திங்கள், 30 மார்ச், 2015
கடவுளின் படம் அல்லது சிலை எது வழிபாட்டிற்கு உகந்தது
கே. ஈஸ்வரலிங்கம்
(11293) கடவுளின் படம் அல்லது சிலை எது வழிபாட்டிற்கு உகந்தது?
மனதில் இறைவனை நிறுத்தி வழிபடுவது மிக உயர்ந்தது. இரண்டாவது சிலை, அடுத்தது படம். முதலில் கூறியதற்கு மன ஒருநிலைப்பாடு அவசியம். உலக வாழ்க்கையை வெறுத்து வேறு எந்த சிந்தனையும் இல்லாத ஞானிகளுக்கு மட்டுமே இது சாத்தியம். உருவச்சிலை வழிபாட்டில் அபிஷேகம், நைவேத்யம் ஆகிய கிரியைகள் அதிகம். அவசரமான காலகதியில் எல்லோருக்கும் இயலாது.
பட வழிபாடு எளிமையானது. தினமும் புஷ்பம் சாத்தி, பழம், பால், கற்கண்டு நிவேதனம் செய்தால் போதும். எது உயர்ந்தது என்று கவலைப்படுவதை விட, எது இயன்றது என்று முடிவெடுத்து அதை விடாமல் செய்வது தான் உயர்ந்தது.
(11294) சுமங்கலிகளை வழியனுப்பும்போது குங்குமம் கொடுக்க வேண்டுமா?
அவசியம் கொடுக்க வேண்டும். இதில் விஷயங்கள் உள்ளன. சுமங்கலிகள் நம் வீட்டிற்கு வந்தால் அம்பாளே வந்திருப்பதாக எண்ண வேண்டும். குங்குமம், ரவிக்கைத் துணி, வெற்றிலை பாக்கு, மஞ்சள் கிழங்கு ஆகியவற்றை வழியனுப்பும்போது கொடுத்தால் அம்பாளின் அருள் கிடைக்கும். மற்றொன்று வந்திருப்பவர் நம்மை விட வயதில் சிறியவராக இருந்தால் வாழ்த்தியும், பெரியவராக இருந்தால் வாழ்த்திப் பெற்றும் குங்குமம் கொடுக்க வேண்டும் தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிட்ட இதனைச் செய்வது வழக்கில் உள்ளது.
(11295) திசைச் தெய்வங்களை வழிபடுவதினால் ஏற்படும் நன்மைகள் யாது?
திசைகள் பத்து என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். பத்துத் திசைகளையும் இறைவனின் திருவருள்தான் நின்று ஆளுகின்றது. இறைவன் திருவருள் ஆணையைப் பெற்று ஏவல் செய்யும் திக்குப் பாலகர்களும் திசைத் தெய்வங்களும் அந்த அந்த திசைக்கு உட்பட்டே தத்தமக்கு இட்ட பணிகளைச் செய்ய முடியும்.
இத்திசைத் தெய்வங்கள் எல்லாவற்றையும் செலுத்துவதாகவும், அவற்றிற்கு மேம்பட்டும் விளங்குவது பரம்பொருளான சிவம். அந்தந்த திசைத் தெய்வங்களை மட்டும் வழிபடுகின்றவர்கள், அதற்குரிய பலன்களை மட்டுமே அடைவர். பரம்பொருளை வழிபடுவதனால் எல்லாத் திசைத் தெய்வங்களினால் கிடைக்கும் பலனும் அவற்றிற்கு மேலும் கிட்டும்.
(11296) கோயிலின் கருவறை ஏன் இருட்டாக இருக்கின்றது?
கோயிலின் கருவறை ஒலி அலைகளின் (இறை ஆற்றலை கடத்தும்) கலமாகும். விமானக் கலசம் மூலவரின் திருவுருவச் சிலைக்குச் சூரிய கதிர்களின் மூலமாகக் கிடைக்கப் பெறும் ஒலி அலைகளைக் கடத்துகிறது.
மூலவரின் சிலைக்கு அடியிலுள்ள நவரத்தினக் கற்களும் யந்திரத் தகடும் பூமிக்கு அடியில் இருந்து கிடைக்கப்பெறும் ஆற்றலை மூலவரின் திருவுருவச் சிலைக்குக் கடத்துகின்றன. எல்லா ஆற்றல்களையும் ஒருங்கே பெற்றுக்கொண்ட மூலவரின் திருவுருவச் சிலை, அதனை இறை ஆற்றலாக மாற்றி இறைவன் திருமுன்பு இருக்கும் வாகனம், பலி பீடம் மற்றும் உற்சவ மூர்த்தங்கள் மீது அவ்வாற்றலைக் கடத்துகிறது.
பிறகு கோயில் முழுவதும் அவ்விறையாற்றல் பரவுகிறது. அங்கே வழிபட வருகின்ற அடியவர்கள் மீதும் அவ்விறையாற்றல் பதிகின்றது. கருவறையில் இருந்து வரும் அருள் ஒலி அலை எப்பொழுதும் கிடைக்க கருவறை இருட்டாக இருத்தல் அவசியம். அதோடு பெருமானுக்கு முறையான பூசைகளும், நிறைவான திருநீராட்டுதலும், அவசியம் நடைபெற வேண்டும்.
(11297) வழிபாட்டில் ஏன் இறைவனுக்குத் திருவமுது வைக்கின்றோம்?
தமது கருணையினால் பொது நிலைக்கு வரும் இறைவன் ஆனந்த கூத்தாடி நம்மை ஆட்கொள்ள விழைகின்றார். இப்படி நமக்கு அருளைப் பொழிந்து கொண்டிருக்கின்ற பெருமானுக்கு நம்மால் கைம்மாறு ஒன்றும் செய்ய முடியாது. இதனை மணிவாசகர் யான் இதற்கு இலன் ஓர் கைமாறே என்கிறார். தவிர பெருமானும் நம்மிடம் இருந்து எதையுமே எதிர்பார்ப்பதில்லை.
இதனை வேண்டுதல் வேண்டாமை இலான் எனும் குறள் வழித் தெளிவுப் படுத்துகின்றார் வள்ளுவ பெருந்தகை. இவாறு நமக்கு எந்நேரமும் நன்றே செய்து கொண்டிருக்கின்றார் பெருமான். உயிரினங்கள் வாழ்வதற்காக இறைவன் அருளிய உணவுப் பெருட்களை இறை வழிபாட்டில் திருவமுதாக வைத்து அவருடைய பேரருள் திறத்திற்கு நன்றி பாராட்டுகின்றோம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
-
நமசிவாய என்பதற்கு என்ன பொருள்? சிவனை வணங்குகிறேன் என்பது பொருள். இறைவனின் திருவருளைப் பெறுவதற்கு உறுதுணையாக இருப்பவ...
-
16258) அறநெறிக் கல்வியின் “மகுட வாசகம்” என்ன? “கல்வியின் சிறந்த குறிக்கோள் பண்புடைமையே” 16259) அதன் “இலட்சிய நோக்கு” என்ன? சிறார்களி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக