சிவனுக்கு உகந்த சிறப்பான நாட்களில் நாம் விரதம் இருந்து ‘சிவாய நம’ என்று சிந்தித்திருந்தால் அபாயம் நமக்கு ஏற்படாது. செய்யும் செயல்கள் அனைத்திலும் வெற்றி காணலாம். சிவனுக்கு உகந்த சிறப்பான நாட்களில் நாம் விரதம் இருந்து ‘சிவாய நம’ என்று சிந்தித்திருந்தால் அபாயம் நமக்கு ஏற்படாது. ஆதரவுக் கரம் கூடுதலாக இருக்கும். செல்வ வளம் பெருகி வாழலாம். செய்யும் செயல்கள் அனைத்திலும் வெற்றி காணலாம்.
பெண்களுக்கு ஒன்பது நாள் “நவராத்திரி”. ஆண்களுக்கு ஒரு நாள் ‘சிவராத்திரி’ என்று சொல்லி வைத்திருக்கிறார்கள். முன்பெல்லாம் பெண்கள் வீட்டிலேயே அதிகம் இருந்ததால் விரதங்களையும், வழிபாடுகளையும் தொடர்ந்து தினம்தோறும் செய்து வந்தார்கள். எனவே நவராத்திரி விழாவை ஒன்பது நாட்களும் பெண்கள் தெய்வ வழிபாடாக வைத்து, அம்பிகை போரில் வெற்றி பெற்ற நாளை ‘விஜயதசமி’ என்றும் கொண்டாடினர்.
ஆண்கள் பொருள் தேடும் பொருட்டும், தொழில் துறையில் ஈடுபடுவதாலும் தெய்வ வழிபாட்டிற்கென்று சிறிது நேரம் தான் ஒதுக்க இயலும். எனவே வருடத்தில் ஒருநாள் சிவனை நினைத்து வழிபட்டு, வருடம் முழுவதும் வழிபட்ட பலனைப் பெறலாம் என்பதால் ‘சிவராத்திரி’யைத் தேர்ந்தெடுத்தனர்.
மாலை 6 மணிக்கு விநாயகப் பெருமானை வணங்கி, அதன்பிறகு சிவனை வணங்கத் தொடங்கி, இயன்ற அளவு ஒரே ஆலயத்தில் ஆறுகால பூஜையிலும் கலந்து கொள்ளலாம். அல்லது தொடர்ந்து அருகில் இருக்கும் சிவாலயங்கள் பலவற்றிற்கும் சென்று ஒவ்வொரு சிவாலயத்திலும் உள்ள சிவலிங்கத்தை வழிபட்டு வரலாம். அங்ஙனம் வழிபடச் செல்லும் பொழுது நந்தீஸ்வரரை வணங்கி உத்தரவு கேட்டு, பிறகு சிவனையும், உமையவளையும் வழிபட வேண்டும். தொடர்ந்து பரிவார தெய்வங்களை வழிபட்டு, இறுதியில் சண்டிகேஸ்வரரை வழிபட்டு வருவது நல்லது.
உமாதேவி தன் திருக்கரங்களால், விளையாட்டாக சிவபெருமான் கண்களை மூடினார். இதனால் உலகமே இருள்மயமானது. அந்த இரவில் ஒளி வேண்டித் தவித்த தேவர்களுக்கெல்லாம் ஒளிகொடுக்க சிவன் தனது நெற்றிக் கண்ணைத் திறந்ததாக கருதப்படுகின்றது. எனவே இருள்மயமான வாழ்க்கை ஒளிமயமாக மாற எல்லோருமே சிவராத்திரி விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.
சிவராத்திரி அன்று நள்ளிரவு 11.30 மணி முதல் ஒரு மணி வரை லிங்கோத்பவர் காலமாகும். அந்த நேரத்தில் வழிபாடு செய்தால் நற்பலன்கள் நமக்குக் கிடைக்கும். வலம்புரிச் சங்கால் ஈசனை அபிஷேகித்து, வில்வ இலையால் அர்ச்சனை செய்து, சுத்த அன்னத்தை நைவேத்தியமாக படைத்து சிவனுக்குரிய பாடல்களைப் பாடி, பஞ்சாட்சரத்தை பலமுறை சொன்னால் பாவங்கள் விலகும், யோகங்கள் சேரும், செல்வ வளம் பெருகும், புகழ்பெறும் வாய்ப்பு உருவாகும். இன்னல்கள் விலகி இனிய பலன்களை இல்லம் தேடி வரவழைத்துக்கொள்ள இயலும்.
சிவராத்திரியன்று விரதம் இருந்து மகாவிஷ்ணு சக்கராயுதத்தையும், மகாலட்சுமியையும் பெற்றார் என்று புராணங்கள் சொல்கிறது. பிரம்மதேவன் சரஸ்வதியை அடைந்ததும் இந்த நாளில் தான் என்பார்கள். எனவே கல்வி விருத்தி, செல்வ விருத்தி பெற்று வெற்றிக் கொடி நாட்ட விரும்புபவர்கள், இந்த விரதத்தை மேற்கொண்டால் வெற்றி மீது வெற்றி காண இயலும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக