ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2018

கீதை உபதேசம் பெறுவதற்கான தகுதி



நீதியின் வழியில் நடக்க அனைத்தையும் தியாகம் செய்யும் மனவலிமையும் தன்னுடைய புனிதமான கடமையை உணர்பவனும்தான் கீதையை கேட்கத் தகுதியுடையவன்.

குருஷேத்திரப் போர் தொடங்கும் நேரத்தில் தன் எதிரில் நின்ற உறவுகளைக் கண்டதும் அர்ச்சுனன் போர்புரிய எண்ணம் இல்லாமல் மனம் தடுமாறினான். அவனுக்குள் எழுந்த எண்ணற்ற சந்தேகங்களுக்கு கிருஷ்ணர் கூறிய விளக்கங்களே ‘பகவத் கீதை’ என்ற புனித நூலாக உருப்பெற்று விளங்குகிறது. மனிதகுலம் முழுவதற்குமான மாபெரும் தத்துவச் சுரங்கமாக ‘பகவத் கீதை’ நூல் திகழ்கிறது என்றால் அது மிகையாகாது.

ஆனால் ஒரு கட்டத்தில் கிருஷ்ணர், தனக்கு போதித்த கீதையைப் பற்றியே அர்ச்சுனனுக்கு சந்தேகம் எழுந்தது. அவனது எண்ண ஓட்டம் இப்படித்தான் இருந்தது. ‘நுட்பமான பல அரிய உண்மைகளை எடுத்துச் சொல்ல, கிருஷ்ணர் நம்மை ஏன் தேர்ந் தெடுத்தார்? தத்துவ உபதேசங்களுக்குத் தகுதியான பிதாமகர் பீஷ்மரிடம் ஏன் அதைச் சொல்லவில்லை.

ஒரு வேளை பீஷ்மர் எதிர் முகாமில் இருந்ததால் அவரை தவிர்த்திருப்பாரோ?.. ஆனால் அண்ணன் தருமன் இருக்கிறாரே! அவரை விட கீதையைக் கேட்க பொருத்தமானவர் வேறு யார் இருக்க முடியும்? வயதில் மூத்தவராகவும் தரும நீதிகளை உணர்ந்தவராகவும் இருக்கும் தருமனை, ஏன் கிருஷ்ணர் புறக்கணித்தார்? பீமன் பலசாலி மட்டுமல்லாது.. மிகச் சிறந்த பக்திமானும் கூட.. இதுபோன்ற நல்லவர்களை எல்லாம் விட்டு விட்டு, உலக சுகங்களில் அதிக நாட்டம் உள்ளவனும் உணர்ச்சிவசப்பட்டு பல தவறுகளை அடிக்கடி செய்பவனும் ஆத்திரக்காரனுமான என்னை எதற்காக கீதை உபதேசம் கேட்க தகுதி உள்ளவனாக தேர்வு செய்தார்’ என்று பலவாறாக சிந்தித்துக் கொண்டிருந்தான் அர்ச்சுனன்.

தன்னுடைய சந்தேகத்தை கிருஷ்ணரிடமே கேட்டு விட எண்ணினான். அதன்படி கிருஷ்ணரைச் சந்தித்து தன்னுடைய சந்தேகங்களை ஒன்றன்பின் ஒன்றாக வைத்தான்.

அவனது சந்தேகத்தைக் கேட்டதும் கிருஷ்ணர் பதிலளிக்கத் தொடங்கினார்.

‘அர்ச்சுனா! நீ என்னோடு நெருங்கிப் பழகுபவன். என் மீது தோழமை கலந்த அன்புடன் இருப்பவன் என்பதால் நான் உனக்கு கீதையை உபதேசம் செய்யவில்லை. நீ நினைப்பதுபோல் பிதாமகர் பீஷ்மரை அறங்கள் அனைத்தையும் உணர்ந்தவராக என்னால் கருத முடியவில்லை. சாஸ்திரங்களை உணர்வதால் மட்டும் ஒரு மனிதனுக்கு சிறப்பு வந்துவிட முடியாது.

அந்த சாஸ்திரங்களை கடைப்பிடிப்பதால் தான் சிறப்பு வந்து சேரும். கெளரவர்கள் அதர்மத்தின் பக்கம் நிற்கிறார்கள் என்பதை அறிந்தும் பீஷ்மர் அவர்கள் பக்கமே சாய்ந் திருந்தார். அதே சமயம் பாண்டவர்களை தனியே பார்க்க நேரும்போது தர்மம் வெல்ல ஆசீர்வதிப்பதாகவும் கூறினார். இப்படி ஒரே நேரத்தில் இரட்டை வேடம் போடுவது சரியில்லாதது. எண்ணம், சொல், செயல் இவை ஒன்றாக யாரிடம் இணைந்திருக்கிறதோ அவனே உத்தமன். பீஷ்மர் அப்படிப்பட்டவராக இல்லை.

தர்மன் கீதை கேட்கத் தகுதியானவர் என்பதும் உன்னுடைய எண்ணம். அவர் நல்லவர் தான். ஆனால் முன்யோசனை இல்லாதவர். தவறு செய்து விட்டுப் பிறகு வருந்துபவர். தர்மன் நீதியையும் தருமத்தையும் கடைப்பிடிப்பவர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவரால் தக்க நேரத்தில் தன் கடமை என்னவென்று உணர இயலவில்லை.

பீமனைப் பற்றிச் சொன்னால் அவன் அளவற்ற பலசாலி. பக்திமானும்கூட. ஆனால் அவனிடம் மனோபலமும் இல்லை; அறிவு பலமும் இல்லை. வீண் கோபத்தால் அவனால் விளைந்த விபரீதங்களே ஏராளம்.

ஆனால் நீ இவர்களைப் போன்றவன் அல்ல, சிறந்த வீரன். அதிநுட்பம் வாய்ந்த அஸ்திர வித்தைகளைக் கற்றவன் என்றாலும் கூட நீ முன் சிந்தனை கொண்டவனாக இருக்கிறாய். அதுதான் உன்னுடைய தனிச் சிறப்பு. நீ இப்போது வாதிடுவதில் இருந்தே தெரியவில்லையா? உன்னைவிட வயதிலும் அறிவிலும் பெரியவர்களான பலரை மதித்ததன் காரணமாகவே நீ என்னிடம் இப்போது கேள்விகளை எழுப்பிக் கொண்டிருக்கிறாய். குருஷேத்திர களத்தில் நின்றபோதும் உற்றார்- உறவினர், மதிப்பிற்குரிய பெரியவர்களை எல்லாம் எப்படிக் கொல்வது?, இந்த யுத்தமும், இழப்பும் தேவைதானா? அத்தனை பேரையும் இழந்து அரசாட்சியை பெறுவதால் என்ன பெருமை இருக்க முடியும்’ என்று கலங்கியவன் நீ. பிச்சை எடுத்து வாழவும் நான் தயார் என்று என்னிடம் கூறினாய்.

பழைய விரோதங்களுக்கு பழிவாங்க நினைத்திருந்தாலும் களத்தில் புகுந்தபோது போரே வேண்டாம் என்று எண்ணும் உள்ளம் உன்னிடம் இருந்தது. நீதி எது? அநீதி எது? என்று ஓரளவு சிந்திக்கிறவனாகவே நீ எந்த தருணத்திலும் இருந் திருக்கிறாய். இதுபோன்ற விஷயங்கள்தான் உனக்கு நான் கீதையை உபதேசிக்கக் காரணங்கள்.

நீதியின் வழியில் நடக்க அனைத்தையும் தியாகம் செய்யும் மனவலிமையும் தன்னுடைய புனிதமான கடமையை உணர்பவனும்தான் கீதையை கேட்கத் தகுதியுடையவன். இதைத்தவிர நான் உனக்கு எந்த சிறப்புச் சலுகையும் வழங்கவில்லை’ என்றார் கிருஷ்ணர்.

தன்னை கிருஷ்ணர் கீதை கேட்க தேர்வு செய்த விதத்தை எண்ணி மெய்சிலிர்த்த அர்ச்சுனன் அடக்கத்தோடு அவரை வணங்கி நின்றான்.

‘தாமரை இலை தண்ணீர் போல்' இந்து மதம் கூறும் ஆசை




வாழ்க்கை எதிலே ஓடிக்கொண்டிருக்கிறது? ஆசையிலும் நம்பிக்கையிலுமே ஓடிக்கொண்டிருக்கிறது. சராசரி மனிதனை ஆசைதான் இழுத்துச் செல்கிறது. துக்கத்துக்கெல்லாம் அதுவே காரணமாகிறது. ‘வேண்டும் என்கின்ற உள்ளம் விரிவடைந்து கொண்டே போகிறது. ‘போதும்’ என்ற மனம் சாகும்வரை வருவதில்லை. ஐம்பது காசு நாணயம் பூமியில் கிடந்து, ஒருவன் கைக்கு அது கிடைத்துவிட்டால், வழியெடுக நாணயம் கிடைக்கும் என்று தேடிக்கொண்டே போகிறான். ஒரு விஷயம் கைக்குக் கிடைத்துவிட்டால் நூறு விஷயங்களை மனது வளர்த்துக்கொள்கிறது. ஆசை எந்தக் கட்டத்தில் நின்றுவிடுகிறதோ, அந்தக் கட்டத்தில் சுயதரிசன் ஆரம்பமாகிறது. சுயதரிசன் பூர்த்தியானவுடன் ஆண்டவன் தரிசன் கண்ணுக்கு தெரிகிறது.
ஆனால் எல்லோராலும் அது முடிகிறதா?
இலட்சத்தில் ஒருவருக்கே ஆசையை அடக்கும் அல்லது ஒழிக்கும் மனப்பக்குவம் இருக்கிறது. என் ஆசை எப்படி வளர்ந்ததன்று எனக்கே நன்றாகத் தெரிகிறது. சிறுவயதில் வேலையின்றி அலைந்தபோது “மாதம் இருபது ரூபாயாவது கிடைக்கக்கூடிய வேலை கிடைக்காதா” என்று ஏங்கினேன். கொஞ்ச நாளில் கிடைத்தது. மாதம் இருப்பத்தைந்து ரூபாய் சம்பளத்திலே ஒருபத்திரிகையில் வேலை கிடைத்தது.
ஆறு மாதம்தான் அந்த நிம்மதி.
“மாதம் ஐம்பது ரூபாய் கிடைக்காதா?” என்று மனம் ஏங்கிற்று.
அதுவும் கிடைத்தது. வேறொரு பத்திரகையில் பிறகு மாதம் நூறு ரூபாயை மனது அவாவிற்று. அதுவும் கிடைத்தது. மனது ஐநூறுக்குத் தாவிற்று. அது ஆயிரமாக வளர்ந்தது. ஈராயிரமாகப் பெருகிற்று. யாவும் கிடைத்தன. இப்பொழுது நோட்டடிக்கும் உருமையையே மனது கேட்கும் போலிருக்கிறது!
எந்க கட்டத்திலும் ஆசை பூர்த்தியடையவில்லை.
‘இவ்வளவு போதும்’ என்று எண்ணுகின்ற நெஞ்சு, ‘அவ்வளவு’ கிடைத்ததும், அடுத்த கட்டத்திற்குத் தாண்டுகிறதே, ஏன்?
அதுதான் இறைவன் லீலை!
ஆசைகள் அற்ற இடத்தில், குற்றங்கள் அற்றுப் போகின்றன. குற்றங்களும் பாபங்களும் அற்றுப்போய் விட்டால் மனிதனுக்கு அனுபவங்கள் இல்லாமற் போய் விடுகின்றன. அனுபவங்கள் இல்லையென்றால், நன்மை தீமைகளைக் கண்டுபிடிக்க முடியாது. ஆகவே தவறுகளின் மூலமே மனிதன் உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இறைவன் ஆசையைத் தூண்டிவிடுகிறான்.
ஆசையை மூன்றுவிதமாப் பிரிக்கிறது இந்து மதம்.
மண்ணாசை!
பொன்னாசை!
பெண்ணாசை!
மண்ணாசை வளர்ந்துவிட்டால் கொலை விழுகிறது.
பொன்னாசை வளர்ந்துவிட்டால் களவு நடக்கிறது.
பெண்ணாசை வளர்ந்துவிட்டால் பாபம் நிகழ்கிறது.
இந்த மூன்றில் ஓர் ஆசைகூட இல்லாத மனிதர்கள் மிகவும் குறைவு. ஆகவேதான் பற்றற்ற வாழ்க்கையை இந்து மதம் போதித்தது. பற்றற்று வாழ்வதென்றால் எல்லாவற்றையும் விட்டு விட்டு ஓடிப்போய் சந்நியாசி ஆவதல்ல! “இருபது போதும்; வருவது வரட்டும்: போவது போகட்டும்: மிஞ்சுவது மிஞ்சட்டும்” என்று சலனங்களுக்கு ஆட்படாமலிருப்பதே பற்றற்ற வாழ்க்கையாகும். ஆசை, தீமைக்கு அடிப்படையாக இல்லாதவரை, அந்த ஆசை வாழ்வில் இருக்கலாம் என்கிறது இந்து மதம். நான் சிறைச்சாலையில் இருந்தபோது கவனித்தேன். அங்கே இருந்த குற்றவாளிகளில் பெரும்பாலோர் ஆசைக் குற்றாளிகளே. மூன்று ஆசைகளில் ஒன்று அவனைக் குற்றவாளியாக்கியிருக்கிறது. சிறைச்சாலையில் இருந்து கொண்டு, அவன் “முருகா, முருகா!” என்று கதறுகிறான். ஆம், அவன் அனுபவம் அவனுக்கு உண்மையை உணர்த்துகிறது.


அதனால்தான் “பரம்பொருள் மீது பற்று வை: நிலையற்ற பொருள்களின் மீது ஆசை வராது” என்கிறது இந்துமதம்.
“பற்றுக பற்ற்ற்றான் பற்றினை அப்பறைப்
பற்றுக பற்று விடற்கு” – என்பது திருக்குறள்.


ஆசைகளை அறவே ஒழிக்கவேண்டியதில்லை.அப்படி ஒழித்துவிட்டால் வாழ்க்கையில் என்ன சுகம்? அதனால்தான் ‘தாமரை இலைத் தண்ணீர் போல்' என்று போதித்தது இந்து மதம். நேரிய வழியில் ஆசைகள் வளரலாம். ஆனால் அதில் இலாபமும் குறைவு. பாபமும் குறைவு. ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்று எதிர்பார்த்து ஐநூறு ரூபாய் மட்டுமே கிடைத்தால் நிம்மதி வந்து விடுகிறது. எதிர்பார்ப்பதைக் குறைத்துக்கொள்: வருவது மனதை நிறைய வைக்கிறது” என்பதே இந்துக்கள் த்த்துவம்.
ஓம் ‘சரவணபவ’ எனும் ஆறு எழுத்துக்கள் கொண்ட மந்திரத்திற்கு உரியவராதலால் முருகனுக்கு ஏற்பட்ட பெயா் என்ன?

ஷடாக்ஷரன்

கோல மயிலை தன் வாகனமாகக் கொண்டதால் முருகனுக்கு ஏற்பட்ட பெயா் என்ன?
சிகிவாகனன்

சிகி என்பது என்ன? மயில்

சூரனை சம்ஹாரம் செய்ய அன்னை பராசக்தியிடமிருந்து ஞானவேலைப் பெற்று சூரனை வதைத்தார். அதனால் முருகனுக்கு ஏற்பட்ட பெயா் என்ன? ஞானசக்திதரன்

தினைப்புனம் காத்த வள்ளியம்மையை காதலித்து கல்யாணம் செய்து கொண்டதால் முருகனுக்கு ஏற்பட்ட பெயா் என்ன? வள்ளிகல்யாணஸுந்தரன்

பிரணவத்திற்குப் பொருள் சொல்லத்தெரியாத பிரம்மனை சிறையில் அடைத்து பிரம்மனின் கர்வத்தை அடக்கியதால் முருகனுக்கு ஏற்பட்ட பெயா் என்ன?
பிரம்மசாஸ்தா

தேவேந்திரன் அளித்த சீதனமான ஐராவதம் எனும் வெள்ளையானையின் மீது ஆரோகணித்து அருளும் முருகனை என்னவென்று அழைப்பா்?
கஜாரூடன்

முருகனுக்குாிய வேறு பெயா்கள் என்ன?

1. அமரேசன், 2. அன்பழகன், 3. அழகப்பன், 4. பாலமுருகன், 5. பாலசுப்ரமணியம், 6. சந்திரகாந்தன், 7. சந்திரமுகன், 8. தனபாலன், 9. தீனரீசன் 10. தீஷிதன், 11. கிரிராஜன், 12. கிரிசலன், 13. குக அமுதன், 14. குணாதரன், 15. குருமூர்த்தி. 16. ஜெயபாலன், 17. ஜெயகுமார், 18. கந்தசாமி, 19. கார்த்திக், 20. கார்த்திகேயன், 21. கருணாகரன், 22. கருணாலயன், 23. கிருபாகரன், 24. குலிசாயுதன், 25. குமரன், 26. குமரேசன், 27. லோகநாதன், 28. மனோதீதன், 29. மயில்பிரீதன், 30. மயில்வீரா. 31. மயூரகந்தன், 32. மயூரவாஹனன், 33. முருகவேல், 34. நாதரூபன், 35. நிமலன், 36. படையப்பன், 37. பழனிவேல், 38. பூபாலன், 39. பிரபாகரன், 40. ராஜசுப்ரமணியம், 41. ரத்னதீபன், 42. சக்திபாலன், 43. சக்திதரன், 44. சங்கர்குமார், 45. சரவணபவன்.
46. சரவணன், 47. சத்குணசீலன், 48. சேனாபதி, 49. செந்தில்குமார், 50. செந்தில்வேல், 51. சண்முகலிங்கம், 52. சண்முகம், 53. சிவகுமார், 54. சிஷிவாகனன், 55. சௌந்தரீகன், 56. சுப்ரமண்யன், 57. சுதாகரன், 58. சுகதீபன், 59. சுகிர்தன், 60. சுப்பய்யா.
61. சுசிகரன், 62. சுவாமிநாதன், 63. தண்டபானி, 64. தணிகைவேலன், 65. தண்ணீர்மலயன், 66. தயாகரன், 67. உத்தமசீலன், 68. உதயகுமாரன், 69. வைரவேல், 70. வேல்முருகன், 71. விசாகனன், 72. அழகன், 73. அமுதன், 74. ஆறுமுகவேலன், 75. பவன்.
76. பவன்கந்தன், 77. ஞானவேல், 78. குகன், 79. குகானந்தன், 80. குருபரன், 81. குருநாதன், 82. குருசாமி, 83. இந்திரமருகன், 84. ஸ்கந்தகுரு, 85. கந்தவேல், 86. கதிர்காமன், 87. கதிர்வேல், 88. குமரகுரு, 89. குஞ்சரிமணாளன், 90. மாலவன்மருகன்.
91. மருதமலை, 92. முத்தப்பன், 93. முத்துக்குமரன், 94. முத்துவேல், 95. பழனிநாதன், 96. பழனிச்சாமி, 97. பரமகுரு, 98. பரமபரன், 99. பேரழகன், 100. ராஜவேல், 101. சைலொளிபவன், 102. செல்வவேல், 103. செங்கதிர்செல்வன், 104.செவ்வேல், 105. சிவகார்த்திக்,
106. சித்தன், 107. சூரவேல், 108. தமிழ்செல்வன், 109. தமிழ்வேல், 110. தங்கவேல், 111. தேவசேனாபதி, 112. திருஆறுமுகம், 113. திருமுகம், 114. திரிபுரபவன், 115. திருச்செந்தில், 116. உமைபாலன், 117. வேலய்யா, 118. வெற்றிவேல்.

திங்கள், 13 ஆகஸ்ட், 2018

‘சூடிக் கொடுத்த சுடர்கொடி’ யாள் அவதரித்த ஆடிப்பூரம் இன்று



மாதந்தோறும் பூரம் நட்சத்திரம் வந்தாலும் ஆடியில் வரும் பூரம் ஆண்டாளின் அவதாரத்தினால் விசேஷமாகிறது. விஷ்ணு பக்தையாக வாழ்ந்து ‘சகலமும் அவனே’ என அவனுடன் ஐக்கியமானவர். ஆழ்வார்கள் வரிசையை அலங்கரித்து பெண் இனத்தின் பெருமையை உலகுக்கு உணர்த்தியவர் ஆண்டாள். அவர் தோன்றிய நட்சத்திரம் ‘ஆடிப்பூரம்’.

விஷ்ணுவின் பாதம்பற்றி, அவர் புகழ்பாடிய அடியவர்கள் ‘ஆழ்வார்கள்’ என்று போற்றப்படுகின்றனர் அப்படிப்பட்ட பன்னிரண்டு ஆழ்வார்கள், தமிழ் மொழியில் இறைவனை போற்றிப் பாடிய பாடல்களே ‘நாலாயிரத் திவ்யபிரபந்தம்’ என்று அழைக்கப்படுகிறது.

ஏழாம் நூற்றாண்டில், அதாவது கலியுகம் பிறந்து 98-வது நள வருடத்தின் ஆடிமாதம் வளர்பிறையில் செவ்வாய்க்கிழமையும் பூர நட்சத்திரமும் கூடிய நன்னாளில் அவதரித்தவர் ஆண்டாள். பெரியாழ்வார் எனும் விஷ்ணு சித்தரால் மகாலட்சுமியின் அம்சமாக நந்தவனபூமியில் கண்டெடுக்கப்பட்ட அற்புத தெய்வீக மங்கை அவர்.

108 திவ்ய தேசங்களில் ஒன்று ஸ்ரீவில்லிப்புத்தூர். இங்கு பெருமாள் அடியவரான விஷ்ணு சித்தர் உருவாக்கிய நந்தவனத் தோட்டத்தில் மாசற்ற துளசிசெடியின் கீழ் அழகிய பெண் குழந்தை கிடந்தது. அந்தக் குழந்தையை பின்னாளில் பெரியாழ்வார் என்று அழைக்கப்பட்ட விஷ்ணு சித்தர் எடுத்து கோதை என்று பெயரிட்டு வளர்த்தார். சிறு வயதிலிருந்தே கண்ணன் மீது அதீத காதல் கொண்டு எந்நேரமும் அவன் நினைவில் பாக்களைப் பாடியபடி வளர்ந்தாள் கோதை.

பெரியாழ்வார் தான் வழிபடும் அரங்கனுக்கு சூட்ட நந்தவனத்தில் மலர்ந்திருக்கும் புத்தம் புதிய மலர்களை பறித்து வந்து அதைத் தொடுத்து மாலையாக்கி வைப்பார். அதை அவர் அறியாமல் ‘தான் நேசிக்கும் கண்ணனுக்கு அம்மாலை பொருத்தமானதுதானா?’ என்று அறிய தன் கழுத்தில் சூடி அழகு பார்ப்பாள் ஆண்டாள்.

ஒரு நாள் இதைக் கண்ட பெரியாழ்வார் மனம் வருந்தினார். ‘தன் பெண் சூடிய மாலையையா கண்ணன் அணிந்தான்?’ என்ற கவலையில் வாடினார். அன்றிரவு அவர் கனவில் தோன்றிய கண்ணன், ‘கோதை சூடிய மாலையே தனக்கு விருப்பமானது’ என்றார். அன்று முதல் ஆண்டாள் ‘சூடிக் கொடுத்த சுடர்கொடி’ ஆனாள்.

ஆண்டாளுக்கு திருமண ஏற்பாடுகள் செய்ய அவளோ ‘நான் கண்ணனையே மணப்பேன்’ என்று உறுதி கொண்டாள். பின்னர் பிரம்ம முகூர்த்தத்தில் கண்ணனை மனதில் நினைத்து பாவை நோன்பு ஏற்று விரதம் இருக்கத் தொடங்கினாள்.

பெரியாழ்வார் என்ன செய்வதென்று அறியாமல் அரங்கனிடம் சென்று வேண்டினார். அரங்கனோ ‘திருமணக்கோலத்தில் மகளுடன் திருவரங்கம் வந்து சேர்’ என்று அருளினார்.

அதன்படி மேளதாளம் முழங்க மகளை திருவரங்கம் அழைத்துச் சென்றார் பெரியாழ்வார். ஸ்ரீரங்க கோவில் கருவறைக்குள் வலது காலை எடுத்து வைத்து நுழைந்த ஆண்டாளை, அரங்கநாதப் பெருமாள் தனக்குள் ஐக்கியமாக்கிக் கொண்டதாக வரலாறு.

ஆடியில் அவதரித்த ஆண்டாள், பெருமாளை கணவனாக அடையும் உறுதியுடன் மார்கழியில் பாவை விரதம் இருந்து பாடிய பாடல்களே ‘திருப்பாவை’.

ஆண்டாள் என்றாலே முத்துக்கள் பதித்து மிளிரும் அழகுமிகு சாய்ந்த கொண்டையும் அழகிய கரங்களின் மேல் வீற்றிருக்கும் கொஞ்சும் கிளியும் தான் நம் நினைவிற்கு வரும். ஆண்டாள் கையில் உள்ள கிளி, மாதுளம்பூக்கள், மரவள்ளி இலைகள், நந்தியாவட்டை இலை, செவ்வரளி போன்றவைகளுடன் வாழை நார் கொண்டு பிரத்யேகமாக உருவாக்கப்படுகிறது.

ஆண்டாளிடம் இருந்து ரங்கனுக்கு தூது போன வியாச மகரிஷியின் மகனான சுகப்பிரம்ம மகரிஷிதான் கிளி ரூபத்தில் ஆண்டாளின் கைகளில் தவழ்வதாக ஐதீகம். பக்தர்களின் வேண்டுதலை இந்த கிளியே ஆண்டாளிடம் கூறி நிறைவேற்றி வைப்பதாக நம்பிக்கை நிலவுகிறது.

மனிதர்கள் தூய பக்தியுடன் செய்யும் எந்த ஒரு செயலும் இறைவனின் கவனத்திற்குச் செல்லும் என்பதற்கு ஆண்டாளே சிறந்த சாட்சி.

மகாலட்சுமி

15616. மகாலட்சுமிக்கு உாிய வேறு பெயர்கள் என்ன?
சஞ்சலா, சபலா

15617. மகாலட்சுமியை சஞ்சலா, சபலா என்று அழைக்க காரணம் என்ன?
ஓரிடத்தில் நிலைக்க மாட்டாள் என்பதாலாகும்.

15618. லட்சுமி யாருடன் பிறந்தவள்?
பிரம்மனுடன்

15619. இருவர் நிறமும் என்ன?
செம்பொன் நிறமாகும்.

15620. லட்சுமிக்கு உாிய வாகனம் எது?
உலூகம்

15621. உலூகம் என்பது என்ன?
ஆந்தை

15622. மகாலட்சுமியின் பரிபூரண அருளைப் பெற்றது எது?
சுக்கிர வாரம்

15623. சுக்கிர வாரம் என்பது என்ன?
வெள்ளிக்கிழமை

15624. சுக்கிரனின் அதிதேவதை யார்?
மகாலட்சுமி

15625. லட்சுமிக்கு ஏற்ற நாள் எது?
வியாழக்கிழமை மாலை

15626. வியாழக்கிழமை மாலையை என்னவென்று அழைப்பார்கள்?
குபேர காலம்

15627. லட்சுமியின் திருக்கரங்கள் என்னவென்று அழைக்கப்படுகிறது?
ஸ்வர்ண ஹஸ்தம்

15628. எல்லா லட்சுமிகளும் எந்த திஶக்கரங்களுடன் அருள்புரிகின்றார்கள்?
அபய வரத ஹஸ்தத்துடன்

15629. லட்சுமியின் பெருமையை விளக்குபவை எவை?
ஸ்ரீசூக்தம், ஸ்ரீசுதுதி, கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி அஷ்டகம், அஷ்டோத்திர சதநாமாவளி ஸ்தோத்திரம் போன்றவையாகும்.

15630. செல்வத்தின் அதிபதி யார்? லட்சுமி

15631. தீபாவளி அன்று லட்சுமி பூஜை செய்வதால் ஏற்படும் நன்மை என்ன?
செல்வம் இரட்டிப்பாக பெருகும்.

மயூரபதி ஶ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் ஆடிப்பூரம்


வெள்ளவத்தை மயூரபதி ஶ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பால் குட பவனி இன்று திங்கட்கிழமை (13.08.2018) இடம்பெற்றது. ஆடிப்பூரத் தினமான இன்றைய தினம், பம்பலப்பிட்டி ஶ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் காலை 6 மணி தொடக்கம் சிறப்பு பூஜைகள் இடம்பெற்று, பால் குட பவனி காலை 7 மணிக்கு ஆரம்பமாகி, வெள்ளவத்தை மயூரபதி ஶ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தை காலை 8 மணிக்கு வந்தடைந்தது. பக்தர்களால் தலையில் சுமந்து வந்த பால் கொண்டு அன்னைக்கு பாலாபிஷேகம், அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் ஆகியன தொடர்ந்து இடம்பெற்றன. காலை 11 மணிக்கு மயூரபதி அன்னைக்கு ருதுசாந்தி வைபவம் என அழைக்கப்படும் மஞ்சள் நீராட்டுவிழா இடம்பெற்றது. அதன்போது புட்டு, களி, அடை மற்றும் வளையல்கள் முதலியன சுத்தி, நெய்வேத்தியம் படைத்து, சோடோபசார பூசைகள் மயூரபதி அம்பாளுக்கு இடம்பெற்றது.







திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812