திங்கள், 17 ஏப்ரல், 2017



 
வேதங்களில் உள்ள கருத்துகளை தெளிவாக கூறுவது எது?
புராணங்கள் 

 புராணம் என்ற சொல்லிற்கு உரிய பொருள் என்ன?
பழமை வாய்ந்தது 

நெடுங்காலமாக செவிவழியாகவே கற்பிக்கப்பட்டு வந்த புராணங்கள் யாரால் நூல்களாக தொகுப்பட்டுள்ளன?
வேதவியாசர் என்பவரால் 

 இவற்றில் வேதவியாசரே தொகுத்த  புராணங்கள் எத்தனை?
பதினெட்டு

வேதவியாசரே தொகுத்த 18 புராணங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
 மகாபுராணங்கள் 

இவையல்லாத உபபுராணங்கள் எத்தனை?
பதினெட்டு

வேதத்தில் கூறப்பட்டுள்ளவைகளின் சாரங்கள் கதைகளின் வடிவில் கூறப்பட்டுள்ளது எதில்?
புராணங்களில்

புராணங்களில் என்னென்ன கூறப்பட்டுள்ளன?
பேரண்டங்களின் தோற்றம், அவற்றின் பிரளயம், மும்மூர்த்திகள் தோற்றம் மற்றும் அவர்களின் அவதாரங்கள், தேவர் -அரக்கர்களின் போர்கள் போன்றவைகள்

புராணம் என்ற சொல் தமிழ் இலக்கியத்தில் எதில் முதன்முதலில் வருகிறது?
மணிமேகலையில்

 திருவாசகத்திலே மாணிக்கவாசகர் முதலில் பாடியது எது?
சிவபுராணம்.

பிரம்மாவால் நாரதருக்குக் கூறப்பட்டது என்ன புராணம்?
சிவ புராணம் 

புலஸ்தியரால் நாரதருக்கு கூறப்பட்டது என்ன புராணம்?
கூர்ம புராணம் 

 கருடனால் காசியப்பருக்கு கூறப்பட்டது என்ன புராணம்?
கருட புராணம் 

 மார்க்கண்டேயர் வியாசர் சீடர்களில் ஒருவரான ஜைமினி முனிவருக்கு கூறியது எது?
மார்க்கண்டேய புராணம் -

 அக்கினி தானே வசிஷ்டருக்குக் கூற அவர் வியாசருக்கு கூறியது எது?
அக்கினி புராணம் 

வராகரே கூறியது எந்த புராணம்?
வராக புராணம் 

கந்தனே கூறி அருளியது எந்த புராணம்?
கந்த புராணம்  

வாயுவாலேயே கூறப்பட்டது எந்த புராணம்?
வாயு புராணம் 

மத்ஸ்யாவதார விஷ்ணு மனுவுக்குக் கூறியது எந்த புராணம்?
விஷ்ணு புராணம்


கருவிலே திருவுடையவர்கள்

கருவிலே திருவுடையவர்கள்’ என்று சொல்வார்கள். கருவிலே திருவுடையர்கள் என்றால் யார்? நம் பெயர் அந்தப் பட்டியலில் இருக்கிறதா? அல்லது வரவாவது வருமா? திருமூலரிடம் செல்லலாம். அவர் பதில் சொல்வார். கூடவே அப்பர் சுவாமிகளும் மாணிக்கவாசகரும், கை கோக்க வருவார்கள்.

கை விட்டிலேன் கருவாகிய காலத்தும்
மெய் விட்டிலேன் விகிர்தன் அடி தேடுவன்
பொய் விட்டு நானே புரி சடையான் அடி
நெய் விட்டிடாத இடிஞ்சிலும் ஆமே  
(திருமந்திரம் - 495) 

கருத்து: கருவில் இருந்தபோதுகூட, நான் சிவபெருமானின் திருவடியை மறக்கவில்லை. பிறந்து வாழ்கின்ற இப்போதும் அதனை நான் மெய்யன்போடு தேடுகிறேன். அதனால் அத்திருவடி, நெய்விட்டு ஏற்றாமல் இயல்பாகவே ஔிவிடும் விளக்காக இருக்கிறது எனக்கு. தாயின் வயிற்றிலிருந்தபோதும், சிவபெருமான் திருவடியைக் கைவிடவில்லையாம்; பிறந்த பிற்பாடும் அப்படியே இருந்தாராம்.

எல்லோருக்கும் வாய்க்கக்கூடியதா இந்தப் பேறு என்ற சந்தேகம் எழுந்தாலும், அதில் பாதி வாய்க்கப் பெற்றவர்கள் நாம். ஆமாம், பிறக்கும்வரை நாமும் இறை சிந்தனையுடன்தான் இருக்கிறோம். தாயின் வயிற்றில் குழந்தையிருக்கக்கூடிய சில படங்களை (மருத்துவ நூல்களில்) பார்க்கும்போதே தெரியும் - குழந்தை வளைந்து கும்பிட்ட நிலையில்தான் இருக்கும்!

ஏன் அப்படியிருக்க வேண்டும்? மாணிக்கவாசகரின் திருவாசகப் பாடலைப் பார்த்தால் விவரம் புரியும். ஓர் அற்புதமான ‘ஸ்கேனிங்’ பாடல் இது!

மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து
ஈனம் இல் கிருமிச் செருவினில் பிழைத்தும்
ஒரு மதித்தான்றியின் இருமையில் பிழைத்தும்
இரு மதி விளைவின் ஒருமையில் பிழைத்தும்
மும் மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும்
ஈரிரு திங்களில் பேரிருள் பிழைத்தும்
அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்
ஆறு திங்களில் ஊறலர் பிழைத்தும்
ஏழு திங்களில் தாழ்புவி பிழைத்தும்
எட்டுத் திங்களில் கட்டமும் பிழைத்தும்
ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்
தக்க தசமதி தாயொடு தான்படும்
துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும்
(திருவாசகம்-கீர்த்தித் திருவகவல் - 13-26 வரிகள்)

தாயின் வயிற்றில் புழுக்களுடன் நிகழ்த்தும் கிருமிப் போரில் அழியாமல் தப்பிப் பிழைத்து, முதலாம் மாதம் தான்றிக்காயின் அளவிலே உருவான கரு தப்பிப் பிழைத்து, இரண்டாம் மாதம் மற்ற புழுக்களும் கருப்பையில் புகுந்து செய்யும் இடையூறுகளில் தப்பிப் பிழைத்து, மூன்றாம் மாதம் பெருகும் மதநீரினால் அழியாமல் தப்பிப் பிழைத்து, நான்காம் மாதம் கருப்பை அடைப்பு, வெடிப்பு முதலானவற்றால் அழியாமல் தப்பிப் பிழைத்து, ஐந்தாம் மாதம் மரணத்திலிருந்து தப்பிப் பிழைத்து, ஆறாம் மாதம் கருப்பையின் நெருக்குதலில் தப்பிப் பிழைத்து, ஏழு, எட்டு, ஒன்பதாம் மாதங்களில் கரு சிதையாமல் இடையூறுகளில் இருந்து தப்பிப் பிழைத்து...

‘யப்பாடா! பொறக்கறத்துக்குள்ள இவ்...வளவு இருக்கா?’ என்று அவசரப்பட்டு ஆச்சரியப்பட வேண்டாம்; இன்னும் பிறக்கவில்லை. அதைக் கடைசி இரு வரிகள் விவரிக்கின்றன: பத்தாவது மாதம் நாம் பிறக்கும்போது, தாயாருக்கும் பிரசவ வேதனை, நமக்கும் தாய் வயிற்றிலிருந்து வெளிப்படும் வேதனை! இவ்வளவுத் துயரங்களிலிருந்தும் தப்பிப் பிழைத்துப் பிறக்கிறோம்.

அதற்காக இறைவனுக்கு நன்றி செலுத்துவதைப் போலக் கைகளைக் கூப்பியபடி கருவறையில் கிடக்கிறோம், பிறக்கிறோம். இது எங்கே நமக்குப் புரியாமல் போய்விடுமோ என்று எண்ணியே, தாயின் வயிற்றிலிருந்த பரீட்சித்தை பகவான் காப்பாற்றினார் என பாகவதம் விவரிக்கிறது.

தாயின் வயிற்றில் இருக்கும்போது, ‘ஆண்டவா! செய்த வினைகளின் காரணமாக வந்துவிட்டேனே!’ என்று இறை சிந்தனை இருக்கும். ஆனால் பிறந்து வெளிப்பட்ட பிறகு, வெளிக் காற்றுத் தாக்கியவுடன்... போச்சு! இறை சிந்தனை இல்லாமல் போய்விடும். அப்புறம் என்ன? பிறந்தவுடன் பசியின் காரணமாகப் பாலுக்கு அழத் தொடங்கி, வளர வளர ஒவ்வொன்றுக்காகவும் அழுது, அடுத்தவர்களையும் அழவைத்து... இப்படியே போய்க்கொண்டிருக்கிறது வாழ்க்கை!

இவற்றின் நடுவில் தெய்வ சிந்தனைக்கு இடம் ஏது? ஆனால், திருமூலர் இப்படிக் கருதவில்லை. கருவிலே கங்காதரன் நினைவோடு இருந்தவர், பிறந்த பிறகு தானும் அழாமல் அடுத்தவரையும் அழவைக்காமல் இருந்தவர் அவர். இன்னும் சொல்லப்போனால், ஐந்தறிவு படைத்த மாடுகளின் துயர் தீர்ப்பதற்காக,  மூலனின் உடம்பில் கூடு விட்டுக்கூடு பாய்ந்தவர். அதன்பிறகும் கூட, சிவ சிந்தனையிலேயே இருந்து தவம் செய்து, நமக்காகத் தன் அனுபவங்களைத் திருமந்திரப் பாடல்களாகத் தந்தவர்.

‘நெய் அல்லது எண்ணெய் ஊற்றாமல் இயல்பாகவே ஒளி வீசக்கூடிய ஜோதிவடிவாக சிவபெருமான், என்னுள்ளே ஒளிவீசிப் பிரகாசித்துக் கொண்டிருக்கிறார்,’ என்று கூறிப் பாடலை நிறைவு செய்கிறார் திருமூலர். பிறந்த பிறகும் இறை சிந்தனை மாறாமல் இருப்பவர்களே, கருவிலே திருவுடையவர்கள் என்பது திருமூலர் வாழ்விலிருந்தும், அவரது பாடல்களிலிருந்தும் புலனாகின்றது. இப்பாடலில் திருமூலர் சொன்ன இதே கருத்து, அப்பர் சுவாமிகளின் பாடலிலும் வெளிப்படுகிறது:

கருவாய்க் கிடந்து உன் கழலே
நினைக்கும் கருத்து உடையேன்
உருவாய்த் தெரிந்து உன் நாமம்
பயின்றேன் உனது அருளால்
திருவாய்ப் பொலிய சிவாய நம
என்று திருநீறு அணிந்தேன்
தருவாய் சிவகதி நீ பாதிரிப் 
புலியூர் அரனே

திருமூலரின் வாக்கும் அப்பர் சுவாமிகளின் வாக்கும் ஒன்றுபோல் இருப்பதில் வியப்பில்லை. உத்தமர்களின் உள்ளம் ஒன்றேபோல்தான் இருக்கும். அதன் காரணமாகவே அவர்களெல்லாம் எப்போதும் ஆனந்தமாகவே இருந்தார்கள். எல்லோருக்கும் இந்நிலை வாய்ப்பதில்லை. அது கிடைக்க வேண்டுமென்றால், நல்ல குரு அமையவேண்டும்; நல்வழி காட்டும் அந்த சத்குரு வழியிலேயே நடக்கவேண்டும். சத்குரு கிடைப்பது அல்லது அமைவது குதிரைக் கொம்பாக இருக்கிறதே என்றால், அங்குதான் பிரச்னையே முளைக்கிறது. சரி, திருமூலர் இதைப் பற்றி என்ன சொல்கிறார் எனப் பார்க்கலாம்.

கைப்பட்ட மாமணி தானிடை கைவிட்டு வெய்ப்பட்ட கல்லைச் சுமப்போன் விதி போன்றும்
நெய்ப்பட்ட பால் இளநீர் தயிர் தான் நிற்கக் கைப்பட்டு உண்பான் போன்றும் கன்மி ஞானிக்கு ஒப்பே  (திருமந்திரம் - 526)

கருத்து: கையில் கிடைத்த மாணிக்கக் கல்லை வீசி எறிந்துவிட்டு, வெயிலில் கொதித்துக் கிடக்கும் பருக்கைக் கல்லைச் சுமப்பவன் போலும், நெய்யுள்ள பால், இளநீர், தயிர் ஆகியவையிருக்க, கசந்து வழிந்து தீங்கு விளைவிக்கும் எட்டிப் பழத்தை உண்பவன் போலும், ஞானகுரு இருக்கையில் அவரை விடுத்து அஞ்ஞானியைக் குருவாகக் கொள்பவனின் செயல் இருக்கிறது.

இருப்பதை விட்டுப் பறப்பதைப் பிடிக்க முயலாதே - அழகுள்ள இடத்தில் ஆபத்து இருக்கும். Where beauty lies There danger lies என்றெல்லாம் நமது முன்னோர்கள் சொன்னதை மெய்ப்பிக்கும் பாடல் இது. மனித இயல்பை மிகவும் அழகாகச் சொல்லித் துவங்குகிறது பாடல். எவ்வளவுதான் உயர்ந்ததான ஒன்று நம்மிடம் இருந்தாலும், அதை அலட்சியப்படுத்தத்தான் செய்வோம். உயர்ந்ததான அதை அலட்சியப்படுத்துவதுடன், உதவாக்கரையைத் தேடியும் போவோம்; அதைத் தூக்கித் தலையில் வைத்துக் கொண்டாடுவோம்.

அதைச் சொல்லும் திருமூலரின் இந்த வாக்கு, ‘மாணிக்கத்தை வீசிவிட்டு, மண்ணாங்கட்டியைத் தூக்கிச் சுமப்பதைப்போல’ என, முன்னோர்கள் சொல்வார்கள். சரி, வெளியில்தான் இப்படியிருக்கிறோம் என்றால், நம் உள்ளே போவது எப்படி இருக்கிறது? அதையும் சொல்கிறார் திருமூலர். தூய்மையான பால், இளநீர், தயிர் என ஆரோக்கியத்தைத் தரும் எவ்வளவோ நல்ல உணவுப் பொருட்கள் இருக்க, அவற்றை ஒதுக்கிவிட்டு எட்டிப் பழத்தை நாடி, உண்போம். காரணம்?

எட்டிப் பழம் பெரியதாகக்கூட இருக்காது; சுவையோ, கசந்து வழியும். இருந்தாலும், வண்ணம் நிறைந்த அதன் அழகு நம்மைக் கவர்கிறது; போய் விழுகிறோம். அந்தக் கவர்ச்சியில் மயங்கி, ஏமாந்து அதனை உட்கொள்ளும் போது அதன் கசப்பைத் தாங்காமல் தவிக்கிறோம். இதைச் சொல்லி, நம்மை வழி நடத்த முயற்சிக்கிறார் திருமூலர்.

அதாவது, பால், இளநீர், தயிர் என பல இருந்தாலும், அவற்றையெல்லாம் ஒதுக்கிவிட்டு, வண்ணக் கவர்ச்சியில் மயங்கி, எட்டிப் பழத்தின் கசப்பை அனுபவிப்பதுபோல, நல்லதை ஒதுக்கிவிட்டு கெட்டதை அனுபவிக்கிறார்களே என்கிறார் திருமூலர். அழுத்தமாகச் சொல்லவேண்டுமானால், உள்ளும் புறமும் நல்லவற்றை ஒதுக்கிவிட்டுக் கெட்டதைத்தான் ஏற்கிறோம். நல்வழி காட்டக்கூடியவர்கள் இருந்தாலும், அவர்களை ஒதுக்கிவிட்டு, தீயவழி காட்டுபவர்களை நம் குருநாதர்களாக, வழிகாட்டிகளாகக் கொள்கிறோம். 

இதை, ‘கன்மி ஞானிக்கு ஒப்பே’ எனும் சொற்கள்  விளக்கும். இவ்வாறு சொன்ன திருமூலர், விதி என்ற சொல்லையும் இப்பாடலில் பயன்படுத்தியிருக்கிறார். விதிக்கப்பட்டவற்றை விலக்கி, விதிக்கப்படாதவற்றை நாடி அல்லல் வலையில் அகப்படுகிறோம். உண்மை உணர்ந்து துயரங்களில் இருந்து விடுபட, நல்ல குருநாதரை அடைய வேண்டும் என்கிறார் திருமூலர். அவர் தம் அடுத்த பாடலில், தெளிந்த ஞானிகளின் உள்ளத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானின் இயல்புகளை சற்று விரிவாகக் கூறுகிறார்.

தளியறிவாளர்க்குத் தண்ணிதாய்த் தோன்றும்
குளியறிவாளர்க்குக் கூடவும் ஒண்ணான்
வளியறிவாளர்க்கு வாய்க்கினும் வாய்க்கும்
தெளியறிவாளர் தம் சிந்தையுளானே
(திருமந்திரம் - 502)

கருத்து: தெளிந்த ஞானிகளின் உள்ளத்தில் வீற்றிருக்கும் சிவபெருமான், அன்பினால் கண்ணீர் துளிர்க்கும் அடியார்களுக்கு, குளிர்ச்சி உடையவராய் விளங்குவார். யோக நெறியில் மூச்சையடக்கித் தியானத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஒருவேளை விளங்கலாம். ஆனால் ஞானம், அன்பு, யோகம் எனும் ஏதுமின்றித் தீர்த்தத்திலே மட்டும் நீராடுபவர்களுக்கு, அந்தச்சிவபெருமான் அடைதற்கு அரியவர்.

ஞானம் என்றாலே, தெளிவு என்பதுதான் பொருள். அப்படியிருக்கத் திருமூலர் ஏன் இவ்வாறு சொல்லவேண்டும்? ஞானிகள் பலர் தவம் செய்து தெளிவு பெற்ற பிறகும் மனங்கலங்கித் தவநிலையிலிருந்து தவறியிருக்கிறார்கள். தவறி விழுந்ததும் அதன்பின் எச்சரிக்கையாக இருப்போமல்லவா? அதுபோல, தவநிலையில் தவறிய ஞானிகள் மிகவும் எச்சரிக்கையாக இருப்பார்கள்; தெளிவு அவர்களுக்குள் நிலை பெற்றுவிடும். அதன்பின் அவர்கள் மனம் கலங்கவே கலங்காது. அப்படித் தெளிவு பெற்ற ஞானியர் உள்ளத்தில் தெய்வம் வீற்றிருக்கும்.

அடுத்து, அன்பினால் ஊற்றெழும் கண்ணீர் ஆறாகப் பெருக வழிபடும் அடியார்க்கு, குளிர்ச்சியாய் இருக்கும் தெய்வம். அதாவது அன்புள்ளம் கொண்டவர்க்கு, தெய்வம் அருள் மழை பொழியும் என்பது கருத்து. ‘காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி’ எனத் திருஞானசம்பந்தரும்; ‘வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே’ என மாணி்க்கவாசகரும்; ‘மழுமான் கரத்தனை விழியால் புனல் சிந்தி விம்மிவிம்மி அழு நன்மைவேண்டும் என்றே’ எனப் பட்டினத்தாரும் கூறியது, இக்கருத்தைத்தான்.

மேற்கூறிய இரு வழிகளையும் விடுத்து, தீர்த்த யாத்திரை செய்வதில் பலனில்லை என்கிறார் திருமூலர். உள்ளத்தில் அன்போ, சீலமோ இல்லாமல், புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவதில் பலனில்லை என்பது அவரது கருத்து. அனைவரிடமும் அன்பைச் செலுத்துவோம்! ஆண்டவன் அருளைப் பெறுவோம்!


ஞாயிறு, 16 ஏப்ரல், 2017

திருமகள் திருக்குறள்



திருமகள், செய்யாள், தாமரையினாள், திரு, கலைமகள் என்றெல்லாம் லட்சுமிதேவிக்குப் பல பெயர்கள் சூட்டிக் கொண்டாடுகிறது நம் இந்து மதம். அந்த லட்சுமி தேவியை வெவ்வேறு இடங்களில் நான்கு திருக்குறள்களில் குறிப்பிடுகிறார் வள்ளுவப் பெருந்தகை. வறுமையும் புலமையும் இணைந்தே இருப்பன என்ற கருத்தில் வள்ளுவருக்கு ஒருசிறிதும் உடன்பாடில்லை. அறநெறிப்படி வாழ்ந்தால் திருமகள் அவ்விதம் வாழ்பவனைத் தேடிவருவாள் என்பதே வள்ளுவரின் தீர்ந்த முடிவு. சரஸ்வதி கடாட்சம் உடையவர்கள் லட்சுமி கடாட்சம் பெறுவது கடினம் என்ற மூடநம்பிக்கை நம் மக்களிடையே ஊடுருவியுள்ளது. அந்தப் பொய்யான கருத்தைத் தாக்கித் தகர்க்கிறது திருக்குறள். அறநெறிப்படி வாழ்பவனே நிரந்தர லட்சுமி கடாட்சம் பெற இயலும். இன்னும் சொல்லப் போனால் சரஸ்வதி கடாட்சம் உடையவனாலேயே, தான் பெற்ற லட்சுமி கடாட்சத்தைக் காப்பாற்றிக் கொள்ளவும் முடியும். 

'அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்!’ (குறள் எண் 84)

மலர்ந்த முகத்துடன் விருந்தினர்களை வரவேற்று நல்ல முறையில் உபசரிப்பவன் எவனோ அவனது இல்லத்தில் லட்சுமிதேவி (செய்யாள்) அவன் உள்ளம் மகிழுமாறு வாசம் செய்வாள்.

'அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்!’ (குறள் எண் 167)

பொறாமை உள்ளவன் வீட்டில் திருமகள் (செய்யவள்) வந்து தங்கமாட்டாள். தன் அக்கா மூதேவிக்கு அவள் கைகாட்டி விடுவாள். எனவே மூதேவிதான் அவன் வீட்டில் வாசம் செய்வாள்.

'மடியுளான் மாமுகடி என்ப மடியிலான்
தாள் உளாள் தாமரையி னாள்!’ (குறள் எண்: 617)

சோம்பல் உள்ளவனிடம் மூதேவி குடியிருப்பாள். சோம்பல் இல்லாது உழைப்பவனின் காலடியில் வாசம் செய்வாள் தாமரைச் செல்வியான திருமகள். 

'இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு!’ (குறள் எண்: 920)

இருவகைப்பட்ட மனம் உடைய பொதுமகளிரிடம் கொள்ளும் உறவு, கள்ளுண்ணல், சூதாடுதல் ஆகிய இந்த மூன்று வகையான தீய பழக்கங்களைக் கொண்டிருப்பவரை விட்டு லட்சுமி தேவி (திரு) விலகிவிடுவாள். அவர்கள் செல்வ வளம் பெற இயலாது. ஆதிசங்கரர் சின்னஞ்சிறு பாலகனாக காலடி கிராமத்தில் அந்த எளிய வீட்டின்முன் பிட்சை வேண்டி நின்றார். அந்த வீடு அயாசகன் என்ற பரம எழை வேதியன் ஒருவனின் வீடு. மணி அரிசி கிடையாது வீட்டில். அயாசகன் வயல்வெளிப் பகுதியில் ஏதேனும் தானியம் இறைந்திருக்குமா என்று பார்க்க வெளியே சென்றிருந்தான். வீட்டுச் சாளரத்தின் வழியே தன் இல்லத்தின் வாயிலில் வந்து நின்ற அந்த தெய்வீகச் சிறுவனைப் பார்த்தாள் அயாசகனின் மனைவி. சங்கரச் சிறுவனின் ஒளிவீசும் திருமுகம் அவள் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. சிறுவன் எதன்பொருட்டோ குரல் கொடுக்கிறானே! வீணையின் நாதம் போல் அந்தக் குரல் மயக்குகிறதே! என்ன கேட்கிறான்?

'பவதி பிட்சாம் தேஹி!’எனக்குப் பிட்சை இடுங்கள் என்றல்லவா வேண்டுகிறான்! தெய்வமே! இந்த தெய்வீகச் சிறுவனை ஏன் என் வீட்டுக்கு அனுப்பினாய்! அவன் பிட்சா பத்திரத்தில் போட என் இல்லத்தில் மணி அரிசி கூட இல்லையே! பரம ஏழையான என்னிடம் நம்பிக்கை வைத்து என் வீட்டு வாசலில் நிற்கும் அவனை எப்படி வெறுங்கையோடு அனுப்புவேன்! அவள் மனம் பதறியது. பரபரத்தது. அங்குமிங்கும் தேடினாள். நேற்று ஏகாதசி. ஆனால் அவள் வீட்டில் என்றும் ஏகாதசி தான்! இன்று துவாதசி. ஏகாதசி பட்டினி விரதத்தை முறிக்க, ஏதேனும் உண்பது சம்பிரதாயம் ஆயிற்றே? அதை நிறைவேற்றுவதன் பொருட்டு ஒரே ஒரு வாடிய நெல்லிக் கனியை மாடத்தில் வைத்திருந்தாள். அந்த நெல்லிக் கனியைக் கையிலெடுத்துக் கொண்டாள்.

இவ்வளவு எளிய பொருளை பிட்சாபாத்திரத்தில் போடுகிறோமே என அவள் உள்ளம் கூசியது. கண்கலங்க மிகுந்த கூச்சத்தோடு அந்த நெல்லிக்கனியை சங்கரச் சிறுவனின் பிட்சைப் பாத்திரத்தில் போட்டுவிட்டு நாணம் தாங்காமல் விம்மியவாறு உள்ளே ஓடி மறைந்தாள் அவள். அவள் சேலையில் நெய்த நுலை விட தைத்த நூல் அதிகம் இருந்ததைப் பார்த்தார் சங்கரர். அவள் தனக்களித்த நெல்லிக் கனியையும் கனிவோடு உற்றுப் பார்த்தார். இந்தக் கொடும் வறுமையிலும் யாசகம் கேட்போருக்கு ஏதேனும் கொடுக்க வேண்டும் என அவள் மனம் நினைத்ததே, அந்த மனம் பொன்மனம் அல்லவா? அத்தகைய பொன்மனம் கொண்டவளுக்கு லட்சுமிதேவி பொன்னாலான நெல்லிக்கனி களையல்லவா அருள வேண்டும்? சங்கரரின் அருள் வெள்ளம் அவர் இதயத்திலிருந்து பாடலாய்ப் பொங்கியது.

'அங்கம் ஹரே புளக பூஷணமாஸ்ரயந்தி
பிருங்காங்கனேவ முகுலாபரணம் தமாலம்
அங்கீக்ருதாகில விபூதிர பாங்க லீலா
மாங்கல்ய தாஸ்து மம மங்கல தேவதாயா!’

தாயே லட்சுமிதேவி! எந்த முன்வினை காரணமாக இவளுக்கு இந்தக் கொடிய வறுமைநிலை ஏற்பட்டிருந்தாலும் இனி நீ அவள் செய்த முன்வினையைக் கணக்கில் கொள்ளாதே! இதோ தன்னிடமிருந்த ஒரே ஒரு நெல்லிக்கனியை எனக்குத் தானமளித்ததன் மூலம் அவளுடைய முன்வினைகள் அனைத்தும் தூள்தூள் ஆகிவிட்டன. அவள் வீட்டில் பொன்மாரி பொழிவாய் அம்மா! அடுத்தடுத்து சரசரவென சங்கரரின் உதடுகளிலிருந்து அருள் வெள்ளம் சம்ஸ்க்ருத சுலோகங்களாய்ப் பொங்கியது. கேட்ட லட்சுமிதேவி உள்ளம் குளிர்ந்தாள். சங்கரர் யார்? பாரத தேசத்தில் ஷண்மத ஸ்தாபனம் செய்யவென தோன்றிய சிவபெருமானின் அவதாரம்தான் அல்லவா? சிவனே பரிந்துரைத்த பிறகு லட்சுமிதேவி அருள் புரியாமல் சிவனே என்றிருக்கலாமா?

சங்கரர் பாடிய கனகதாரா ஸ்தோத்திரத்தின் விளைவாக லட்சுமிதேவி அந்த ஏழைப் பெண்மணி வீட்டில் தங்க நெல்லிக்கனிகளைப் பொழியலானாள். உண்மையிலேயே கூரையை பிய்த்துக் கொண்டு செல்வம் கொட்டியது. இப்போதும் கேரளத்தில் காலடி கிராமத்திற்குச் சென்றால் கனகதாரா ஸ்தோத்திரம் பாடி தங்க நெல்லிக் கனிகள் கொட்டிய அந்த இல்லத்தை நாம் பார்க்கலாம். இந்த அற்புதத்தை நிகழ்த்தியது எது? அந்த ஏழைப் பெண்மணியின் விருந்தோம்பல். வறுமையிலும் செம்மை காத்து பிட்சைப் பாத்திரத்தில் நெல்லிக்கனி இட்டு உபசரித்த அவளின் பண்பு நலன். முகனமர்ந்து நல் விருந்தை உபசரித்தால் அத்தகையோர் இல்லத்தில் அகனமர்ந்து லட்சுமி தேவி வாசம் செய்வாள் என்ற குறள் கருத்தின் விளக்கம் தானே இந்த வரலாறு?

*லட்சுமி தேவி எப்படித் தோன்றினாள் என்பதை அழகாக விவரிக்கிறது நாராயணீயம். அவள் சரிதத்தை விவரிக்கும் நாராயண பட்டதிரி அவள் அருளில் தோய்ந்து மகிழ்ந்து ஈடுபட்டு அந்தச் சரிதத்தை எழுதுகிறார். வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கிப் பாற்கடலைக் கடைந்தபோது ஜொலிக்கின்ற அக்கினியுடன் கூடிய காலகூட விஷம்தான் முதலில் கிளம்பிற்று. தேவர்களைக் காக்க வேண்டி சிவபெருமான் அந்த விஷத்தை அள்ளியெடுத்துப் பருகிவிட்டார். பிறகு காமதேனு என்ற பசு தோன்றிற்று. கேட்டதையெல்லாம் தரும் அந்த அற்புதப் பசுவை திருமால் முனிவர்களுக்கு வழங்கினார். பிறகு குதிரைகளில் சிறந்த உச்சைச்வரஸ் என்ற குதிரையும், யானைகளில் சிறந்த வெள்ளை யானையான ஐராவதமும், கற்பக விருட்சம் முதலியனவும் தோன்றின. அவையெல்லாம் தேவர்களுக்கே அளிக்கப்பட்டன.

அதன்பின் பாற்கடலிலிருந்து கோடி நிலவுகள் ஒருசேர உதித்தாற்போல், உலகின் அழகெல்லாம் ஒன்றுதிரண்ட வடிவில் லட்சுமிதேவி தோன்றினாள். அந்த லட்சுமிதேவிக்கு தேவேந்திரன் ரத்தினமயமான பீடத்தை அளித்தான். எல்லோராலும் கொண்டு வரப்பட்ட அபிஷேக திரவியங்களால் லட்சுமி தேவியை ரிஷிகள் வேத மந்திரங்களை கானம் செய்து நீராட்டினார்கள். தேவர்கள் ரத்தின குண்டலங்களாலும் பல்வேறு அணிகலன்களாலும் மஞ்சள் பட்டாடைகளாலும் லட்சுமிதேவியை அலங்கரித்தார்கள். அந்த லட்சுமிதேவி சுயம்வர மாலையைக் கையிலெடுத்துக் கொண்டு வெட்கத்தோடு அன்ன நடை நடந்து, திருமாலின் மார்பில் அந்த மாலையைச் சூட்டினாள். தன்னை மணாளனாக வரித்த லட்சுமிதேவியைத் திருமால் தன் நெஞ்சத்தில் வைத்துக் கொண்டாடினார். திருப்பதி வேங்கடவன் மார்பில் திருமகள் உறையும் வரலாறு இதுதான்.

லட்சுமிதேவி பொதுவாக எங்கும் நிலையாகத் தங்கமாட்டாள். ஓரிடம் விட்டு இன்னோர் இடம் உருண்டோடும் பண்பை உடையவள் அவள். என்றாலும் தன் காதலரான திருமாலை யார் பூஜிக்கிறார்களோ அந்த விஷ்ணு பக்தர்கள் இல்லத்தில் தன் காதலரின் பெருமையை அதிக நேரம் கேட்கும் ஆசையில் அவள் கூடுதலாகத் தங்குவாள் என்பது மெய்யல்லவா எனக் கேட்கிறார் பட்டதிரி. நாராயணீயம் வெறும் புராண நூல் மட்டுமா? அது அற்புதமான கவிதைகளின் தொகுப்பல்லவா? சரஸ்வதியின் வாகனம் அன்னப் பறவை என்றும் பார்வதி தேவியின் வாகனம் சிங்கம் என்றும் நாம் அறிவோம். ஆனால், லட்சுமி தேவியின் வாகனம் எதுவென்று நம்மில் பலர் அறிய மாட்டோம். லட்சுமி தேவியின் வாகனம் ஆந்தை என்கிற பறவை. சரஸ்வதிக்கு அன்னம் ஏன் வாகனமாயிற்று?

'கல்வி கரையில கற்பவர் நாள் சில
மெல்ல நினைக்கிற் பிணிபல  தெள்ளிதின்
ஆராய்ந்து அமையுடைய கற்பவே நீரொழியப்
பாலுண் குருகின் தெரிந்து!’

என்கிறது நாலடியார் வெண்பா. அன்னப் பறவை பாலையும் தண்ணீரையும் வைத்தால் பாலை மட்டும் பிரித்து அருந்துமாம். அப்படி எல்லாவற்றையும் கற்காமல் நமக்குத் தேவையான நல்லதை மட்டும் கற்க வேண்டும் என்கிறது இப்பாடல். கல்விக் கடவுளான கலைவாணி நல்லவற்றை மட்டுமே கற்க வேண்டும் என்பதை அறிவுறுத்தத்தான் அன்ன வாகனத்தில் அமர்ந்திருக்கிறாள். பார்வதிக்கு சிங்க வாகனம் ஏன்? அவள் சக்தியின் வடிவம். உடல் வலிமையை விரும்புகிறவர்கள் பார்வதி தேவியை வழிபட வேண்டும். லட்சுமிதேவியின் வாகனத்தை ஏன் ஆந்தை என்ற பறவையாகப் படைத்தார்கள்? ஆந்தை இரவில் கண்விழித்திருக்கும். இரவிலும் அயராது பணிசெய்தால் தான் அதிக லட்சுமி கடாட்சம் பெற முடியும். தகவல் தொழில் நுட்பத் துறையில் ஈடுபட்டிருப்போரெல்லாம் இரவிலும் பணி செய்துதானே கணிசமாகச் சம்பாதிக்கிறார்கள்?

ஒருமுறை திருமகளுக்கும் அவள் அக்கா மூதேவிக்கும் சச்சரவு எழுந்தது. யார் அதிக அழகு என்பதே பிரச்னை. அதில் தீர்ப்பு வேண்டிப் பலரிடமும் சென்றார்கள் அவர்கள். யாரும் தீர்ப்புச் சொல்ல முன்வரவில்லை. காரணம் திருமகள்தான் அழகு என்றால் 'உன்னை என்ன செய்கிறேன் பார்!’ என மூதேவி, தீர்ப்புச் சொன்னவர் இல்லத்தில் வந்து குடிபுகக் கூடும். இல்லை மூதேவி தான் அழகு என்றால் 'எனக்குச் சாதகமாகத் தீர்ப்பு வரவில்லையே’ என லட்சுமி தேவி கோபம் கொண்டு வீட்டை விட்டுப் போய்விட்டாலும் ஆபத்து. நமக்கெதற்கு வம்பு எல்லோரும் ஒதுங்கிக் கொண்டார்கள். யாரிடம் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணலாம் என எண்ணியபோது அந்த சகோதரிகளின் எதிரே எதிர்ப்பட்டார் நாரத மகரிஷி. அவரிடம் தங்களில் யார் அழகு என்று கேட்டார்கள் கலைவாணியும் அவள் தமக்கை மூதேவியும்.

நாரதர் சற்று நேரம் யோசித்தார். எந்த வம்பிலும் சிக்கிக் கொள்ளாமல் தீர்ப்புச் சொல்ல வேண்டும். அவர் சொல்லும் தீர்ப்பை அனைவரும் ஏற்கவும் வேண்டும். அவருக்கு அதனால் எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடவும் கூடாது. யோசித்த நாரதர் ஒரு முடிவு செய்தார். 'நீங்கள் இருவரும் பார்ப்பதற்கு ஏறக்குறைய ஒன்றுபோல் தான் இருக்கிறீர்கள். எனவே தோற்றத்தை வைத்து இந்தப் பிரச்னையில் முடிவு காண இயலாது. இருவரும் சற்றுதூரம் நடந்துசென்று திரும்பி வாருங்கள். உங்களில் யார் அழகு என்பது அப்போது தெரிந்துவிடும்!’ என்றார். சொன்னபடியே இருவரும் சிறிதுதூரம் ஒயிலாக நடந்து திரும்பி வந்தார்கள். சிரித்தவாறே நாரதர் தன் தீர்ப்பைச் சொன்னார்: 'லட்சுமிதேவி வரும்போது அழகு.

மூதேவி போகும்போது போது அழகு!’லட்சுமிதேவி நம்மை நோக்கி வரவேண்டுமானால், மூதேவி நம்மை விட்டுப் போக வேண்டுமானால் என்னென்ன செய்ய வேண்டும் எனத் திருக்குறள் சொல்கிறது என்பதை இப்படிப் பட்டியலிடலாம்: விருந்தினர்களை நல்ல முறையில் உபசரித்து விருந்தோம்ப வேண்டும்.
பொறாமையில்லாமல் வாழ வேண்டும். சோம்பல் இல்லாது உழைக்க வேண்டும். பொது மகளிர் தொடர்பு, கள், சூதாட்டம் இவற்றைக் கண்டிப்பாய் விலக்க வேண்டும். வள்ளுவர் சொல்லும் வழியில் நடந்து லட்சுமி கடாட்சம் பெறலாமே?

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812