வியாழன், 26 செப்டம்பர், 2019

தினக்குரல் பத்திாிகைக்கு நன்றி

கலைஞருக்கு ஓர் கண்ணீர் துளி

இலங்கையில் 40 ஆண்டு காலம் கலை சேவையாற்றிய கலைஞர் கே. மோகன்குமார் நினைவாக தமிழர் நற்பணி மன்றம் கொழும்பு புறக்கோட்டை பழைய நகர சபை மண்டத்தில் 2019.09.08ஆம் திகதி நடத்திய "கலைஞருக்கு ஓர் கண்ணீர் துளி" என்ற நிகழ்வின்போது பிடிக்கப்பட்ட படம். தமிழர் நற்பணி மன்றத்தின் தலைவரும் ஸ்தாபகருமாகிய கலைஞர் கே. ஈஸ்வரலிங்கம் நடத்திய இந்நிகழ்வை அவருடன் இணைந்து கலைஞர் எஸ். சரவணாவும் ஏற்பாடு செய்திருந்தாா். கலைஞர் வி.டீ. பாலனின் இரங்கல் செய்தியை தமிழகத்தின் சாா்பில் மணவை அசோகன் இந்நிகழ்வில் வாசித்தது குறிப்பிடத்தக்கது.

கலைஞர்களுக்கான அரச விருது விழா



தமிழ் இலங்கையர் பாரம்பரிய மற்றும் நவீன கலைஞர்களுக்கான அரச விருது விழா-2019 கொழும்பு தாமரைத் தடாகத்தில் 2ந் திகதி இடம்பெற்றது. இதில் கொழும்பைச் சேர்ந்த கே. ஈஸ்வரலிங்கம் "கலைச்சுடர்" எனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். இதனை தேசிய ஒருமைப்பாடு அரச கரும மொழிகள் சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன் வழங்கினார்.

வியாழன், 12 செப்டம்பர், 2019

சமய சமூகத் தொண்டர் பயிற்சி நெறிக்கான விண்ணப்பம்



சமூகத்தில் ஆன்மீகம் மற்றும் மானிட மேம்பாட்டுடன் தொடர்புடைய வேலைத்திட்டங்களை மேற்கொள்வதற்காக நான்கு நாட்கள் வதிவிட பயிற்சி நெறியொன்று தொண்டமானாற்றில் அமைந்துள்ள செல்வச் சந்நிதியான் ஆச்சிரமத்தில் நடத்தப்படவுள்ளது.

அப்பயிற்சி நெறிக்கு 21 வயதிற்குமேற்பட்ட ஆண், பெண் இருபாலாரும் விண்ணப்பிக்கலாம். இலங்கையில் எல்லாப் பாகத்திலிருந்தும் விண்ணப்பங்கள் பெறப்படும். பயிற்சியில் கலந்து கொள்ளும் அனைவரும் சமய தீட்சை பெறுவதற்கும் வசதி செய்து கொடுக்கப்படும் . தீட்சை பெற்ற அன்றிலிருந்து தொடர்ந்து 21 நாட்களுக்கு சைவ உணவு மட்டுமே அருந்துவதற்கு உறுதி கொண்டவர்களாகயிருத்தல் வேண்டும்

இப்பயிற்சிகள் ஆகஸ்ட் மாதம் 23 ஆம்திகதி காலை 6மணிக்கு ஆரம்பமாகும். தூர இடத்திலிருந்து 22ஆம் திகதி இரவு8 மணிக்குள் சந்நிதியான் ஆச்சிரமத்திற்கு வரவேண்டும். தங்குமிடமும் உணவும் பயிற்சியும்இலவசமாக வழங்கப்படும். விண்ணப்பிப்பவர்கள் 15ரூபா முத்திரை ஒட்டி , சுய முகவரியிட்டநீள தபால் உறையில் சிவன் மானிடமேம்பாட்டு நிறுவனம்,48, புனித மரியாள் வீதி, திருகோணமலை எனும் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். கடித்த்தில் தொலைபேசி இலக்கத்தையும் குறிப்பிட்டு அனுப்பி விண்ணப்பத்தைபெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசி தினம் ஆகஸ்ட் மாதம் 09 ஆம் திகதி யாகும்.

பயிற்சியை நிறைவு செய்து சான்றிதழ் பெறுபவர்கள் சமயம், சமூகம் சார்ந்ததொண்டுச் செயற்பாடுகளில் தத்தம் மாவட்டங்களில் ஈடுபடலாம். பயிற்சியில் கலந்து கொள்பவர்கள் யாழ். குடாநாட்டிலுள்ள பிரசித்தி பெற்ற ஆலயங்களுக்கு தல யாத்திரையாக அழைத்துச் செல்லப்படுவார்கள். தலயாத்திரை உட்பட பயிற்சி செயற்பாட்டிற்குரிய நாட்கள் மொத்தம்4 ஆகும்.

கலாதீனி பா.முருகானந்தன் உடப்பு.

அறநெறி அறிவு நொடி



‘சனாதன தர்மம்’ என்ற அழைப்பது எந்த சமயத்தை?

இந்து சமயத்தை

சனாதன தர்மம் என்பதன் பொருள் என்ன?

‘என்றுமுள்ள வாழ்க்கை நெறி’ என்பதாகும்.

இதனை இன்னும் விவரமாக கூறுவதாக இருந்தால் எப்படி கூறலாம்?

அதாவது எந்த வழியில் அணுகினாலும் இறைவனை அடையலாம் என்பது இதன் அடிப்படையாகும்.

இந்து சமய வாழ்க்கை என்பது எவற்றை அடிப்படையாகக் கொண்டது?

அன்பு, அறிவு, ஆற்றல், செல்வம், ஒழுக்கம், ஒற்றுமை, செயல், தியாகம், நம்பிக்கை ஆகிய அம்சங்களை அடிப்படையாகக் கொண்டது.

இதற்கு மேலும் உதவும் வகையில் 8 வகை குணங்களை இந்து சமயம் வரையறுத்துள்ளது. அவை எவை?

1. உலகில் உள்ள எல்லா உயிர்களிடமும் அன்புடன் இருக்க வேண்டும். கருணையை கைவிடக்கூடாது. இதை வலியுறுத்தவே ‘அன்பே சிவம் அதுவே நலம்’ என்றனர்.

2. பொறுமை மற்றும் எதையும் சகித்துக் கொள்ளும் மன உறுதி வேண்டும்.

3. மற்றவர்களை நினைத்து பொறாமைப்படக்கூடாது.

4. உடல், மனம், செயலில் எப்போதும் தூய்மையுடன் இருத்தல் வேண்டும்.

5. தன் முனைப்பின் காரணமாகவும், பேராசை காரணமாகவும் எழக்கூடிய வலி மிகுந்த உழைப்பு வேண்டும்.

6. எப்போதும் கலகலப்பாக இருக்க வேண்டும். இறுக்கமற்று இருக்க வேண்டும்.

7. எப்போதும் நல்ல நடத்தையுடன் இருக்க வேண்டும். தாராள மனதுடன் இருப்பது சிறந்தது.

8. எல்லா மோகங்களும் வலுவற்றவை, நிலையற்றவை என்பதை உணர வேண்டும்.

இந்த எட்டு வகை குணங்கள் மூலம் எவற்றை பெறலாம்?

அறம், பொருள், இன்பம், வீடு அகிய நான்கையும் பெற முடியும்.

இவை எதற்கு உதவும்? இறைவனை எளிதில் காண உதவும்.

இந்து சமயத்தின் முக்கிய அம்சம் என்ன?

அது வேதங்கள் உபநிஷத்துக்ள், தத்துவங்கள், ஆகமங்கள், புராணங்கள், தர்மங்கள் போன்றவற்றை ஆதாரமாகக் கொண்ட ஆன்மிக அடிப்படையில் தங்கி இருப்பதுதான்.

இந்து சமயத்தின் தனித்துவமான சிறப்பு என்ன?

எந்த நல்ல கருத்தையும் ஏற்றுக் கொள்வது

மனிதனுக்கும் அவனது கொள்கை, வாழ்க்கை முறை, வழிபாட்டு முறைகளுக்கு முழுமையான சுதந்திரத்தை கொடுத்துள்ளது எது?

இந்து சமயம்

அவ்வாறு சுதந்திரத்தை கொடுத்துள்ளதால் ஏற்பட்டுள்ள நன்மை என்ன?

எத்தனையோ சாஸ்திரங்கள், சம்பிரதாயங்கள் இருந்தாலும் இந்துக்கள் தம் இறைவழிபாட்டை வாழ்வியலோடு ஒருங்கிணைந்த ஒன்றாக எளிமையானதாக வைத்துள்ளனர்.

இதனை சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் எப்படி கூறலாம்?

மக்களின் வாழ்க்கை நடைமுறைகள் ஒவ்வொன்றும் இந்து சமய இறைவழி பாட்டில் எதிரொலித்தப்படி உள்ளது.

ஆதி காலத்தில் காதல் எவ்வாறானதாக கருதப்பட்டது?

புனிதமாக

அந்த புனிதம் இந்து இந்து மதத்தில் எவ்வாறு உணர்த்தப்பட்டது?

தெய்வங்களின் லீலைகள் மூலம்

சத்தியபாமாவை காதலித்து கரம்பிடித்தவர் யார்? கிருஷ்ண பரமாத்மா

தினைப்புனத்தில் காவல் இருந்த வள்ளியை காதலித்து திருமணம் செய்தவர் யார்?

முருகப்பெருமான்

அது போல கணவனுக்கும் மனைவிக்கும் இடையே ஊடல் ஏற்படுவதையும்

இந்து மத இறைவழிபாட்டில் காணலாமா?

ஆம்.

சிவபெருமானுக்கும் பார்வதிக்கும் இடையில் ஏற்பட்ட ஊடல் என்ன?

சிவம் பெரிதா, சக்தி பெரிதா என்ற ஊடல்

இறுதியில் யாருக்கு வெற்றி கிட்டியது? இதில் என்ன உணர்த்தப்படுகிறது?

சக்தி இல்லாமல் சிவன் இல்லை. சிவன் இல்லாமல் சக்தி இல்லை என்ற தத்துவம் உணர்த்தப்படுகிறது.

ஆண், பெண் இருவரில் யார் உயர்வு, யார் தாழ்வு என்ற பேச்சுக்கே இடமில்லை. இருவரும் சமம் என்பது ஆலய வழிபாட்டில் பல்வேறு வகைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்து மத தெய்வக் கோட்பாட்டில் சிவலிங்கம் உணர்த்தும் தத்துவம் என்ன?

ஆணும் பெண்ணும் சேர்ந்ததுதான் வாழ்க்கை. இந்து மத தெய்வக் கோட்பாட்டில் சிவலிங்கத்தின் தத்துவமே இதுதான்.

ஆணும் பெண்ணும் சமம் என்பதை உணர்த்தும் வேறுயொரு வழிபாடு என்ன?

அர்த்தநாரீஸ்வரர் வழிபாடு

விநாயகர் சதுர்த்தி



முழுமுதற் கடவுளாம் விநாயகப் பெருமானின் அவதார தினமாக விநாயக சதுர்த்தி ஆண்டுதோறும் ஆவணி மாத வளர்பிறையில் வரும் சதுர்த்தி அன்று கொண்டாடப்படுகிறது.

விநாயகர் சதுர்த்தி அன்று கோவில்கள், வீடுகளில் உள்ள விநாயகருக்கு வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. அன்றைய தினம் விநாயகருக்கு சர்க்கரைப் பொங்கல், மோதகம், அவல்பொரி, சுண்டல், விளாம்பழம், கொழுக்கட்டை, அப்பம் ஆகியவை படைக்கப்படுகின்றன.

அருகம்புல், வெள்ளெருக்கு, செம்பருத்தி உள்ளிட்டவை விநாயகருக்கு அணிவிக்கப்படுகின்றன.

விநாயகர் பொம்மைகள் செய்து விநாயக சதுர்த்தியிலிருந்து பத்து நாட்கள் பொது இடத்தில் வைத்திருந்து வழிபாடு மேற்கொண்டு நீர்நிலைகளில் கரைக்கப்படுகின்றன. இதனால் இவ்விழாவினை சமுதாயத் திருவிழா என்றே கூறலாம்.

விநாயக சதுர்த்தி அன்று விரத முறை கடைப்பிடிக்கப்படுகிறது. சதுர்த்தி விரதம் இருப்பவர்கள் விநாயக சதுர்த்தியில் இருந்து விரதத்தைத் தொடங்கி பின் வரும் மாதங்களிலும் சதுர்த்தி அன்று விரதத்தைத் தொடர்கின்றனர்.

இவ்விரதத்தை மேற்கொள்வதால் செல்வச் செழிப்பு, காரிய வெற்றி, புத்திக்கூர்மை, நன்மக்கட்பேறு, தொழில்வளம் ஆகியன பெருகும். உள்ள மேன்மை, உடல் ஆரோக்கியம் கிட்டும்.

அறநெறி அறிவு நொடி

திருவிழாவாவது யாது?

ஆலயங்களில் பத்து அல்லது பன்னிரண்டு நாட்கள் மிகச் சிறப்பாகப் பூசைகள் நடத்தி அங்குள்ள மூர்த்திகளின் திருவுருவங்களைப் பலவித வாகனங்களின் மேல் எழுந்தருளச் செய்து நடத்துவிக்கும் விழாவுக்கு திருவிழா என்று பெயர். இதனை மகோத்ஸவம் எனவும் கூறுவர்.

மகோத்ஸவம் என்பதன் பொருள் என்ன?

மஹா - பெரிய

உத் - உயர்வான

ஸவ - படைத்தல் முதலிய காரியங்கள். உயர்ந்த படைத்தல் முதலிய ஐந்தொழில்களைக் குறிக்கும் குறி என்பதாம்.

கொடியேற்று எவ்வாறு நடைபெறுகிறது?

நந்தி உருவத்தை ஒரு துணியில் எழுதி அதற்குப் பூசைகள் செய்து கயிற்றில் கட்டிக் கொடி மரத்தின் உச்சிக்கு ஏற்றுவது கொடியேற்றமாம்.

திருவிழாவில் பவனி வரும் பஞ்சமூர்த்திகள் யாவர்?

விநாயகர், சுப்பிரமணியர், சோமாஸ்கந்தர் (சிவபெருமான்), பார்வதி, சண்டீசர்

சைவ சமயிகள் ஓதவேண்டிய தமிழ் வேதங்கள் எவை?

தேவாரம், திருவாசகம் இரண்டுமாம்.

தேவாரம் செய்தருளினவர் யாவர்?

திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார், திருநாவுக்கரசு நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் என்னும் மூவர்.

திருவாசகம் செய்தருளியவர் யாவர்?

மாணிக்கவாசக சுவாமிகள்.

திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் எங்கே திருவவதாரம் செய்தருளினார்?

சோழ நாட்டில் உள்ள சீர்காழியிலே திருவவதாரம் செய்தருளினார்.திருநாவுக்கரசு நாயனார் எங்கே திருவவதாரம் செய்தருளினார்?

திருமுனைப்பாடி நாட்டில் உள்ள திருவாமூரிலே திருவவதாரம் செய்தருளினார்.

சுந்தரமூர்த்தி நாயனார் எங்கே திருவவதாரம் செய்தருளினார்?

திருமுனைப்பாடி நாட்டில் உள்ள திருநாவலூரிலே திருவவதாரம் செய்தருளினார்.

மாணிக்கவாசக சுவாமிகள் எங்கே திருவவதாரம் செய்தருளினார்?

பாண்டி நாட்டில் உள்ள திருவாதவூரிலே திருவவதாரம் செய்தருளினார்.

திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் முதலிய நால்வரும் எவ்வாறு பெயர் பெறுவார்கள்?

சைவசமயக் குரவர்கள் எனப் பெயர் பெறுவார்கள்.

யாது காரணத்தினால் இவர்கள் சைவ சமயக் குரவர்கள் எனப் பெயர் பெறுவார்கள்?

சைவத்தின் வழி உய்வு பெற வழியினைத் தம் பாடல்கள் மூலம் அருளிப் பல அற்புதங்களைக் கொண்டு சைவ சமயமே மெய்ச் சமயம் என்று நிலைநாட்டியமையால் சைவ சமயக் குரவர்கள் (குருமார்கள்) எனப் பெயர் பெறுவார்கள்.

சங்கடம் அனைத்தையும் நீக்கிச் சௌபாக்கியம் தரவல்ல விரதம் சங்கடஹர சதுர்த்தி



நமக்கு வரும் சங்கடம் அனைத்தையும் நீக்கிச் சௌபாக்கியம் தரவல்லது சங்கடஹர சதுர்த்தி விரதம். ஆவணி மாதம் தேய்பிறைச் சதுர்த்தி தினத்தில் இவ்விரதத்தைத் தொடங்க வேண்டும். இரவு சந்திரன் உதயமாகும் பொழுது விநாயகரை வழிபட்டுச் சந்திரனுக்கு அர்க்கியம் தர வேண்டும் என்கிறது சாத்திரம். அன்று சந்திரன் தெரியாமல் இருந்தால் அடுத்த நாள் பூஜை செய்ய வேண்டும். மாசி மாதம் தேய்பிறைச் சதுர்த்தி மிகமிக உயர்வானது. அதுவும் செவ்வாய்க்கிழமை அந்நாள் அமைவது மிகவும் விசேஷம். அது மஹா சங்கடஹர சதுர்த்தி என்றழைக்கப்படுகிறது. அந்த நாளில் காலையிலிருந்து உபவாசம் இருந்து கணபதியைத் தியானிக்க வேண்டும். இரவு பூஜை முடித்த பின் கணேச நிவேதனத்தை மட்டும் உண்டு தனிமையில் உறங்க வேண்டும்.

சதுர்த்தியின் மகிமை :

சங்கடஹர சதுர்த்தியின் மகிமையை முருகப் பெருமான் முனிவர்க்கு எடுத்துரைக்கிறார் ஸ்காந்தத்தில். எல்லா விரதங்களிலும் இவ்விரதம் மிகச் சிறந்தது சங்கடஹரணம் என்றும் இது அழைக்கப் பெறும். காட்டில் தருமபுத்திரர் இவ்விரதத்தை மேற்கொண்டார். பாண்டவர்க்கு இவ்விரதத்தை உபதேசித்தவர் கண்ணபிரான். முதல் முதலில் தன் தாய் பார்வதி தேவிக்குக் கணபதியே இவ்விரதத்தைச் சொல்லி அருளினார். பார்வதி ! ஆண்டுக்காலம் இவ்விரதத்தை மேற்கொண்டு தன் பதியை அடைந்தாள். இந்திரன், சிவன், இராவணன் போன்றோர் இவ்விரதத்தினால் நற்பயன் அடைந்திருக்கின்றனர். அனுமன் சீதையைக் கண்டது, தமயந்தி நளனை அடைந்தது, அகலிகை கௌதமரை அடைந்தது போன்றவை நிகழ்ந்ததும் இவ்விரதத்தின் மகிமையால் தான்.

அறநெறி அறிவு நொடி

பிணங்களின் மூக்கில் பஞ்சு வைப்பது ஏன்?

இறந்தவர்களின் உடல் என்பது பக்டீரியாக்கள் அதிகம் வசிக்கும் இடமாக மாறிவிடும். எனவே அவர்களின் உடலில் இருந்து நுண்ணுயிர்கள் மூலம் சில வாயுக்கள் வெளிவரும். இதனால் சுற்றுசூழல் பாதிக்கப்படும். இதனை தடுக்கத்தான் நாடிகட்டு என்னும் பெயரில் காதையும், வாயையும் சேர்த்து கட்டுகிறார்கள். மேலும் மூக்கில் பஞ்சு வைக்கப்பட காரணமும் நுண்ணுயிர்கள் உடலில் பரவாமல் இருக்கத்தான்.

விளக்கேற்றுவது ஏன்?

இறந்தவர்கள் வீட்டில் கண்டிப்பாக விளக்கேற்றி வைக்க வேண்டும் என்பது முக்கியமான சடங்காகும். உயிர் சக்தியானது உடலை விட்டு பிரிந்து விட்டால் உடலானது வெற்றுடலாக மாறிவிடும். அவர்கள் உடலில் இருந்து வாயுக்கள் வெளியேற தொடங்கிவிடும். ஆன்மீகரீதியாக அவர்கள் உயிர் அலைகள் அந்த இடத்திலேயே சுற்றிவரும். இந்த அலைகள் மற்றவர்கள் உடலில் நுழைந்தால் அவர்கள் பல துன்பங்களுக்கு ஆளாக நேரிடும். இதனை தடுக்கவே விளக்கேற்றி வைக்கப்படுகிறது. இந்த விளக்கு தெற்கு திசை நோக்கி ஏற்றிவைக்கப்பட வேண்டும், ஏனெனில் இதுதான் மரணத்தின் கடவுளான எமனுக்கான திசையாகும். விளக்கேற்றி வைத்தபின் எமதர்மரிடம் அந்த அலைகள் தன்னை நெருங்காமல் விளக்கின் தீபத்திற்கு செல்லும்படி வேண்டிகொள்ள வேண்டும்.

ஏன் ஒரு திரி மட்டும் உபயோகிக்க வேண்டும் ?

ஒருவர் இறந்த பிறகு பஞ்ச பூதங்களால் நிறைந்த அவரின் உடலானது உயிரற்றதாகிவிடும். அதன்பின் ஒரே ஆன்மா மட்டுமே ஒளிரும். விளக்குகளில் பயன்படுத்தப்படும் ஒற்றை திரியானது ஒளிரும் ஆன்மாவை குறிக்கும்.

ஏன் பகலில் மட்டுமே செய்யப்படுகிறது?

அனைத்து இறுதி சடங்குகளும் பகல் நேரத்தில் மட்டுமே செய்ய வேண்டும், ஏனெனில் உடலை தகனம் செய்வது முதன்மையானதாகும். ஏனெனில் இரவு என்பது எதிர்மறை சக்திகள் அதிகம் உலவும் மேலும் அவற்றின் பலமும் இரவு நேரங்களில் அதிகம் இருக்கும். இறந்த எதிர்மறை சக்திகள் எப்பொழுதும் மற்ற உடல்களில் நுழைய முயலும். எதிர்மறை சக்திகளின் இந்த தாக்குதல்களை தவிர்க்கவே உடல் பகல் பொழுதில் தகனம் செய்யப்படுகிறது. அறிவியல்ரீதியாக கூறும்போது இறந்தவர்களின் உடலில் இருந்து வெளிப்படும் நுண்ணுயிர்களின் அளவு அதிகமாக இருக்கும். இது சுற்றி இருப்பவர்களுக்கு எளிதில் தாக்கக்கூடும். அதனால்தான் உடல் தகனம் பகலில் செய்யப்படுகிறது.

கால்கள் சேர்த்து கட்டப்படுவது ஏன்?

இறந்தவர்களின் உடல் தகனம் செய்யப்படுவதற்கு முன்பு அவர்கள் உடல் தரையில் வைக்கப்பட்டு அந்த உடலின் காலின் பெருவிரல் இரண்டும் சேர்த்து கட்டப்படும். இது உடலின் வலது மற்றும் இடதுபுற ஆற்றல்கள் இரண்டையும் ஒன்று சேர்த்து உடலையே சுற்றி வர காலின் விரல்கள் கட்டப்படுகிறது.

மண்பானை ஏன்?

இறந்த உடலை சுற்றி இருக்கும் ஆற்றலை ஒருமுகப்படுத்த பல பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது, அதில் ஒன்றுதான் மண்பானை. மண்ணால் செய்யப்பட்ட பொருட்கள் இந்த வேலையை சிறப்பாக செய்கிறது. உடலை எதிர்மறை சக்திகளின் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க மண்பானை உதவுகிறது. மண்பானையிலிருந்து வெளிப்படும் ஒலி ஆற்றல்கள் மிகவும் வேகமாக பரவக்கூடியவை என்பதால் ஆகும்.

கோயில்களில் நிவேதனம் செய்த பின்பு அந்தப் பிரசாதத்தை எதிரில் உள்ள பலிபீடத்தில் வைத்துப் பிறகு காக்கைக்குப் போடுகிறார்கள். இது ஏன்?

பூஜையை வீட்டில் செய்தாலும் கோயிலில் செய்தாலும் பூஜையின் முடிவில் தாழ்ந்த உயிர்களுக்குச் சிறிதாவது உணவளிக்க வேண்டும். அதுதான் பலி. அதற்குத்தான் பலிபீடம். கோயிலுக்குச் சென்றால், மூன்று தடவை பிரதட்சணம் வரவேண்டும்' என்று சிலர் சொல்கிறார்கள். அவ்விதம் சொல்வதற்கு என்ன காரணம்?

கோயிலுக்குச் செல்லும் நாம் சொல், செயல், சிந்தனை மூன்றினாலும் இறைவனிடம் நம்மை ஒப்படைக்க வேண்டும். இந்தக் கருத்தில் அமைந்த ஒரு வழக்கத்தையொட்டி, நாம் ஆலய வழிபாட்டில் மூன்று தடவைகள் பிரதட்சணம் செய்கிறோம்.

காலில் விழுந்து வணங்கும் முறை தோன்றியது எப்போது?

மன்னர் காலத்திற்கு முன்பாகவே காலில் விழுந்து வணங்கும் முறை நடைமுறையில் இருந்ததாக பழங்கால நூல்கள் கூறுகின்றன. பெரியவர்களின் ஆசியை பெறுவதற்கும், இறைவன் அருளைப் பெறுவதற்கும் காலில் விழுந்து வணங்கும் முறை தோன்றியதாகவும் கூறப்பட்டுள்ளது.ஒரு சில மனிதர்களை கடவுளுக்கு நிகராக வழிபடுவது ஏற்றுக்கொள்ளக் கூடியதா?

ஒவ்வொரு மதத்திலும் குறிப்பிட்ட சில மகான்கள், சித்தர்கள் கடவுளாக மதிக்கப்பட்டுள்ளனர். மனிதப்பிறவி எடுத்து தங்களின் ஒழுக்கம், ஜீவகாருண்யம், இறைநெறி ஆகியவற்றால் தெய்வநிலையை அடைந்தவர்கள் பல‌‌ர் உ‌ண்டு. ராமகிருஷ்ணர், விவேகானந்தர், காஞ்சி மகா பெரியவர், அரவிந்தர், ஆதிசங்கரர் உள்ளிட்டோர் மனிதப்பிறவியில் இருந்து தெய்வநிலையை அடைந்தவர்கள். அந்தவகையில் அவர்கள் வணங்கத்தக்கவர்கள்.

நீர் நிலைகளை அசுத்தம் செய்தால் சாபம் கிடைக்கும்



தந்தை சொல் கேட்காமல் தண்ணீரை அசுத்தம் செய்த முனிவரின் குழந்தைகள் ஆறு பேர் மீன்களாக சாபம் பெற்ற கதையை இந்த வைகாசி விசாகம் நாளில் தெரிந்து கொள்வது அவசியம். தூய்மையாக ஓடும் ஆறுகளையும், சுத்தமான குளங்களையும் சீரழித்து தண்ணீர் பஞ்சத்தில் தடுமாறுகிறோம். தண்ணீரை சுத்தமாக பாதுகாத்தால் அந்த முருகப்பெருமானின் அருள் கிடைக்கும். வைகாசி விசாகம் இன்றைய தினம் முருகப்பெருமான் ஆலயங்களில் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பால்குடங்கள் எடுத்து வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்கின்றனர். இந்த நாளில் திருச்செந்தூரில் முக்கிய நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. தன்னை நோக்கி தவமிருந்த முனிவரின் மைந்தர்கள் ஆறு பேருக்கு முருகப்பெருமான் அருள் புரிந்த நாள் இதுவாகும்.

பத்து நாட்கள் நடைபெறும் வைகாசி விசாக திருநாளின் முக்கிய அம்சமாக இன்றைக்கு சாப விமோசனம் தரும் நிகழ்ச்சி திருச்செந்தூரில் நடைபெறுகிறது. வைகாசி விசாகம் புராண கதை பராசர முனிவருக்கு ஆறு குழந்தைகள். ஆறு பேருமே சுட்டித்தனத்தில் கெட்டிக்காரர்கள். ஒருநாள் குளத்தில் குளிக்கும்போது நீரினை அசுத்தம் செய்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். இதனால் அந்த நீரில் வாழ்ந்து வந்த மீன்கள், தவளைகள் வேதனைப்பட்டன. அதனைக் கண்ட பராசர முனிவர், நீரை இப்படி அசுத்தப்படுத்தக் கூடாது, சிவபெருமானாக நினைத்து நீரை வழிபட வேண்டும். நீங்கள் நீராடியது போதும் வெளியே வாருங்கள்'' என்று கட்டளையிட்டார். அப்பா சொல்லை எந்த பிள்ளைதான் கேட்டிருக்கிறது. ஆறு பிள்ளைகளும் முனிவரின் சொல்லைக் கேட்காமல் நீரில் கும்மாளம் போட்டார்கள் இதனால் பல மீன்கள் இறந்தன. அதனைப் பார்த்த முனிவர், கோபம் கொண்டு குழந்தைகள் ஆறு பேரையும் 'மீன்களாக மாறக்கடவது' என்று சாபமிட்டார். உடனே ஆறு பிள்ளைகளும் ஆறு மீன்களாக மாறினர். தவறுக்கு வருந்திய அவர்கள் சாப விமோசனம் கிடைக்காதா என்று கேட்டதற்கு பார்வதி அருளால் விமோசனம் கிடைக்கும் என்றார். மீன்களாக மாறிய ஆறு பேறும் அந்த நீரில் நெடுங்காலம் வாழ்ந்து வந்தனர். ஒருசமயம் சிவலோகத்தில் பார்வதி தேவி, முருகப்பெருமானுக்கு ஞானப்பாலை ஒரு தங்கக் கிண்ணத்தில் வைத்து ஊட்டும்போது அதிலிருந்து ஒரு சொட்டு பூலோகத்தில் பராசர முனிவரின் குழந்தைகள் மீன்களாக வாழும் குளத்தில் விழுந்தது. அதனை அந்த மீன்கள் பருகியதால் ஆறு பேரும் முனிவர்களாக மாறினார்கள். ஆறு முனிவர்களும் சிவபெருமானுக்கு நன்றி செலுத்தும் விதமாக மீண்டும் வழிபட்டபோது "நீங்கள் ஆறு பேரும் திருச்செந்தூர் சென்று தவம் செய்யுங்கள், அங்கு முருகக் கடவுள் அருள்புரிவார்'' என்று அசரீரி ஒலித்தது. அதன்படி அனைவரும் திருச்செந்தூர் சென்று தவம் மேற்கொண்டனர். வைகாசி மாதம் விசாகம் நட்சத்திரத்துடன் கூடிய நிறைந்த பௌர்ணமி நாளில் முருகப்பெருமான் அருள் கிடைத்தது. சிவனின் அருளால் ஆறு முனிவர்கள் சாபம் நீங்க, முருகப்பெருமான் அருள்புரிந்த நாள் வைகாசி விசாகம் ஆகும். அன்றைய தினம் முன்வினைப்பயனால் துன்பப்படுபவர்கள் முருகப்பெருமானை வழிபட, துன்பம் நீங்கி இன்பம் பெறுவர் என்று புராணங்கள் கூறுகின்றன. பராசரரின் மகன்களுக்கு திருச்செந்தூரில் முருகப்பெருமான் காட்சிகொடுத்து அருளியதால் இந்நிகழ்வு, வைகாசி விசாகத்தின்போது 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது

அறநெறி அறிவு நொடி

வீட்டில் கணபதி ஹோமத்தை நடத்துவதாக இருந்தால் எப்போது செய்வது நல்லது ?

பிரம்ம முகூர்த்தம் என்னும் அதிகாலை 4.30 முதல் 6 மணிக்குள் நடத்துவது நல்லது. விநாயகருக்குரிய சதுர்த்தி திதி, அஸ்தம் நட்சத்திர நாளில் நடத்துவது இன்னும் சிறப்பு.

அமாவாசை, திதி நாளில் வாசலில் கோலம் போடக் கூடாது என்பதற்கு காரணம் என்ன?

அமாவாசை, சிராத்தம் போன்ற நாட்கள் ""பிதுர் தினம்'' என்றழைக்கப்படுகின்றன. அன்று பிதுர் காரியத்தை முடித்து விட்டுத்தான் தெய்வ வழிபாடே செய்யப்பட வேண்டும். மங்களகரமான விஷயங்களில் பிதுர்களுக்கு விருப்பம் கிடையாது. எனவே, முன்னோர் காரியங்களில் கோலம் போடக்கூடாது.

கிரகப்பிரவேசத்தின் போது முதலில் பசுமாட்டை வீட்டிற்கு அழைத்து வருவது ஏன்?

பசு லட்சுமியின் அம்சம். தர்ம தேவதையின் அடையாளம். பால் தருவதால் "கோமாதா' என்று தாயாகப் போற்றுவர். வீட்டில் லட்சுமி கடாட்சம் நிலைக்கவும், தர்மம் தழைக்கவும் பசுவை வீட்டுக்குள் அழைத்துச் செல்கிறார்கள்.

மதுரையில் உள்ள சிவாலயத்தை மீனாட்சி அம்மன் கோயில் என்று குறிப்பிடுகிறோம். சுவாமி பெயரால் வழங்கப்படாதது ஏன்?

திருமணம் செய்து கொண்டு கணவன் வீட்டிற்குச் சென்றிருக்கும் நம் பெண்ணைப் பார்க்கச் செல்கிறோம். அப்பொழுது ""என் பெண் வீட்டிற்குச் செல்கிறேன்,'' என்று தான் கூறுவோமே தவிர, ""மாப்பிள்ளை வீட்டிற்கு செல்கிறேன்,'' என்று கூறுவதில்லையே! மதுரையை ஆண்ட மலையத்வஜ பாண்டியனுக்கு மகளாக அவதரித்து மதுரையின் அரசியாக மகுடம் சூடி, திக்விஜயமாக கைலாயத்துக்கே சென்றவள் மீனாட்சி. அந்த வீரத்திருமகளை திருமணம் செய்தவர் சிவன். எனவே, அம்பாளுக்கு இங்கே முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது.

குலதெய்வம் எது என்று தெரியவில்லை. எந்தக் கடவுளை குலதெய்வமாக ஏற்கலாம்?

ஒவ்வொரு குடும்பத்திற்கும் பரம்பரை பரம்பரையாக குல தெய்வ வழிபாடு என்று ஒரு தெய்வத்தை வழக்கில் கொண்டிருப்பார்கள். அது மிக அவசியமானது. அலட்சியப்படுத்தக் கூடாத விஷயம். இந்த வழிபாட்டில், அவரவர்கள் சில விதி முறைகளைப் பின்பற்றி வந்துள்ளனர். நம் சந்ததியைக் காப்பாற்றுவது குல தெய்வ வழிபாடு தான். குலதெய்வம் எது என்று தெரியவில்லையென்றால், உங்களுக்கு விருப்பமான தெய்வங்களின் பெயர்களை விநாயகர் முதல் அனுமன் வரை சீட்டுகளில் எழுதுங்கள். அருகில் உள்ள கோயிலில் சுவாமிக்கு அர்ச்சனை செய்த பிறகு எழுதி வைத்திருக்கும் சீட்டுகளை சுவாமி பாதத்தில் வைத்து, ஏதாவது ஒன்றினை எடுக்கச் சொல்லி, அதில் உள்ள தெய்வத்தை குலதெய்வமாக ஏற்று வழிபாட்டைத் துவக்குங்கள்.

"ஷர்மிளாவின் இதய ராகத்தின்" இரண்டாவது நாயகன் மோகன்குமார்



1958 இல் பிறந்த கிருஷ்னண் மோகன்குமார் கலை மீது கொண்ட ஆர்வத்தினால் சிறு வயது முதல் மேடை நாடங்களில் ஆர்வம் செலுத்தினார். 40 வருடங்கள் கலை உலகிற்காக தனது வாழ்வினை அர்ப்பணித்த அவர்

வானொலி, தொலைக்காட்சி, மேடை நாடகங்கள் என பல துறைகளிலும் சிறந்த நடிகராக விளங்கினார். இலங்கையின் மூத்த கலைஞர் கே.மோகன்குமார் தனது 59 வது வயதில் ஜாஎலயில் காலமானார்.

பல்வேறு நாடகங்களில் நடித்துள்ள மோகன் குமார் சக்தி சின்னத்திரையின் உதவி இயக்குனராக கடமையாற்றியுள்ளார். எழுத்தாளர், தயாரிப்பாளர் இயக்குனர் என பல்வேறு பரிணாமங்கள் ஊடாக மோகன்குமார் கலைத்துறைக்கு பெரும் சேவையாற்றியுள்ளார். தேசிய விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் அவர் வெற்றிகொண்டிருந்தார்.

கடந்த 40 ஆண்டுகளாக கலைத்துறையில் கொடிகட்டிப் பறந்த கலைஞர் கே. மோகன்குமார் இவர் சர்மிளாவின் இதய ராகம் என்ற திரைப்படத்திலே நடித்த ஒரு கலைஞராவார். உயிரே , 13 பீ , முட்டை, ஒத்தல்லோ, ஆஸ்திகமா நாஸ்திகமா, சிவாஜி கண்ட இந்து ராஜ்சியம், மகரந்தம் ஆகிய நாடகங்களை நடித்துள்ளார். மகரந்த ஒரு வீடியோ எல்பமாம். சர்மிளாவின் இதய ராகம் படத்தில் இரண்டாவது கதாநாயகனாக நடித்தவர் இவர். 42 சிங்களப் படங்களுக்கு நடனக்காட்சிகளை திரையிடுவதற்கு பயிற்சி அளித்தவர்.

அந்தனி ஜீவாவின் அக்னி பூக்கள் நாடகத்தின் மூலம் நடிகனாக அறிமுகமாகிய இவர் இறுதியாக்கம், நெறியாள்கை போன்றவற்றிலும் பணியாற்றியவர். சிறிக்கியும் பொறுக்கியும் என்ற நாடகத்தில் உலகப் புகழ்பெற்ற நாடகமேதை சேக்கிஸ்பியரின் ஒத்தல்லோ நாடகத்தின் ஒத்தல்லோவின் தளபதி கேசியோவாக நடித்தவர். பேரறிஞர் அண்ணாவின் சிவாஜி கண்ட இந்த ராஜ்சியத்தின் சிவாஜியின் தளபதி சந்திரமோகரான நடித்தவர்.

கிருஷ்ண கலாலாயம் என்ற நாடகமன்றத்தை உருவாக்கி பல நாடகங்களை மேடையேற்றியவர். கலைஞர்களை பாராட்டி கௌரவித்தவர். இவ்வாறு 40 ஆண்டு காலமாக கலைத்துறையில் சேவையாற்றிய கலைஞர் இவர். முரண்பாடுகளும் முற்றுப்புள்ளிகளும் இவர் நடித்த இன்னுமொரு நாடகமாகும். சிதைந்த மலர் இவர் நடித்த மற்றுமொரு நாடகமாகும். சலங்கை நாதம், மௌத்திரை ஆகியவை இவர் நடித்த மற்றும் பல நாடகங்களாகும். பாவக்கரை, மௌனத்திரை, அவள் மீண்டும் வருகிறாள் போன்ற நாடகங்கள் நடித்த இவர் இலங்கையில் கலைஞர்கள் இறந்தபோதும் அவர்களது நனவாக தொடர்ந்து நினைவஞ்சலி கூட்டங்கள் நடத்தி வந்த ஒரு கலைஞர் இவராவார். இப்படி எல்லாக் கலைஞர்களுக்கும் அனுதாபக் கூட்டம் நடத்துகின்றீர்களே ஒரு நாளைக்கு நீங்கள் இறந்தால் உங்களுக்கு யார் அனுதாபம் கூட்டம் நடத்துவார் என்று ஒருவர் கேட்டபோது, எனக்காக அனுதாபம் கூட்டம் நடத்த இதோ இந்த கலைஞர் சரவணா இருக்கிறார் என்று அவரை காட்டிக்கூறியவர். அந்த கூற்றுக்கமைய இந்த நினைவஞ்சலி கூட்டம் நடத்தப்படும். உரிமைக்குரல், புயலில் ஒரு மலர், பைத்தியங்கள் பலவிதம், மனிதன் என்னும் தீர்வு என்று இவர் நடித்த நாடங்களின் பெயர்களை விரித்துக்கொண்டு போகலாம்.

கலைஞர் கே. மோகன் குமார் நினைவாக தமிழர் நற்பணி மன்றம் எதிர்வரும் 2019.09.08ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணிக்கு கொழும்பு புறக்கோட்டை பழைய நகர மண்டபத்தில் கலைஞனுக்கோர் கண்ணீர் துளி என்ற இந்த நிகழ்வை நடாத்தவுள்ளது. இதில் இவருடன் நடித்தவர்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர். தமிழர் நற்பணி மன்றத்தின் சார்பில் கலைஞர்களான கே. ஈஸ்வரலிங்கம், எஸ். சரவணா ஆகியோர் இதனை ஏற்பாடு செய்துள்ளனர். 18 வருடங்களுக்கு மேலாக மார்கழி மாதமானதும் மாலை அணிந்து ஐயப்ப விரதமிருந்து ஒவ்வொரு வருடமும் சபரி மலைசென்று தரிசனம் செய்து வந்த இவர். சபரிமலை சாஸ்தா பீடத்தின் செயலாளராகவும் நீண்டகாலம் சேவையாற்றிவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆன்மிகம் கலைத்துறை என இவரது சேவைகள் நீண்டுகொண்டே சென்றது.

அறநெறி அறிவு நொடி

கோயில்களில் பிரசாதமாகத் தரப்படும் எலுமிச்சம் பழத்தை ஊறுகாய், ஜூஸ் ஆகியவற்றுக்காகப் பயன்படுத்துகிறார்களே... இது சரியா

தங்களது விருப்பப்படி தாராளமாகப் பயன்படுத்தலாம். பிரசாதப் பொருட்களை விரயமாக்காமல், பயன்படுத்த வேண்டும். அதுவே முக்கியம்!

பித்ரு தினமான அமாவாசையன்று கடவுள் ஸ்லோகங்களைச் சொல்லலாமா ?

அமாவாசை அன்று முன்னோர் ஆராதனை முடிந்த பிறகு ஸ்லோகம் சொல்லி வழிபடலாம். தேவர்கள் மற்றும் பித்ருக்கள் ஆகியோருக்கான வழிபாடுகளை ஒரே நேரத்தில் செய்ய வேண்டி வந்தால், முதலில் முன்னோர்களையே வழிபட வேண்டும். பிறகு தேவர்களை வணங்கலாம் என்கிறது தர்ம சாஸ்திரம்.

அறநெறி அறிவு நொடி

** பஞ்சாங்கத்தில் இஷ்டி என்று குறிப்பிடுகிறார்களே அது என்ன?

"இஷ்டி' என்றால் பூஜை. அன்று சஷ்டி, சந்திர தரிசனம் போன்றவை கூடியிருக்கும். அதற்கான பூஜையைச் செய்யலாம் என்பதற்கு அடையாளமாக அப்படி போடுவார்கள்.

* திருநீறு பூசும்போது எத்திசை நோக்கி இருந்தால் நல்லது?

காலையில் கிழக்கு நோக்கியும், மதியம் வடக்கு நோக்கியும், மாலை மேற்கு நோக்கியும் பூசிக் கொள்ள வேண்டும். இது அனுஷ்டானத்திற்கும், வீட்டில் இட்டுக் கொள்வதற்கும் பொதுவானது. கோயிலில் பிரசாதமாகப் பெறும் பொழுது சுவாமியைப் பார்த்துப் பூசிக் கொள்ள வேண்டும்.

* தை அமாவாசை, ஆடி அமாவாசை, மஹாளய அமாவாசை இதில் முன்னோர் வழிபாட்டிற்கு மிகச்சிறந்த நாள் எது?

எல்லா அமாவாசைகளுமே முன்னோர் வழிபாட்டிற்கு மிகச்சிறந்தவை தான். அன்று அவசியம் வழிபாடு செய்து தான் ஆகவேண்டும். ஒன்று சிறந்தது என்றால் கண்டிப்பாக மற்றதை விட்டு விட வேண்டிய சூழல் வரும். உத்தராயணத்தில் முதலில் வருவதால் தை அமாவாசையும், தக்ஷிணாயனத்தில் முதலில் வருவதால் ஆடி அமாவாசை என்பது அந்த அமாவாசைக்கு முன்னதான பிரதமையிலிருந்து விரதம் இருந்து, தர்ப்பணம் செய்ய வேண்டும். இது மற்ற திதிகளில் விடுபடும் பிதுர்க்களையும் திருப்திபடுத்த செய்யப்படுகிறது. எனவே அமாவாசை தர்ப்பணத்தைப் பொறுத்த வரை ஒன்று சிறந்தது. மற்றது தாழ்ந்தது என்ற பேச்சுக்கே இடமில்லை.

* பூஜை அறையில் கடவுள் திருஉருவப்படங்களை எத்திசை நோக்கி வைப்பது சிறந்தது?

கிழக்கு நோக்கி வைப்பது சிறந்தது. மேற்கு நோக்கியும் வைக்கலாம்.

* இறந்த பெற்றோருக்கு பெண் குழந்தைகள் மட்டும் இருந்தால் அவர்கள் கொடுக்கும் சிரார்த்தம் ஏற்புடையதுதானா? விளக்கம் தேவை.

பெண்கள் நேரடியாக இதை செய்யக்கூடாது. யாராவது ஒரு ஆணிடம் தர்ப்பையைக் கொடுத்து அவர் மூலமாக செய்ய வைக்கலாம். திருமணமான பெண்கள் கணவன் வீட்டைச் சார்ந்து விடுவதால், பெற்றோருக்காக தர்ப்பை கொடுக்கக் கூட அதிகாரம் கிடையாது. பெற்றோரின் பங்காளிகளைச் செய்யச் சொல்லி பொருளுதவி மட்டும் செய்யலாம்.

* பிரம்ம முகூர்த்தத்தின் மகத்துவத்தைக் கூறுங்கள்.

காலை 4.30 மணி முதல் 6 மணிக்குள்ளான வேளைக்கு பிரம்ம முகூர்த்தம் என்று பெயர். இரவில் உறங்கும் உயிர்கள் மீண்டும் எழுந்திருப்பதே சற்றேறக்குறைய மறுபிறவிதானே! எனவே, ஒவ்வொரு நாளும் காலையில் மறு பிறவி பெறுவதை "சிருஷ்டி' (படைத்தல்)என்று சொல்லலாம். இத்தொழிலைச் செய்பவர் பிரம்மா. எனவே இவரது பெயரால், விடியற்காலைப் பொழுதை "பிரம்ம முகூர்த்தம்' என்று வைத்துள்ளார்கள். பிரம்ம முகூர்த்த வேளைக்கு திதி, வார, நட்சத்திர, யோக தோஷங்கள் கிடையாது. இது எப்போதுமே சுபவேளை தான். இந்நேரத்தில் எழுந்து குளித்து இறைவழிபாட்டைச் செய்து நமது வேலைகளைச் செய்ய துவங்கினால் அன்று முழுவதும் வெற்றிதான்.

* ஹோமம் நடத்தும் போது குண்டத்தில் போட்ட நாணயங்களை வீட்டில் வைத்திருந்தால் நல்லது என்று சொல்கிறார்களே? விளக்கம் அளிக்கவும்.

ஹோமம் முடிந்து அதில் போட்ட எல்லா திரவியங்களும் சாம்பலாகும் வரை குண்டத்திலிருந்து எதையும் எடுக்கக்கூடாது. சில இடங்களில் ஹோமம் முடிந்து, யாகசாலைகளில் இருந்து கடம் புறப்பட்டவுடனேயே மக்கள் உள்ளே புகுந்து குண்டங்களை அணைத்தும், கலைத்தும் நாணயங்களையும் சாம்பல் பிரசாதமும் எடுக்கிறார்கள். இது மிகவும் பாவம். எல்லாம் சாம்பல் ஆன பிறகு நாணயங்களையும், சாம்பல் விபூதி பிரசாதத்தையும் பெற்றுக் கொள்ளலாம்.

மலர்களை துண்டு துண்டாக்கி பூஜைக்கு பயண்படுத்தலாமா?



அசுத்தமான கைகளினால் தொட்டு பறிக்கப்பட்டது, கொண்டுவரப்பட்டது, தானாக விழுந்தது, காய்ந்தது, மற்றவர்களினால் முகர்ந்து பார்க்கப்பட்டது, அசுத்தமான இடங்களில் மலர்ந்தது, அசுத்தமான கூடையில் வைத்து கொண்டுவரப்பட்டது போன்ற புஷ்பங்களை பகவானுக்கு அர்ப்பணிக்கக்கூடாது. பறித்த பிறகு மலர்ந்த பூக்கள், வாடிப்போன பூக்கள் பழைய பூக்கள், ஆமணக்கு இலையில் கட்டிவைத்த பூக்கள், உடல் உறுப்புகளில் பட்ட பூக்கள், கட்டிய ஆடையிலும், கையிலும் வைத்த பூக்கள், பூச்சிகள் கடித்த பூக்கள், சிலந்தி இழை சுற்றிய பூக்கள், பறவைகள் எச்சமிட்ட பூக்கள், முடிக்கற்றை பட்ட பூக்கள், இரவு நேரத்தில் பறித்த பூக்கள், தண்ணீரில் முழுகிய பூக்கள், ஆகியவை பூஜைக்கு ஆகாத பூக்கள். தற்போது பலர் கைகளில் மலர்களை எடுத்து அவற்றை துண்டு துண்டாக்கி கைகளினால் கிள்ளி பூஜை செய்கின்றனர். இது மிகவும் தவறானது. பூக்களை முழுதாகப் பயன்படுத்த வேண்டுமே தவிர, கிள்ளி பொடிப்பொடியாக்கி வழிபாடு செய்தல் கூடாது. வில்வ இலை, துளசி இலை ஆகியவற்றை தளமாகச் சாத்த வேண்டும்.

தியானம் செய்வது எப்படி?



***

மனக்கட்டுப்பாட்டையும் மன ஒருமைப்பாட்டையும் மன அமைதியையும் பெற தியானமும் ஜபமும் பெற உதவுகின்றன. ஆழ்ந்த தியானம் செய்யும் போது அதன் பலனை நாம் உணர முடியும். சரி தியானம் செய்வது எப்படி என்பது பலரின் கேள்வி? தியானம் செய்ய எளிய வழிகளை தற்போது பார்க்கலாம். முதலில் உங்கள் இஷ்ட தெய்வத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். அது உங்கள் குலதெய்வமாகவோ, உங்களுக்கு பிடித்த வேறு தெய்வமாகவோ இருக்கலாம். தியானத்திற்காக ஒரு நாளில் இரண்டு நேரங்களை தேர்வு செய்து கொள்ள வேண்டும். எந்த நேரத்தை தேர்தெடுக்கின்றோமோ அதே நேரத்தில் தொடர்ந்து தியானம் செய்ய அமர வேண்டும். வீட்டின் ஒரு இடத்தை தியானத்திற்காக தேர்ந்தெடுங்கள். அது பூஜை அறையாகவோ வேறு அமைதியான இடமாகவோ இருக்கலாம். பூஜை அறை இல்லையென்றால், இஷ்ட தெய்வத்தை வைப்பதற்கு ஒரு சிறு இடத்தை ஏற்படுத்திக் கொள்ளவும். அங்கு ஆசனத்தை விரித்து அதில் அமர்ந்து தலை, கழுத்து, மற்றும் முதுகெலும்பு நேராக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். கைகள் மடி மீது இருக்கட்டும். கண்களை மூடி சூரியன், நிலவு, நட்சத்திரங்கள், மேகங்கள் எதுவும் இல்லாத பரந்த எல்லையற்ற ஆகாயம் மங்கிய ஒளியில் இருப்பதாக சில நிமிடங்கள் கற்பனை செய்யவும். இப்போது உங்கள் உணர்வு மையத்தை இதயத்திற்கு எடுத்துச் செல்லவும். பன்னிரண்டு இதழ்கள் கொண்ட சிவப்புத் தாமரையை அங்கு கற்பனை செய்யவும். உங்கள் இஷ்ட தெய்வம் அங்கு அமர்ந்திருப்பதாக எண்ணவும். இப்போது இஷ்ட தெய்வத்திடம் மனமுருகிப் பிரார்த்தனை செய்யவும். நல்ல உடல், அமைதியான மனம், நம்பிக்கை, பக்தி, விவேகம், பற்றின்மை ஆகியவற்றுக்காக பிரார்த்திக்கவும். ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் இஷ்ட தெய்வத்தை தியானிக்கவும். மனம் அங்கும் இங்கும் ஓடினாலும் அதை இழுத்து வந்து இஷ்ட தெய்வத்திடம் நிறுத்தவும். பின்பு இஷ்ட தெய்வத்தின் நாமத்தை குறைந்த பட்சம் 108 முறையாவது ஜபம் செய்ய வேண்டும். அதிகமாக செய்ய விரும்பினால் அது 108 ன் மடங்காக இருக்கட்டும். இப்போது மானசீக பூஜை செய்யலாம். சந்தனம், பூ, ஊதுபத்தி, தீபம், நைவேத்தியம் ஆகிய ஐந்து பூஜை பொருட்களால் செய்யப்படுகின்ற பூஜையாக அது இருக்கட்டும்.

கே. ஈஸ்வரலிங்கத்துக்கு "கலைச்சுடர்" எனும் விருது

தமிழ் இலங்கையர் பாரம்பரிய மற்றும் நவீன கலைஞர்களுக்கான அரச விருது விழா-2019 கொழும்பு தாமரைத் தடாகத்தில் 2ந் திகதி இடம்பெற்றது. இதில் கொழும்பைச் சேர்ந்த கே. ஈஸ்வரலிங்கம் "கலைச்சுடர்" எனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். இதனை தேசிய ஒருமைப்பாடு அரச கரும மொழிகள் சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன் வழங்கினார்.

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812