ஞாயிறு, 16 ஏப்ரல், 2017

திருமகள் திருக்குறள்



திருமகள், செய்யாள், தாமரையினாள், திரு, கலைமகள் என்றெல்லாம் லட்சுமிதேவிக்குப் பல பெயர்கள் சூட்டிக் கொண்டாடுகிறது நம் இந்து மதம். அந்த லட்சுமி தேவியை வெவ்வேறு இடங்களில் நான்கு திருக்குறள்களில் குறிப்பிடுகிறார் வள்ளுவப் பெருந்தகை. வறுமையும் புலமையும் இணைந்தே இருப்பன என்ற கருத்தில் வள்ளுவருக்கு ஒருசிறிதும் உடன்பாடில்லை. அறநெறிப்படி வாழ்ந்தால் திருமகள் அவ்விதம் வாழ்பவனைத் தேடிவருவாள் என்பதே வள்ளுவரின் தீர்ந்த முடிவு. சரஸ்வதி கடாட்சம் உடையவர்கள் லட்சுமி கடாட்சம் பெறுவது கடினம் என்ற மூடநம்பிக்கை நம் மக்களிடையே ஊடுருவியுள்ளது. அந்தப் பொய்யான கருத்தைத் தாக்கித் தகர்க்கிறது திருக்குறள். அறநெறிப்படி வாழ்பவனே நிரந்தர லட்சுமி கடாட்சம் பெற இயலும். இன்னும் சொல்லப் போனால் சரஸ்வதி கடாட்சம் உடையவனாலேயே, தான் பெற்ற லட்சுமி கடாட்சத்தைக் காப்பாற்றிக் கொள்ளவும் முடியும். 

'அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்!’ (குறள் எண் 84)

மலர்ந்த முகத்துடன் விருந்தினர்களை வரவேற்று நல்ல முறையில் உபசரிப்பவன் எவனோ அவனது இல்லத்தில் லட்சுமிதேவி (செய்யாள்) அவன் உள்ளம் மகிழுமாறு வாசம் செய்வாள்.

'அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்!’ (குறள் எண் 167)

பொறாமை உள்ளவன் வீட்டில் திருமகள் (செய்யவள்) வந்து தங்கமாட்டாள். தன் அக்கா மூதேவிக்கு அவள் கைகாட்டி விடுவாள். எனவே மூதேவிதான் அவன் வீட்டில் வாசம் செய்வாள்.

'மடியுளான் மாமுகடி என்ப மடியிலான்
தாள் உளாள் தாமரையி னாள்!’ (குறள் எண்: 617)

சோம்பல் உள்ளவனிடம் மூதேவி குடியிருப்பாள். சோம்பல் இல்லாது உழைப்பவனின் காலடியில் வாசம் செய்வாள் தாமரைச் செல்வியான திருமகள். 

'இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு!’ (குறள் எண்: 920)

இருவகைப்பட்ட மனம் உடைய பொதுமகளிரிடம் கொள்ளும் உறவு, கள்ளுண்ணல், சூதாடுதல் ஆகிய இந்த மூன்று வகையான தீய பழக்கங்களைக் கொண்டிருப்பவரை விட்டு லட்சுமி தேவி (திரு) விலகிவிடுவாள். அவர்கள் செல்வ வளம் பெற இயலாது. ஆதிசங்கரர் சின்னஞ்சிறு பாலகனாக காலடி கிராமத்தில் அந்த எளிய வீட்டின்முன் பிட்சை வேண்டி நின்றார். அந்த வீடு அயாசகன் என்ற பரம எழை வேதியன் ஒருவனின் வீடு. மணி அரிசி கிடையாது வீட்டில். அயாசகன் வயல்வெளிப் பகுதியில் ஏதேனும் தானியம் இறைந்திருக்குமா என்று பார்க்க வெளியே சென்றிருந்தான். வீட்டுச் சாளரத்தின் வழியே தன் இல்லத்தின் வாயிலில் வந்து நின்ற அந்த தெய்வீகச் சிறுவனைப் பார்த்தாள் அயாசகனின் மனைவி. சங்கரச் சிறுவனின் ஒளிவீசும் திருமுகம் அவள் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. சிறுவன் எதன்பொருட்டோ குரல் கொடுக்கிறானே! வீணையின் நாதம் போல் அந்தக் குரல் மயக்குகிறதே! என்ன கேட்கிறான்?

'பவதி பிட்சாம் தேஹி!’எனக்குப் பிட்சை இடுங்கள் என்றல்லவா வேண்டுகிறான்! தெய்வமே! இந்த தெய்வீகச் சிறுவனை ஏன் என் வீட்டுக்கு அனுப்பினாய்! அவன் பிட்சா பத்திரத்தில் போட என் இல்லத்தில் மணி அரிசி கூட இல்லையே! பரம ஏழையான என்னிடம் நம்பிக்கை வைத்து என் வீட்டு வாசலில் நிற்கும் அவனை எப்படி வெறுங்கையோடு அனுப்புவேன்! அவள் மனம் பதறியது. பரபரத்தது. அங்குமிங்கும் தேடினாள். நேற்று ஏகாதசி. ஆனால் அவள் வீட்டில் என்றும் ஏகாதசி தான்! இன்று துவாதசி. ஏகாதசி பட்டினி விரதத்தை முறிக்க, ஏதேனும் உண்பது சம்பிரதாயம் ஆயிற்றே? அதை நிறைவேற்றுவதன் பொருட்டு ஒரே ஒரு வாடிய நெல்லிக் கனியை மாடத்தில் வைத்திருந்தாள். அந்த நெல்லிக் கனியைக் கையிலெடுத்துக் கொண்டாள்.

இவ்வளவு எளிய பொருளை பிட்சாபாத்திரத்தில் போடுகிறோமே என அவள் உள்ளம் கூசியது. கண்கலங்க மிகுந்த கூச்சத்தோடு அந்த நெல்லிக்கனியை சங்கரச் சிறுவனின் பிட்சைப் பாத்திரத்தில் போட்டுவிட்டு நாணம் தாங்காமல் விம்மியவாறு உள்ளே ஓடி மறைந்தாள் அவள். அவள் சேலையில் நெய்த நுலை விட தைத்த நூல் அதிகம் இருந்ததைப் பார்த்தார் சங்கரர். அவள் தனக்களித்த நெல்லிக் கனியையும் கனிவோடு உற்றுப் பார்த்தார். இந்தக் கொடும் வறுமையிலும் யாசகம் கேட்போருக்கு ஏதேனும் கொடுக்க வேண்டும் என அவள் மனம் நினைத்ததே, அந்த மனம் பொன்மனம் அல்லவா? அத்தகைய பொன்மனம் கொண்டவளுக்கு லட்சுமிதேவி பொன்னாலான நெல்லிக்கனி களையல்லவா அருள வேண்டும்? சங்கரரின் அருள் வெள்ளம் அவர் இதயத்திலிருந்து பாடலாய்ப் பொங்கியது.

'அங்கம் ஹரே புளக பூஷணமாஸ்ரயந்தி
பிருங்காங்கனேவ முகுலாபரணம் தமாலம்
அங்கீக்ருதாகில விபூதிர பாங்க லீலா
மாங்கல்ய தாஸ்து மம மங்கல தேவதாயா!’

தாயே லட்சுமிதேவி! எந்த முன்வினை காரணமாக இவளுக்கு இந்தக் கொடிய வறுமைநிலை ஏற்பட்டிருந்தாலும் இனி நீ அவள் செய்த முன்வினையைக் கணக்கில் கொள்ளாதே! இதோ தன்னிடமிருந்த ஒரே ஒரு நெல்லிக்கனியை எனக்குத் தானமளித்ததன் மூலம் அவளுடைய முன்வினைகள் அனைத்தும் தூள்தூள் ஆகிவிட்டன. அவள் வீட்டில் பொன்மாரி பொழிவாய் அம்மா! அடுத்தடுத்து சரசரவென சங்கரரின் உதடுகளிலிருந்து அருள் வெள்ளம் சம்ஸ்க்ருத சுலோகங்களாய்ப் பொங்கியது. கேட்ட லட்சுமிதேவி உள்ளம் குளிர்ந்தாள். சங்கரர் யார்? பாரத தேசத்தில் ஷண்மத ஸ்தாபனம் செய்யவென தோன்றிய சிவபெருமானின் அவதாரம்தான் அல்லவா? சிவனே பரிந்துரைத்த பிறகு லட்சுமிதேவி அருள் புரியாமல் சிவனே என்றிருக்கலாமா?

சங்கரர் பாடிய கனகதாரா ஸ்தோத்திரத்தின் விளைவாக லட்சுமிதேவி அந்த ஏழைப் பெண்மணி வீட்டில் தங்க நெல்லிக்கனிகளைப் பொழியலானாள். உண்மையிலேயே கூரையை பிய்த்துக் கொண்டு செல்வம் கொட்டியது. இப்போதும் கேரளத்தில் காலடி கிராமத்திற்குச் சென்றால் கனகதாரா ஸ்தோத்திரம் பாடி தங்க நெல்லிக் கனிகள் கொட்டிய அந்த இல்லத்தை நாம் பார்க்கலாம். இந்த அற்புதத்தை நிகழ்த்தியது எது? அந்த ஏழைப் பெண்மணியின் விருந்தோம்பல். வறுமையிலும் செம்மை காத்து பிட்சைப் பாத்திரத்தில் நெல்லிக்கனி இட்டு உபசரித்த அவளின் பண்பு நலன். முகனமர்ந்து நல் விருந்தை உபசரித்தால் அத்தகையோர் இல்லத்தில் அகனமர்ந்து லட்சுமி தேவி வாசம் செய்வாள் என்ற குறள் கருத்தின் விளக்கம் தானே இந்த வரலாறு?

*லட்சுமி தேவி எப்படித் தோன்றினாள் என்பதை அழகாக விவரிக்கிறது நாராயணீயம். அவள் சரிதத்தை விவரிக்கும் நாராயண பட்டதிரி அவள் அருளில் தோய்ந்து மகிழ்ந்து ஈடுபட்டு அந்தச் சரிதத்தை எழுதுகிறார். வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கிப் பாற்கடலைக் கடைந்தபோது ஜொலிக்கின்ற அக்கினியுடன் கூடிய காலகூட விஷம்தான் முதலில் கிளம்பிற்று. தேவர்களைக் காக்க வேண்டி சிவபெருமான் அந்த விஷத்தை அள்ளியெடுத்துப் பருகிவிட்டார். பிறகு காமதேனு என்ற பசு தோன்றிற்று. கேட்டதையெல்லாம் தரும் அந்த அற்புதப் பசுவை திருமால் முனிவர்களுக்கு வழங்கினார். பிறகு குதிரைகளில் சிறந்த உச்சைச்வரஸ் என்ற குதிரையும், யானைகளில் சிறந்த வெள்ளை யானையான ஐராவதமும், கற்பக விருட்சம் முதலியனவும் தோன்றின. அவையெல்லாம் தேவர்களுக்கே அளிக்கப்பட்டன.

அதன்பின் பாற்கடலிலிருந்து கோடி நிலவுகள் ஒருசேர உதித்தாற்போல், உலகின் அழகெல்லாம் ஒன்றுதிரண்ட வடிவில் லட்சுமிதேவி தோன்றினாள். அந்த லட்சுமிதேவிக்கு தேவேந்திரன் ரத்தினமயமான பீடத்தை அளித்தான். எல்லோராலும் கொண்டு வரப்பட்ட அபிஷேக திரவியங்களால் லட்சுமி தேவியை ரிஷிகள் வேத மந்திரங்களை கானம் செய்து நீராட்டினார்கள். தேவர்கள் ரத்தின குண்டலங்களாலும் பல்வேறு அணிகலன்களாலும் மஞ்சள் பட்டாடைகளாலும் லட்சுமிதேவியை அலங்கரித்தார்கள். அந்த லட்சுமிதேவி சுயம்வர மாலையைக் கையிலெடுத்துக் கொண்டு வெட்கத்தோடு அன்ன நடை நடந்து, திருமாலின் மார்பில் அந்த மாலையைச் சூட்டினாள். தன்னை மணாளனாக வரித்த லட்சுமிதேவியைத் திருமால் தன் நெஞ்சத்தில் வைத்துக் கொண்டாடினார். திருப்பதி வேங்கடவன் மார்பில் திருமகள் உறையும் வரலாறு இதுதான்.

லட்சுமிதேவி பொதுவாக எங்கும் நிலையாகத் தங்கமாட்டாள். ஓரிடம் விட்டு இன்னோர் இடம் உருண்டோடும் பண்பை உடையவள் அவள். என்றாலும் தன் காதலரான திருமாலை யார் பூஜிக்கிறார்களோ அந்த விஷ்ணு பக்தர்கள் இல்லத்தில் தன் காதலரின் பெருமையை அதிக நேரம் கேட்கும் ஆசையில் அவள் கூடுதலாகத் தங்குவாள் என்பது மெய்யல்லவா எனக் கேட்கிறார் பட்டதிரி. நாராயணீயம் வெறும் புராண நூல் மட்டுமா? அது அற்புதமான கவிதைகளின் தொகுப்பல்லவா? சரஸ்வதியின் வாகனம் அன்னப் பறவை என்றும் பார்வதி தேவியின் வாகனம் சிங்கம் என்றும் நாம் அறிவோம். ஆனால், லட்சுமி தேவியின் வாகனம் எதுவென்று நம்மில் பலர் அறிய மாட்டோம். லட்சுமி தேவியின் வாகனம் ஆந்தை என்கிற பறவை. சரஸ்வதிக்கு அன்னம் ஏன் வாகனமாயிற்று?

'கல்வி கரையில கற்பவர் நாள் சில
மெல்ல நினைக்கிற் பிணிபல  தெள்ளிதின்
ஆராய்ந்து அமையுடைய கற்பவே நீரொழியப்
பாலுண் குருகின் தெரிந்து!’

என்கிறது நாலடியார் வெண்பா. அன்னப் பறவை பாலையும் தண்ணீரையும் வைத்தால் பாலை மட்டும் பிரித்து அருந்துமாம். அப்படி எல்லாவற்றையும் கற்காமல் நமக்குத் தேவையான நல்லதை மட்டும் கற்க வேண்டும் என்கிறது இப்பாடல். கல்விக் கடவுளான கலைவாணி நல்லவற்றை மட்டுமே கற்க வேண்டும் என்பதை அறிவுறுத்தத்தான் அன்ன வாகனத்தில் அமர்ந்திருக்கிறாள். பார்வதிக்கு சிங்க வாகனம் ஏன்? அவள் சக்தியின் வடிவம். உடல் வலிமையை விரும்புகிறவர்கள் பார்வதி தேவியை வழிபட வேண்டும். லட்சுமிதேவியின் வாகனத்தை ஏன் ஆந்தை என்ற பறவையாகப் படைத்தார்கள்? ஆந்தை இரவில் கண்விழித்திருக்கும். இரவிலும் அயராது பணிசெய்தால் தான் அதிக லட்சுமி கடாட்சம் பெற முடியும். தகவல் தொழில் நுட்பத் துறையில் ஈடுபட்டிருப்போரெல்லாம் இரவிலும் பணி செய்துதானே கணிசமாகச் சம்பாதிக்கிறார்கள்?

ஒருமுறை திருமகளுக்கும் அவள் அக்கா மூதேவிக்கும் சச்சரவு எழுந்தது. யார் அதிக அழகு என்பதே பிரச்னை. அதில் தீர்ப்பு வேண்டிப் பலரிடமும் சென்றார்கள் அவர்கள். யாரும் தீர்ப்புச் சொல்ல முன்வரவில்லை. காரணம் திருமகள்தான் அழகு என்றால் 'உன்னை என்ன செய்கிறேன் பார்!’ என மூதேவி, தீர்ப்புச் சொன்னவர் இல்லத்தில் வந்து குடிபுகக் கூடும். இல்லை மூதேவி தான் அழகு என்றால் 'எனக்குச் சாதகமாகத் தீர்ப்பு வரவில்லையே’ என லட்சுமி தேவி கோபம் கொண்டு வீட்டை விட்டுப் போய்விட்டாலும் ஆபத்து. நமக்கெதற்கு வம்பு எல்லோரும் ஒதுங்கிக் கொண்டார்கள். யாரிடம் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணலாம் என எண்ணியபோது அந்த சகோதரிகளின் எதிரே எதிர்ப்பட்டார் நாரத மகரிஷி. அவரிடம் தங்களில் யார் அழகு என்று கேட்டார்கள் கலைவாணியும் அவள் தமக்கை மூதேவியும்.

நாரதர் சற்று நேரம் யோசித்தார். எந்த வம்பிலும் சிக்கிக் கொள்ளாமல் தீர்ப்புச் சொல்ல வேண்டும். அவர் சொல்லும் தீர்ப்பை அனைவரும் ஏற்கவும் வேண்டும். அவருக்கு அதனால் எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடவும் கூடாது. யோசித்த நாரதர் ஒரு முடிவு செய்தார். 'நீங்கள் இருவரும் பார்ப்பதற்கு ஏறக்குறைய ஒன்றுபோல் தான் இருக்கிறீர்கள். எனவே தோற்றத்தை வைத்து இந்தப் பிரச்னையில் முடிவு காண இயலாது. இருவரும் சற்றுதூரம் நடந்துசென்று திரும்பி வாருங்கள். உங்களில் யார் அழகு என்பது அப்போது தெரிந்துவிடும்!’ என்றார். சொன்னபடியே இருவரும் சிறிதுதூரம் ஒயிலாக நடந்து திரும்பி வந்தார்கள். சிரித்தவாறே நாரதர் தன் தீர்ப்பைச் சொன்னார்: 'லட்சுமிதேவி வரும்போது அழகு.

மூதேவி போகும்போது போது அழகு!’லட்சுமிதேவி நம்மை நோக்கி வரவேண்டுமானால், மூதேவி நம்மை விட்டுப் போக வேண்டுமானால் என்னென்ன செய்ய வேண்டும் எனத் திருக்குறள் சொல்கிறது என்பதை இப்படிப் பட்டியலிடலாம்: விருந்தினர்களை நல்ல முறையில் உபசரித்து விருந்தோம்ப வேண்டும்.
பொறாமையில்லாமல் வாழ வேண்டும். சோம்பல் இல்லாது உழைக்க வேண்டும். பொது மகளிர் தொடர்பு, கள், சூதாட்டம் இவற்றைக் கண்டிப்பாய் விலக்க வேண்டும். வள்ளுவர் சொல்லும் வழியில் நடந்து லட்சுமி கடாட்சம் பெறலாமே?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812