வெள்ளி, 1 நவம்பர், 2013

பிஜி நாட்டில் உள்ள மிகப் பழைமையான கோயில்

பிஜி நாட்டில் உள்ள சிவசுப்ரமணிய சுவாமி ஆலயம் நாடீ நகரின் வட பகுதி எல்லையில் அமைந்துள்ள மிகப் பழைமையான ஆலயமாகும். பிஜி நாட்டில் உள்ள மிகப் பழைமையான கோயிலாகவும் இது கருதப்படுகிறது. நீண்ட காலமாக பக்தர்கள் மனதில் இருந்த தீராத தாகத்தினாலும் ஆதரவாளர்களின் ஓயாத முயற்சியினாலும் இப்புனிதமான ஆலயம் உருவாக்கப்பட்டது. நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பெருமளவிலாக பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்து ஆண்டுதோறும் இங்கு நடைபெறும் விழாக்களில் கலந்து கொள்கின்றனர். இந்தியா மட்டுமன்றி உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வரும் பல்வேறு இன மக்களும் இங்கு வந்து வழிபாடு செய்கின்றனர். தங்களுக்கென தனிப்பட்ட கோயில் அமைக்க வேண்டும் என்பது பிஜி நாட்டு இந்துக்களின் ஆவலாகும். இந்த ஆவல் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்புதான் நிறைவேறியது. பல சோதனைகளுக்கு பிறகு பல அமைப்புக்களைச் சேர்ந்தவர்களின் கூட்டு முயற்சியின் காரணமாக 1991ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் இக்கோயில் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. இக்கோயிலுக்கான பொறியியலாளர் பணிகளை இலவசமாக செய்து தர கட்டிடப் பொறியியலாளர் நவீன் மொரார்ஜி ஒப்புக் கொண்டார். அதே ஆண்டில் கோயில் நிர்வாகத் தலைவர் நாராயண் ரெட்டி, அஸ்திரேலியா, நியூசிலாந்து கனடா, அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்குச் சென்று நிதி திரட்டி கோயிலின் முன்னேற்ற பணிகளை மேற்கொண்டார். 1992ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் இக்கோயிலின் கட்டுமானப்பணிகள் முடிவடைந்தன. இதற்காக திறமை வாய்ந்த சிற்பிகளும் ஓவியர்களும் இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்டனர். இங்குள்ள சிற்பங்களும், ஓவியங்களும் காண்போரின் உள்ளத்தை கவரும் வண்ணம் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன. 1994ஆம் ஆண்டு ஜுலை மாதம் இக்கோயிலில் தெய்வங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகளும் மேற்கொள்ளப்பட்டன. இதற்கென சிறப்பு ஏற்பாடுகளாக சிவாச்சாரியார்களும் குருக்களும் இந்தியாவிலிருந்து வரவரழைக்கப்பட்டு மகாகும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இப்புதிய கோயிலின் கும்பாபிஷேகம் 1994ம்ஆண்டு ஜுலை 11ம் திகதி முதல் 15ம் திகதி வரை சிறப்பாக நடைபெற்றது. இச்சிறப்புமிகு கும்பாபிஷேக விழா அமெரிக்காவின் ஹவாய் தீவின் குருதேவ் சிவாய சுப்ரமணிய சுவாமிகளால் நடத்தப்பட்டது. இக்கோயிலில் காலை 5.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை பூஜைகள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு மாதமும் வரும் கார்த்திகை பூஜை இக்கோயிலில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812