திங்கள், 25 பிப்ரவரி, 2013

மாத்தளை மாரியம்மனின் மாசிமக பஞ்சரத பவனி

சீருள் சுரக்கும் ஆதிபராசக்தியானவள் வாழை, கமுகு போன்ற கனிச் சோலைகளுக்கு மத்தியில் அழகு மலை அடிவாரத்தில் மலை வளமும், கலை வளமும், மாண்புற்று விளங்கும் மாத்தளை மாநரில் அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மனாக திவ்விய சிம்ஹாசனத்தில் வீற்றிருந்து அருள் சுரக்கும் திருத்தலமே மாத்தளை அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் திருக்கோயிலாகும். இலங்கையில் பல திருக்கோயில்களில் பெரிய அளவிலான இராஜ கோபுரங்களுடன் காணப்பட்டாலும் இலங்கை திருநாட்டில் மிக உயர்ந்த இராஜ கோபுரம் அமையப்பெற்ற திருத்தலம் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயமாகும். ஆனால் அதனை மிஞ்சும் வகையில் இப்பொழுது மாத்தளை அருள்மிகு ஸ்ரீமுத்து மாரியம்மன் தேவஸ்தானத்தின் வடக்கு நோக்கி 108 அடி நவதள நவகலசம் கொண்ட நவதள இராஜ கோபுரம் அமைக்கப்பெற்று வரலாற்றுப் பெருமையை மாத்தளை ஸ்ரீமுத்து மாரியம்மன் தேவஸ்தானம் பெற்றுள்ளது. இவ்வாறு புகழ் பெற்ற மாத்தளை ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலய மாசிமக மகோற்சவம் இருப்பத்தைந்து நாட்களுக்கு நடைபெறும். இவ் உற்சவம் கடந்த 02-02-2013 காலை 11.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. 25-02-2013 காலை 7.30 மணிக்கு மேல் பஞ்சரதபவனி இரதோற்சவம் நடைபெறும். தேர்த்தினத்தன்று ஸ்ரீ பஞ்சமுக விநாயகர், ஸ்ரீ வள்ளிதெய்வானை சமேத சண்முகர், ஸ்ரீசிவனம்பாள், ஸ்ரீமுத்து மாரியம்பாள், ஸ்ரீ சண்டேஸ்வரி ஆகிய மூர்த்திகள் சர்வலங்காரப் பூஷிதைகளாக அதிவிசித்திர விநோதமாக பஞ்சரதங்களில் ஆரோகணிக்கப்பட்டு, வெளி வீதி உலா (நகர்வலம்) நடைபெறும். 26-02- 2013 மாலை 3.00 மணிக்கு தீர்த்தோற்சவமும், இரவு கொடியேற்றமும், நடைபெறும். 27-02-2013 பகல் சண்டேஸ்வரி உற்சவமும் நடைபெறும். 01-03-2013 இரவு ஸ்ரீ வைரவர் பூஜை நடைபெறும். இவ்வாலயத்தில் தினமும் காலை 8.30 மணிக்கு அம்பாளுக்கு 108 அஷ்டோத்திர சங்காபிஷேகம் நடைபெறுவதோடு, தினமும் பகல் அன்னதானம் வழங்கப்படுகிறது. இவ்வாலயம் கொழும்பிலிருந்து 90வது மைல் கல் தொலைவில், மலைப்பிரதேசமான மத்திய மாகாண கண்டி இராஜதானியிலிருந்து 16வது மைல்கல் தொலைவில் அமைந்திருக்கின்றது. வடக்கையும் மலையகத்தையும் இணைக்கும் ஒரு கேந்திர தளமாக மாத்தளை மாநகர் விளங்கி வந்திருக்கின்றது. மாத்தளை என்னும் பெயர் ஏற்பட்ட காரணமென்னவென்றால் கஜபாகு மன்னனின் ஆட்சிக் காலத்தில் சோழ நாட்டிலிருந்து சிறைப்பிடிக்கப்பட்ட பெருந் தொகையானவர்கள் மாத்தளையில் குடியமர்த்தப்பட்டமையால் ‘மஹாதலயக்’ (பெருங் கூட்டத்தவர்) எனும் பொருள்பட இப்பிரதேசம் அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. அதே போன்று பண்டுகாபய மன்னனின் மாமன் (மாவல்) கிரிகண்ட சிவ இளவரசன் இப்பகுதியில் வசித்து வந்தமையால் ‘மாத்தளை’ எனும் பெயர் தோன்றியதாகவும் ‘சூளவம்சம்’ எனும் சிங்கள காவியத்தில் இப்பிரதேசம் ‘மஹாதிபெதேச’ எனக் குறிப்பேட்டில் குறிக்கப்பட்டுள்ளது. இப் பேதங்கள் மருவி காலப் போக்கில் ‘மாத்தளை’ எனும் பெயர் தோன்றியதாகவும் வரலாற்று ஏட்டுச் சுவடுகள் சான்று பகர்கின்றன. ஆலயம் தோன்றுவதற்கான காரணம் தெரிய வருவதாவது ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பெருந்தோட்டத்துறைக்கு இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் அழைத்து வரப்பட்ட போது ‘தலைமன்னார்’ ‘அரிப்பு’ இறங்குதுறையூடாக அழைத்து வரப்பட்டு மலையக தலைவாசலான பண்ணாகமம் என்று அப்போது அழைக்கப்பட்டு வந்த மாத்தளையை வந்தடைந்தனர். இப்படி சிறு சிறு குழுக்களாக மலையகமெங்கும் வியாபித்த மக்கள் மாத்தளையிலும் குடியேறினர். எங்கும் வியாபித்து அடியவர்களுக்கு அருள் மழை பொழியும் அன்னை பராசக்தியான ஸ்ரீமுத்து மாரியம்பிகையானவள் ஒரு சிகை அலங்காரம் செய்பவரின் கனவில் தோன்றி தன் திரு உருவத்தை ஒரு வில்வ மரத்தடியில் வெளிப்படுத்தி தன்னை பூஜிக்குமாறு கேட்டுக் கொண்டதற்கிணங்க அன்றிலிருந்து அவ்வில்வ மரத்தடியில் சிலை வைத்து வணங்கி வந்ததாக ஆரம்ப கால பரம்பரைக்கதைகளும் ஏடுகளும் சான்று பகர்கின்றன. இத்தகைய சக்தி வாய்ந்த அன்னை முத்துமாரிக்கு ஆலயம் ஒன்று அமைக்கக் கிடைக்கப் பெற்றது பெரும் பாக்கியமே. அன்று மாத்தளை நகரம் சிறு கிராமமாகவும் வண்டித்தடம் பதித்த போக்குவரத்து சாலையாகவும் விளங்கியது. இது திருகோணமலைவரை செல்லும் பாதையாகும். அத்துடன் எமது மக்கள் சமய வழிபாட்டுடன் கலைகளையும் பேணி பாதுகாத்து வந்ததுடன் பயபக்தியாகவும் வளர்த்தார்கள். அதில் முக்கியமானது காமன்கூத்து, இது இந்த அம்பிகையின் பதியில் வருடம் தோறும் முன்பு நடாத்தி வந்ததாகவும் அது மட்டுமல்லாது ஒட்டு மொத்தமாக சமய வழிபாட்டுடன் ஒரு கலாசார கேந்திரதலமாக அந்த ஆலயம் இருந்தமைக்கு பல சான்றுகள் உள்ளன. இவ்வலயத்தில் ஆரம்ப காலத்தில் உயிர்ப்பலியிடல் நடைபெற்று வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. மகோற்சவத்தின் போது இரதம் வெளிவீதி செல்வதற்கு முன் பலி பூஜை கொடுத்த பின்பு இரதம் வெளிவீதி செல்வது வழக்கமாக இருந்தது. காலப் போக்கில் பலியிடல் பூஜையை மாற்றியமைத்து புது முறையாக சாம்பல் பூசனியை வெட்டி பலி பூசையாக செய்து இரத்தங்களை இழுக்கும் முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. உயிர் பலியிடலை நிறுத்தி சாம்பல் பூசணிக்காயை வெட்டி பலி பூசை செய்யும் மரபினை இவ்வாலயத்தில் ஏற்படுத்திய பெருந்தகை முத்தையாபிள்ளை கந்தசாமியாவார். 1955ம் ஆண்டளவில் க. குமாரசாமியார் தலைமை பதவியை ஏற்றிருந்த காலகட்டத்தில் இவ்வாலயத்தில் பாரிய திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு அத்தியாவசிய தேவைகள் பல பூர்த்தியாகி ஆலயம் பெரும் அளவில் வளர்ச்சி கண்டது. வேதாகம முறைப்படி விஸ்தரிக்கப்பட்ட ஆலயத்தின் பிரகாரத்தில் பரிவார மூர்த்திகளை பிரதிஷ்டை செய்து மூலஸ்தானமும் விஸ்தரிக்கப்பட்டு அர்த்த மண்டபம், மஹா மண்டபம், தரிசன மண்டபம் எனப் பல மண்டபங்களும் நிர்மாணிக்கப்பட்டன. த. மாரிமுத்து செட்டியாரின் முயற்சியின் பயனாகவும், நிர்வாக சபையினரும், இந்து பெரு மக்களது ஆதரவோடும் 1992ம் ஆண்டு தேர் திருப்பணி மேற்கொள்ளப்பட்டு 1993ம் ஆண்டு மார்ச் மாதம் 5ம்திகதி வெள்ளோட்டப் பெருவிழா காணும் பாக்கியம் அனைவருக்கும் கிட்டியதை மறுக்க முடியாது. அருள் மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம் அறங்காவல் சபையினர் மாத்தளை மாவட்டத்தில் இந்து சமய பணிகளை முன்னெடுத்து செயல்படுவதோடு இந்து சமயத்தை வளர்ப்பதிலும் மும்முரமாக ஈடுபட்டுவருவதை காண முடிகிறது.ஆகவே இம்முறையில் மலையகத்தில் உள்ள ஏனைய ஆலயங்களும் சமய சமூக மேம்பாட்டு செயற்பாடுகளில் ஈடுபட்டு இந்து மக்களுக்கு சேவை செய்தால் நிச்சயமாக தெய்வ நம்பிக்கையோடு நல்ல சமூகமொன்று உருவாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812