வியாழன், 25 ஜூலை, 2019
அவிசாவளை, குடகம ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம்
கொழும்பு மாவட்டத்தின் இறுதியில் அமைந்துள்ளதாகவும் தோட்டத் தொழிலாளர்கள் செறிந்து வாழும் ஒரே ஒரு தொகுதியாகவும் விளங்கி வருவது அவிசாவளை தொகுதியாகும்.
இந்தியத் தமிழர்கள் எங்கெல்லாம் குடியேறினார்களோ அங்கெல்லாம் அவர்கள் கோயில் அமைத்து வழிபாட்டு முறையைப் பின்பற்றி தெய்வ நம்பிக்கையுடன் வாழ்ந்து வந்துள்ளனர். குறிப்பாக மாரியம்மன் மீதே நம்பிக்கை கொண்டு வழிபட்டு வந்துள்ளனர். அந்த வகையில் கொழும்பு மாவட்டத்தின் அவிசாவளை தொகுதியின் அவிசாவளை நகர் மற்றும் நகரைச் சூழவுள்ள மக்கள் மேற்கொண்டு வந்த வழிபாட்டுத்தலங்களில் புவக்பிட்டிய ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் மற்றும் குடகம ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் ஆகிய இவ்விரண்டு ஆலயங்களும் முக்கியத்துவம் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
அவிசாவளை குடகம வீதி சீத்தாவக்கபுர கைத்தொழில் பேட்டை அமையப் பெற்றுள்ள ஒரு பிரதேசமாகும். இங்கு அமையப் பெற்றுள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் சுமார் நூறு ஆண்டுகள் வரலாற்றைக் கொண்டதாகும். அக்காலத்தில் இப்பிரதேசத்தில் வாழ்ந்து வந்தவர்களில் நல்லு நாயுடு என்பவர் 1930 இல் தென்னிந்தியாவிலிருந்து கருங்கல்லினாலான அம்மன் சிலையொன்றைத் தருவித்து, அதனை அப்பிரதேசத்தில் உள்ள ஒரு மரத்தடியில் வைத்து தகரத்தினாலான கூரையமைத்து மாரியம்மன் வழிபாட்டுக்கு வழிவகுத்து மக்கள் வழிபாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவ்வாறு நடந்து வந்த போது, இந்த ஆலயத்துக்கு அருகாமையில் சீதாகம எனும் பெயரில் மாதிரிக்கிராமம் ஒன்று அமைக்கப்பட்டது. இதனால் ஆலயத்துக்கு ஏற்பட்ட நிலை குறித்து உரிய தரப்பினரின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டு இந்து சமய கலாசார
அலுவல்கள் திணைக்களத்தின் மூலம் நிதி உதவி வழங்கப்பட்டு மடாலயம் எனக்கூறும் வகையில் ஆலயம் அமைக்கப்பட்டு பிரதேசத்தில் வாழ்ந்து வந்த மக்களைக் கொண்ட நிர்வாக சபை ஒன்று நியமிக்கப்பட்டு ஆலயத்தை பரிபாலனம் செய்யும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.
1986 இல் இந்த ஆலயத்தின் முதலாவது மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. நல்லுசாமி என்பவர் தலைமையில் புதிய நிர்வாக சபை தெரிவு செய்யப்பட்டு ஆலயம் நிர்வகிக்கப்பட்டு வந்த வேளையில் ஆலயத்தின் கலசம் சரிந்ததையடுத்து எழுத்தாளரான சி. பக்தசீலனுடன் கலந்தாலோசித்து தலைமைத்துவம் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து ஆகம முறைப்படி அங்க சம்பூரணமான ஆலயம் அமைக்கப்பட வேண்டும் என்ற திட்டம் தீட்டப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் ஆலயம் அமையப்பெற்றிருந்த இடம் போதிய இடவசதியைக் கொண்டிராத காரணத்தால் ஆலய நிர்வாக சபையினர் அப்போதைய அமைச்சராக இருந்த இந்திக்க குணவர்த்தனவைச் சந்தித்து விடுத்த வேண்டுகோளுக்கமைய ஆலயம் அமையப் பெற்றிருந்த காணிக்கு எதிர் புறத்தே வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான 40 பேர்ச் காணி 1999 இல் பெற்றுக்கொடுக்கப்பட்டது. எனினும் ஆலயத்தை இடமாற்றி அமைப்பது பொருந்தாது எனக் கொண்டு பழைய இடத்திலேயே ஆலயம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வேளையில் ஏற்பட்ட பல எதிர்ப்புகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டு நிர்வாக சபையினர் நீதிமன்றம் வரையில் சென்று புதிய ஆலயம் அமைக்கும் நடவடிக்கையில் இறங்கினர்.
பெண்களுக்கும் கோயில் நிர்வாகத்தில் பங்குகொள்ள இடமளிக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்த தலைவர் சி. பக்தசீலனின் கருத்துக்கு அமைய பெண்களும் இணைத்துக் கொள்ளப்பட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டு 2002.06.06 இல் அருள் ஜோதி ஐயப்பதாஸ் சாம்பசிவ சிவாச்சாரியார் தலைமையில் பாலஸ்தாபனம் செய்து வைக்கப்பட்டு 2002.11.15 இல் ராமகிருஷ்ண மிஷன் ராஜேஸ்வரானந்த சுவாமியினால் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது. அவிசாவளையைச் சேர்ந்த பிரபல வர்த்தகரான கே.என். ஞானசம்பந்தன் மற்றும் அவரது குடும்பத்தினர் டாக்டர்களான திருமாவளவன், முருகதாஸ். நலன் விரும்பிகள், தனவந்தர்கள் மற்றும் பொதுமக்களின் பூரண ஒத்துழைப்புடன் ஆலய நிர்மாணப் பணிகள் செவ்வனே பூர்த்தி செய்யப்பட்டு புதியதோர் ஆலயம் எழுப்பப்பட்டு 2011.06.12 இல் பண்டாரவளை ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலய பிரதம குருக்கள் சிவஸ்ரீ பாலகுகேஷ்வர குருக்கள் தலைமையில் மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடந்தேறியது. கொழும்பு 5ம் குறுக்குத்தெரு ஞானம் இம்போட்டர்ஸ் பிரைவேட் லமிட்டட் நிறுவனத்தார் பிரபல வர்த்தகரான ஆர். ராதாகிருஷ்ணன், மற்றும் ஞா. இராஜேந்திரன் ஆகியோர் மகா கும்பாபிஷேகத்துக்கு வழங்கிய சேவை அளப்பரியதாகும். மகா கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து 48 தினங்கள் மண்டலாபிஷேக பூஜை நடைபெற்று 01.08.2011 இல் தேர்த்திருவிழா நடைபெற்றது.
ஆலயத்துக்கென ஒதுக்கப்பட்ட 40 பேர்ச் காணியில் அப்போதைய அமைச்சரான இந்திக்க குணவர்தன தலைமையில் 1999.12.05 இல் கலாசார மண்டபம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டு, அப்போது பாராளுமன்ற உறுப்பினராக இருந்த இ.தொ.கா.வைச் சேர்ந்த ஆர். யோகராஜன் 12 இலட்சம் ரூபாவும், அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் 50 இலட்சம் ரூபாவும் நிதி உதவி பெற்றுக்கொடுக்கப்பட்டு மண்டபம் பூர்த்தி செய்யப்பட்டது. மண்டபத்தைச் சுற்றி மதில் அமைக்க மனோ கணேசன், பிரபாகணேசன், கலாநிதி குமர குருபரன் சீ.வை. ராம் ஆகியோர் நிதி உதவி பெற்றுக்கொடுத்தனர். மண்டபம் அமைந்துள்ள காணியில் கோயில் குழுக்களுக்கான இல்லம், படப்பள்ளி என்பனவும் அமைக்கப்பட்டுள்ளது.
ஆலயத்துக்கென சுமார் 50 இலட்சம் ரூபா செலவில் 17 அடி உயரத்திலான கலையம்சம் பொருந்திய சித்திரத் தேர் ஒன்று நிர்மாணிக்கப்பட்டு கடந்த 22.07.2014 வெள்ளோட்டம் விடப்பட்டது.
அவிசாவளை, மாணிக்கவத்த, ஹொனிட்டன், கொட்டபொட வத்தை, உக்வத்தை, உசேனி ஆகிய பிரதேசங்களில் வாழ்ந்து வரும் இந்துக்கள் தமது வழிபாட்டு முறைகளை மேற்கொள்ள வசதியாகவும், கிரியைகள், சாந்தி மற்றும் நேர்த்திக்கடன்களை சிரமமின்றி இலகுவாகவும் நிறைவேற்றிக் கொள்ளக்கூடிய வகையில் சிறப்புப் பெற்றதோர் ஆலயமாக இவ்வாலயம் விளங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
1999.11.28 முதல் இங்கு ஸ்ரீ முத்துமாரியம்மன் என்ற பெயரில் அறநெறிப் பாடசாலையொன்று இயங்கி வருகின்றது. மாணவர்கள் மத்தியில் சமய அறிவையும், ஒழுக்கத்தையும் வளர்க்கும் பொருட்டு பல ஆசிரியர்களின் உதவியுடன் இயங்கி வருவதுடன், சிவராத்திரி, நவராத்திரி மற்றும் விசேட தினங்களில் விசேட பூஜை வழிபாடுகள் இடம் பெற்று வருவதுடன், மாணவர்களிடையே இந்து சமயம் தொடர்பான போட்டிகள் நடத்தப்பட்டு பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டு மாணவர்கள் உற்சாகப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
-
நமசிவாய என்பதற்கு என்ன பொருள்? சிவனை வணங்குகிறேன் என்பது பொருள். இறைவனின் திருவருளைப் பெறுவதற்கு உறுதுணையாக இருப்பவ...
-
16258) அறநெறிக் கல்வியின் “மகுட வாசகம்” என்ன? “கல்வியின் சிறந்த குறிக்கோள் பண்புடைமையே” 16259) அதன் “இலட்சிய நோக்கு” என்ன? சிறார்களி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக