வியாழன், 12 செப்டம்பர், 2019

அறநெறி அறிவு நொடி

** பஞ்சாங்கத்தில் இஷ்டி என்று குறிப்பிடுகிறார்களே அது என்ன?

"இஷ்டி' என்றால் பூஜை. அன்று சஷ்டி, சந்திர தரிசனம் போன்றவை கூடியிருக்கும். அதற்கான பூஜையைச் செய்யலாம் என்பதற்கு அடையாளமாக அப்படி போடுவார்கள்.

* திருநீறு பூசும்போது எத்திசை நோக்கி இருந்தால் நல்லது?

காலையில் கிழக்கு நோக்கியும், மதியம் வடக்கு நோக்கியும், மாலை மேற்கு நோக்கியும் பூசிக் கொள்ள வேண்டும். இது அனுஷ்டானத்திற்கும், வீட்டில் இட்டுக் கொள்வதற்கும் பொதுவானது. கோயிலில் பிரசாதமாகப் பெறும் பொழுது சுவாமியைப் பார்த்துப் பூசிக் கொள்ள வேண்டும்.

* தை அமாவாசை, ஆடி அமாவாசை, மஹாளய அமாவாசை இதில் முன்னோர் வழிபாட்டிற்கு மிகச்சிறந்த நாள் எது?

எல்லா அமாவாசைகளுமே முன்னோர் வழிபாட்டிற்கு மிகச்சிறந்தவை தான். அன்று அவசியம் வழிபாடு செய்து தான் ஆகவேண்டும். ஒன்று சிறந்தது என்றால் கண்டிப்பாக மற்றதை விட்டு விட வேண்டிய சூழல் வரும். உத்தராயணத்தில் முதலில் வருவதால் தை அமாவாசையும், தக்ஷிணாயனத்தில் முதலில் வருவதால் ஆடி அமாவாசை என்பது அந்த அமாவாசைக்கு முன்னதான பிரதமையிலிருந்து விரதம் இருந்து, தர்ப்பணம் செய்ய வேண்டும். இது மற்ற திதிகளில் விடுபடும் பிதுர்க்களையும் திருப்திபடுத்த செய்யப்படுகிறது. எனவே அமாவாசை தர்ப்பணத்தைப் பொறுத்த வரை ஒன்று சிறந்தது. மற்றது தாழ்ந்தது என்ற பேச்சுக்கே இடமில்லை.

* பூஜை அறையில் கடவுள் திருஉருவப்படங்களை எத்திசை நோக்கி வைப்பது சிறந்தது?

கிழக்கு நோக்கி வைப்பது சிறந்தது. மேற்கு நோக்கியும் வைக்கலாம்.

* இறந்த பெற்றோருக்கு பெண் குழந்தைகள் மட்டும் இருந்தால் அவர்கள் கொடுக்கும் சிரார்த்தம் ஏற்புடையதுதானா? விளக்கம் தேவை.

பெண்கள் நேரடியாக இதை செய்யக்கூடாது. யாராவது ஒரு ஆணிடம் தர்ப்பையைக் கொடுத்து அவர் மூலமாக செய்ய வைக்கலாம். திருமணமான பெண்கள் கணவன் வீட்டைச் சார்ந்து விடுவதால், பெற்றோருக்காக தர்ப்பை கொடுக்கக் கூட அதிகாரம் கிடையாது. பெற்றோரின் பங்காளிகளைச் செய்யச் சொல்லி பொருளுதவி மட்டும் செய்யலாம்.

* பிரம்ம முகூர்த்தத்தின் மகத்துவத்தைக் கூறுங்கள்.

காலை 4.30 மணி முதல் 6 மணிக்குள்ளான வேளைக்கு பிரம்ம முகூர்த்தம் என்று பெயர். இரவில் உறங்கும் உயிர்கள் மீண்டும் எழுந்திருப்பதே சற்றேறக்குறைய மறுபிறவிதானே! எனவே, ஒவ்வொரு நாளும் காலையில் மறு பிறவி பெறுவதை "சிருஷ்டி' (படைத்தல்)என்று சொல்லலாம். இத்தொழிலைச் செய்பவர் பிரம்மா. எனவே இவரது பெயரால், விடியற்காலைப் பொழுதை "பிரம்ம முகூர்த்தம்' என்று வைத்துள்ளார்கள். பிரம்ம முகூர்த்த வேளைக்கு திதி, வார, நட்சத்திர, யோக தோஷங்கள் கிடையாது. இது எப்போதுமே சுபவேளை தான். இந்நேரத்தில் எழுந்து குளித்து இறைவழிபாட்டைச் செய்து நமது வேலைகளைச் செய்ய துவங்கினால் அன்று முழுவதும் வெற்றிதான்.

* ஹோமம் நடத்தும் போது குண்டத்தில் போட்ட நாணயங்களை வீட்டில் வைத்திருந்தால் நல்லது என்று சொல்கிறார்களே? விளக்கம் அளிக்கவும்.

ஹோமம் முடிந்து அதில் போட்ட எல்லா திரவியங்களும் சாம்பலாகும் வரை குண்டத்திலிருந்து எதையும் எடுக்கக்கூடாது. சில இடங்களில் ஹோமம் முடிந்து, யாகசாலைகளில் இருந்து கடம் புறப்பட்டவுடனேயே மக்கள் உள்ளே புகுந்து குண்டங்களை அணைத்தும், கலைத்தும் நாணயங்களையும் சாம்பல் பிரசாதமும் எடுக்கிறார்கள். இது மிகவும் பாவம். எல்லாம் சாம்பல் ஆன பிறகு நாணயங்களையும், சாம்பல் விபூதி பிரசாதத்தையும் பெற்றுக் கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812