ஞாயிறு, 12 மே, 2019

வைகாசி விசாகம்

வைகாசி விசாகம்

தமிழ் கடவுள் முருகப் பெருமானின் அவதார தினமாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் வைகாசி விசாகத் திருநாள் கொண்டாடப்படுகிறது. தீமைகளை அழிப்பதற்காக சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து அக்னி ரூபமாக அவதரித்தவர் முருகன். இந்த அவதாரம் நிகழ்ந்தது வைகாசி விசாக நாளில்தான். வைகாசி விசாக தினத்தன்று பால்குடங்கள் எடுத்தும், காவடிகள் சுமந்தும் முருகனின் பிறந்தநாளை ஆன்மீகம் மணக்க மணக்க கொண்டாடுகின்றனர்.

நட்சத்திரங்கள் இருபத்தி ஏழில், சில நட்சத்திரங்கள் இறைவனுக்கு உகந்த நட்சத்திரங்களாகவும், இறைவன் அவதாரம் எடுத்த நட்சத்திரங்களாகவும் கருதப்படுகின்றது. அந்த அடிப்படையில் வைகாசி மாதம் வரும் விசாகம் நட்சத்திரம் வடிவேலனுக்கு உகந்த நட்சத்திரமாக பக்தர்கள் அனைவராலும் கொண்டாடப்படுகிறது. விசாக தினத்தன்று வேலனை வழிபட்டால் வெற்றிகள் வந்து சேரும்.

முருகப்பெருமானுக்கு எத்தனை விழாக்கள் எடுத்தாலும், வைகாசி விசாக விழாதான் வளர்ச்சியைக் கொடுக்கும் விழாவாக அமைகின்றது. விசாக நட்சத்திரத்தன்று முருகப்பெருமானை தரிசித்தால் வெற்றி கிட்டும்! வேலவன் அருளால் விரும்பியது நடக்கும்!
தேசமெங்கும் முருகனது ஆலயங்களில் இந்த விழாவைச் சிறப்பாகக் கொண்டாடி மகிழ்கின்றார்கள். அள்ளிக்கொடுப்பதற்கு கரங்கள் அதிகமாக உள்ள தெய்வமாகவும், கூப்பிட்டதும் பறந்து வந்து உதவி செய்ய மயில் வாகனம் வைத்திருப்பதாலும் முருகப்பெருமான் மீது மக்கள் அளவிற்கு அதிகமாக பக்தி வசப்பட்டுள்ளனர். அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பையா என்றும், பழத்திற்காக போட்டியிட்டு பழநி மலையில் குடிகொண்டவன் என்றும், சூரபத்மனை போராடி வெற்றிகொண்ட சத்ரு சம்ஹாரனாகவும் மக்கள் நினைத்து வழிபடும் மகத்தான தெய்வம் முருகக்கடவுள். அப்படிப்பட்ட தெய்வத்தை வழிபட நமக்கு வைகாசி விசாகம் வழிகாட்டுகின்றது.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812