மூதூர், கட்டைபறிச்சான் - வடக்கு, சேனையூர் அருள்மிகு நாகம்மாள் ஆலயத்தின் வைகாசிப் பொங்கல் பெருவிழா எதிர்வரும் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.52 மணிக்கு ஆலயத்தில் நடைபெறும் ஆரம்பப் பூசையைத் தொடர்ந்து நடைபெறும்.
இங்கு நடைபெறும் ஆரம்பப் பூசையுடன் பாரம்பாரிய முறைப்படி மடைப்பெட்டி தூக்கி வீதி வழியாக ஊர்வலமாக கொண்டு வரப்படும். இந்த மடைப்பெட்டி ஊர்வலம் சேனையூர் அருள்மிகு நாகம்மாள் ஆலயத்தை வந்தடைந்ததும் பக்தி பூர்வமான கிரியையோடு மடைப்பெட்டி கையேற்கப்படும்.
அதனைத் தொடர்ந்து பொங்கல் பெருவிழா ஆரம்பமாவதுடன் அபிஷேக ஆராதனை, நேர்கடன் பூசைப் பொருட்கள் கையேற்றல் இடம்பெறும். பக்தர்களின் நலன்கருதி காவடி, அடையாளப் பொருட்கள் என்பன வாடகைக்கு விடப்படுவதுடன் நூல் கட்டுதல், பொங்கல் சாடி வைத்தல், பால் பழப் பூசை, சிவலிங்க நாக தம்பிரானுக்கு புனித மஞ்சள் நீர் வார்த்தல், கூட்டு வழிபாடு, நற்சிந்தனை வழங்கல் என்பன இடம்பெறும். நிறைவாக விஷேட தீபாராதனைகளுடன் பூசை நடத்தப்பட்டு ஸ்ரீ மகா விஷ்ணு ஆறுமுகவேல் சகிதம் அம்பாள் திரு உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்வு இடம்பெறும். இவ்விழாவையொட்டி வழமைபோல் ஆலயத்தில் இவ்வருடமும் அன்னதானம் வழங்கப்படும் என ஆலயத்தின் பொருளாளர் வ. மோகனதாஸ் தெரிவித்தார்.
இவ்வாலயத்திற்கு வருகை தரும் பக்தர்களின் நலன்கருதி மூதூரில் இருந்து ஸ்ரீ நாகம்மாள் ஆலயம் வரை விஷேட் பஸ் சேவைகள் நடத்தப்படும் என ஆலயத்தின் செயலாளர் த. குணராசா தெரிவித்தார். பூசை கிரியைகளை ஆலய பிரதம குருவாகிய சோதிடர், கலாபூஷணம் சிவஸ்ரீ அ. அரசரெத்தினம் நடத்துவார். சாமஸ்ரீ கலாஜோதி அ. அச்சுதன், (பிரதிகுரு), பொ. சுந்தரமுர்த்தி (உதவி குரு), வி. டீபக்கிருஸ்ணன் (உதவி குரு), சிவஸ்ரீ கி. வீரபத்திரன் (மேலதிக உதவிகுரு), க. சிவஞானம் (மணியகாரர்) ஆகியோர் பூஜைகள் சிறப்புற நடத்த உதவிவார்கள் என ஆலய தலைவர் செ. நவரட்ணராஜா தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக