ஆடி மாதத்தில் வரும் முக்கிய விரத தினங்கள் அனைத்தையும் தவறாது கடைபிடித்து தங்கள் குடும்ப மேன்மைக்காக அம்பிகையிடம் மன்றாடுவது பெரும்பாலும் பெண்கள்தான்.
ஆடி மாதம் என்றாலே அம்மன் மாதம் என்று சொல்வார்கள். அந்த அளவுக்கு அம்மன் ஆலயங்களில் அந்த மாதம் முழுவதும் திருவிழா கோலாகலமாக காணப்படும்.
ஆடி மாதம் அம்பிகை பிறந்த மாதம் என்று சொல்வார்கள். சிலர் அம்பிகை தனது அருள்ஒளியை முழுமையாக பரிபூரணமாக தரும் மாதம் என்று சொல்வார்கள். அதனால்தான் ஆடி மாதத்தில் ஒவ்வொரு தினமும் முக்கியத்துவம் பெறுகிறது.
ஆடி மாதத்தில் ஆலய வழிபாட்டில் ஆண்களை விட பெண்கள்தான் தங்களை அதிகம் ஈடுபடுத்திக் கொள்வார்கள். ஆடி மாதத்தில் வரும் முக்கிய விரத தினங்கள் அனைத்தையும் தவறாது கடைபிடித்து தங்கள் குடும்ப மேன்மைக்காக அம்பிகையிடம் மன்றாடுவது பெரும்பாலும் பெண்கள்தான். எனவேதான் அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் பெண்கள் அதிக அளவில் ஆலயம் வருவதை காண முடியும்.
ஆடி மாதத்தில் வரும் ஒவ்வொரு விழாவும் பெண்களை சுற்றியே அமைந்து இருக்கும். நமது வாழ்வியல் நெறிகளோடும் முறைகளோடும் ஆடி மாதத்து அம்மன் விழாக்கள் அமைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆதி காலத்தில் இருந்து இன்று வரை ஆடி மாத விழாக்கள் பெண்களின் வாழ்க்கையுடன் இரண்டற பின்னிப் பிணைந்துள்ளன.
அம்மன் வீற்றிருக்கும் தலங்களில் விதம், விதமான வழிபாடுகள் நடத்தப்படும். எங்கு பார்த்தாலும் “ஓம் சக்தி... பராசக்தி” என்ற கோஷம் ஆத்மார்த்தமாக, அருள் அலையாக பரவி நிற்கும்.
சக்தி வழிபாடு என்பது மிக, மிக தொன்மையானது. ஆதி காலத்தில் இந்த வழிபாட்டை ‘தாய்மை வழிபாடு” என்றே கூறினார்கள்.உலகின் முதல் வழிபாடாக சக்தி வழிபாடு கருதப்படுகிறது. சதாசிவன், மகேஸ்வரன், ருத்ரன், விஷ்ணு, பிரம்மா ஆகிய 5 பேரை தனது அம்சமாக உருவாக்கிய அன்னை, பிறகு “ஹ்ரீம்” எனும் பீஜத்தில் எழுந்தருளியதாக திருமூலர் கூறியுள்ளார்.
“ஹ்ரீம்” என்ற மந்திரம் ஓம் எனும் பிரணவ மந்திரம் போல சிறப்பு வாய்ந்தது. “ஹ்ரீம்” என்ற பீஜ மந்திரத்தை மனதில் இருத்தி மனதை அலைபாய விடாமல் ஒருமுகப்படுத்தி படித்தால் முக்காலமும் உணர்ந்து மரணத்தை வென்று மகத்தான வாழ்வை பெற முடியும் என்று திருமூலர் குறிப்பிட்டுள்ளார்.
அம்பிகையைச் சரண் அடைந்தால் அதிக வரம் பெறலாம் என்பது மகாகவி பாரதியாரின் வாக்கு. “முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே” என்கிறார் அபிராமிபட்டார்.
கல்வி, செல்வம், வீரம் மூன்றையும் தருபவள் சக்தியே. சிவனிடம் இருந்து சக்தியை ஒரு போதும் பிரிக்க முடியாது. உலகமே சிவசக்தி மயமாக உள்ளது.
எனவே ஆலயங்களிலும் வீடுகளிலும் அம்பிகையை பராசக்தியாக போற்றி அவசியம் வழிபட வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக