

கொழும்பு மாநகரில் வர்த்தக நிலையங்களும் தொழிலகங்களும் நிறைந்து விளங்கும் செல்வச் செழிப்புமிக்க ஆமர் வீதியில், பெரடைஸ் பிளேஸில் கோயில் கொண்டு அருள்பாலித்து வருபவள் ஸ்ரீ மஹா காளியம்பாள். மிகவும் பழமையான சின்னஞ்சிறு மடாலயமாக இருந்த இந்த ஆலயம், இன்று ஆகம விதிகளுக்கமைய அமைக்கப்பட்டவர் பெரும் ஆலயமாகத் திகழ்கிறது.
இங்குள்ள அம்பாளின் அருள் மகிமை உணர்ந்து இவ்வாலயத்தை நாடி வருகின்ற பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வந்ததைத் தொடர்ந்து இவ்வாலயத்தை விஸ்தரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. இதன் விளைவாக 2009ஆம் ஆண்டு பெப்ரவரி 02ஆம் திகதி பாலஸ்தாபனம் செய்யப்பட்டதுடன், ஆலய திருப்பணி வேலைகள் யாவும் ஆரம்பிக்கப்பட்டன.
இங்குள்ள பக்தர்களினதும் இவ்வாலயத்தை நாடி வருகின்ற பக்தர்களினதும் உதவியுடன் சுமார் மூன்று கோடி ரூபா செலவில் ஆலய திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. தமிழகம் மாமல்லபுரத்தைச் சேர்ந்த ரவி சங்கர் ஸ்தபதி பக்தியும் கலைவண்ணமும் மிளிரும் வண்ணம் இவ்வாலயத்தை அமைத்து வருகிறார். இவ்வாலயத்தில் திரிதள இராஜ கோபுரம் அமைக்கப்படுவதுடன், விசாலமான மண்டபமும் அமைக்கப்படுகிறது.
ஆகம விதிப்படி, மத ஆசாரப்படி கலை அலங்காரத்துடன் நவீன வசதிகளோடு தாராளமான இடவசதி கொண்டதாக அமைக்கப்பட்டு வரும் ஆமர் வீதி பெரடைஸ் பிளேஸ் ஸ்ரீ மஹா காளியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் எதிர்வரும் 2012-03-25ஆம் திகதி காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது.
2012-03-23ஆம் திகதி அதிகாலை 5.30 மணிக்கு நடைபெறும் மஹா கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக கிரியைகள் ஆரம்பமாகும். 24ஆம் திகதி அதிகாலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெறும். அதனைத் தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டலாபிஷேகம் நடைபெறும்.
2011-05-11ஆம் திகதி வெள்ளிக்கிழமை மண்டலாபிஷேகப் பூர்த்தி நடைபெற்று 12ஆம் திகதி முத்தேர்த்திருவிழாவும் 13ஆம் திகதி பால்குட பவனியும் 14ஆம் திகதி வைரவர் மடையும் நடைபெறும்.
ஆலய முன்னாள் போஷகர் பிரதிஷ்டை சிரோன்மணி நவாலியூர் சாமி விஸ்வநாத குருக்களின் ஆசியுடன் அவரது புதல்வர் பிரதிஷ்டா பூஷணம் வெங்கட சுப்பிரமணியம் கும்பாபிஷேக கிரியைகளை நடத்திவைப்பார். ஆலய பிரதம குரு சுசீந்திர குருக்களும் இதில் கலந்துகொண்டு கிரியைகளை நடத்துவார்.
இவ்வாலயத்தின் முதலாவது கும்பாபிஷேகம் 1996ஆம் ஆண்டு நடைபெற்றது. இவ்வாலயத்தின் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு “ஸ்ரீ மஹா காளியம்மன் கான அருள் மழை கீதம்” என்ற இறுவட்டு (விளி) ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது.
தமிழகத்தின் பின்னணிப் பாடகர்களான டி. எம். எஸ். பால்ராஜ், ஸ்ருதி, முகேஸ் ஆகியோருடன் சாம்பசிவமணிக் குருக்களும் இந்த இறுவட்டில் காளி அம்பாளின் அருள் மகிமையை உணர்த்தும் திருப்பாடல்களை பாடியுள்ளார். இந்த இறுவட்டில் அம்பாளின் புகழ்மணக்கும் ஏழு திருப்பாடல்கள் உள்ளன. ஜெய்ச்சா என அழைக்கப்படும் ஜெயச்சந்திரன் இதற்கு இசை அமைத்துள்ளார்.
கிராமத்து மண்வாசனை கமழும் வண்ணம் தென்னிந்திய பக்தி திரையிசைப் பாடல்களுக்கு ஒப்பானதாக இப்பாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த இறுவட்டு ஆலயத்துக்கு வரும் பக்தர்களுக்கு 200 ரூபாவுக்கு வழங்கப்படுகிறது.
அம்பாளின் புகழ் மணக்கும் இந்த இறுவட்டின் வெளியீட்டு விழா கடந்த 10ஆம் திகதி கொழும்பு பிரைட்டன் ரெஸ்ட்டில் நடைபெற்றது. கொழும்பு வரதராஜ விநாயகர் ஆலய அறங்காவலரும் தொழிலதிபருமான ஈஸ்வரன், கொழும்பு, முகத்துவாரம் ஸ்ரீ விஷ்ணு ஆலய அறங்காவலர் சபைத் தலைவரும் தொழிலதிபருமான தேசமான்ய துரைசாமி, தொழிலதிபர் சுப்புராமன், பிரைட்டன் ரெஸ்ட் உரிமையாளர் செல்வராஜ் அருள் ஜுவலர்ஸ் உரிமையாளர் கணேச பெருமாள் ஆகியோர் இந்த இறுவட்டு வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டனர்.
இந்த ஆலயத்தின் கும்பாபிஷேகம் நடைபெறும் போது எல்லாம் வல்ல ஸ்ரீ மகா காளி அம்மனின் அருள் மணக்கும் மேலும் இரண்டு இறுவட்டுகளை (விளிக்களை) வெளியிடவுள்ளதாகவும் ஆலய அறங்காவலர் சபைத் தலைவர் நல்லதம்பி தெரிவித்தார்.
இதுவரை ஆமர் வீதியெங்கும் புகழ் மணம் பரப்பிக்கொண்டிருந்த ஸ்ரீ அம்பாளின் அருள்மகிமை இந்த இறுவட்டு மூலம் எல்லோரது உள்ளங்களில் மட்டுமன்றி இல்லங்களிலும் ஒலிக்க வைக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த இறுவட்டை பெற்றுக்கொள்வதன் மூலம் அம்பாளின் அருள்மகிமையை பரப்ப உதவுவதுடன், ஆலய கும்பாபிஷேகத்துக்கும் உதவி செய்தவர்களாவீர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக