன்னேற்றமடைந்த ஆலயம் மீண்டும் 2013 ஆம் ஆண்டு தைத்தினத்தன்று தமது இரண்டாவது மகா கும்பாபிஷேகத்தை வெகு சிறப்பாக செய்து முடித்தது. ஆலயத்தை புனர் நிர்மாணம் செய்து பணியுடன் மூன்று மாடிகளை கொண்ட கட்டிடத்தை நிறுவி அறநெறி பாடசாலை வசதிகளை செய்து மூன்றாம் மாடியில் சுவாமி விவேகானந்தரின் பெயரில் தியான மண்டபம் ஒன்றையும் அமைத்ததுடன் 33 அடி உயரமான ஒரு முருகன் சிலையை ஆலய மூலஸ்தானத்திற்கு மேல் மூலையில் அமைத்தமையும் சிறப்பாக அமைந்தது. கொடி மரமும் ஸ்தாபிக்கப்பட்டது.
இவ்வாறு அமைய பெற்ற ஆலயம் கடந்த இரண்டு வருடங்கள் முத்தேர் பவனியுடன் வருஷாபிஷேக மகோற்சவ திருவிழாவாக சிறப்புடன் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்க விஷேட நிகழ்வாகும்.
எமது ஆலயத்தின் மூன்றாவது வருஷாபிஷேக மகோற்சவ தேர்த்திருவிழா 15/01/2016 அன்று வெகு சிறப்புடன் கொடியேற்றம் செய்யப்பட்டு 26.01.2016 வரை தொடர்ந்து நடைபெற சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
23.01.2016
அன்று முத்தேர் பவனி சிறப்பாக நடைபெற ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த மூன்று வருடங்களாக முத்தேர் வணியுடன் விஷேட பூஜைகளாக வேட்டைத் திருவிழா பால்குட பவனி தீர்த்தோற்சவத்தை தொடர்ந்து வெகு சிறப்பாக தெப்பத்திருவிழா நடைபெறவுள்ளது.
மூன்றாவது தடவையாக நடைபெறும் இத்தெப்பத்திருவிழா நிகழ்வுகள் இம்முறை 25.01.2016 அன்று களனி கங்கை நடுவில் மாலை 7 மணியளவில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
இவ்வனைத்து நிகழ்வுகளிலும் கலந்து சிறப்பிக்குமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812