வியாழன், 25 ஜூலை, 2019
அருமருந்தாகும் ஆடிக்கூழ்!
நமது முன்னோர்கள் ஆடிமுதல் மார்கழி வரை தட்சிணாயனம் என்றும் தை முதல் ஆனி வரை உத்தராயனம் என்றும் ஓர் ஆண்டினை இரண்டு பாகமாக வகுத்தார்கள்.
சூரியன் தை மாதத்தில் வடக்கு திசை நோக்கி பயணத்தைச் செலுத்துவான். ஆடிமாதம் ஆரம்பித்ததும் தன் பயணத் திசையை மாற்றிக் கொண்டு தென் திசை நோக்கி திரும்புவான். இதைத்தான் உத்தராயனம் என்றும் தட்சிணாயனம் என்றும் சொல்வர்.
தட்சிணாயனத்தின் முதல் மாதமான ஆடி மாதம் இறை வழிபாட்டிற்கு உகந்த மாதம். இம்மாதத்தில் வரும் பண்டிகைகள், விழாக்கள் அனைத்தும் போற்றப்படுகின்றன.
தட்சிணாயனம் மழைக்காலத்தின் ஆரம்பம். சூரியன் தன் பயணப்பாதையை ஆடியில் மாற்றிக் கொள்வதால் இயற்கையின் சூழ்நிலை மாறும். மழைக்கால ஆரம்ப மாதமான இந்த ஆடிமாதத்தில்தான் பூமாதேவி அவதரித்தாள் என்று புராணம் கூறுகிறது. அதனால் பூமாதேவியான அம்மனுக்கு விழா எடுத்து நல்ல மழை பொழிந்து நோய் நொடிகளிலிருந்து காப்பாற்றி வளமான வாழ்வு தரவேண்டும் என்று அனைத்து அம்மன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
அம்மனுக்கு உகந்த ஆடிச்செவ்வாய், ஆடிவெள்ளி, ஆடித்தபசு, ஆடிப்பூரம், ஆடிக்கிருத்திகை, ஆடிப்பதினெட்டு, ஆடி அமாவாசை, பௌர்ணமி என விழாக்கள் கொண்டாடப் படுகின்றன. இம் மாதத்தில் காவேரியானவள் மசக்கையாக இருப்பதாகக் கருதப்படுவதால், ஆண்டாள் ஜென்ம நட்சத்திரமான பூரத்தில் அம்பாளுக்கு வளைகாப்பு நடத்தி குழந்தை வரம், திருமணவரம், வேண்டும் பெண்கள் உட்பட சுமங்கலி பெண்களுக்கு வளையல்கள் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
பல சிறப்புகள் பெற்ற இந்த ஆடி மாதத்தில் அம்மனுக்குக் கூழ்வார்க்கும் விழா நடைபெறுவது மிகவும் சிறப்பான நிகழ்வாகும். நம் உடல் நலத்தின் வளம் கருதியே ஆடிக்கூழ் நிகழ்ச்சி நடைபெறுவதாக ஆன்மிகமும் அறிவியலும் சொல்கின்றன.
ஆடிமாதம் மழைக்கால ஆரம்ப மாதமாக இருப்பதால் இதற்குமுன் வெப்பத்தின் சூழ்நிலையில் இருந்த நம் உடல், பருவமாற்றம், காற்று, திடீர்மழை இவற்றினால் பாதிக்கும் வாய்ப்பு உண்டாகும். அதைத் தவிர்க்க, நம் உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி தேவை.
அம்மனுக்கு படைக்கப்படும் கூழ் பெரும்பாலும் கேழ்வரகு, கம்பு போன்ற சிறு தானியங்களின் மாவினால் தயார் செய்யப்படுவதால், அவை நமக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை வழங்குவதுடன் உடலுக்குத் தேவையான வலிமையையும் தருகிறது. உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கும் சக்தி இந்தக் கூழுக்கு உண்டு. கூழ் எளிதில் ஜீரணமாவதுடன் குடலுக்குத் தொந்தரவு அளிக்காது. வாயு போன்ற உபத்திரவங்களும் ஏற்படாது.
புதுப்பானையில் கூழ் காய்ச்சப்பட்டு, அந்தப்பானையின் வாய்ப்பகுதியில் வேப்பிலைக் காப்பிட்டு, அம்மனுக்குப் படைக்கும்போது, நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட வேப்பிலையின் சக்தி அதில் கலக்கிறது. மேலும் அம்மனின் அருள் பார்வையால் அதன் சக்தி பல மடங்கு பெருகுகிறது. இந்தக் கூழ் பிரசாதத்தினை விரதமிருந்து அருந்துகையில், நோய் எதிர்ப்பாற்றல் தரும் அருமருந்தாகிறது.
தெய்வப்பிரசாதமான ஆடிக்கூழ் மக்களை நோய்நொடிகள் இல்லாமல் நலமுடன் வாழ வழிவகுக்கிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
-
நமசிவாய என்பதற்கு என்ன பொருள்? சிவனை வணங்குகிறேன் என்பது பொருள். இறைவனின் திருவருளைப் பெறுவதற்கு உறுதுணையாக இருப்பவ...
-
16258) அறநெறிக் கல்வியின் “மகுட வாசகம்” என்ன? “கல்வியின் சிறந்த குறிக்கோள் பண்புடைமையே” 16259) அதன் “இலட்சிய நோக்கு” என்ன? சிறார்களி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக