திங்கள், 25 நவம்பர், 2013
தாய்நாட்டில் மட்டுமன்றி தமிழகத்துக்கும் சென்று சைவத்துக்கும் தமிழுக்கும் பணியாற்றியவர் நாவலர்
அன்னாரின் குருபூசை தினம் நாளை 24ம் திகதி அனுஷ்டிப்பு
கே. ஈஸ்வரலிங்கம்
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் யாழ்ப்பாணம் நல்லூரில் என்னும் ஊரில் 1822 டிசம்பர் 18ஆம் திகதி பிறந்தார். இவர் கந்தப்பிள்ளை - சிவகாமி அம்மையார் தம்பதிகளுக்கு கடைசி புத்திரனாகப் பிறந்தார். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் ஆறுமுகப்பிள்ளை என்பதாகும். இவரது தந்தையாரான ப. கந்தப்பிள்ளை, பேரனாகிய பரமானந்தர், பூட்டனான இலங்கைகாவல் முதலியார் ஆகியோர் தமிழ் அறிஞர்களாவார்கள். நாவலருடன் உடன் பிறந்தவர்கள் ஏழு பேர்.
சகோதரர்கள் நான்கு பேர், சகோதரிகள் மூன்று பேர். சகோதரர்கள் அரசாங்க உத்தியோகம் செய்து வந்தார்கள். ஆறுமுகநாவலருக்கு பெற்றோர் ஐந்து வயதில் வித்தியாரம்பம் செய்து வைத்தனர். இவர் நல்லூர் சுப்பிரமணிய உபாத்தியாயரிடம் நீதி நூல்களையும் தமிழையும் கற்றுக்கொண்டார்
ஒன்பதாவது வயதில் தனது தந்தையை இழந்த இவர், சரவணமுத்து புலவரிடம் உயர் கல்வி கற்றார். முதலில் சரவணமுத்து புலவரிடம் உயர் கல்வி கற்றவர், பின்பு சரவணமுத்துப் புலவரின் குருவாகிய சேனாதிராச முதலியாரிடமும் உயர்கல்வி கற்றார். ஆறுமுகநாவலரை அவரது மூத்த சகோதரரே உயர்கல்வி கற்க வைத்தார். ஆறுமுகநாவலர் தனது பன்னிரண்டாவது வயதில் தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளையும் கற்று பாண்டித்தியம் பெற்றார்.
யாழ்ப்பாணத்தில் அக்காலத்தில் முன்னணி ஆங்கிலப் பாடசாலையாக இருந்தது மெதடிஸ்த ஆங்கிலப் பாடசாலையாகும். இது இப்போது யாழ்ப்பாண மத்திய கல்லூரி என்று அழைக்கப்படுகிறது. இவர் இக்கல்லூரியில் கல்வி கற்று ஆங்கில மொழியிலும் பாண்டித்தியம் பெற்றார். இவர் இருபதாவது வயதில் இப்பாடசாலையின் ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார்.
இவர் இக்கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றும் காலத்தில் அந்தப் பாடசாலையின் ஸ்தாபகராகவும் அதிபராகவும் இருந்தவர் பேர்சிவல் என்ற பாதிரியாராவார். அப்போது இந்த பாதிரியார் கிறிஸ்தவ விவிலியத்தை தமிழில் மொழிபெயர்க் கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அவரது அந்த மொழி பெயர்க்கும் பணிக்கு உதவியாக இருந்து ஒத்துழைப்பு வழங்கியவர் ஆறுமுகநாவலராவார். ஆறுமுகநாவலர் பேர்சிவல் பாதிரியாருடன் சென்னைக்கு சென்று அதனை அச்சிடும் பணிக்கும் உதவியாக நின்று அவருடனேயே யாழ்ப்பாணத்துக்கு வந்தார்.
தமிழும் சைவமும் தனது இரு கண்கள் என போற்றிவந்த ஆறுமுக நாவலர் தமிழையும் சைவத்தையும் வளர்ப்பதற்காக பணி புரியத் தொட ங்கினார். சைவ சமயத்தை வளர்ப்ப தற்காக பிரசங்கம் செய்யத் தொடங் கினார். இவரது முதலாவது பிரசங் கம் வண்ணார்பண்ணை வைத்தீஸ் வரன் கோவிலில் 1847 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 37ஆம் திகதி இடம் பெற்றது. இந்தப் பிரசங்கத்தைத் தொடர்ந்து ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் பிரசங்கம் செய்து வந்தார்.
இவர் செய்த இந்த பிரசங்கங்களின் பயனாக மக்களிடையே பெரும் சமய விழிப்புணர்வு ஏற்பட்டது. இவ்வாறு சமயப் பிரசங்கங்களை செய்து வந்த ஆறுமுகநாவலர் வண்ணார்பண்ணையில் சைவப் பிரகாச வித்தியாசாலை என்ற பெயரில் ஒரு சைவப் பாடசாலையை ஆரம்பித்து வைத்தார். இவர் இந்தப் பாடசாலையை ஆரம்பிக்கும் வரையில் அதாவது 1848ஆம் ஆண்டு வரை மத்திய கல்லூரியில் ஆசிரியராகவே பணியாற்றி வந்தார். அப்போது அவருக்கு மாதாந்தம் மூன்று பவுண் சம்பளம் வழங்கப்பட்டு வந்தது.
1848 இல் அவர் அந்த ஆசிரியர் பதவியையும் துறந்து சைவசமய வளர்ச்சிக்காக தன் வாழ்வின் முழு நேரத்தையும் செலவிட்டார். சைவப் பிள்ளைகளுக்கான பாட நூல்களை அச்சிடுவ தற்காக அச்சியந்திரம் வாங்கத் திட்டமிட்டார். இதற்காக இவர் நல்லூர் சதாசிவம் பிள்ளையுடன் 1849 ஆம் ஆண்டு ஆடிமாதம் சென் னைக்குச் சென்றார். அங்கு திருவாவடுதுறை ஆதினத் தில் சைவப்பிரசங்கம் செய் தார். இவர் திருவாவடுதுறை ஆதீனத்தில் தமது புலமையை வெளிப்படுத்தியதால் திருவாவடுதுறை ஆதீனம் 'நாவலர்' என்ற பட்டத்தை வழங்கியது.
இவர் சென் னையில் சிலகாலம் தங்கி இருந்து சூடாமணி நிகண்டு உரையையும் செளந்தர்யலங்கரி உரையையும் அச்சிட்டு வெளியிட்டார். அதன்பின் ஒரு அச்சியந்திரத்துடன் யாழ்ப்பாணம் திரும்பினார். அதன்பின் தனது இல்லத்தில் 'வித்தியானுபாலன இயந்திரசாலை' என்னும் பெயரில் அச்சுக்கூட மொன்றை நிறுவினார். அங்கு அவர் பாலர் பாடம், ஆத்திசூடி, கொன்றை வேந்தன் உரை, சிவாலய தரிசன விதி, சைவசமய சாரம், கொலை மறுத்தல், நன்னூல் விருத்தியுரை, திருமுருகாற்றுப்படை உரை போன்ற நூல்களை அச்சிட்டார்.
இவ்வாறு சைவத்துக்கு தொண்டாற்றிவரும் இவரது சேவையைப் பாராட்டி இலங்கை அரசாங்கம் முத்திரையொ ன்றை வெளியிட்டது. இவ்வாறு இலங்கையில் சேவையாற்றி வந்தவரின் பணி தமிழ் நாட்டிலும் வியாபித்து இருந்தது. 1859 வைகாசி மாதம் திருவாசகம், திருக்கோவையார் போன்ற நூல்களை சென்னையில் வெளியிட்டார். இலங்கையில் அச்சுகூடம் நிறுவியது போல பெரியதொரு அச்சியந்திரம் வாங்கி சென்னை தங்கசாலைத் தெருவில் அச்சுக் கூடமொன்றை அமைத்தார். இவ்வாறு சென்னையில் அச்சுகூடம் நிறுவியவர் அங்கு பல நூல்களை வெளியிட்டார்.
இவர் சென்னையில் தங்கி இருந்த காலத்தில் சென்னையிலும், திருவாவடுதுறையிலும் திருநாகைத் தோரணத்திலும் சைவப் பிரசங்கங்களை செய்து வந்தார். 1882 ஆம் ஆண்டு பங்குனி மாதம் இவர் சென்னையிலிருந்து யாழ்ப்பாணம் திரும்பினார். ஆறுமுகநாவலர் 1863 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மீண்டும் தமிழகத்துக்குச் சென்று தமிழகத்திலுள்ள இராமநாதபுர சமஸ்தானத்தில் பிரசங்கம் செய்து வந்தார். இடையிடையே மதுரைக்கு சென்று மதுரை மீனாட்சி அம்மன் சந்நிதானத்திலும் பிரசங்கம் செய்து வந்தார். இதன் விளைவாக அங்கு பரிவட்டமும் பூமாலையும் அணிவிக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார்.
இவர் குன்றக்குடியிலுள்ள திருவண் ணாமலை ஆதீனத்தில் செய்த பிரசங்கத்தைப் பார்த்து பலரும் பாராட்டினர். தம்பிரான்களும் ஓதுவார்களும் சூழ்ந்து வர பல்லக்கில் ஏற்றி மங்கள வாத்தியங்கள் முழங்க பட்டணப்பிரவேசம் செய்வித்தார்கள். இவ்வாறாக நாவலர் பெருமான் அங்கிருந்து திருப்பெருந்துறை, திருப்பள்ளி இருக்குவேரு, சீர்காழி ஆகிய இடங்களிலுள்ள திருத்தலங்களை தரிசித்தார்.
இராமலிங்கப்பிள்ளை தாம் பாடிய பாடல்களை திருமுறைகளுடன் ஒப்பிட்டு சில ஆலய உற்சவங்களிலே திருமுறைகளுக்குப் பதிலாக தமது பாடல்களைப் பாடுவதை நாவலர் பெருமான் கண்டார். இதனைத் தொடர்ந்து 'போலி அருட்பா மறுப்பு" எனும் நூலை வெளியிட்டார். தமிழகத்தில் இருந்து கொண்டே தமிழுக்கும் சைவத்திற்கும் அரும் தொண்டாற்றிக் கொண்டிருந்த ஆறுமுக நாவலர் பெருமான். 1859ம் ஆண்டு ஆணிமாதம் மீண்டும் சிதம்பரத்திற்கு சென்றார்.
அங்கு சைவ ஆகம விடயம் தொடர்பாகவும் சில தீட்சைகள் தொடர்பாகவும் ஆறுமுக நாவலர் பெருமான் சில கருத்துக்களை முன்வைத்திருந்தார். இந்த கருத்துக்களால் மனம் தடுமாறி இருந்த சிலர் வள்ளலார் இராமலிங்கப் பெருமானைக் கொண்டு சிதம்பரத்திலுள்ள திருத் தலத்திலே 1869ம் ஆண்டு ஆனி உத்திரத்தன்று ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்தார்கள். அங்கு நாவலர் பெருமானை பல்வேறு நிந்தனை செய்ததுடன் நாவலர் பெருமான் தம்மை அடித்ததாக மஞ்சத்குப்பத்திலுள்ள நீதிமன்றத்திலே வழக்கு தாக்கல் செய்தார்கள். இந்த வழக்கிலே வழக்காளிகளுக்குத்தான் அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
சிதம்பரத்திலே இவ்வாறு நீதிமன்ற வழக்குகளை சந்தித்த பின்னர் நாவலர் பெருமான் தர்மபுரி திருவிடை மருதூர், திருவேட்டைக்கும், காரைக் கால், கோடிக்கரை ஆகிய இடங்களிலுள்ள திருத்தல ங்களுக்குச் சென்று வணங்கி விட்டு 1870ம் ஆண்டு பங்குனி மாதம் மீண்டும் யாழ்ப் பாணத்திற்கு வந்தார். அதன் பின்னர் இவர் சைவப்பாடசாலை நிறுவிய துடன் நல்லூர் கந்தசாமி கோயிலுக்கு அருகில் மணி மண்டபம் ஒன்றையும் அமைத்தார். 1870ம் ஆண்டு கோப்பாயில் ஒரு வித்திய சாலையை ஆரம்பித்து தமது செலவிலேயே நடத்தி வந்தார்.
1871ம் ஆண்டு வண்ணார் பண்ணையில் "ஜோன் கில்னா" என்பவர் 'லெசூ லியன்" ஆங்கில பாட சாலையை நடாத்திவந்தார். இந்த பாடசாலையில் கல்வி பயின்று வந்த மாணவர்கள் விபூதி தரித்து செல்வது வழக்கமாகும். அவ்வாறு தரித்துச் சென்ற மாணவர்கள் ஒருநாள் விபூதி தரித்து சென்றமைக்காக வெளியேற்றப்பட்டார்கள். இதனைக் கண்ட நாவலர் பெருமான் வண் ணார்பண்ணையில் 1872ம் ஆண்டு தைமாதம் ஆங்கில பாடசாலையொன்றை ஆரம்பித்து வைத்தார். நாவலர் ஆரம்பித்த இந்த பாடசாலை போதிய நிதி இன்மையால் நான்கு ஆண்டுகள்தான் இயங்கியது.
ஆறுமுக நாவலர் பெருமான் தாம் இதுவரை பெற்ற அனுபவங்களையும் தாம் கண்டறிந்த உண்மைகளையும் வைத்து 'யாழ்ப்பாண சமய நிலை' என்ற பெயரில் நூல் ஒன்றை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து மேலும் பல நூல்களை வெளியிட்டார். 1879 ஆம் ஆண்டு ஆடிச்சுவாதி அன்று நாவலரது கடைசிப் பிரசங்கம் இடம்பெற்றது. ஆடிச் சுவாதி, சுந்தரமூர்த்தி சுவாமிகளது குரு பூசை தினமாகும். அன்று ஆறுமுக நாவலரது கடைசி பிரசங்கம் வண்ணார்பண்ணை சைவப்பிரகாச வித்தியாசாலையில் இடம்பெற்றது. 1879 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 18 நாள் ஆறுமுகநாவலரது உடல் நலத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது. 1879-12-05 ஆம் திகதி இரவு 9 மணி அளவில் ஆறுமுகநாவலர் இவ்வுலகை விட்டு மறைத்தார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
-
நமசிவாய என்பதற்கு என்ன பொருள்? சிவனை வணங்குகிறேன் என்பது பொருள். இறைவனின் திருவருளைப் பெறுவதற்கு உறுதுணையாக இருப்பவ...
-
16258) அறநெறிக் கல்வியின் “மகுட வாசகம்” என்ன? “கல்வியின் சிறந்த குறிக்கோள் பண்புடைமையே” 16259) அதன் “இலட்சிய நோக்கு” என்ன? சிறார்களி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக