வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

கொம்பனித்தெரு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயம் இலங்கைத் திருநாட்டின் கொழும்புத் திருநகரில் கொம்பனித்தெரு எனும் பட்டினத்தில் அமைந்துள்ள ஆலயம், கொழும்பு கொம்பனித்தெரு அருள்மிகு ஸ்ரீசிவசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானம். இந்த ஆலயம் 180 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்டது. 1832 ஆம் ஆண்டளவில் கொழும்பு புறக்கோட்டை டாம் வீதியில் ஒரு சிறிய கட்டிடமொன்றில் இவ்வாலயம் ஸ்தாபிக்கப்பட்டது. பெரியதம்பி என்ற சைவப் பெரியாருக்குச் சொந்தமான காணியில் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத முருகப் பெருமான் இங்கு கோயில் கொண்டு அருள்பாலிக்கத் தொடங்கினார். அன்று கொழும்பு டாம் வீதியில் முதன் முதலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத முருகப் பெருமானின் திருவுருவச் சிலை 180 ஆண்டுகள் கடந்த பின் இன்றும் கொழும்பு கொம்பனித்தெருவில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இன்றும் பக்தர்களுக்கு அந்த ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத முருகப் பெருமானை வழிபட்டு அருள் பெறக் கூடியதாக இருக்கிறது. இது பக்தர்களுக்கு கிடைத்த அரிய அரும்பெரும் பாக்கியமாகும். அன்று இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்தியாவிலிருந்தும் கொழும்புக்கு வருகை தரும் பக்தர்கள், இந்த ஆலயத்திற்கு வந்து இந்த முருகப் பெருமானை வழிபட்டு அவன் அருளை பெற்றுச் செல்லத் தவறுவதில்லை. இதற்கேற்ற விதத்தில் இந்த ஆலயம் அமையப்பெற்றதே இதற்குரிய மூலகாரணமாகும். அக்காலத்தில் நடைபெற்ற யுத்தமொன்றில் கலந்துகொள்ளச் சென்ற இந்திய போர் வீரர்களும் தளபதி முதலானோரும் இவ்வாலயத்திற்கு வந்து பூசை வழிபாடு செய்து தாயகம் திரும்பியதாக கூறப்படுகிறது. டாம் வீதியிலிருந்த ஆலயத்தை நாடி வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தமையாலும் அன்று ஆட்சிபுரிந்த அரசாங்கத்திற்கு இந்த ஆலயம் அமைந்திருந்த இடம் தேவைபட்டதாலும் ஆலயத்தை இடமாற்ற வேண்டிய நிலை தோன்றியது. அந்த காலகட்டத்தில் சைவத்தொண்டில் சிறப்புற்று விளங்கிய பெரியார் அருணாசலம் பொன்னம்பலத்திடம் இடத்தை தெரிவு செய்து ஆலயத்தை அமைக்கும்படி அரசாங்கம் கோரியது. இதற்கமைய 1887 ஆம் ஆண்டு பெரியார் அருணாசலம் பொன்னம்பலத்தினால் தற்போது ஆலயம் அமைந்திருக்கின்ற கொம்பனித்தெரு கியூ வீதி வளவில் இந்த ஆலயம் கட்டுவிக்கப்பட்டதாக வரலாறுகள் சான்று பகிர்கின்றன. சிறியதாக இருந்த இந்த ஆலயத்தை, சேர் பொன்னம்பலம் இராமநாதன் அவர்கள் 1902 ஆம் ஆண்டு பெரியளவில் கட்டுவித்ததுடன் இவ்வாலயத்திற்கு ‘கொம்பனித்தெரு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோயில்’ என்ற திருநாமத்தையும் சூட்டினார். கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தின் நிர்வாகத்தோடு இவ்வாலய நிர்வாகப் பொறுப்பையும் ஏற்று கவனித்து வந்தார். இவருக்குப் பின் இ. இராஜேந்திரா இவ்வாலய நிர்வாகத்தை கவனித்து வந்தார். இவரை தொடர்ந்து பலரது தலைமையிலும் அறங்காவலர் சபை நிர்வாகத்திலும் இவ்வாலயம் மென்மேலும் வளர்ச்சி பெற்று வந்தது. 1975 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதி இவ்வாலயத்தில் புனராவர்த்தன அனாவர்த்தன மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதன் பின் ஆலயத்திற்கு 81 அடி உயரமும் 7 தளங்களும் கொண்ட இராஜகோபுரம் அமைக்கும் திருப்பணி 1988 ஆகஸ்ட் 31 ஆம் திகதி ஆரம்பிக் கப்பட்டது. இராஜகோபுர திருப்பணியின் மற்றொரு அம்சமாக கோபுரத்தின் இரு மருங்கிலும் மணிக்கோபுரமும் மணிக் கோபுரமும் அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டது. 1991 மார்ச் 10 ஆம் திகதி அதற்கான அடிக்கல் நடப்பட்டது. அதனுடன் இணைந்த வகையில் ஆலயத்தில் புனருத்தாரண வேலைகளும் செய்யப்பட்டு 1993 மார்ச் 29 ஆம் திகதி மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயத்திற்கு ஒரு தங்கத்தேர் அமைக்க வேண்டும் என்ற ஆலய திருப்பணிச் சபையினரின் விருப்பத்திற்கு அமைய சிற்பாசாரியார் சரவணமுத்து ஜெயகாந்தன் தலைமையிலான சிற்பக் கலைஞர்களால் தங்கத் தேரொன்று உருவாக்கப்பட்டது. இதன் வெள்ளோட்ட விழா 1998 ஆகஸ்ட் 9 ஆம் திகதியன்று நடைபெற்றது. அதே ஆண்டு ஆகஸ்ட் 20 ஆம் திகதியன்று நடந்தேறிய தேர் திருவிழாவின்போது முருகப் பெருமான் புதிய தங்கத்தேரில் ஆரோகணித்து வீதியுலா வந்தார். சிறந்த முருக பக்தரும், மாமன்ற அறங்காவலர் சபை உறுப்பினருமான திருக்குமார் நடேசன் தலைமையிலான தேர்த் திருப்பணிச் சபையினரதும், க. பாலசுப்பிரமணியம் போன்ற செயல் வீரர்களின் உதவியுடனும் தேர்த் திருப்பணி வேலைகள் வெற்றிகரமாக நிறைவேறியது. இந்த ஆலயத்தில் மீளவும் மேற்கொள்ளப்பட்ட திருப்பணி வேலைகளைத் தொடர்ந்து, மூலமூர்த்தி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கான கோவில்கள் திருத்தியமைக்கப்பட்டு, இராஜ கோபுரமும் சிறப்பான வர்ணப் பூச்சுகளுடன் புதுப்பொலிவுகாணும் வகையில் அமைக்கப்பட்டு 2007 செப்டெம்பர் 16 ஆம் திகதியன்று சுன்னாகம் கதிரமலை சிவன் தேவஸ்தானத்தின் பிரதம குரு முத்தமிழ் குருமணி சிவஸ்ரீ நா. சர்வேஸ்வரக் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்களால் புனராவர்த்தன பிரதிஷ்டா மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த்திருவிழா நடைபெறும் அதேகால கட்டடத்தில் அதற்கு இணையாக கொழும்பு கொம்பனித்தெரு அருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்தில் தேர்த்திருவிழா நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. கொழும்பு, கொம்பனித்தெரு ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலயத்தின் இந்த மகோற்சவத்தையொட்டி ஆலய கோபுரம் முதல் ஆலய உள்வீதி மற்றும் வெளி வீதிகள் என்பன 20 ஆயிரம் மின் குமிழ்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இதனால் ஆலயம் ஜெகஜோதியாக காட்சியளிக்கிறது. ஆலயத்தின் தலைவர் திருக்குமார் நடேசன், செயலாளர் கந்தையா நீலகண்டன், பொருளாளர் வின்சேந்திர ராஜன், சொத்துரிமை செயலாளர் பீ. விமலேந்திரன், உப தலைவர் ஏ. எம். டி. தனநாயகம், அங்கத்துவ செயலாளர் கா. தில்லைநாதன் ஆகியோர் இந்த மகோற்சவத்தை சிறப்பாக நடத்தி வருகின்றனர். கொழும்பு கொம்பனித்தெரு அருள்மிகு ஸ்ரீசிவசுப்பிரமணிய சுவாமி கோவிலின் வருடாந்த பிரம்மோற்சவம் கடந்த 2ஆம் திகதி துவஜாரோகணத்துடன் (கொடியேற்றம்) ஆரம்பமாகியது. இவ்வாலயத்தில் தொடர்ந்து காலையும் மாலையும் விசேட பூஜைகள் நடைபெறுகின்றன. கடந்த முதலாம் திகதி காலை விநாயகர் வழிபாடு கணபதி ஹோமம், ஆகியவற்றுடன் இந்த பிரம்மோற்சவ கிரியைகள் ஆரம்பமாகின. அன்று மாலை அனுக்ஞை, கிராமசாந்தி, பிரவேசபலி, வாஸ்துசாந்தி, மிருத்சங்கிரகணம் என்பன நடைபெற்றன. கடந்த 2 ஆம் திகதி எல்லாம்வல்ல மூலமூர்த்திக்கு அபிஷேகம் பூஜை துவஜாரோஹண கிரியைகள், வசந்தமண்டப பூஜை ஆகியவற்றுடன் துவஜாரோஹணம் செய்யப்பட்டது. அன்று மாலை ஸ்நபனாபிஷேகம், ஸ்தம்ப பூஜை, வசந்த மண்டப பூஜை என்பவற்றுடன் சுவாமி வீதியுலா வருதல் இடம்பெற்றது. இதேபோல் கடந்த 3 ஆம் திகதியும் காலையும் மாலையும் ஸ்நபனாபிஷேகமும், ஸ்தம்ப பூஜையும், வசந்த மண்டப பூஜையும், சுவாமி வலம் வருதலும் இடம்பெற்றது. இன்று 8 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை காலையில் 8 மணிக்கு ஸ்நபனாபிஷேகம், ஸ்தம்ப பூஜை, வசந்த மண்டப பூ¨சு, சுவாமி வீதிவலம் வருதல் என்பன இடம்பெறும். ஆடி வெள்ளிக்கிழமையாகிய இன்று மாலை 7 மணிக்கு சப்பறத் திருவிழா, பஞ்சமூர்த்தி உற்சவம் என்பன நடைபெறும். அத்துடன் சுவாமி வெளி வீதி உலா வருதலும் இடம்பெறும். நாளை 11 ஆம் திகதி காலை 4 மணிக்கு ஸ்நபனாபிஷேகம், ஸ்தம்ப பூஜை, வசந்த மண்டப பூஜை ஆகியன நடைபெற்று காலை 7 மணிக்கு எல்லாம்வல்ல அருள்மிகு ஸ்ரீசிவசுப்பிரமணிய சுவாமி தங்க ரதத்தில் பவனி வந்து அருள்பாலிப்பார். இந்த தங்க ரத பவனி நாளை காலை 7 மணிக்கு ஆலயத்திலிருந்து புறப்பட்டு, கியூ ரோட், ஜஸ்டிஸ் அக்பர் மாவத்தை, மலே வீதி, நியூஓல்ட் பெரி லேன், குமார ரத்னம் ரோட், கியூ வீதி வழியாக ஆலயத்தை வந்தடையும். 11 ஆம் திகதி வழமைபோல் மாலை 4 மணிக்கு ஸ்நபனாபிஷேகம், ஸ்தம்ப பூஜை, வசந்த மண்டப பூஜை என்பன நடைபெற்று கார்த்திகை உற்சவம், பஞ்சமூர்த்தி உற்சவம் என்பன நடைபெறும். 12 ஆம் திகதி காலை 10 மணிக்கு வழமையான பூஜைகளுடன் தீர்த்த உற்சவம், யாக கும்ப அபிஷேகம் நடைபெறும். 12 ஆம் திகதி மாலை 6 மணிக்கு ஸ்தம்ப பூஜையும், அதனைத் தொடர்ந்து 7 மணிக்கு துவஜா அவரோஹணம் (கொடி இறக்கம்) நவகதி விசர்ஜ்ஜனம், சப்தாவாணம் உற்சவம், சண்டேஸ்வரர் உற்சவம் ஆசீர்வாதம் குரு உற்சவம் என்பன நடைபெறும். 13 ஆம் திகதி காலை 8 மணிக்கு மஹோற்சவ பிராயச்சித்த அபிஷேகம் நடைபெறும். 13 ஆம் திகதி மாலை 7 மணிக்கு பூங்காவனம், திருவூஞ்சல் என்பன நடைபெறும். இவ்வாலயத்தில் மஹோற்சவம் நடைபெறுகின்ற நாட்களில் தினமும் நண்பகலில் அன்னதானம் வழங்கப்படுவதுடன், இரவில் திருவமுது பிரசாதமும் வழங்கப்படுகின்றது. 14 ஆம் திகதி மாலை 5 மணிக்கு அபிஷேகம், வைரவர் மடை உற்சவம் என்பன நடைபெறுவதுடன் அன்று இரவு 7 மணிக்கு வைரவர் பூஜை நடைபெறும். மஹோற்சவ குரு ஆகம கிரியா ரத்தினம் சிவஸ்ரீ மணிஸ்ரீனிவாச குருக்கள் (ஆலய பிரதம குரு) தலைமையில் மஹோற்சவ கிரியைகள் நடைபெறுகின்றன. சிவஸ்ரீ கோபாலகிருஷ்ணக்குருக்கள் (ஆலய குருக்கள்), சிவஸ்ரீ சிவாக் குருக்கள் ஆகியோர் உதவி குருமார்களாக இந்த மஹோற்சவ கிரியைகளை தினமும் நடத்தி வருகின்றார்கள். சர்வசாதகம் வேதாகம திலகம், பிரம்மஸ்ரீ க, ஆனந்தகுமார சர்மா, சர்வசாதகம் செய்ய பிரம்மஸ்ரீ தீ. கோடீஸ்வரசர்மா, பிரம்மஸ்ரீ இ. செந்தில்நாத சர்மா, பிரம்மஸ்ரீ கே. நவனீத சர்மா, பிரம்மஸ்ரீ இராகவன் சர்மா ஆகியோர் பரிசாரகர்களாக கிரியைகளை நடத்தி வருகின்றார்கள். இவ் உற்சவ காலங்களில் பிரம்மஸ்ரீ ஸ்ரீவெங்கடேச சர்மா நளபாகம் செய்ய வி. நாகேந்திரன் குழுவினர் மங்கள வாத்தியம் இசைக்க. கொழும்பு சைவ மங்கையர் சங்கம் பஜனை பாடி வருவது குறிப்பிட த்தக்கது. கே.ஈஸ்வரலிங்கம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812