செவ்வாய், 16 ஏப்ரல், 2019

நல்ல நண்பன் யார்?

 
 
மனிதர்கள் சமூகத்துடன் சேர்ந்து வாழ படைக்கப்பட்டவர்கள், அவர்கள் வாழ்நாள் முழுவதும் தனிமையிலேயே வாழ்ந்துவிட முடியாது. நண்பர்கள், உறவினர்கள், மனைவி, குழந்தைகள், உடன் வேலைசெய்பவர்கள் என அனைவருடனும் வாழ்க்கையை பகிர்ந்து வாழ்வதே சிறந்த வாழ்க்கையாக இருக்க முடியும். ஆனால் நம்முடன் பழகுபவர்கள் அனைவருமே நல்லவர்களாக இருந்துவிட வாய்ப்பில்லை.


வாழ்க்கையில் நம்முடைய முன்னேற்றத்திற்கு எப்படி நம் உடனிருப்பவர்கள் உறுதுணையாக இருக்கிறார்களோ அதேபோல நமது வீழ்ச்சிக்கும் நமக்கு உடனிருப்பவர்கள்தான் காரணமாக இருப்பார்கள். எனவே நமது உடனிருப்பவர்களை தேர்ந்தெடுக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தந்திரங்களின் சக்கரவர்த்தியான சாணக்கியர் வாழ்க்கையில் சரியானவர்களை எப்படி தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூறுகிறார் என்று  பார்க்கலாம்.
நண்பர்களை தேர்ந்தெடுக்கும் போது மிகவும் கவனமாய் இருக்க வேண்டும். உங்களிடம் இருந்து அதிகம் எதிர்பார்க்கும் குணம் உள்ளவர்கள், உங்களை விட அந்தஸ்தில் மிக உயரத்தில் இருப்பவர்கள் போன்றவர்களிடம் நட்பு பாராட்டாமல் இருப்பதே நல்லது என்கிறார் சாணக்கியர். ஏனெனில் இந்த வேறுபாடுகள் நிச்சயம் இருவருக்குள்ளும் பிரச்சினைகளை உண்டாக்கும், இதனால் அவர்களால் ஒரு மகிழ்ச்சியான உறவை வளர்க்க முடியாது.

வியாழன், 11 ஏப்ரல், 2019

ருத்ராட்சம்


புராணங்கள் மற்றும் இதிகாச காலங்கள் முதல் பயன்படுத்தப்பட்டு வரும் தெய்வீக அம்சம் பொருந்திய பொருள் ருத்ராட்சம். இது சிவபெருமானின் கண்ணீர் துளிகளில் இருந்து உருவானதாக கூறப்படுகிறது.

ஒருமுறை திரிபுரா என்ற அசுரனால், தேவர்கள் அதிக துன்பத்திற்கு ஆளானார்கள். மிகவும் மனம் வருந்திய தேவர்கள், அசுரனிடம் இருந்து தங்களை காத்தருளும்படி சிவபெருமானை வேண்டினர். அதனைக் கேட்டு மனம் இரங்கிய சிவபெருமான், அசுரனை எவ்வாறு அழிப்பது என்ற யோசனையில் தவத்தில் அமர்ந்தார்.

நீண்டகாலம் தவத்தில் இருந்த ஈசன், கண் திறந்து பார்த்தார். அப்போது அவரது கண்ணில் இருந்து கண்ணீர் துளிகள் வெளிப்பட்டு பூமியில் விழுந்தது. அவரது கண்ணீர் துளிகள் விழுந்த இடத்தில் இருந்து முளைத்தவைதான் ருத்ராட்ச மரங்கள். 

கொட்டாஞ்சேனை ஸ்ரீஸ்ரீ ராதாகிருஷ்ண ஆலயத்தில் ஸ்ரீராம நவமி





கொழும்பு கொட்டாஞ்சேனை ஸ்ரீஸ்ரீ ராதாகிருஷ்ண ஆலயத்தில் இம்மாதம் 13ஆம் திகதி சனிக்கிழமை ஸ்ரீராம நவமி விழா கொண்டாடப்படவுள்ளது.
அரச தர்மம்,மனித தர்மம்,ஸ்த்ரீதர்மம் ஆகிய தர்மங்களை நடைமுறையில் காட்டுவதற்கு தர்மத்தின் நாயகன் பகவான் கிருஷ்ணா ஸ்ரீராமபிரானாக மனித வடிவில் அவதரித்த தினமே ஸ்ரீராமநவமி என சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது.
மாலை 5.00 மணிக்கு நடைபெறும் துாப ஆரத்தியைத் தொடர்ந்து விஷேட கள் இசை வல்லுநர்களால் இசைக்கப்படும். 6.00 மணிக்கு துளசி ஆரத்தி, 7.00 மணிக்கு கௌர ஆரத்தியைத் தொடர்ந்து ராம பிரானுக்கான ஆராதனையும் ஊஞ்சல்ஆட்டு வைபவமும் இடம்பெற்று தொடர்ந்து பிரசாதம் வழங்கப்படும்.

புதன், 10 ஏப்ரல், 2019

அறநெறி அறிவு நொடி

1.பால், தேன், பருப்பு, பாகு ஆகிய நாலையும் கொடுத்து சங்கத் தமிழ் மூன்றும் தா என்று கணபதியை வேண்டியவர் யார்?ஔவையார்

2. சீதக் களபச் செந்தாமரைப்பூம் என்று துவங்கும் பிள்ளையார் பாடலுக்கு என்ன பெயர்?
விநாயகர் அகவல்
3. ”முன்னவனே யானை முகத்தவனே,முக்தி நலம் சொன்னவனே”—- என்று விநாயகரைத் தொழுதவர் யார்?
அருட் பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள்

4. பிள்ளையாருக்கு ஒற்றைக் கொம்பு (தந்தம்) ஒடிந்திருப்பது ஏன்?
வியாசர் சொன்ன மகாபாரதத்தை எழுத ஒரு கொம்பை ஒடித்ததாக ஐதீகம்
5. ”கைத்தலம் நிறை கனி அப்பமோடு அவல்பொறி”—- என்று துவங்கி கரிமுகனைத் துதித்தவர் யார்?
அருணகிரிநாதர்
6. பொல்லாப் பிள்ளையாருடன் தொடர்புடைய சைவ அடியார் யார்?
திருநரையூரில் உள்ள பொல்லாப் பிள்ளையாரின் அருள்பெற்றவர் நம்பி ஆண்டார் நம்பி

7. ”வாதாபி கணபதிம் பஜே” என்ற கிருதியை இயற்றியவர் யார்?
முத்து சுவாமி தீட்சிதர்


8. “எனக்கு வேண்டும் வரங்களை இசைப்பேன் கேளாய் கணபதி” என்று உரிமையோடு பாடியவர் யார்?
பாரதியார்
9. ”முதாகராத்த மோதகம் சதா விமுக்தி சாதகம்”….என்ற சம்ஸ்கிருத ஸ்தோத்திரத்தின் பெயர் என்ன?
கணேச பஞ்ச ரத்னம்
10. ”கணாணாம் த்வா கணபதிம் ஹவாமஹே கவீம் கவீனாம்”…… என்று கணபதியைப் போற்றும் துதி எதில் இருக்கிறது?
ரிக் வேதம்
11. “வெள்ளாடை தரித்த விட்டுணு வென்று செப்பிய மந்திரத் தேவனை” என்று பாரதி மொழிபெயர்த்த மந்திரம் எது?
சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம்…………. என்ற மந்திரம்
12. விநாயகரின் 16 முக்கியப் பெயர்களென்ன?
சுமுகன், ஏகதந்தன், கபிலன், கஜகர்ணன், லம்போதரன், விகடன், விக்னராஜன், விநாயகன், தூமகேது, கணாத்யக்ஷன், பாலச்சந்திரன், கஜானனன், வக்ரதுண்டன், சூர்ப்பகர்ணன், ஏரம்பன், ஸ்கந்தபூர்வஜன்

13. சுந்தரமூர்த்தி நாயனார், சேரமான் பெருமாள் நாயனார் ஆகியோருக்கு முன் ஔவையார் கைலாசம் சென்றது எப்படி?
பிள்ளையார் தன் துதிக்கையால் ஔவையாரை கைலாசத்துக்கு தூக்கிவைத்தார்.

14. மகாராஷ்டிரத்தில் அஷ்ட விநாயக கோவில்கள் மிகவும் பிரபலமானவை. அவை யாவை?
இவைகள் புனே நகரைச் சுற்றியுள்ளன: மோர்கான் மயூரேஸ்வர் கோவில், சித்தடெக் சித்தி விநாயகர் கோவில், பாலி வல்லாலேஸ்வர் கோவில், மஹத் வரத விநாயகர் கோவில், தேவுர் சிந்தாமணி விநாயகர் கோவில், லென்யாத்ரி கிரிஜாத்மஜ விநாயகர் கோவில், ஓஜார் விக்னேஸ்வரர் கோவில், ரஞ்சன்காம் மஹாகணபதி கோவில்

15. வாதாபி கணபதியை தமிழகத்துக்கு கொண்டுவந்த சைவப்பெரியார் யார்?
சிறுத்தொண்ட நாயனார்

16. ”.கடச் சக்கரச் செம்முகம் ஐந்துளான்”…….. என்ற பிள்ளையார் துதியுடன் துவங்கும் நூல் எது?
கந்தபுராணம்
17. “பிடி அதன் உரு உமை கொளமிகு கரியது வடிகொடு”…என்று பாடியவர் யார்?
திருஞானசம்பந்தர்

18. தெற்கில் பிள்ளையார் பிரம்மச்சாரி, வடக்கில் அவருக்கு இரண்டு மனைவியர் உண்டு. அவர்கள் பெயர்கள் என்ன?
சித்தி, புத்தி தேவியர்
19. பிள்ளையாருக்கு பிடித்த பூ எது? தின்பண்டம் எது?
எருக்கம் பூவும், கொழுக்கட்டையும் (மோதகம்)
20. நந்தி மகன் தனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்தடி போற்றும் சித்தர் யார்?
திருமூலர்

சிவனின் ஐந்து திருநாமங்கள்




சிவன் என்பது ஆழ்ந்த மெளனத்தின் மற்றும் அசைவற்ற நிலையின் பரப்பு; அங்கு மனதின் அனைத்து செயல்களும் களையப்படுகின்றன. நீங்கள் எங்கிருந்தாலும் இந்த இடம் கிடைக்கும். தெய்வத்தைக் கண்டுபிடிக்க நீண்ட புனித யாத்திரை செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
நீங்கள் இருக்குமிடத்தில் கடவுளை நீங்கள் காணாவிட்டால், அவரை வேறு எங்கும் தேடிக் காண முடியாது. நீங்கள் நிறுவப்பட்டு மையமாக இருக்கும்போது அனைத்து இடங்களிலும் தெய்வத்தைக் காண்கின்றீர்கள். தியானத்தில் இதுதான் நிகழ்கின்றது.
சிவபெருமானின் பெயர்களில் ஒன்று ஆதியந்தாஹினம் - ஆரம்பம் அல்லது முடிவில்லாதது என்பதாகும். சிவன் தனது கழுத்தில் ஒரு பாம்புடன் அமர்ந்து இருப்பதாக நாம் கருதுகிறோம். சிவனிடமிருந்து அனைத்தும் பிறக்கின்றன; சிவன் அனைத்தையும் உள்ளடக்கியவர். அனைத்தும் சிவனிடமே கரைகின்றன. இப்படைப்பில் காணும் ஒவ்வொன்றும் சிவனது வடிவமேயாகும்.
அவர் முழு படைப்பிலும் ஊடுருவிச் செல்கிறார். அவர் ஒருபோதும் பிறக்கவில்லை, முடிவும் அற்றவர். நித்தியமானவர்.
சிவபெருமான் விரூபாக்ஷர் என்றும் அழைக்கப்படுகிறார் - அதாவது வடிவமற்றவர் ஆயினும் அனைத்தையும் காண்பவர். இது குவாண்டம் இயக்கவியலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. காண்பது மற்றும் காண்பவர் இரண்டும் காணும் செயல் முறையில் பாதிக்கப்படுகின்றன. நம்மைச் சுற்றி காற்று உள்ளது என்பதையும் அதனை உணரமுடியும் என்பதையும் நாம் அறிவோம். ஆனால் காற்று நம்மை உணர ஆரம்பித்தால் என்ன செய்வது? விண்வெளி நம்மை சுற்றி உள்ளது, நாம் விண்வெளியை அடையாளம் காணமுடியும் . ஆனால் நம்முடைய இருப்பை விண்வெளிப்பரப்பு அறிந்தால் என்ன ஆகும்? தெய்வம் நம்மைச் சுற்றி எங்கும் உள்ளது; மற்றும் நம்மைக் காண்கின்றது.
இது இருப்பு மற்றும் இலக்கின் வடிவமற்ற மையமாகும். காண்பவர், காணும் செயல் மற்றும் காட்சி ஆகியவற்றைக் காணும் இந்த வடிவமற்ற தெய்வம் சிவன். இந்த சிவ தத்துவத்தை உணர்ந்தறிந்து அனுபவித்தல் சிவராத்திரி.
வழக்கமாக கொண்டாட்டங்களில் விழிப்புணர்வு இழக்கப்படுகிறது. ஆழ்ந்த ஓய்வு மற்றும் விழிப்புணர்வுடன் கூடிய கொண்டாட்டம்தான் சிவராத்திரி. நீங்கள் ஒரு பிரச்சினையை எதிர்கொள்ளும்போது விழிப்புணர்வுடன் எச்சரிக்கையாக இருக்கின்றீர்கள். எல்லாம் நன்றாக இருக்கும்போது நாம் ஓய்வெடுக்கிறோம். ஆனால் சிவராத்திரியில் நாம் விழிப்புணர்வுடன் ஓய்வெடுக்கிறோம். அனைவரும் உறங்கும்நேரம் ஓர் யோகி விழித்திருப்பதாகக் கூறப்படுகிறது. யோகிக்கு ஒவ்வொரு நாளும் சிவராத்திரி.
மெய்யுணர்வின் நான்காவது நிலை சிவன். விழித்திருத்தல், ஆழ்ந்த தூக்கம் மற்றும் கனவு ஆகிய நிலைகளுக்கு அப்பால் உள்ள நிலை துரியா அவஸ்தா எனப்படும் தியான நிலையாகும். அனைத்து இடங்களிலும் இருக்கும் இருமையற்ற மெய்யுணர்வு எங்கும் வியாபித்துள்ளது. அதனால் தான் சிவனை வழிபட சிவனிலேயே கரைந்து விட வேண்டும்.
சிவனை வழிபட சிதநந்தருபர் - தூய பேரின்பம் என்ற மெய்யுணர்வு நிலையில் சிவமாகி விட வேண்டும். தபோ யோக கம்யா - அதாவது தவம் மற்றும் யோகா மூலம் அறியப்படும் ஒருவர் என்பதாகும். யோகா இன்றி சிவனை அனுபவிக்க முடியாது. யோகா என்பது ஆசனங்கள் (உடல் தோற்ற நிலைகள்) மட்டும் அல்ல, அது தியானம் மற்றும் பிராணாயாமம் (சுவாச நடைமுறைகள்) மூலம் சிவதத்துவத்தை அனுபவிப்பது ஆகும்.
பஞ்சமுகம், பஞ்சத்துவம் அதாவது ஐந்து கூறுகள் சிவனின் ஐந்து முகங்கள் என குறிப்பிடப் படுகின்றன. நீர், காற்று, பூமி, நெருப்பு மற்றும் விண்வெளி. இந்த ஐந்து உறுப்புகளை புரிந்து கொள்வது தத்துவஞானம் . சிவ வழிபாடு என்பது சிவதத்துவத்தில் கரைந்து அனைவருக்கும் நன்மையை வேண்டிக் கொள்ள வேண்டும். சர்வே ஜனா சுகினோ பவந்து (அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கட்டும்).

அறநெறி அறிவு நொடி

இறைவழிபாட்டில் மணியடிப்பதன் காரணம் என்ன?
ஓங்கார நாதத்தையே மணி ஒலிக்கிறது. ஓம் எனும் பிரணவ மந்திரம் சொல்லியே இறைவனை வழிபடுகிறோம். இறைவழிபாடு நடைபெறுகிறது என்பதை குறிக்கவும், பக்தர்கள் அமைதியுடன் இறைதரிசனம் செய்யவேண்டும் என்பதை அறிவிக்கவும் மணியோசை எழுப்பப்படுகிறது. மணியின் அதிர்வலைகள் தீய சக்திகளை விரட்டுகிறது என்றும் கூறுவர்.

மந்திரம் என்பதில் ‘மன்’ என்றால் என்ன?
மனம்.
‘திரா’ என்றால் என்ன?
“விடுவிப்பது”.
மந்திரம் என்றால் என்ன?
மனதை விடுவிப்பது என்று பொருள். அதாவது
மனதை அதன் துன்பங்களிலிருந்து விடுவிப்பது மந்திரம் ஆகும்.

மஹா மந்திரம் என்றால் என்ன?
ஒரு மந்திரம் ஒரு குறிப்பிட்ட துன்பத்தை மட்டும் நீக்க உதவலாம். ஆனால் மஹா மந்திரம் எனப்படுவது எல்லாவிதமான துன்பங்களிலிருந்தும் மனதை விடுவிக்கும் சக்திவாய்ந்ததாய் இருக்க வேண்டும்.

எல்லாசிதமான துன்பங்களும் எவை?
மனச்சஞ்சலங்கள், மனச்சோர்வு, மனஅழுத்தம், மனக்குழப்பம், பாவ விளைவுகள், தீய சிந்தனைகள், சண்டை சச்சரவுகள், காம, க்ரோத, மோஹ, லோப, மத, மாச்சர்யம் என்பவை ஆகும்.

இந்த அனைத்து விதமான மனதின் துன்பங்களில் இருந்தும் மனதை விடுவிக்கும் சக்தி வாய்ந்த மந்திரம் எது?
“ஹரே கிருஷ்ண” மந்திரம்.

இந்த “ஹரே கிருஷ்ண” மந்திரத்தை என்ன மந்திரம் என்று அழைப்பார்கள்?
மஹா மந்திரம்

இது மஹா மந்திரம் என்று எதில் குறிப்பிடப்பட்டுள்ளது?
வேத சாஸ்திரங்களில்

ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தைச் சொல்லக் கட்டுபாடுகள் எதுவும் இருக்கிறதா?
இல்லை.

நம் காதுகளுக்கு கேட்கும் வகையில் தினமும் குறைந்த பட்சம் 108 முறை ஹரே கிருஷ்ண மந்திரத்தை உச்சரித்து வந்தால் என்ன நடக்கும்?
மன அமைதியும் சந்தோஷமும் கிடைக்கும்.
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே.

அறநெறி அறிவு நொடி

காலையில் எழுந்ததும் சொல்ல வேண்டிய மந்திரம் என்ன? ந-ம-சி-வ-ய அல்லது சி-வ-ய-ந-ம

சைவ சமயிகள் யார்? உமை, விநாயகர், முருகன் ஆகிய திருவுருவங்களைப் பொதுவாகவும் சிவபெருமானை முழுமுதற் பொருளாகவும் வழிபாடு செய்பவர்கள்.

தீர்த்தம் எதனைக் குறிக்கும்? இறைவனுடைய திருவருளே தீர்த்தம். இது மும்மலம் நீக்கும். தீர்த்தத்தைப் பருகுவதன் வழி இறையாற்றல் நம் உடலினுள் சென்று கலக்கிறது.

சமயம் என்றால் என்ன? வழி, நெறி என்று பொருள்.

ஏன் கோயில் வாசலில் குனிந்து, படியைத் தொட்டு வணங்கி உள்ளே செல்கிறோம்? குனிந்து செல்வது பணிவைக் குறிக்கும். அப்போது நமது மனத்திலுள்ள அகங்காரமும், ஆணவமும் சற்று குறையத் தொடங்கும். எல்லாவற்றிற்கும் தலைவனான இறைவன் கோயிலினுள் இருப்பதால்,வாயிற் படியை வணங்குகின்றோம். இறைவன் முன்னால் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நுழையக் கூடாது.

கற்பூர தீபம் எதனைக் குறிக்கிறது? ஏன் கண்களில் தொட்டு ஒற்றிக் கொள்கிறோம்? இறைவனுடைய அருள் ஒளி வடிவமாக நம்மிடம் வருவதைக் கற்பூர தீபம் குறிக்கிறது. அதனைத் தொட்டு கண்களில் ஒற்றி கொள்ளும் பொழுது, இறையாற்றல் நம் கண்களின் வழியே நம் உடலுக்குள் செல்கிறது.

இரு கைகளையும் குவித்து வணக்கம் செய்கிறோம். இதற்கு ஏதாவது தத்துவ பிண்ணனி உண்டா? சைவர்கள் / தமிழர்கள் இவ்வாறு பெரியோர்களைப் பார்த்தும் ஆலயங்களிலும் செய்வது ஏன்? ‘வணக்கம்’ கூறி ஒருவரை வணங்குதல் என்பது அவருடைய உயிரில் கலந்திருக்கின்ற இறைவனை வணங்குதல் ஆகும். வணக்கம் மூவகை படும் அவை வருமாறு:-
i. தலைக்கு மேல் இரு கைகளையும் கூப்பி வணங்குதல் – இது இறைவனுக்கு மட்டுமே செய்யக் கூடிய வணக்கம் ஆகும்.
ii. புருவ மத்தியில் இரு கைகளையும் கூப்பி வணங்குதல் – இது குருவிற்கு செய்யக் கூடிய வணக்கம் ஆகும்.
iii. நெஞ்சில் இரு கைகளையும் கூப்பி வணங்குதல் - நம் வயதை ஒத்தவர்களுக்கும் மற்றவர்களுக்கும் செய்யக் கூடிய வணக்கம் ஆகும்.

சைவர்கள் ஓத வேண்டிய தமிழ் வேதங்கள் யாவை? பன்னிரு திருமுறைகள்

இறைவன் செய்த எட்டு (8) வீரச் செயல்களை என்னவென்று அழைப்போம்? அட்ட வீரட்டானம்

சிவபுராணத்தில் 'கல்லாய் மனிதராய் பேயாய்' என்று வருகிறது. புல் முதலிய பல பிறவிகள் பற்றிக் கூறும் மணிவாசகர், 'கல்லாய்' என்றும் சொல்கிறார், 'கல்' பிறப்பா? ஒவ்வொரு பிறவிகளிலும் உயிர் பல வகையான உடம்புகளைத் தமக்கு இடமாய் கொள்வது போல கல்லையும் தமக்கு இடமாய் கொள்ளும். கல் அசையாமல் கிடக்கும். அதன் உள்ளே உள்ள உயிர்களும் அசைவு இன்றிச் செயலற்றுக் கிடக்கும். இந்நிலையைக் கல்லாய் என்று மணிவாசகர் குறிக்கின்றார்.

தாமரையின் தனிச்சிறப்பு


செல்வத்தின் கடவுள் யார்? திருமகள்
திருமகள் எந்த மலரில் அமர்ந்திருக்கிறார்?
சிவப்புத் தாமரையில்
கல்வியின் கடவுள் யார்? கலைமகள்
கலைமகள் எந்த மலரில் அமர்ந்திருக்கிறார்?
வெள்ளைத் தாமரையில்
பத்மநாபன் என்று அழைப்பது யாரை?
மகாவிஷ்ணுவை
மகாவிஷ்ணுவை பத்மநாபன் என்று அழைப்பது ஏன்?
மகாவிஷ்ணுவின் நாபியில் இருந்து தாமரை வருவதால்
கமலக் கண்ணன் என்று அழைப்பது யாரை? கண்ணனை
கண்ணனை கமலக் கண்ணன் என்று அழைப்பது ஏன்?
கண்ணனின் கண்கள் தாமரை போன்ற அழகுடன் இருப்பதால்
இறைவனிடம் இருக்கும் முக்குணங்களும் எவை?
சத்தியம், சிவம், சுந்தரம்
சத்தியம், சிவம், சுந்தரத்திற்கும் தாமரைக்கும் இடையிலுள்ள தொடர்பு என்ன?
தாமரை மலர் சத்தியம், சிவம், சுந்தரம் என்ற முக்குணங்களின் இருப்பிடம்

ஒளி மயமான பாதை


முனிவர்கள் மாய வித்தைகள் பல செய்ய வல்லவர்கள்’ என்ற நம்பிக்கையில் இரவில் காட்டைக்கடக்க , ‘’ தான் போகும் பாதையெல்லாம் ஒளிமயமாக வேண்டும் ‘’என்ற வரத்தினை கேட்டார் ஒருவர்.

அதாவது, முனிவர் மாய வித்தைகளை பயன்படுத்தி தெரு விளக்குகள் போல் எதையாவது பாதையெங்கும் உருவாக்கி ஒளிமயமாக்குவார் என எதிர்பார்த்தார்.
ஆனால் முனிவரோ, ஒரு லாந்தர் விளக்கை அவரிடம் கொடுத்து எடுத்துச் செல்லச் சொன்னார். ஏதோ, மாய மந்திரம் செய்து தன் பாதையை ஒளிமயமாக்குவார் என்று பார்த்தால் இந்த விளக்கைக் கொடுக்கிறாரே, இது பத்து அடிக்கு தானே வெளிச்சம் கொடுக்கும் என்ற சந்தேக்த்தை முனிவரிடம் கேட்டே விட்டார்.
முனிவர், “அப்பனே, நான் மாயம் செய்து உன் பாதையை ஒளிமயமாக்கக முடியும், ஆனால் அதனால் உனக்கு ஒன்றும் பயனில்லை. எப்படியும் உன்னால் அடுத்த பத்து அடியைத்தான் பார்க்க முடியும். இந்த விளக்கைப் பயன்படுத்தி உன் முன் உள்ள பத்து அடிகளைக் கடந்தால் அடுத்த பத்து அடிகளுக்கு உனக்கு வெளிச்சம் கிடைக்கும். அப்படியே நீ காட்டைக் கடந்து நீ செல்ல வேண்டிய இடத்திற்கு நாளை காலை தவறாமல் சென்றடைவாய்” என்றார்.
நம்மில் பலரும் இது போலத்தான். எதிர்காலத்தைப் பற்றியே சிந்தனை. நம் முன் உள்ள நிகழ்காலத்தை விட்டு விட்டு அறியாத எதிர்காலத்திற்கே நம் சிந்தனைகளை செலவு செய்து திட்டமிட்டு வருகிறோம், கடவுளிடமும் சென்று கும்பிட்டு நம் எதிர்காலத்தை ‘insure’ செய்ய முயல்கிறோம்.
நம் கண் முன் உள்ளதை, நம்மால் அறிய முடிவதை மறந்து விட்டு காணாத, அறியாத ஒன்றைப் பற்றி கற்பனை செய்து கனவு கண்டுகொண்டோ, கவலைப்பட்டுக் கொண்டோ இருந்தால் எங்கும் செல்ல முடியாது. இன்று நாம் செய்ய வேண்டியதில் கவனம் செலுத்தி சரியாகச் செய்து ஒவ்வொரு நாளும் இவ்வாறே அன்றன்று செய்ய வேண்டிவற்றை அன்றன்று சிறப்பாகச் செய்து ,வாழ்க்கைப் பயணத்தை அனுபவித்தால் தான் அடைய வேண்டிய இலக்கை அடைய முடியும்.

விகாரி தமிழ் வருடப்பிறப்பு



புத்தாண்டுக்கு முதல் நாளில் வீடு வாசலை சுத்தம் செய்வதிலும் அலங்கரிப்பதிலும் தமிழர் செலவழிப்பர். மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள், வெற்றிலை, பாக்கு, நகைகள், நெல் முதலான மங்கலப்பொருட்கள் வைத்த தட்டை வழிபாட்டறையில் வைத்து, அதை புத்தாண்டு அதிகாலையில் காண்பது புனிதமாகக் கருதப்படுகின்றது. புத்தாண்டன்று அதிகாலையில் நீராடி கோலமிட்டு, புத்தாடை அணிந்து கோயிலுக்குச் சென்று வழிபடுவர். மாலை வேளையில் உறவினர் வீடுகளுக்குச் செல்வதும், பலகாரங்களை பகிர்ந்துண்பதும் நிகழும்.
வாழ்க்கை என்றாலே கசப்பும் இனிப்பும் கலந்தது தான். இப்புத்தாண்டிலும் கசப்பும் இனிப்பும் இருக்கும் என்பதன் அடையாளமாக வேப்பம்பூப்பச்சடி, மாங்காய்ப்பச்சடி என்பவற்றை உண்பது குறிப்பிடத்தக்க மரபாகும். இலங்கையில் புத்தாண்டு பிறக்கும் விசூ புண்ணியக் காலத்தில் ஆலயத்தில் வழங்கப்படும்
மருத்து நீர் எனப்படும் மூலிகைக் கலவையை இளையவர்களின் தலையில் மூத்தோர் வைத்து ஆசீர்வதிப்பர். அதன்பின்னர் நீராடி அவர்களிடம் ஆசி பெற்று, குறித்த சுபவேளைகளில்
கைவிசேடம் பெறுவர். மூத்தவர்களால் இளையவர்களுக்கு, புத்தாண்டு அன்பளிப்பாக வழங்கப்படும் பணமே கைவிசேடம் எனப்படுகிறது.


புதிய விகாரி தமிழ் வருடப்பிறப்பு வாக்கியப் பஞ்சாங்கப்படி எதிர்வரும் 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிப 1.12மணிக்கு உதயமாகிறது.



ஞாயிறு மு.ப.9.12 மணி முதல் பிப 5.12 மணி வரை விஷூ புண்ணியகாலமாகும். இக்காலப்பகுதியில் சிரசில் ஆலிலையும் காலில் இலவமிலையும் வைத்து மருத்துநீர் தேய்த்து ஸ்ஞானம்செய்து வழிபாடியற்ற வேண்டும்.



வெள்ளை நிறப்பட்டாடை அல்லது வெள்ளை சிவப்புக்கரை அமைந்த பட்டாடை இவ்வருடத்துக்கான ஆடையாகும்.



திருக்கணித பஞ்சாங்கம்

திருக்கணிதபஞ்சாங்கத்தின்படி புதுவருடம் 14ஆம் திகதி பிப 2.09 மணிக்குப்பிறக்கிறது.

ஞாயிறு மு.ப.9.12மணிமுதல் பிப 5.12மணிவரை விஷூ புண்ணியகாலமாகும்.

இக்காலப்பகுதியில் சிரசில் இலவமிலையும் காலில் விளாஇலையும் வைத்து மருத்துநீர் தேய்த்து ஸ்ஞானம் செய்து வழிபாடியற்றவேண்டும்.
வெள்ளை சிவப்புக்கரை அமைந்த பட்டாடை இவ்வருடத்துக்கான ஆடையாகும்.



கைவிசேசம் விஷூபுண்ணிய காலத்திலும் செய்யலாம். ஞாயிறு இரவு 10.31முதல் 11.15வரையுமான காலப்பகுதியிலும் செய்யலாம். அல்லது 17ஆம்திகதி புதன் பகல் 10.16முதல் 11.51வரையும் 18ஆம் திகதி பகல் 9.47முதல் 11.46வரையான் காலப்பகுதியிலும் செய்யலாம்.

மிதுனம், கன்னி, மகரம், கும்பம் ராசிக்காரர்களுக்கு லாபமான வருடம். மேடம் விருச்சிகம் இடபம் துலாம் கர்க்கடகம் ராசிக்கரர்களுக்கு சமசுகமும் சிம்மம், தனு, மீனம் ராசிக்காரர்களுக்கு நஷ்டமும் ஏற்படும் வருடம்.


புது வருச பலனாக நற்பலன்கள் நான்கும் தீயபலன்கள் மூன்றும் காட்டப்படுகின்றது என கூறப்படுகிறது.

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812