வீட்டில் கணபதி ஹோமத்தை நடத்துவதாக இருந்தால் எப்போது செய்வது நல்லது ?
பிரம்ம முகூர்த்தம் என்னும் அதிகாலை 4.30 முதல் 6 மணிக்குள் நடத்துவது நல்லது. விநாயகருக்குரிய சதுர்த்தி திதி, அஸ்தம் நட்சத்திர நாளில் நடத்துவது இன்னும் சிறப்பு.
அமாவாசை, திதி நாளில் வாசலில் கோலம் போடக் கூடாது என்பதற்கு காரணம் என்ன?
அமாவாசை, சிராத்தம் போன்ற நாட்கள் ""பிதுர் தினம்'' என்றழைக்கப்படுகின்றன. அன்று பிதுர் காரியத்தை முடித்து விட்டுத்தான் தெய்வ வழிபாடே செய்யப்பட வேண்டும். மங்களகரமான விஷயங்களில் பிதுர்களுக்கு விருப்பம் கிடையாது. எனவே, முன்னோர் காரியங்களில் கோலம் போடக்கூடாது.
கிரகப்பிரவேசத்தின் போது முதலில் பசுமாட்டை வீட்டிற்கு அழைத்து வருவது ஏன்?
பசு லட்சுமியின் அம்சம். தர்ம தேவதையின் அடையாளம். பால் தருவதால் "கோமாதா' என்று தாயாகப் போற்றுவர். வீட்டில் லட்சுமி கடாட்சம் நிலைக்கவும், தர்மம் தழைக்கவும் பசுவை வீட்டுக்குள் அழைத்துச் செல்கிறார்கள்.
மதுரையில் உள்ள சிவாலயத்தை மீனாட்சி அம்மன் கோயில் என்று குறிப்பிடுகிறோம். சுவாமி பெயரால் வழங்கப்படாதது ஏன்?
திருமணம் செய்து கொண்டு கணவன் வீட்டிற்குச் சென்றிருக்கும் நம் பெண்ணைப் பார்க்கச் செல்கிறோம். அப்பொழுது ""என் பெண் வீட்டிற்குச் செல்கிறேன்,'' என்று தான் கூறுவோமே தவிர, ""மாப்பிள்ளை வீட்டிற்கு செல்கிறேன்,'' என்று கூறுவதில்லையே! மதுரையை ஆண்ட மலையத்வஜ பாண்டியனுக்கு மகளாக அவதரித்து மதுரையின் அரசியாக மகுடம் சூடி, திக்விஜயமாக கைலாயத்துக்கே சென்றவள் மீனாட்சி. அந்த வீரத்திருமகளை திருமணம் செய்தவர் சிவன். எனவே, அம்பாளுக்கு இங்கே முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது.
குலதெய்வம் எது என்று தெரியவில்லை. எந்தக் கடவுளை குலதெய்வமாக ஏற்கலாம்?
ஒவ்வொரு குடும்பத்திற்கும் பரம்பரை பரம்பரையாக குல தெய்வ வழிபாடு என்று ஒரு தெய்வத்தை வழக்கில் கொண்டிருப்பார்கள். அது மிக அவசியமானது. அலட்சியப்படுத்தக் கூடாத விஷயம். இந்த வழிபாட்டில், அவரவர்கள் சில விதி முறைகளைப் பின்பற்றி வந்துள்ளனர். நம் சந்ததியைக் காப்பாற்றுவது குல தெய்வ வழிபாடு தான். குலதெய்வம் எது என்று தெரியவில்லையென்றால், உங்களுக்கு விருப்பமான தெய்வங்களின் பெயர்களை விநாயகர் முதல் அனுமன் வரை சீட்டுகளில் எழுதுங்கள். அருகில் உள்ள கோயிலில் சுவாமிக்கு அர்ச்சனை செய்த பிறகு எழுதி வைத்திருக்கும் சீட்டுகளை சுவாமி பாதத்தில் வைத்து, ஏதாவது ஒன்றினை எடுக்கச் சொல்லி, அதில் உள்ள தெய்வத்தை குலதெய்வமாக ஏற்று வழிபாட்டைத் துவக்குங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக