சாய்பாபா ஞானத்தை மட்டுமல்லாது தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு மனஅமைதியையும் அளிப்பவர் ஷீரடி சாய்பாபா என்பதை பின்வரும் கதை நமக்கு உணர்த்துகிறது.
வாணி என்ற கிராமத்தைச் சேர்ந்த காகாஜி வைத்தியர் என்பவர் சப்தசிருங்கி தேவியின் ஆலயத்தில் பூசாரியாக இருந்தார். அவர் தினமும் தேவிக்கு பூஜை செய்து வந்த போதிலும் அவரது மனமானது வேதனைகளால் நிறைந்து அமைதியிழந்து இருந்தது. மனஅமைதி பெற விரும்பிய அவர், தான் தினமும் வழிபடும் சப்தசிருங்கியிடம் வழி கேட்டார். அவர் மேல் இரக்கம் கொண்ட தேவி அவரை பாபாவைச் சென்று வணங்கும்படியும் அதனால் மனமானது அமைதியடையும் என்றும் கூறினாள்.
சாயிநாதரைப் பற்றி எதுவும் அறிந்திராத காகாஜி, பாபா என்று சப்தசிருங்கி தேவி குறிப்பிட்டது த்ரயம்பகேஷ்வரில் உள்ள ஈஸ்வரனையே ஆகும் என்று தன்னுள் எண்ணியவர் த்ரயம்பகேஷ்வர் சென்றார். அங்கு பத்து நாள்கள் தங்கி ஈஸ்வரரை வழிபட்ட பின்னும் அவர் மனமானது அமைதி பெறவில்லை. எனவே மீண்டும் அவர் தன் கிராமத்திற்குத் திரும்பினார்.
மீண்டும் தேவியை வணங்கிய அவர் தன் மீது கருணை கொண்டு தனக்கு மன அமைதி கிட்ட வழி கூற வேண்டும் என்று வணங்கினார். அவர்மீது இரக்கம் கொண்ட தேவி மீண்டும் அவர் கனவில் தோன்றினாள். தான் பாபா என்று குறிப்பிட்டது ஷீரடி சமர்த்த சாயியையே என்றும்; வீணாக ஏன் த்ரயம்பகேஷ்வர் சென்றாய் என்றும் வினவினாள். அவ்வாறு கூறிவிட்டு உடனே மறைந்துவிட்டாள். உறக்கத்திலிருந்து விழித்த காகாஜி தனக்கு ஷீரடியைப் பற்றி எதுவும் தெரியாததால் எவ்வாறு ஷீரடியை அடைந்து பாபாவை தரிசிப்பது என்று எண்ணியிருந்தார்.
நாம் கடவுளைக் காண வேண்டும் என்று நினைத்தால் மட்டும் அவருடைய தரிசனம் நமக்குக் கிடைத்துவிடாது. கடவுளின் பூரண அனுக்கிரகம் நமக்கு இருந்தால் மட்டுமே அவரைக் காண இயலும். ஆனால் பாபாவின் விசயத்தில் அவரின் பக்தர்கள் அவரைக் காண எண்ணினாலே போதும். எப்படியேனும் அவர்களைத் தன்னிடம் கூட்டி வருவார்.
அவ்வாறே காகாஜிக்கும் நிகழ்ந்தது. ஷீரடியைச் சேர்ந்தவரும், சாயிபாபாவின் பெரும் அடியவருமான ஷாமா என்பவரின் சகோதரர் ஒருமுறை ஒரு ஜோதிடரைச் சந்தித்தார். அவரிடம் தன் குடும்பத்தில் பல சோதனைகள் ஏற்பட்டிருப்பதாகவும் அதனைப் போக்க ஏதேனும் வழி கூறுமாறும் கேட்டார். அதற்கு அந்த ஜோதிடர், "உங்கள் தாயார், உங்கள் சகோதரர் ஷாமா சிறு பிள்ளையாக இருக்கும்போது உடல்நிலை சரியில்லாமல்போன காரணத்தால், உங்கள் குலதெய்வமான சப்தசிருங்கியிடம் ஷாமாவின் உடல்நலம் சரியானால் குடும்பத்துடன் வந்து வழிபடுவதாகவும் கூறினார். அவர் அவ்வாறு வேண்டிய உடனே ஷாமாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. ஆனால் அவர் குலதெய்வத்திடம் வேண்டியதை மறந்துவிட்டார். ஆனால் ஷாமாவின் தாயாருக்கு இறக்கும் தருவாயில் தனது வேண்டுதல் நினைவுக்கு வந்தது. ஷாமாவிடம் குலதெய்வத்தைச் சென்று வணங்க வேண்டும் என்ற சத்தியத்தைப் பெற்ற பின்னரே ஷாமாவுடைய தாயாரின் உயிர் பிரிந்தது.
நாளடைவில் ஷாமா அந்த சத்தியத்தை மறந்தார். இதை நினைவுகூர்ந்த ஜோதிடர் அந்த சத்தியத்தை நிறைவேற்றினால் அவரின் குடும்பக் கஷ்டங்கள் அனைத்தும் விலகும் என்று கூறினார். பாபாவின் ரூபத்திலேயே தனது குலதெய்வமான சப்தசிருங்கி தேவியை தரிசித்த ஷாமா நேராக பாபாவிடம் சென்றார்.
பாபாவை தன் குலதெய்வம் என்று எண்ணி வழிபடச் சென்ற அவரிடம், வாணி என்ற கிராமத்தில் இருக்கும் ஷாமாவின் குலதெய்வமாக விளங்கும் சப்தசிருங்கியை சென்று வழிபடுமாறு கூறினார். அதாவது அந்தச் செயலின் மூலம் பாபா தன் பக்தரான காகாஜியைத் தன்னிடம் அழைத்து வரவும் எண்ணினார்.
ஷாமா வாணி கிராமத்திற்கு வந்து தன் குலதெய்வமான சப்தசிருங்கியை வணங்கினார். அவர் ஷீரடியிலிருந்து வந்திருக்கிறார் என்பதை அறிந்த காகாஜிக்கு மகிழ்ச்சி உண்டாயிற்று. அவர் தனக்கு பாபாவை தரிசிக்க வேண்டும் என்றும், தன்னையும் அவருடன் அழைத்துச் செல்லுமாறும் கேட்டார். ஷாமாவும் அவரைத் தன்னுடன் ஷீரடிக்கு அழைத்துச் சென்றார்.
காகாஜி பாபாவை தரிசித்த அந்த கணமே அவரது மனமானது அமைதியைப் பெற்றது. ஆச்சர்யத்தின் உச்சமாக காகாஜி பாபாவிடம் தன்னுடைய பிரச்சனைகள் பற்றி எதுவும் கூறவில்லை. அதேபோல் பாபாவும் அவரிடம் ஒரு வார்த்தையும் பேசவில்லை. அவரைக் கண்ட மாத்திரத்திலேயே அவரின் மனதில் இருந்த வேதனைகள் நீங்கி அவரது மனமானது அமைதியடைந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக