ஆசிரமம் ஒன்றிலிருந்த சீடன் ஒருநாள் ஆசிரம வளாகத்தில் மரக்கன்று ஒன்றை நட்டுவைத்தான். மரம் நன்றாக வளர வேண்டுமென்பதற்காக `ஆண்டவரே, இந்த மரக்கன்று சீக்கிரம் வளர வேண்டும். எனவே நிறைய மழை பெய்ய வேண்டும்' என்று ஆண்டவரிடம் வேண்டிக்கொண்டான். அவனது வேண்டுகோளின்படி இறைவன் மழை பொழியவைத்தார். மழை கொட்டோ கொட்டென்று கொட்டியது. இடைவிடாமல் பெய்த மழையால் அந்த மரக்கன்று நீரில் நன்றாக ஊறியிருந்தது. இதைக் கண்டு பயந்த சீடன், `இறைவா, மழை பெய்தது போதும். மழையை நிறுத்திவிட்டு வெயில் அடிக்கும்படிச் செய்யும்..!' என்று வேண்டினான். சீடனின் வேண்டுகோளுக்கிணங்க மழை நின்றது, வெயில் வெளுத்து வாங்கியது. இதனால் அந்தச் செடி வாடத் தொடங்கியது. இதைக் கண்டு சீடன் பதறிப்போனான்.
உடனே இறைவனிடம் சென்று மீண்டும் ஒரு வேண்டுகோளை முன்வைத்தான். `இறைவா... வெயிலும் வேண்டாம் மழையும் வேண்டாம்; பனி பொழியட்டும்!' - சீடனின் விருப்பப்படி பனி பெய்தது. மழை, வெயில், பனி என தட்பவெப்பநிலை ஏகத்துக்கும் மாறியதால் அந்தச் செடியால் தாக்குபிடிக்க முடியாமல் பட்டுப்போனது. இதனால் மனவேதனையடைந்த சீடன் ஆசிரம குருவிடம் போய், `இந்த இறைவனுக்கு கருணையே கிடையாது. அவரால் நான் நட்டுவைத்த செடி பட்டுப்போனது' என்று புலம்பினான். `என்ன நடந்தது..?' என்று சீடனிடம் விவரமாகக் கேட்டறிந்தார் குரு. அதையடுத்து சீடனிடம் நீண்ட நேரம் பேசினார். அப்போது `தன் படைப்பில் எதற்கு எப்போது என்னென்ன தேவை என்பது இறைவனுக்குத் தெரியும். நீ உன் சுயநலத்துக்காக அதை மாற்ற நினைத்து வேண்டுகோள் வைத்தால் இப்படித்தான் நடக்கும்' என்று கூறினார். குருவிடம் பேசியதையடுத்து அந்த சீடனுக்கு தெளிவு வந்தது. நேராக ஆசிரம வளாகத்தில் புதிதாக ஒரு மரக்கன்றை நட்டுவைத்தான். உடனே இறைவனிடம் `இறைவா இந்த மரக்கன்றை நீரே பார்த்துக் கொள்ளும்' என்று ஒரு வேண்டுகோளையும் முன்வைத்தான் சீடன். இறைவனின் விருப்பத்துக்கே விட்டுவிட்டதால் அந்த மரக்கன்றை பெரிய மரமாக வளரச் செய்து, அது பலன் கொடுக்கவும் அருள்பாலித்தார். நம் ஒவ்வொருவருக்கும் என்னென்ன தேவை என்பது இறைவனுக்குத் தெரியும். அப்படியிருக்கும்போது ........?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக