புதன், 26 மார்ச், 2014

கொட்டகலை ஸ்ரீ டிறைட்டன் பெரிய மண்வெட்டி தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வரலாறு

இயற்கை எழில்கொஞ்சும் மலையகத்தில் இதயம் என போற்றப்படும் கொட்டகலை மாநகரில் வளம் கொழிக்கும் பெரிய மண்வெட்டி தோட்டத்தில் இரத்தின சிம்மாசனத்தில் வீற்றிருந்து அன்னை ஆதிபராசக்தி அருள்பாலிக்கின்றாள். வேண்டுவோர் வேண்டியதை வாரி வழங்கி ஆட்சிபுரியும் சக்தியவள், இங்கு ஸ்ரீமுத்துமாரியம்மன் பெயரில் மிளிர்கின்றாள். கோயிலில்லா ஊரும் நீரில்லா குளமும் பாழ். என்பதற்கிணங்க பதினெட்டாம் நூற்றாண்டு கால எல்லையில் ஆங்கிலேய ஆட்சி காலத்தின் போது இலங்கையில் தேயிலைச் செய்கைக்கென இந்திய வம்சாவளியினர் இங்கு அழைத்து வரப்பட்டனர். அன்றைய இத்தோட்டத்தின் பெரிய கங்காணி மார்கள் செங்கன், கணேசன், குப்பன் ஆகியோர் தலைமையில் இங்கு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் நிர்மாணிக்கப்பட்டது. தமிழக மாநிலத்தின் ஸ்ரீ மதுரை மீனாட்சி அம்மன், சமயபுரம் ஆகிய புண்ணிய ஸ்தலங்களி லிருந்து கருவறை வாயில் மண்ணெடுத்து பிரதிஷ்டை செய்து இவ்வாலயம் அமைக்கப் பட்டது. இவ்வாறான ஆலயங்களில் இலங்கையில் ஸ்தாபிக்கப்பட்ட முதல் ஆலயம் எனும் பெருமையை இது பெற்றுள்ளது. ஆரம்பித்தல் சிறிய மண்ணாலான பீடமும் குடிலும் அமைக்கப்பட்டது. அப்போது ஊமை பேசியமை, குருடன் பார்வை பெற்றமை பல தீராத நோய்கள் தீர்த்தமை போன்ற பல அற்புதங்களும் அம்மன் அருளால் நடைபெற்றுள்ளன. அதன்பின் இவ்வாலயம் அன்னை ஆதிபராசக்தியவள் அருளால் செழித்தோங்கத் தொடங்கியது. இம் மண்ணாலான ஆலயம் சீமெந்தினால் சிற்ப வேலையுடன் கூடிய ஆலயமாக்கிடும் நடவடிக்கை அக்காலத்தில் மேற்கொள்ளப்பட்டது. தோட்டத் தலைவர்களான சிங்காரம் சின்னையா, ஜெகநாதன், அசப்பன் ஆகியோர் தலைமையில் 1955 ஆம் ஆண்டுக் காலப் பகுதியில் இவ்வாலயத் திருப்பணிகள் ஆரம்பமாகின. யாழ்ப்பாணம் தங்கவேல் ஆச்சாரியார் மூலமாக இந்தியாவில் இருந்து சிற்பத் துறை வல்லுனர்கள் வரவழைக்கப்பட்டு திருப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. மலையகத்தில் முதன் முதலில் இந்திய சிற்ப முறைப்படி சிற்பக் கலைஞர் ஸ்ரீ நாகலிங்க ஸ்தபதி குழுவினர் அமைத்த ஆலயம் இதுவாகும். இவ்வாலயக் கட்டுமானப் பணிகளின் பின்னர் அம்மன் ஆலயம் மேலும் ஒளிபெற்று விளங்கியது. மலையக வரலாற்றில் முதன் முதலாக இந்திய சிற்ப முறையில் நிர்மாணிக்கப்பட்ட இவ்வாலயம் ஏனைய மலையக ஆலயங்களுக்கு முன்னோடியானதாக உள்ளது. இவ்வாலயத்தினை முன்னோடியாகக் கொண்டே நாவலப்பிட்டி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம், டிக்கோயா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் என்பன அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஓர் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த சிறிய கோயிலாக வளமும் அபிவிருத்தியும் பெற்று விளங்கிய காலத்தில் இந்த ஆலயத்தை நிர்வகிப்பதற்காக 1962 ஆம் ஆண்டில் ஆலய பரிபாலன சபை அமைக்கப்பட்டது. முத்துவேல் தலைமையில் திருவாளர்கள் சுந்தரராஜ், நடராஜ், தர்மலிங்கம், சின்னசாமி, ராமசாமி ஆகியோரைக் கொண்ட குழுவினர் ஆலய பரிபாலன சபைக்கு நியமிக்கப்பட்டனர். இவர்கள் இவ்வாலய வளர்ச்சிக்காக பல செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தினர். அவற்றில் மிகவும் சிறந்ததோர் திட்டமாகக் கொள்ளப்படுவது ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் அமைக்கப்பட்டது. தனியாக அமைக்கப்பட்ட ஸ்ரீ விநாயகர் ஆலயம் இத்தோட்டத்திற்கு மேலும் பல நலன்களை வாரி வழங்கியது. ‘கோயிலில்லா ஊரும் நீரில்லா குளமும் பாழ்’ என்பதற்கு ஏற்ப ஒன்றிற்கு இரண்டு என்ற தர்க்கத்தில் இவ்விரு ஆலயங்களும் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 1982 ஆம் ஆண்டில் இத்தோட்ட வெளிக்கள உத்தியோகத்தர் ரெங்கசாமியின் பெரும் உதவியுடன் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயம் அமைக்கப்பட்டது. பிரதான வீதிக்கருகில் அமைந்த ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தையும் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தையும் இவ் ஆலய பரிபாலன சபையினரே பொறுப்பேற்றனர். இதன் வழியாக இன்று வரை பரிபாலன சபை மூலமாக ஸ்ரீ விநாயகர் ஆலய மீள புனருத்தாரனப் பணிகள், நித்திய பூஜை, வருடாந்த தேர்த் திருவிழா, மாதாந்த விரதங்கள் விசேட விரதங்கள் (விநாயக சதுர்த்தி, சஷ்டி விரதம் கார்த்திகை) ஆகியவற்றுடன் சிவராத்திரி சித்திரா பெளர்ணமி, திருவெம்பாவை, நவராத்திரி என்பனவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இவ்வாறான தெய்வீக செயற்பாடுகளைச் செய்து அடியார்களை அம்பாள் அருள் பெற வழிவகுக்கும் பரிபாலன சபையினரின் பணிகளும் அம்பாளின் அருளும் போற்றத் தக்கவையாக விளங்குகின்றன. ‘எழில் கொள் சீர்மலை நாட்டில் வளந்தருந் தேயிலை மணங்கமழ் நல் மண்வெட்டி தோட்டத்தில் வாழ் அங்காளித் திருகழல் போற்றி போற்றி’ அன்னையின் அருள் நிறைந்திருக்கும் பெரிய மண்வெட்டித் தோட்ட மத்தியில் அவள் குடிகொண்டுள்ளாள். இவ்வாலயம் ஓர் அமைதியான சூழலில் அமைந்துள்ளது. இவ்லாலயத்தை முத்துவேல் தலைவர் தலைமையில் வி. தர்மலிங்கம், வி. நடராஜ், சுந்தரராஜ் பி. சின்னசாமி, யு. ராமசாமி ஆகியோர் பரிபாலனம் செய்து வருகின்றனர். 1962ல் தொடங்கி இவ்வாலயம் சிறப்புற்று விளங்கி வருகிறது. ஒன்பதாவது பரிபாலன சபையாகும். தலைவர் : பீ. சண்முகம், செயலாளர் : வீ. சிவஞானம், பொருளாளர் : பீ. பாலசுப்பிரமணியம், உபபொருளாளர் : ஏ. இராஜரட்ணம். நிர்வாக சபை உறுப்பினர்கள் : எஸ். சிவானந்தன், எம். சத்தயசீலன், கே. பாலசுப்பிரமணியம். சபை ஆலோசகர்கள் : இராஜேந்திரன், வி. விஸ்வராஜ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812