சிவன் என்பது ஆழ்ந்த மெளனத்தின் மற்றும் அசைவற்ற நிலையின் பரப்பு; அங்கு மனதின் அனைத்து செயல்களும் களையப்படுகின்றன. நீங்கள் எங்கிருந்தாலும் இந்த இடம் கிடைக்கும். தெய்வத்தைக் கண்டுபிடிக்க நீண்ட புனித யாத்திரை செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
நீங்கள் இருக்குமிடத்தில் கடவுளை நீங்கள் காணாவிட்டால், அவரை வேறு எங்கும் தேடிக் காண முடியாது. நீங்கள் நிறுவப்பட்டு மையமாக இருக்கும்போது அனைத்து இடங்களிலும் தெய்வத்தைக் காண்கின்றீர்கள். தியானத்தில் இதுதான் நிகழ்கின்றது.
சிவபெருமானின் பெயர்களில் ஒன்று ஆதியந்தாஹினம் - ஆரம்பம் அல்லது முடிவில்லாதது என்பதாகும். சிவன் தனது கழுத்தில் ஒரு பாம்புடன் அமர்ந்து இருப்பதாக நாம் கருதுகிறோம். சிவனிடமிருந்து அனைத்தும் பிறக்கின்றன; சிவன் அனைத்தையும் உள்ளடக்கியவர். அனைத்தும் சிவனிடமே கரைகின்றன. இப்படைப்பில் காணும் ஒவ்வொன்றும் சிவனது வடிவமேயாகும்.
அவர் முழு படைப்பிலும் ஊடுருவிச் செல்கிறார். அவர் ஒருபோதும் பிறக்கவில்லை, முடிவும் அற்றவர். நித்தியமானவர்.
சிவபெருமான் விரூபாக்ஷர் என்றும் அழைக்கப்படுகிறார் - அதாவது வடிவமற்றவர் ஆயினும் அனைத்தையும் காண்பவர். இது குவாண்டம் இயக்கவியலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. காண்பது மற்றும் காண்பவர் இரண்டும் காணும் செயல் முறையில் பாதிக்கப்படுகின்றன. நம்மைச் சுற்றி காற்று உள்ளது என்பதையும் அதனை உணரமுடியும் என்பதையும் நாம் அறிவோம். ஆனால் காற்று நம்மை உணர ஆரம்பித்தால் என்ன செய்வது? விண்வெளி நம்மை சுற்றி உள்ளது, நாம் விண்வெளியை அடையாளம் காணமுடியும் . ஆனால் நம்முடைய இருப்பை விண்வெளிப்பரப்பு அறிந்தால் என்ன ஆகும்? தெய்வம் நம்மைச் சுற்றி எங்கும் உள்ளது; மற்றும் நம்மைக் காண்கின்றது.
இது இருப்பு மற்றும் இலக்கின் வடிவமற்ற மையமாகும். காண்பவர், காணும் செயல் மற்றும் காட்சி ஆகியவற்றைக் காணும் இந்த வடிவமற்ற தெய்வம் சிவன். இந்த சிவ தத்துவத்தை உணர்ந்தறிந்து அனுபவித்தல் சிவராத்திரி.
வழக்கமாக கொண்டாட்டங்களில் விழிப்புணர்வு இழக்கப்படுகிறது. ஆழ்ந்த ஓய்வு மற்றும் விழிப்புணர்வுடன் கூடிய கொண்டாட்டம்தான் சிவராத்திரி. நீங்கள் ஒரு பிரச்சினையை எதிர்கொள்ளும்போது விழிப்புணர்வுடன் எச்சரிக்கையாக இருக்கின்றீர்கள். எல்லாம் நன்றாக இருக்கும்போது நாம் ஓய்வெடுக்கிறோம். ஆனால் சிவராத்திரியில் நாம் விழிப்புணர்வுடன் ஓய்வெடுக்கிறோம். அனைவரும் உறங்கும்நேரம் ஓர் யோகி விழித்திருப்பதாகக் கூறப்படுகிறது. யோகிக்கு ஒவ்வொரு நாளும் சிவராத்திரி.
மெய்யுணர்வின் நான்காவது நிலை சிவன். விழித்திருத்தல், ஆழ்ந்த தூக்கம் மற்றும் கனவு ஆகிய நிலைகளுக்கு அப்பால் உள்ள நிலை துரியா அவஸ்தா எனப்படும் தியான நிலையாகும். அனைத்து இடங்களிலும் இருக்கும் இருமையற்ற மெய்யுணர்வு எங்கும் வியாபித்துள்ளது. அதனால் தான் சிவனை வழிபட சிவனிலேயே கரைந்து விட வேண்டும்.
சிவனை வழிபட சிதநந்தருபர் - தூய பேரின்பம் என்ற மெய்யுணர்வு நிலையில் சிவமாகி விட வேண்டும். தபோ யோக கம்யா - அதாவது தவம் மற்றும் யோகா மூலம் அறியப்படும் ஒருவர் என்பதாகும். யோகா இன்றி சிவனை அனுபவிக்க முடியாது. யோகா என்பது ஆசனங்கள் (உடல் தோற்ற நிலைகள்) மட்டும் அல்ல, அது தியானம் மற்றும் பிராணாயாமம் (சுவாச நடைமுறைகள்) மூலம் சிவதத்துவத்தை அனுபவிப்பது ஆகும்.
பஞ்சமுகம், பஞ்சத்துவம் அதாவது ஐந்து கூறுகள் சிவனின் ஐந்து முகங்கள் என குறிப்பிடப் படுகின்றன. நீர், காற்று, பூமி, நெருப்பு மற்றும் விண்வெளி. இந்த ஐந்து உறுப்புகளை புரிந்து கொள்வது தத்துவஞானம் . சிவ வழிபாடு என்பது சிவதத்துவத்தில் கரைந்து அனைவருக்கும் நன்மையை வேண்டிக் கொள்ள வேண்டும். சர்வே ஜனா சுகினோ பவந்து (அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கட்டும்).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக