புதன், 1 ஜனவரி, 2014

சோம்நாத்பூர் கோயில்

ஹொய்சாளர்களால் கட்டப்பட்ட கடைசி கோயில்! சோம்நாத்பூர் கோயில் கர்நாடக மாநிலத்தின் மைசூர் நகருக்கு அருகில் உள்ள சோம்நாத்பூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் மூலவராக விஷ்ணு பகவான் ‘பிரசன்ன சென்ன கேசவப் பெருமாள்’ என்ற பெயரில் வீற்றிருக்கிறார். ‘சென்ன’ என்றால் கன்னடத்தில் அழகு என்று பொருள். இது ஹொய்சாள மன்னன் மூன்றாம் நரசிம்ம மன்னனின் தளபதியான சோமநாதன் என்பவரால் கி.பி. 1268 இல் கட்டப்பட்டது. அதன் காரணமாகவே இக்கோயில் உள்ள ஊர் அவர் பெயரால் சோம்நாத்பூர் என்று அழைக்கப்படலாயிற்று. இந்தியாவில் காணப்படும் கோயில்கள் பல்வேறு கட்டிடக்கலை அமைப்புகளை சார்ந்தவை. இதில் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் காணப்படும் கோயில்கள் திராவிட வகையை சேர்ந்தவை. அதேவேளையில் வடக்கே காணப்படுவது நாகரா வகை என்றும், இரண்டும் கலந்தது வேசரா வகை எனவும் அறியப்படுகிறது. அதாவது கர்ப்பகிரகத்தின் மேல் இருக்கும் விமானம், கோயிலின் நில வரைப்படம், அமைப்பு முதலியவை கொண்டு எந்த வகை என்று சொல்கிறார்கள். இதன்படி பார்த்தால் சோம்நாத்பூர் கோயில் வேசரா வகையை சார்ந்தது ஆகும். சோம்நாத்பூர் கோயிலின் அமைப்பு 16 முனை கொண்ட நட்சத்திரம் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலின் உள்ளே கேசவா, ஜனார்த்தனா, வேணும்கோபால் என்று மூன்று கர்ப்பகிரகங்கள் உள்ளன. இதில் ஜனார்த்தனா மற்றும் வேணும்கோபால் சிலை மட்டும் தான் ஒரிஜினல் சிலைகளாம். நடுவில் இருந்த கேசவப் பெருமாள் சிலை பிரிட்டிஷ் மியூசியத்தில் இருக்கிறதாம். தற்போது இருப்பது டுப்ளிகேட் சிலை என்று சொல்லப்படுகிறது. பிரமிட் போன்ற தோற்றம் அதோடு இந்த மூன்று சன்னதிகளின் வாயில்களிலும் உள்ளிருக்கும் விக்ரகத்தின் மாதிரி வடிவம் சிலை வடிக்கப்பட்டுள்ளதாம். மேலும் கர்ப்பகிரகத்தின் மேலே கவிழ்த்து வைத்த மணி போல் கோபுரம் காட்சியளிப்பதோடு கீழிலிருந்து மேலே பார்க்கும்போது பிரமிட் மாதிரி தோற்றமளிக்கிறது. சோழர்கள் தோற்றுப்போன கட்டிடக் கலை கேசவர் கோயிலின் சிற்பங்களில் இராமாயணம் மற்றும் மகாபாரத கதைகளை பார்க்கலாம். இக்கோயிலின் தெற்குச் சுவரில் இராமாயணமும், வடக்கு சுவரில் மஹாபாரத சிற்பங்களும் செதுக்கப்பட்டுள்ளன. இதே போன்றதொரு முயற்சியில் சோழர்கள் ஈடுபட்டதாகவும், ஆனால் துரதிஷ்டவசமாக அப்படி ஒரு கோயிலை அவர்களால் வடிக்க முடியவில்லை என்றும் சொல்லப்படுகிறது. செக்கு மரத்தில் இழைக்கப்பட்ட தூண்கள்! இங்குள்ள தூண்களை செக்கு மரத்தின் நடுவில் வைத்து மாடுகளைக் கொண்டு பொலிஷ் செய்யப்பட்டதால் அவை பளபளப்புடன் காணப்படுகின்றன. இதை தெரிந்துகொள்ளும்போது லேத் மிஷின் போன்ற உபகரணங்கள் இல்லாத காலத்திலேயே எவ்வளவு அற்புதமாக கோயிலை வடிவமைத்திருக்கிறார்கள் என்ற பிரமிப்புதான் மிஞ்சுகிறது. பிரிட்டிஷ்காரர்கள் தூக்கிக்கொண்டு போன சிலைகள்! சோம்நாத்பூர் கோயிலின் சிறப்பம்சம் இங்கே ஒரு சிலையை போல மற்ற சிலையை பார்க்க முடியாதபடி எல்லாமே தனித்துவமாக இருக்கும். இந்த கோயிலில் மொத்தம் 64 மண்டபங்கள் உள்ளன. இம்மண்டபங்களில் இருந்த சிற்பங்களை எல்லாம் பிரிட்டிஷ்காரர்கள் எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார்களாம். மேலும் கோயில் மேற்கூரையில் செய்யப்பட்டி ருக்கும் அழகிய கலை வேலைப்பாடுகளை கீழிருந்து பார்க்கும்போது தாமரை பூவிற்கு நடுவில் வாழைப்பூ இருப்பது போல தோற்றமளிக்கும். விஷ்ணுவும், பிள்ளையாரும் கோயிலின் தென்கிழக்கு பகுதியில் விஷ்ணு மற்றும் பிள்ளையார் சிலைகள் அனைவரையும் கவரக்கூடியவை இதில் அனந்தா எனும் பாம்பின் மடியில் விஷ்ணு பகவான் லலித்த சயனத்தில் வீற்றிருப்பது போல் உள்ளது. அதேவேளையில் இடது பக்கம் நாட்டியமாடும், நிருத்திய கணபதி சிலை, இந்த இரண்டு சிலைகளும் ஆபரணங்கள், குஞ்சம், மகுடம் கொண்டு நன்றாக அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன. விஷ்ணுவின் தசாவதாரம் சோம்நாத்பூர் கோயிலின் சிற்பங்களில் இராமாயண, மகாபாரத கதைகள் சொல்லப்பட்டிருக்கின்றன என்று பார்த்தோம். அதேபோல் கீழே யானைகளும், குதிரைகளும் ஊர்வலம் வர அதற்கு மேற்புறத்தில் விஷ்ணுவின் தசாவதாரங்கள் செதுக்கப்பட்டுள்ளன. சோம்நாத்பூர் கோயில் காலை 10 மணியில் இருந்து மாலை 6 மணி வரை திறந்திருக்கும். அதோடு கோயிலில் நுழைவதற்கும், கெமராவுக்கும் கட்டணம் உண்டு. மேலும் கோயிலுக்கு அருகே ஒரே ஒரு சிறிய தேநீர்க்கடை மட்டுமே இருப்பதால் சாப்பிட ஸ்ரீரங்கப்பட்டணா அல்லது மண்டியா செல்ல வேண்டும். சோம்நாத்பூர் கோயில் மைசூரிலிருந்து 35 கி. மீ தொலைவிலும், பெங்களூரிலிருந்து 137 கி. மீ தூரத்திலும் அமைந்திருக்கிறது. நீங்கள் பெங்களூரிலிருந்து செல்பவராக இருந்தால் மண்டியா வழியாக சென்று அங்கிருந்து பன்னூர் வழியாக சோம்நாத்பூர் கோயிலை அடைய வேண்டும். இந்த வழியில் செல்வது சிறந்தது என்பதுடன் கோயிலை அடைய 3 மணிநேரம் ஆகும். பஸ் மூலமாகவும் சோம்நாத்பூர் கோயிலுக்கு செல்ல முடியும். இதற்கு பெங்களூரிலிருந்து மைசூர் செல்லும் கர்நாடக பஸ்ஸில் ஏறினால். மண்டியாவில் இறங்கிக்கொள்ளலாம். அதன் பிறகு அங்கிருந்து பன்னூருக்கு நிறைய பஸ்கள் இருந்தாலும் பன்னூரிலிருந்து சோம்நாத்பூர் செல்ல குறைந்த அளவிலேயே பஸ் உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812