ஞாயிறு, 22 ஜூலை, 2018

மகாபாரதத்தில் அர்ஜுனன், கர்ணன் இருவரில் யார் சிறந்த வீரன்





பங்காளிகளுக்குள் மூண்ட விரோதம் பாரத போராய் உருவெடுத்து உலகில் நீதியை நிலைநாட்டியதே மகாபாரதம் என்னும் இதிகாசம். இந்த குருஷேத்திர போரை தலைமையேற்று நடத்தியது ஸ்ரீகிருஷ்ணர் ஆவார். மஹாபாரதத்தில் பாண்டவர்களின் வெற்றிக்கு முக்கிய காரணமாய் இருந்தது அர்ஜுனன். அதேபோல் கௌரவ சேனையின் மிகமுக்கிய வீரனாய் விளங்கியது மாவீரன் கர்ணன்.

அர்ஜுனன் மற்றும் கர்ணன் இருவரில் யார் சிறந்த வீரன் என்பது யாராலுமே கணிக்க முடியாத ஒன்று. ஏனெனில் இருவரின் வீரமுமே எல்லையற்றது, இருப்பினும் கிருஷ்ணருடைய உதவியின் மூலம் அர்ஜுனன் தன் மூத்த சகோதரனான கர்ணனை போரில் கொன்றார். போரில் இவர்கள் இருவரும் புரிந்த சண்டையை கண்டு மூவுலகும் அஞ்சி நடுங்கியது, இருவருமே சகல அஸ்திரங்களையும் கற்று தேர்ந்த மாவீர்களாய் இருந்தனர். இருவரில் யார் வீரத்தில் சிறந்தவர். அனைத்திற்கும் மூலப்பொருளான ஸ்ரீகிருஷ்ணருக்கு இதற்கு பதிலளிக்க இயலாதா என்ன? போரில் அர்ஜுனனை விட கர்ணனே சிறந்தவர் என கிருஷ்ணர் கூறிய நிகழ்ச்சி ஒன்று உள்ளது.

கர்ணன் பாண்டவர்களில் மூத்தவரான கர்ணன், இந்த உண்மை அவரின் இறப்பிற்கு பிறகே உலகம் அறிந்தது. திருமணத்திற்கு முன்பு குந்தியின் விளையாட்டால் சூரியதேவனின் அருளால் பிறந்தவர் கர்ணன். வீரத்தில் அர்ஜுனனை மிஞ்சிய கர்ணன் தானத்தில் தர்மனையும் மிஞ்சினார். கர்ணனை போல தானம் செய்ய மூவுலகிலும் யாரும் இல்லை என்பதை அனைவரும் ஒத்துக்கொள்வர். அனைத்திற்கும் மேலாக தன் உடன்பிறந்த கவசத்தை இந்திரன் சூழ்ச்சியாக தானம் கேட்டபோது உண்மை யாதென அறிந்தும் கவசத்தை அறுத்து கொடுத்து அழியாப்புகழ் பெற்றவர் சூரியபுத்தரின் கர்ணன். தன் வாழ்நாள் முழுவதும் கர்ணன் ஏங்கியது தன் திறமைக்கான அங்கீகாரத்தைத்தான், அந்த அங்கீகாரத்தை அளித்த துரியோதனனுக்காக தன் உடன்பிறந்தவர்களையே எதிர்த்து இறுதியில் தன் தம்பி அர்ஜுனன் கையாலே மடிந்தார்.

அர்ஜுனன் பாண்டவர்களில் மூன்றாவதாக பிறந்தவர்தான் அர்ஜுனன். இந்திரனின் மகனான இவரே பாண்டவர்களின் வெற்றிக்கு முக்கிய காரணமாய் அமைந்தவர். "வில்லுக்கு விஜயன்" என்பார்கள் அதுபோல வில்லாற்றல் என்றால் முதலில் நியாபகம் வருவது அர்ஜுனனாகத்தான் இருக்கும். இவர் கற்காத வித்தைகள் இல்லை, பெறாத அஸ்திரங்கள் இல்லை. சிவபெருமானுடையே போர் புரிந்து பாசுபத அஸ்திரத்தை பெற்ற அர்ஜுனன் போரில் எண்ணற்ற கௌரவ சேனையை அழித்தார். ஆனால் கர்ணனுடனா அர்ஜுனனின் போர் என்பது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. காரணம் வில்லாற்றலில் அர்ஜுனனுக்கு இணையான சொல்லப்போனால் அர்ஜுனனை மிஞ்சிய வில்லாற்றல் மாவீரன் கர்ணனிடம் செறிந்திருந்தது.

குருஷேத்திர போர் போருக்கு முன் பீஷ்மருக்கும், கர்ணனுக்கும் இடையே ஏற்பட்ட பூசலால் பீஷ்மர் களத்தில் இருக்கும்வரை தான் போர்க்களத்திற்குள் பிரவேசிக்க மாட்டேன் என சபதம் எடுத்தார் கர்ணன். சிகண்டியின் உதவியுடன் பீஷ்மரை வீழ்த்தினர் பாண்டவர்கள், அதன்பின் துரோணாச்சாரியாரை சேனாதிபதியாக்கி போரை தொடர்ந்தனர் கௌரவர்கள். பீஷ்மரின் வீழ்ச்சிக்கு பின் போரின் பதினோராவது நாளில் சல்லியனை தேரோட்டியாக கொண்டு போர்களத்திற்குள் பிரவேசித்தார் கர்ணன். தான் வாழ்நாள் முழுவதும் காத்திருந்த வாய்ப்புக்காக அர்ஜுனனுடன் போர்புரிய தொடங்கினார்.


அதிரதன் கர்ணன் மற்றும் அர்ஜுனக்கிடையே நடந்த போரினை பார்க்க அனைத்து தேவர்களும் துடித்தனர். ஏனெனில் இந்த இரண்டு அதிரதர்களும் புரியும் போர் மூவுலகையும் நடுநடுங்க வைத்தது. அதிரதன் என்னும் பட்டம் அனைத்து வீரர்களுக்கும் கிடைத்துவிடாது. எவர் ஒருவர் அறுபதாயிரம் வீரர்களை தனி ஆளாய் எதிர்கொண்டு வீழ்த்த கூடியவரோ அவர்களுக்கே அதிரதன் என்னும் பட்டம் வழங்கப்படும். கர்ணன் மற்றும் அர்ஜுனனின் வில்லாற்றல் கண்டு அனைத்து தேவர்களும் மெய்சிலிர்த்து போயினர்.

கர்ண பருவம்
துரோணரின் மரணத்திற்கு பிறகு கர்ணன் சேனாதிபதியாக பொறுப்பேற்று போர் புரிந்த போரின் பதினாறு மற்றும் பதினேழாவது நாட்களே கர்ண பருவம் என்றழைக்கப்படுகிறது. போரின் பதினாறாவது நாளே கர்ணன் அர்ஜுனன் தவிர்த்து ஏனைய பாண்டவர்களை தோற்கடித்துவிட்டார், ஆனால் தன் தாய் குந்திக்கு அர்ஜுனனை தவிர்த்து வேறு எந்த பாண்டவரையும் வதைக்கமாட்டேன் என கொடுத்த வாக்கிற்காக அவர்கள் யாரையும் கொல்லவில்லை.

கர்ணனா? அர்ஜுனனா?
போரின் பதினேழாம் நாள் கர்ணன் மற்றும் இருவரும் ஒருவர் மீது ஒருவர் அம்பு மழைகளை பொழிந்துகொண்டிருந்தனர். இவர்கள் இருவரின் ஆற்றலை கண்டு தேவர்கள் வியந்தனர். போரில் அர்ஜுனன் எய்த அனைத்து அம்புகளையும் கர்ணன் எளிதாக உடைத்தார். ஆனால் அர்ஜுனனும் சாதாரணமானவர் அல்ல ஆயிற்றே, தன் அஸ்திரங்களின் மூலம் கர்ணனை நிலைகுலைய செய்தார். அர்ஜுனன் விடும் ஒவ்வொரு அம்பும் கர்ணனின் தேரை முப்பது அடி தூரம் தள்ளியது. அதே சமயம் கர்ணன் எய்த அம்புகள் அர்ஜுனனின் தேரை பத்து அடிகள் மட்டுமே தள்ளியது. அர்ஜுனன் கர்ணனின் ரதத்தை முப்பது அடி தூரம் நகர்த்திய போது அமைதி காத்த ஸ்ரீகிருஷ்ணர் கர்ணன் தங்கள் ரதத்தை பத்து அடி தள்ளியபோது "சபாஷ் கர்ணா" என்று பாராட்டினார். இதை பார்த்த அர்ஜுனனுக்கு தன்னை புகழாமல் கர்ணனை ஏன் கிருஷ்ணர் ஏன் புகழ்கிறார் என்ற குழப்பம் ஏற்பட்டது.

கர்ணனே சிறந்தவர்
பார்த்தனின் குழப்பத்தை அறிந்த நாராயணன், "அர்ஜுனா உன் மனகுழப்பம் எனக்கு நன்றாக புரிகிறது. நீ கர்ணனுடைய தேரினை முப்பது அடிகள் தள்ளினாய் ஆனால் கர்ணன் நமது தேரினை பத்து அடிகள் மட்டுமே தள்ளினான். இருந்தும் வில்லாற்றலில் அவனே சிறந்தவன் ஏனெனில் அவனது ரதத்தில் அவன் மட்டுமே இருக்கிறான் ஆனால் நமது ரதத்திலோ உன்னோடு நான் இருக்கிறேன் அது மட்டுமின்றி உன் சகோதரன் பீமன் ஆஞ்சநேயரிடம் இருந்து பெற்ற வரத்தின்படி உனது ரதத்தின் கொடியில் ஆஞ்சநேயர் வீற்றிருக்கிறார். எனவே அவரது பலமும் எனது பலமும் சேர்ந்து உன் ரதத்தை பாதுகாக்கிறது. இருப்பினும் கர்ணன் நமது ரத்தத்தை தள்ளுகிறான் என்றால் அவனின் வில்லாற்றல் பாராட்டுக்குரியதுதானே என்று கூறினார்". இதனை கேட்ட அர்ஜுனனும் கர்ணனின் வீரத்தை பாராட்டினார்.

கர்ணனின் வீழ்ச்சி
அர்ஜுனனை விட ஆற்றல் அதிகம் இருந்தும் அதர்மத்தின் புறம் நின்றதால் கர்ணன் போரில் மரணமடைந்தார். கர்ணன் வாழ்நாள் முழுவதும் பெற நினைத்த அங்கீகாரம் அவரின் மரணத்திற்கு பின்தான் கிடைத்தது. ரதத்தில் சாரதி இல்லாமல், தேர் சக்கரம் சேரில் மாட்டிக்கொண்டு, கற்ற வித்தைகள் அனைத்தும் மறந்து போர்க்களத்தில் நிற்கும் போதுதான் அர்ஜுனனால் கர்ணனை கொல்ல முடிந்தது என்றால் அதுவே அவரின் வீரத்திற்கு கிடைத்த அங்கீகாரமாகும். வீரம், ஆற்றல், நல்ல உள்ளம் என அனைத்தும் இருந்தாலும் தவறான பாதையில் பயணித்தால் மரணமே முடிவு என்பது மாவீரன் கர்ணன் நமக்கு உணர்த்தும் பாடமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812