திங்கள், 8 அக்டோபர், 2018

கொலு கோலாகலம்




நவராத்திரிப் பண்டிகை என்
று ஒன்பது நாட்களைக் குறிக்கும் இப்பண்டிகையைக் கொலுப் பண்டிகை என்ற பெயரிலும் பொருத்தமாக அழைப்பது இப்பண்டிகைக்கே உள்ள தனிச்சிறப்பு.
நவராத்திரி பண்டிகையின் நோக்கமே இக, பர வாழ்வின் உயர்வுதான். அந்த உயர்வினைப் படிகள் மூலம் விளக்குவதே கொலுவின் முக்கிய அம்சம். இந்தப் படிகள் ஒன்று, மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது என ஒன்றைப்படையில் அமைந்திருக்க வேண்டும். அவரவர் இடம், பொருள் ஆகியவற்றின் வசதியைப் பொறுத்து இந்த எண்ணிக்கைகளில் படிகளைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். ஆனால் பொம்மைகளின் வைப்பு முறையில் இயன்றவரை ஒன்பது படிக்கான முறையைப் பின்பற்ற வேண்டும்.
உயிரினங்கள் ஓருயிரி முதல் ஆறறிவு மனிதன்வரை வளர்ச்சி அடைவதையே இவை நினைவுபடுத்துகின்றன. பின்னர் மனிதன் தன் எண்ணம், செயல்களால் மேலும் உயர்ந்து இறை நிலையை அடைய வேண்டும் என்பதையும் நினைவுறுத்துகின்றன. இதற்காக சக்தியின் அம்சங்களை எண்ணிப் பூஜித்தால் வாழ்வின் அனைத்து வளங்களையும் பெறலாம் என்பது ஐதிகம்.
நவராத்திரி கொலுவின் கதை
மகாராஜா சுரதா, எதிரிகளை வெல்வதற்குத் தனது குருவான சுமதாவிடம் ஆலோசனை கேட்டார். அதன்படி சுத்தமான ஆற்று மணலைக் கொண்டு காளிரூபத்தைச் சிலையாக வடிக்கிறான். அதை அலங்காரம் செய்து உண்ணா நோன்பிருந்து மனமுருக வேண்டுகிறான். காளி அவனது பூஜையால் மகிழ்வுற்று அம்மன்னனின் பகைவர்களை அழித்து ஒரு புது யுகத்தினை உருவாக்கி அளிக்கிறாள். தன் ரூபத்தை மண்ணால் செய்து பூஜித்தால் சகல சுகங்களும், செளபாக்கியங்களும் பெறலாம் என்று அம்பிகையான தேவி அருளுகிறாள்.
தேவி மகாத்மியம்
ஆதிபராசக்தியான தேவி அசுரர்களை அழித்து தேவர்களையும், பாபங்களை அழித்து மனிதர்களையும் காப்பவள். இவள் கொண்டிருக்கும் ரூபங்கள் மூன்று: தடைகளை நீக்கும் துர்க்கை, ஐஸ்வர்யங்களை அருளும் லஷ்மி, கல்வியையும், ஞானத்தையும் அருளும் சரஸ்வதி.
அசுரர்கள் தேவர்களுக்குத் துன்பம் இழைக்கும் வழக்கத்தைக் கொண்டவர்கள். அவர்கள் வரம் கேட்கும்பொழுதே, பெண்கள் வலிமையற்றவர்கள் என்று நினைத்து, தாங்கள் எந்த ஆணாலும் கொல்லப்படக் கூடாது என்றே வரம் கேட்பார்கள். அதுபோன்ற வரங்களைக் கேட்ட அசுரர்கள் சண்டமுண்டன், ரக்த பீஜன், சும்ப நிசும்பன், மகிஷாசுரன். இவர்களை தேவி அழித்த நிகழ்வுகளே தேவி பாகவதம்.
முப்பத்து முக்கோடி தேவர்களும் தங்கள் சக்தியினைத் திரட்டி அம்பாள் போர் புரியச் செல்லும்பொழுது உதவுகிறார்கள். சக்தி அனைத்தையும் கொடுத்துவிட்டதால், பொம்மை போல் ஆகிவிடுகிறார்கள். அதுவே கொலு என்ற ஐதீகமும் உண்டு.
ஓரறிவு உயிர்களான புல், செடி, கொடி போன்ற தாவரங்களின் பொம்மைகளைப் படி ஒன்றில் வைக்க வேண்டும். இது தவிரப் பொதுவாகக் கொலு வைக்கும் இல்லங்களில் பூங்கா அமைப்பது உண்டு.
ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள். அந்தக் காலத்தில் திண்ணைகளில் அமர்ந்து சோழி உருட்டி விளையாடுவது வழக்கம். இந்தச் சோழிகளையும், சோழிகளால் செய்யப்பட்ட பொம்மைகளையும் இந்தப் படியில் வைக்கலாம்.
மூன்றறிவு உயிர்களான கரையான், எறும்பு, சிறு பூச்சிகள், மண் புழு ஆகியவற்றின் பொம்மைகள்.
நான்கறிவு உயிர்களை விளக்கும் நண்டு, வண்டு, பட்டாம்பூச்சி ஆகியவற்றின் பொம்மைகள்.
ஐந்தறிவு உள்ள மிருகங்கள், பறவைகள் ஆகியவற்றின் பொம்மைகளை அழகுற வைக்கலாம்.
ஆறறிவு மனிதர்களின் பொம்மைகளை வைக்க வேண்டும். சாதனையாளர்கள், உலகத் தலைவர்கள் ஆகியவற்றை வைத்தால், இல்லத்திற்கு வரும் விருந்தாளிகள் அச்சிலையில் உள்ளவர்களின் சாதனைகளை நினைவுகூர முடியும்.
மனித நிலையிலிருந்து உயர்நிலையை அடைந்த சித்தர்கள், ரிஷிகள், மகரிஷிகள் ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், ரமணர், வள்ளலார் முதலானோரின் பொம்மைகளை வைக்க வேண்டும்.
தேவர்கள், அஷ்டதிக் பாலர்கள், நவக்கிரக அதிபதிகள், இந்திரன், சந்திரன் ஆகிய தெய்வ உருவங்களை மண் பொம்மைகளாக வைக்கலாம்.
பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரின் சிலையுடன் அவ்வவர்களின் தேவியருடன் அமைந்திருக்குமாறு இந்த மேல் உச்சிப்படியில் வைக்க வேண்டும். இவற்றின் நடுவில் ஆதி பராசக்தி இருக்குமாறு அமைக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812