வெள்ளி, 1 நவம்பர், 2013

கே. ஈஸ்வரலிங்கம்

(10379) வெள்ளிக்கிழமையில் பெண்கள் விரதம் இருப்பது ஏன்? விரதங்களில் சிறந்தது வெள்ளிக்கிழமை விரதம் இதனை சுக்கிரவார விரதம் என்று குறிப்பிடுவர். அம்பிகைக்கும், முருகனுக்கும் உகந்த நாளான வெள்ளியில் விரதம் இருந்தால் கன்னிப் பெண்கள் நல்ல கணவர் வாய்க்கப் பெறுவர், சுமங்கலி பாக்கியம், குழந்தைப்பேறு, செல்வவளம் உண்டாகும். தை, ஆடி வெள்ளிக்கிழமைகள் மேலும் சிறப்பானவை. (10380) கிரகண வேளையில் கோயில் நடை சாத்துவது ஏன்? கிரகண வேளையில் நடை சாத்த வேண்டிய அவசியமில்லை. கிரகண காலத்தில் புண்ய கால தீர்த்தம் கொடுத்துச் சிறப்பு வழிபாடுகள் பூஜைகள் செய்யச் சொல்லி சாஸ்திரங்கள் கூறுகின்றன. சில கோயில்களில் இது வழக்கத்திலும் உள்ளது. (10381) பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பது ஏன்? அவசரமாக ஒரு செயலைச் செய்தாக வேண்டும் என்ற கட்டாயம் ஏற்படுகிற நேரத்தில், புதன்கிழமை அமைந்து விட்டால் வேறு எதையும் பார்க்காமல் செய்து விடலாம். பொன்னைக் கூட (தங்கம்) விலை கொடுத்து வாங்கி விடலாம். நமக்குப் பொருத்தமாக புதன் கிடைப்பது அரிது என்பது இதன் பொருள். (10382) அனுமானுக்கு வெற்றிலை மாலை சாத்தப்படுவது ஏன்? அசோக வனத்தில் அனுமன் சீதையைக் கண்டு இராமரைப் பற்றிய விவரங்களை கூறி இராமரின் கணையாழியைக் கொடுத்து சூடாமணியைப் பெற்றார். அன்னையிடம் விடைபெறும் சமயம், அனுமனை ஆசிர்வதிக்க எண்ணிய சீதை தான் அமர்ந்திருந்த வெற்றிலைக் கொடியின் இலைகளை பறித்து அனுமாரின் தலையில் புஸ்பமாய் போட்டு ஆசிர்வதித்து வழி அனுப்பி வைத்தார். இதனால் அன்னையின் நினைவாகவே அனுமனுக்கு வெற்றிலை மாலை அணிவிக்கப்படுகின்றது என்று கூறப்படுகிறது. (10383) குரு பார்க்க கோடி நன்மை என்பது ஏன்? நவக்கிரகங்களில் முழுமையான சுபகிரகம் குரு. இவர் தேவர்களுக்கு பாடம் போதிக்கும் குருவுமாவார். எனவே, இவரது பார்வை எந்த ராசியின் மீது பட்டாலும் எல்லாத் தோஷங்களும் நீங்கிவிடும். ஒருவருடைய ராசிப்படி ஏழரைச்சனி நடக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த ராசிக்கு குரு பார்வை இருந்தால் கெடுதல் விளையாது என்பதையே குரு பார்க்க கோடி நன்மை என்கிறார்கள் கோடி என்றால் அளவு கடந்த என்றும் பொருள் உண்டு. ஆரத்தி ஏன் எடுக்கப்படுகிறது? நம் முன்னோர்கள் கடைப்பிடித்த பாரம்பரிய நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் நம் நலனுக்காக ஏற்படுத்தப்பட்டவை. ஆனால் நம் தலைமுறை அதை சரியாக உணர்வதில்லை. தமிழர் பாரம்பரிய நடவடிக்கைகளில் முக்கியமானது ஆரத்தி எடுக்கும் நடைமுறை. ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரை பின்பற்றப்படும் இந்த நடைமுறை வெறும் சடங்குக்காக செய்யப்படுவதில்லை. சாதாரண நிகழ்வாக இதை புறக்கணிக்கிறோம். ஆனால் இதில் ஆழமான அர்த்தம், அதுவும் விஞ்ஞான நலன் காணப்படுகிறது. இதில் முக்கியமான கருத்துக்கள் மறைந்துள்ளன. தூரத்து பயணம் முடித்து வருபவர்களுக்கு புதிதாய் திருமணம் முடித்து வீட்டிற்கு வரும் மணமக்கள், மகப்பேறு முடித்து வீட்டிற்கு வரும் பெண் ஆகியோருக்கு ஆரத்தி எடுக்கும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது. ஆரத்தி எடுப்பது என்றால் ஒரு தாம்பாளத் தட்டில் தண்ணீரில் மஞ்சள் அரைத்து சேர்த்து அதில் சிறிது சுண்ணாம்பும் சேர்த்து கலக்க வேண்டும் மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த தண்ணீருக்கு சிவப்பு நிறம் வருகிறது. இதை ஒரு பரந்த பாத்திரத்தில் எடுத்து அதற்கு இரு பக்கங்களிலும் இரண்டு தீச்சுடர் எழுப்பி சம்பந்தப்பட்ட நபரின் உடலுக்கு 3 முறை சுற்றி விடுவதையே ஆரத்தி என்று கூறுகின்றோம். மஞ்சள் மற்றும் சுண்ணாம்புக்கு கிருமிகளை அழிக்கும் திறனுண்டு என்பதை நாம் கண்டறிந்துள்ளோம். அந்த நபரின் மேல் வந்து சேர்ந்திருக்கும் விஷ அணுக்களை அழிப்பதே ஆரத்தியின் உத்தேசம் ஆரத்தி எடுப்பதன் மூலம் நம் உடலில் சேரும் விஷ அணுக்களை அழித்து நம் நலன் பேணுவதோடு பிறருக்கும் அந்த விஷ கிருமிகள் பரவாது தடுக்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812