வியாழன், 18 ஜூலை, 2019

முந்தல் ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயம்


புத்தளம் மாவட்டத்தில் இந்து மக்களின் சிறப்புக்களையும் பாரம்பரியங்களையும் அதன் இருப்பையும் கோடிட்டுக் காட்டும் அடையாளமாக துலங்கி நிற்பதே ஆலயங்களாகும்.

இவ்வாலயங்களிளே இந்துக்கள் வாழ்ந்ததாகவும் அவர்கள் இப்பிரதேசங்களை நல்லாட்ச்சி புரிந்ததாகவும் ஆலய வரலாறுகளும் கர்ணபரம்பரைக் கதைகள் மூலம் அறியக்கூடியதாக இருக்கின்றது. இவ்வாறு அமைந்த ஆலயங்களில் ஒன்றாக மிளிர்வதே புத்தளம் மாவட்டத்தில் முத்தாக அமைந்து முச்சிறப்புக்கள் பெற்று முன்னுதாரனமாக அமைந்த ஆலயமே முந்தல் ஸ்ரீ திரௌபதியம்மன் ஆலயமாகும்.

இவ்வாலயத்தில் சென்ற ஞாயிற்றுக்கிழமை 30ம் திகதி கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இவ்வாலய உற்சவங்களுக்கெல்லாம் சுடராய் சுடர்விடும் வைபவமாக திகழ்வதே தீமிதிப்பு நிகழ்வாகும். பண்பாட்டு பாரம்பரிய அம்சங்களை தன்னகத்தே கொண்ட முந்தலில் பார் போற்றும் பாஞ்சாலிக்கு ஆலயமமைத்த இந்துக்களின் சிறப்பையும், சமய நெறிகளை அப்பழுக்கற்ற முறைமைகளில் கடைப்பிடித்து அதன்படி வழிபட்டு வரும் முந்தல் ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தின் சிறப்புக்கள் பெருமைகள் வரலாற்று தொன்மைகளை பரைசாற்றி நிற்கின்றன.

முந்தல் மேற்கே சீரிப்பாயும் சில்லென்ற உப்புக்காத்தும் பச்சை பசேலென சலசலக்கும் நெல்வயல் சூழலும் கற்பகத்தருவென போற்றி நிற்கும் தென்னை மரங்களின் ரீங்கார ஓசையும் தொட்டக்கலி ஆற்றிலிருந்து பாய்ந்து தவழ்ந்து வரும் தென்றலின் சாரலிலே அமைந்து அருள்பாலித்து அருள்மழை பொழிந்து அண்டி வரும் அடியார் குறைகளை தீர்த்து அபயமளித்து ஆறுதல் தரும் அன்னையாக போற்றப்படும் திரௌபதைத்தாயின் மகிமை சொல்லில் அடங்காதவை. இவ்வாலயத்தில் உற்சவங்களுக்கெல்லாம் மூலவிசையாக இருந்து நகர்த்துவது மகாபாரதக் கதையாகும். இக்கதையானது 18 தினங்களாக முன்றையகாலலட்சணமாக படிக்கப்படும் அக்கதை அம்மானை வடிவில் உடுக்கடி பாட்டுகளுடன் தெம்மாங்குப்பாடல் மெட்டுக்களுடன் அவ்வூருக்கே சொந்தமான மரபுவழிப்பாடல்களுடன் மகாபாரதக்கதை பாடிப் படித்து உற்சவங்கள் கொண்டாடப்படும்.

இவ்வாலயத்தில் இன்னுமோர் மரபுமுறைகளில் ஒன்றே கரகம் பாலித்தல். இக்கரகம் பாலிக்கும் பூசகரே தன்னை திரௌபதியாக ஆவனம் பண்ணி வாதை முடித்து வெற்றி இலக்கை அடைந்த நோக்குடன் தீமிதிப்பு வைபவம் இறுதியாக நிகழ்த்தப்படுகின்றது.

இம்மாவட்டத்தில் இந்துக்களின் இருப்பை அடையாளப்படுத்துவது இங்கு அமைந்துள்ள தமிழ் கிராமங்களேயாகும். அக்கிராமங்கள் இன்று ஏதோ ஓர் புறக்காரணங்களால் உள்வாங்கப்பட்ட நிலையில் காணப்பட்டு வருகின்றது. இதற்கெல்லாம் ஈடுகொடுத்து தமது தனித்துவத்தை இதன் செந்நெறிகளை பாரம்பரிய உணர்வுகளை தமிழ் இந்துக்களிக் இருப்பை பாதுகாக்கும் இடமாகவும் தலமாகவும் இருப்பதே உடப்பு, முந்தல் போன்ற இடங்களாகும். இவ்விரு இடங்களில் இருக்கும் திரௌபதி அம்மன் ஆலயங்களில் நடைபெறும் தீமிதிப்பு உற்சவங்கள் இந்து தமிழ் மக்களின் உணர்வுகளை சமய நெறிகளை இதுவரை பிளவாத முறையில் பேணிப்பாதுகாக்கின்றது.

இன்றும் இம்மக்கள் தமது சமயத்தின்பால் கொண்டுள்ள ஈடுபாட்டையும் பற்றுருதியையும் கோடிட்டு காட்டுவதாக இருக்கின்றது.

ஈழத் திருநாட்டில் திரௌபதி அம்மன் திருத்தலங்கள் மூன்று இடங்களில் அமைந்துள்ளது. இதன் உள்ளீடாகக் கொண்டு இம்மாவட்டத்தில் உடப்பு முந்தல் போன்ற இடங்களில் திரௌபதி அம்மன் ஆலயங்கள் உள்ளன. இவ்விரு ஆலயங்களில் நிகழ்வுறும் உற்சவங்களை நோக்கும் போது மரபை சார்ந்ததாகவும் பாரம்பரிய பண்பாட்டையும் முன்னோர்கள் கடைப்பிடித்த சமய நெறிகளை இன்னமும் அப்பழுக்கற்ற முறையில் பேணிப்பாதுகாப்பதாக அமைந்துள்ளதை அறிய முடிகிறது.

தென்னிந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்த மக்களின் ஓர் பகுதியினர் முந்தல் போன்ற இடங்களில் குடியேறியதாக வரலாறு கூறுகின்றது. இவர்கள் தஞ்சை மாவட்டம் இராமநாதபுர மாவட்டங்களிலிருந்து வந்தவர்கள் என தொல்லியல்சான்றுகள் கோடிட்டு காட்டுவதாக இருக்கின்றது. தஞ்சை மாவட்டங்களில் எவ்வாறு திரௌபதி வழிபாடு இடம்பெறுகிறதோ அவ்வாறே முந்தல் ஆலயங்களிலும் நிகழ்த்தப்படுவதாக அறியமுடிகின்றது. சிறு கொட்டுகையில் வணங்கிவந்த இவ்வூர் மக்கள் பின்னர் பூரணவடிவில் ஆலயத்தை அமைத்து பெயர் சொல்லுமளவிற்கு கட்டி முடித்து விழாக்களை சிறப்பான முறையில் கொண்டாடி வருகின்றனர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812