திங்கள், 15 ஜூலை, 2013

கொழும்பில் ஆடிவேல் விழா

கொழும்பு, புறக்கோட்டை சம்மாங்கோடு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தானத்தின் வரலாற்று பெருமைமிக்க ஆடிவேல் விழா எதிர்வரும் 19 ஆம் திகதி காலை 7 மணிக்கு மகேஸ்வர பூஜையுடன் ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெறவுள்ளது. எதிர்வரும் 20 ஆம் திகதி சனிக்கிழமை காலை 5 மணிக்கு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தானத்தில் மூலவருக்கும் உற்சவர் வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ முத்துக்குமார சுவாமிக்கும் விசேட பூஜைகள் நடைபெற்று உள் வீதி உலாவுடன் சுவாமி காலை 7.05 மணிக்கு சித்திரத் தேரில் எழுந்தருளி பவனி வந்து அருள்பாலிப்பார். கொழும்பு, புறக்கோட்டை, முதலாம் குறுக்குத்தெரு, சம்மாங்கோடு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தானத்திலிருந்து புறப்படும் சித்திரத்தேர், பிரதான வீதி, கோட்டை ஜனாதிபதி மாவத்தையூடாக காலிமுகத்திடலை அடையும். அங்கு பக்தர்களுக்கு திருவமுது போஜனம் வழங்கப்படும். அதன்பின் பி. ப. 1.30 மணிக்கு காலி முகத்திடலிலிருந்து புறப்படும் சித்திரத் தேர் காலி வீதியூடாக கொள்ளுப்பிட்டி சந்தி, பம்பலப்பிட்டி சந்தி வழியாக பம்பலப்பிட்டி சம்மாங்கோடு ஸ்ரீ மாணிக்க விநாயகர் ஆலயத்தை வந்தடைந்ததும் அமுது அளிக்கப்படும். எதிர்வரும் 21 ஆம் திகதி பம்பலப்பிட்டி ஸ்ரீ மாணிக்க விநாயகர் ஆலயத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சுவாமிக்கு காலை 5 மணி முதல் வழமையான பூஜையுடன் ஆடிவேல் அர்ச்சனை நடைபெறும். அன்று காலை 11.30 மணிக்கு வேல் விழா விசேட பூஜையுடன் கதிர்காமக் கந்தனின் திருவருட் பிரசாதம் வழங்கப்பட்டு 12 மணிக்கு அன்னதானம் வழங்கப்படும். அன்று மாலை 5 மணிக்கு வழமையான பூஜையைத் தொடர்ந்து வேல் அர்ச்சனை நடைபெறும். அன்று மாலை 6 மணிக்கு தென் இந்திய திரைப்பட புகழ் கிராமிய இசை பேரரசர் நாட்டுப்புற பாடல் நல்லிசை நாயகன் கலைமாமணி டொக்டர் புஷ்பவனம் குப்புசாமியுடன் கிராமிய பாடல் இசை, குயில் மக்கள் இசை மாதரசி அனிதா குப்புசாமி வழங்கும் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறும். பெளர்ணமி தினமான எதிர்வரும் 22 ஆம் திகதி காலை 7 மணிக்கு வெள்ளவத்தை மாணிக்க கங்கை சங்கமத்தில் தீர்த்தோற்சவம் நடைபெறும். அதனைத் தொடர்ந்து ஆலயத்தில் சுவாமி மயில் வாகனக் காட்சி, ஆடிவேல் விழா அர்ச்சனை நடத்தப்பட்டு விபூதிப் பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்படும். அன்று மாலை 4 மணிக்கு ஸ்ரீ துர்க்கை அம்மனுக்கு நவகலசாபிஷேகமும் வேல் விழா அர்ச்சனையும் நடைபெறும். அன்று மாலை 6 மணிக்கு கலைமாமணி டொக்டர் புஷ்பவனம் குப்புசாமி இசை மாதரசி அனிதா குப்புசாமி தம்பதிகளின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறும். எதிர்வரும் 23 ஆம் திகதி காலை 7 மணி முதல் வழமையான பூஜையுடன் ஆடிவேல் விழா அர்ச்சனை நடத்தப்பட்டு திருவமுது போஜனம் வழங்கப்படும். எதிர்வரும் 23 ஆம் திகதி மாலை 5.30 மணிக்கு வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி அலங்கரிக்கப்பட்ட சித்திரத் தேரில் எழுந்தருளி பம்பலப்பிட்டி ஸ்ரீ மாணிக்கவிநாயகர் ஆலயத்திலிருந்து காலி வீதியூடாக பம்பலப்பிட்டி சந்தி, கொள்ளுப்பிட்டி சந்தி வழியாக பின்னிரவு 12 மணிக்கு காலிமுகத்திடலை வந்தடைந்து அருட்காட்சி புரிவார். எதிர்வரும் 24 ஆம் திகதி புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு அலங்கார புருஷராக சித்திரத் தேரில் கொலுவிருக்கும் ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி காலிமுகத்திடலிருந்து ஜனாதிபதி மாவத்தை, கோட்டை, கான் மணிக்கூட்டு கோபுர சுற்று வட்டம், பிரதான வீதி வழியாக இரண்டாம் குறுக்குத் தெருவில் திரும்பி, ஒல்கொட் மாவத்தை, சந்தி வரை சென்று திரும்பி, குமார வீதி, மூன்றாம் குறுக்குத் தெரு வழியாக பிரதான வீதி சென்று நான்காம் குறுக்குத்தெரு, கெயிசர் வீதி சந்தி வழியாக முதலாம் குறுக்குத் தெரு சந்தியில் திரும்பி மீண்டும் பிரதான வீதி, கான் மணிக் கூட்டுகோபுர சுற்று வட்டம், பேங்ஷால் வீதி வழியாக முதலாம் குறுக்குத் தெருவில் உள்ள தேவஸ்தானத்தை வந்தடைவார். சுவாமிகள் எழுந்தருளி நகர்பவனி வரும் போது சித்திரத் தேரை சுற்றியோ அல்லது தேருக்கு முன்னால் பன்னீர் தெளிப்பது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தெளிக்க விரும்பும் பன்னீரை அபிஷேகம் செய்ய ஆலயத்திற்கு வழங்குமாறு கேட்கப்பட்டுள்ளது. சித்திரத் தேர் நகர் பவனி நாட்களில் வர்த்தக ஸ்தாபனங்களுக்கு விடுமுறை வழங்கி வேல் விழாவில் பங்கேற்குமாறும் வேல் விழா பவனி வரும்போது தங்களது வர்த்தக நிலையங்களிலும் இல்லங்களிலும் வாசலில் வாழைமரம், மாவிலை தோரணம் கட்டி, புஷ்பங்களால் அலங்கரித்து பூரண கும்பம் வைத்து பூஜை தட்டுடன் பட்டு சாத்தி, மலர் சொரிந்து ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமியை வரவேற்று உபசரிக்கும்படியும் ஆலய அறங்காவலர்கள் கேட்டுக் கொள்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812