செவ்வாய், 2 ஜூன், 2020

வாழ்த்துகளா ? வாழ்த்துக்களா?

தினமும் யாரையாவது வாழ்த்துகிறோம். 'பிறந்தநாள் வாழ்த்துகள்', 'தீபாவளி வாழ்த்துகள்', 'பொங்கல் வாழ்த்துகள்'... இப்படி.
அது வாழ்த்துகளா அல்லது வாழ்த்துக்களா?
இங்கே, 'வாழ்த்து' என்பதுதான் வேர்ச்சொல், அது ஒரு கட்டளைச்சொல்/ஏவல் சொல். உதாரணமாக, 'நீ போய் அவனை வாழ்த்து!'
அதை, பெயர்ச்சொல்லாகவும் பயன்படுத்தலாம். 'நான் அவனுக்கு வாழ்த்து சொன்னேன்.'
இந்த 'வாழ்த்து' என்ற சொல்லை, எப்படிப் பன்மையில் எழுதுவது?
தமிழில் 'உ' என்ற எழுத்தில் முடியும் ஒருமைச் சொற்களோடு, 'கள்' என்ற பன்மை விகுதி சேரும்போது, என்ன ஆகும் என்பதற்குப் பல விதிமுறைகள் உள்ளன. அவை அந்தச் சொல்லில் உள்ள எழுத்துகளின் எண்ணிக்கையைப் பொறுத்து மாறும்.
முதலில், அந்தச் சொல்லில் ஒரே ஓர் எழுத்துதான் இருக்கிறது என்றால், அது உகரத்தில் முடியாது. காரணம், தமிழில் குறில் எழுத்துகள் தனிச்சொற்களாக ஆகாது. ஆனால், 'ஊ' என்று முடியும் ஒற்றை எழுத்துச் சொற்கள் உண்டு. அவை 'கள்' உடன் சேரும்போது நடுவில் 'க்' தோன்றும்.
உதாரணமாக: பூ + கள் => பூ + க் + கள் => பூக்கள்
அடுத்து, அந்தச் சொல்லில் இரண்டு எழுத்துகள் இருக்கின்றன என்றால், முதல் எழுத்தைப் பார்க்க வேண்டும். அது குறிலாக இருந்தால், 'க்' தோன்றும், நெடிலாக இருந்தால் தோன்றாது.
உதாரணமாக: ஆடு + கள் => 'ஆ' என்பது நெடில், ஆகவே, 'க்' தோன்றாது => ஆடுகள்
பசு + கள் => 'ப' என்பது குறில், ஆகவே, 'க்' தோன்றும் => பசு + க் + கள் => பசுக்கள்
நிறைவாக, அந்தச் சொல்லில் மூன்று எழுத்துகள் அல்லது அதற்குமேல் இருந்தால், கடைசிக்கு முந்தைய எழுத்தைப் பார்க்க வேண்டும், அது உயிர்மெய்யெழுத்தாக இருந்தால், 'க்' தோன்றாது.
உதாரணமாக: சிறகு + கள் => 'ற' என்பது உயிர்மெய்யெழுத்து, ஆகவே, 'க்' தோன்றாது => சிறகுகள்
ஒருவேளை கடைசிக்கு முந்தைய எழுத்து மெய்யெழுத்தாக இருந்தால், 'க்' தோன்றலாம், தோன்றாமலும் இருக்கலாம்.
உதாரணமாக: முத்து + கள் => 'த்' என்பது மெய்யெழுத்து, ஆகவே, 'க்' இல்லாமல் 'முத்துகள்' என்றும் எழுதலாம், 'க்' சேர்த்து 'முத்துக்கள்' என்றும் எழுதலாம்.
அதேபோல்,
வாழ்த்து + கள் => 'த்' என்பது மெய்யெழுத்து, ஆகவே, 'க்' இல்லாமல் வாழ்த்துகள் என்றும் எழுதலாம், 'க்' சேர்த்து வாழ்த்துக்கள் என்றும் எழுதலாம். அறிஞர்கள் இரண்டையும் பயன்படுத்தியுள்ளார்கள்.
அதேசமயம், பழக்கத்தில் நாம் 'க்' சேர்க்கும் வழக்கம் அதிகமில்லை. நண்டுகள், திண்டுகள், செருப்புகள் என்று இதற்கு உதாரணங்களை அடுக்கலாம். இவற்றை நாம் நண்டுக்கள், திண்டுக்கள், செருப்புக்கள் என்று எழுதுவதில்லையே.
அதன்படி பார்க்கையில், 'வாழ்த்துகள்' என்பதே சிறந்த பயன்பாடாகத் தோன்றுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812