பகவத் கீதை மாபெரும் காவியமான மகாபாரதத்தின் ஒரு பகுதியாக உள்ளது. பகவத் கீதை என்பதற்கு “கடவுளின் பாடல்கள்” என்று அர்த்தம் ஆகும். பகவத் கீதை பிறந்ததற்கு அடிப்படையாக அமைந்தது எது தெரியுமா? மகாபாரதப் போர். இந்த போர் எப்போது, எப்படி, யார்-யாருக்கு இடையே நடந்தது என்பதைத் தெரிந்து கொண்டால்தான் “பகவத்கீதை” பிறந்த சிறப்பை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.
அஸ்தினாபுரம் எனும் மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை குரு குலத்தினர் ஆட்சி செய்து வந்தனர். அந்த குலத்தில் பிறந்த அண்ணன்-தம்பியான திருதராஷ்டிரனுக்கும் பாண்டுவுக்கும் இடையே ஆட்சியை யார் நடத்துவது என்பதில் பிரச்சினை ஏற்பட்டது.
பிறவிக் குருடரான திருதராஷ்டிரருக்கு காந்தாரி மூலம் துரியோதனன், துச்சாதனன் என 100 மகன்கள் பிறந்தனர். இவர்கள் கௌரவர்கள் என்று அழைக்கப்பட்டனர்.
பாண்டுவுக்கு குந்தி மூலம் தர்மன், பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் என 5 மகன்கள் பிறந்தனர். இவர்கள் பஞ்சபாண்டவர்கள் என்றழைக்கப்பட்டனர். இந்த 5 பேருக்கும் பொதுவான ஒரே மனைவியாக திரௌபதி இருந்தார்.
துரியோதனனுக்கும் தர்மனுக்கும் இடையில் அடுத்து ஆட்சி செய்வது யார் என்ற பிரச்சினை எழுந்தது. அப்போது சகுனி செய்த சூழ்ச்சியால் சூதாட்டத்தில் நாட்டையும், மனைவியையும் இழந்த பஞ்ச பாண்டவர்கள் 12 ஆண்டுகள் வனவாசம் செல்ல வேண்டியதாயிற்று. 12 ஆண்டுகள் கழித்து நாடு திரும்பிய பஞ்ச பாண்டவர்கள் ஆட்சி உரிமையை கேட்டனர். ஆட்சியைக் கொடுக்க துரியோதனன் மறுத்தான். இதையடுத்து இருவரும் போருக்குத் தயாரானார்கள்.
இருவருக்கும் பொதுவானவராக இருந்தவர் கிருஷ்ணர். அதாவது இரு தரப்பினருக்குமே அவர் மாமா உறவில் வருபவர். அந்த உரிமையில் துரியோதனன், தர்மர் இருவரும் அவரிடம் சென்று போரில் தங்களுக்கு உதவுமாறு கேட்டனர்.
அவர்களிடம் கிருஷ்ணர், “நான் மட்டும் வேண்டுமா? அல்லது இலட்சக்கணக்கான வீரர்களைக் கொண்ட எனது படை வேண்டுமா? என்று கேட்டார்.
துரியோதனன் கொஞ்சமும் யோசிக்கவில்லை. “இலட்சக்கணக்கான வீரர்களைக் கொண்ட படைகளை தந்தாலே போதும்” என்றான். பஞ்ச பாண்டவர்களோ தங்களுக்கு “பரமாத்மாவான கிருஷ்ணர் மட்டும் உதவியாக வந்தால் போதும்” என்றனர்.
பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் மகாபாரத போர் தொடங்கியது. மொத்தம் 18 நாட்கள் போர் நடந்தது. இந்த போரின்போது வில் ஏந்திய அர்ச்சுனன் தனக்கு எதிராக நிற்பவர்களை பார்த்தான். பீஷ்மர், விதுரன், துரோணர், கிருபர் உள்ளிட்ட பங்காளிகள், உறவினர்கள், நண்பர்கள், குருமார்கள் என அனைவருமே தெரிந்தவர்களாக இருந்தனர். அவர்களை எதிர்த்து போர் புரிய அர்ச்சுனனுக்கு மிகவும் தயக்கமாக இருந்தது.
சொந்த உறவுகளையும் நண்பர்களையும் எதிர்த்து எப்படி வில் எய்வது என்று மிகவும் யோசித்தார். அவரது மனம் சோர்ந்து போனது. போரை விட்டு விலகி விடலாமா என்று கூட அர்ச்சுனன் மனம் நினைத்தது.
அப்போது அவருக்கு தேரோட்டியாக இருந்த கிருஷ்ண பரமாத்மா நிறைய உபதேசங்களை செய்தார். “தர்மத்துக்காக போர் செய்யும்போது உறவு முறைகளை பார்க்கக் கூடாது” என்று அறிவுறுத்தினார். அந்த அறிவுறுத்தலில் நிறைய தத்துவங்கள், யோகங்கள், விளக்கங்கள் இடம்பெற்று இருந்தன.
அந்த உரையாடல் தொகுப்பே பகவத் கீதையாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக