வெள்ளி, 31 ஜனவரி, 2020

தெமட்டகொடை மஹாவெல ஒழுங்கை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்



இந்து சமுத்திரத்தின் முத்தென விளங்குவதும் சகல வளங்களையும் தன்னகத்தே கொண்டதுமான ஸ்ரீலங்காபுரியின் தலைநகரமாக விளங்கும் கொழும்பு மாநகரின் தெமட்டகொடை பேஸ் லைன் வீதியில் மஹாவெல ஒழுங்கையில் 150 ம் இலக்கத்தில் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் சுமார் 20 வருடங்களுக்கு மேலான வரலாற்றைக் கொண்டது.

இப்பகுதியில் வாழ்ந்த மக்கள் ஆரம்பத்தில் ஒரு பெரிய மரநிழலின் அடியில் கல்லை நாட்டி வணங்கி வந்தனர். காலப்போக்கில் அவ்விடம் பலகைக் கொட்டகையாக மாறியது.

காலங்கள் செல்லச் செல்ல 1990 இல் இக் கொட்டகை மடாலயமாக மாற்றி அமைக்கப்பட்டது. அங்கு விநாயகர், சிவலிங்கம், அம்பாள், வைரவர் ஆகிய தெய்வங்களின் திருவுருவச் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆலயத்தில் நித்திய, நைமித்திய பூஜைகளும் விரதங்களும் விழாக்களும் சீராக நடந்து வந்தன.

இவ்வாலயத்தில் 2000 ம் ஆண்டு “வாணி வித்தியா” என்னும் பெயரில் அறநெறி பாடசாலையும் ஆரம்பிக்கப்பட்டது. இந்த அறநெறி பாடசாலையில் தற்போது 75 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். ஒரே ஒரு பொறுப்பாசிரியருடனும் ஒரே ஒரு ஆசிரியருடனும் இப்பாடசாலை சிறப்பாக இயங்குகிறது.

2005 ஆம் ஆண்டு இப்பகுதியின் சுற்றுப் புறச் சூழல் அபிவிருத்தி செய்யப்பட்டது. குறிப்பாக வீதி அபிவிருத்தி, மேம்பாலம் அமைப்பு, மாடி வீடமைப்பு திட்டங்கள் ஆகியன ஆரம்பிக்கப்பட்டன. இதனால், சேரிப்புற நிலங்கள் சதுப்பு நிலங்களாக மாறின. குடியேற்றங்கள் அதிகரிக்கப்பட்டன. இதனால் ஆலய அமைவிடம் பள்ளத்தாக்கானது.

கூரைகள், கட்டிட மதில்கள் வழியாக மழைநீர் ஒழுகும் அவல நிலை காணப்பட்டது. இந்த அவல நிலையைக் கண்டு இப்பகுதியில் வாழ்ந்த மக்களும் ஆலய பரிபாலன சபையினரும் ஒன்றுகூடி இவ்விடயத்தி இவ் ஆகம நியதிகளுக்கு ஏற்ப இராஜகோபுரத்துடன் விஸ்தீரமான ஆலயம் அமைக்க முடிவு செய்தனர். சுமார் 75 இலட்சம் ரூபா செலவில் இந்த ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது.

2006-2-3 ம் திகதி பாலஸ்தாபன கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஆலயம் அமைக்கப்பட்டிருந்த இடம் முழுமையாக உடைக்கப்பட்டு இடத்தை விஸ்திரமாக்கப்பட்ட 2006-2-11 ம் திகதி தைப்பூசத் திருநாளில் அத்திபாரக் கல் நடப்பட்டது. ஆஞ்சநேயர் ஆலய ஸ்ரீமத் சந்திரசேகர சுவாமி பிரதான கல்லை வைத்தார்.

அதனைத் தொடர்ந்து மூலஸ்தானம்அர்த்தமண்டபம், கட்டுமானப்பணிகளும் ஆரம்பிக்கப்பட்டன. அதனோடு சுற்று புற சுவரும் கட்டப்பட்டதுடன் பொருளாதார பற்றாக்குறையால் வேலைகள் காலதாமதமாகின. 2007 ஆம் ஆண்டு அக்டோபர் 5 ஆம் திகதி வாயிற்கோபுரம் அமைக்க அடிக்கல் நடப்பட்டது.

இவ் விழாவில் கொழும்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரதியமைச்சர் பெ. இராதாகிருஷணன் பிரதான கல்லை நாட்டி வைத்தார்.

இவ்விழாவில் கலந்து சிறப்பித்த அன்பர் ஒருவர் முழு கோவிலுக்கும் மேல் கொங்கிரீட் சிலப் செய்வதற்கு நிதி உதவி வழங்கினார்.

கொழும்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மேலக மக்கள் முன்னணியின் தலைவருமான மனோ கணேசன், முன்னாள் பிரதியமைச்சர் எம். எஸ். செல்லச்சாமி, மேல் மாகாண சபை உறுப்பினரும் கொழும்பு கிழக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளர் தயாகாந்த பெரேரா ஆகியோரின் சிபாரிசுகளின்படி இப்பாரிய திருப்பணியை சகோதர மொழி சகோதரர்கள், ஆலய அறங்காவலர்கள், நலன்விரும்புகள் ஆகியோரின் உண்டியல், டிக்கட் விற்பனை, நிதி வசூல் மூலமும் பொருள் உதவி மூலமும் திருப்பணி வேலைகள் நடைபெற்றுவந்தன.

இவ்வாலய பரிபாலன சபையினருக்கு நல் வழிகாட்டியாக இருந்த கிராண்ட்பாஸ், ஸ்ரீ ஞானவைரவர் ஆலய சிவாசாரியார் சிவஸ்ரீ பாலரவி சங்கரின் (ஜனாதிபதியின் இந்து மத அமைப்பாளர்) நல்லாசியுடன் நடைபெற்று வந்தன. இராஜகோபுரம் இல்லாமல் சிறு சிறு வேலைகள் பொருளாதார பிரச்சினையால் செய்ய முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை 5 வருட இடை வெளியில் சுற்றுப்புற சூழல் மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் அமைக்கப்பட்டது. இங்கு புதிய மாடி மனை வீடுகள், எஸ்கோன் ரெசிடன்ஸ், கனிய வள பெற்றோலிய அமைச்சு, உயரமான கட்டிடங்கள், மேம்பாலம் என பல கட்டிடங்கள் தோற்றம் பெற்றன. மஹாவெல ஒழுங்கையில் சுமார் 200 அடி தூரத்தில் அமைந்துள்ள இவ்வாலயத்தின் பரப்பளவு 1300 சதுர அடியாகும்.

இவ்வாலய திருப்பணி வேலைகளை தமிழ் நாட்டைச் சேர்ந்த சிற்பாசிரியரான விஸ்வஸ்ரீ செ. ச. சந்திரகுமார் தலைமையிலான குழுவினர் திருப்பணி வேலைகளை செய்தனர். இவ்வாலயத்தின் மூல மூர்த்தியாக ஸ்ரீ சித்தி விநாயகர் மூலஸ்தானத்தை அலங்கரித்துக் கொண்டு இருந்த அம்பாள், விஷ்ணு, துர்க்கை, நவக்கிரகம், வைரவர், காளியம்மன் ஆகிய பரிவார மூர்த்திகளுக்கும் இங்கு திருக்கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இவ்வாலயத்தின் மஹாகும்பாபிஷேகம் 2011.08.26ஆம்திகதிஆலயத்தின் தலைவர் ஐ. முருகேசன் (பரம்),செயலாளர் ஆர். விஜயன்,பொருளாளர் கே. கணேசன் ஆகியோரின் ஏற்பாட்டில் நடைபெற்றன.

இவ்வாலயகும்பாபிசேகம் நடைபெறுவதற்கு 4 வருடங்களுக்குமுன்பே இவ்வாலயத்திற்கு இராஜகோபுரம் அமைக்கவேண்டும் என்றஎண்ணம் ஏற்பட்டது. அதற்கமைய இவ்வாலயத்துக்குரிய இராஜகோபுரம் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

அதன்படி 36ஆம் அடிஉயரம் கொண்ட இராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இராஜகோபுரத்துக்கான கும்பாபிஷேகம் 2020-.01-.30ஆம் திகதி நடைபெற திருவருள் பாலித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812