வியாழன், 25 ஏப்ரல், 2013

இந்து சமய வழிபாட்டு தகவல் திரட்டு

கொழும்பு ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் தேவஸ்தான வழிபாட்டு முறைகளை மையமாக வைத்து ‘இந்து சமய வழிபாட்டு தகவல் திரட்டு’ என்ற நூல் ‘சைவசித்தாந்த பண்டிதர்’ ‘பிரசங்க பூஷணம்’ கலாநிதி பிரம்மஸ்ரீ காரை கு. சிவராஜ சர்மாவினால் எழுதி வெளியிட்டு வைக்கப்பட்டது. விழா கொழும்பு வெள்ளவத்தை ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் ‘கிரியா கிரமஜோதி’ பிரம்மஸ்ரீ இலக்சுமி காந்த ஜெகதீசக் குருக்கள் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. கொழும்பு ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷன் தலைவர் சுவாமிஜீ சர்வரூபானந்த மகராஜ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இதில் ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் தேவஸ்தான தர்மகர்த்தா டி. எம். சுவாமிநாதனும் கலந்து கொண்டார். வெளியீட்டுரையை இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசன் நிகழ்த்தினார். ஆய்வுரையை ஜனாதிபதியின் இந்துமத அலுவல்கள் விவகார இணைப்பாளர் பிரம்மஸ்ரீ இராமச்சந்திரக் குருக்கள் பாபு சர்மா நிகழ்த்த விதந்துரைகளை அகில இலங்கை இந்து மாமன்ற உபதலைவர் சின்னத்துரை தனபாலா, கண்டி இந்து மாமன்ற உபசெயலாளர் பொன் இராஜநாதன், வங்கியாளர் மு. சதானந்தன், கொழும்பு சைவமங்கையர் வித்தியாலய ஆசிரியை திருமதி வளர்மதி சுமாதரன் ஆகியோரும் நிகழ்த்தினர். ‘இந்து சமய வழிபாட்டு தகவல் திரட்டு’ நூலில், முதல் வணக்கம் செலுத்தும் விநாயகர் தொடக்கம், சிவதரிசனபலனை தந்தருளுமாறு நாம் வேண்டும் சண்டேஸ்சுவரர் வரை ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் கோயிலை மையமாக வைத்து ஒவ்வொரு தெய்வங்கள் பற்றியும் மிக விளக்கமாக எழுதப்பட்டுள்ளது. இறைவனுக்கு சாத்தும் பத்திரபுஸ்பங்கள் இவற்றின் மருத்துவ குணங்கள் பற்றியும் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் வசிப்பவர்கள் தமது வாரிசுகளோடு இந்து மதத்தைப் பற்றி கூறுவதற்கேற்ற முறையில் விரதங்கள், உற்சவ தினங்கள், தோஷபரிகாரங்கள் என்பன எல்லாம் சிறப்பாக கூறப்பட்டுள்ளன. ஆன்மீகக் கருத்துக்கள், விஞ்ஞான விளக்கங்கள், சித்த மருத்துவம், இவை மூன்றும் ஒருசேர உள்ளடக்கப்பட்ட நூலாகவும் இது விளங்குகின்றது. இலங்கை வங்கியின் ஓய்வுபெற்ற உயர் அதிகாரியான ‘பிரசங்க பூஷணம்’ கலாநிதி பிரம்மஸ்ரீ காரை கு. சிவராஜ சர்மா இவரது ஆன்மீக வாழ்வில் பல அரிய சாதனைகளை புரிந்துள்ளார். அதில் குறிப்பிட்ட ஓர் அம்சம்தான் அவரது இந்த நூல் வெளியீடாகும். இந்நூலை அனைவரும் கற்று பயன் பெறுவதுடன் நூலாசிரியரது ஆன்மீக பயணம் இன்னும் தொடர வேண்டி அனைவரும் பிரார்த்திப்போமாக! திருமதி வளர்மதி சுமாதரன் ஆசிரியை - கொழும்பு சைவ மங்கையர் வித்தியாலயம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812