வெள்ளி, 17 செப்டம்பர், 2021

ஆடி மாதம் போய் ஆவணி வந்தால் ஆயிரம் நன்மைகள் தேடி வரும்

ஆடி மாதம் போய் ஆவணி வந்தால் ஆயிரம் நன்மைகள் தேடி வரும் என்பார்கள். ஆவணியில் அத்தனை நாள்களும் மங்கல நாள்களே என்பது ஆன்றோர் வாக்கு. சூரியனை அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசியில் சூரிய பகவான் சஞ்சரிக்கும் காலமே ஆவணி மாதம் என்கின்றன ஜோதிட நூல்கள். சூரியன் சிம்மத்தில் வலுப்பெறும் இந்த மாதத்தில் எந்த காரியத்தை செய்தாலும் அது பலன் தரும் என்பது நம்பிக்கை. இதனாலேயே சிங்க மாதம் எனப்படும் ஆவணி வழிபாட்டுக்கும் கொண்டாட்டத்துக்கு பெயர் பெற்ற மாதமாகப் போற்றப்படுகிறது. 'சிங்கத்திற்கு இணையான மாதமும் இல்லை; சிவனுக்கு இணையான இறைவனும் இல்லை' என்கிறார் அகத்திய மாமுனி. தமிழ் மாதங்களில் ஆவணி ஐந்தாம் மாதமாக வருகின்றது. ஆவணி மூலம், ஆவணி ஞாயிறு, ஆவணி அவிட்டம், புத்ரதா ஏகாதசி, காமிகா ஏகாதசி, வரலட்சுமி விரதம் உள்ளிட்ட பல விரத நாள்களும் இந்த மாதத்தில் வருகின்றன. மேலும் ஆவணி மாத செவ்வாய், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளும் விரத முக்கியத்துவம் வாய்ந்த நாள்கள் என்கிறார்கள். புதிதாக திருமணமான பெண்கள் மாங்கல்ய பலம் பெற ஆவணி மாத செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மங்கள கெளரி விரதம் அனுஷ்டிப்பார்கள். அதேபோல் ஆண்களும் தங்கள் விருப்பங்கள் நிறைவேற ஆவணி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கான நோன்பை கடைப்பிடிப்பார்கள். ஆவணி சோமவார விரதமும் முக்கியமானது. ஆவணி மாதம் சிவபெருமானை வழிபடுவதற்கு ஏற்ற மாதம் என்பதால் திங்களும் வியாழனும் சைவர்களுக்கு இன்றியமையாத நாள்கள் ஆகும். ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை சூரிய வழிபாட்டுக்கு ஏற்ற நாள். அதேபோல் அன்றிலிருந்து சூரிய நமஸ்கார வழிபாட்டைத் தொடருவதும் நல்லது. சூரிய நமஸ்காரம், யோகப் பயிற்சிகள், வேதம் பயில என ஆன்மிக திருவகுப்புகள் செல்ல ஏற்ற மாதம் ஆவணி. இந்த மாதத்தில் புதுமனை புகுந்தால் அந்த வீட்டில் சிறப்பான வாழ்க்கை அமையும். இந்த மாதத்தில் திருமணம் செய்தால் வாழ்க்கை இன்பமாக அமையும் என்பதெல்லாம் நம்பிக்கை. அநேக தீமைகள் ஒழிந்து மங்கலங்கள் சூழும் இந்த மாதம் நம்பிக்கைக்கும் நன்மைகளுக்கும் ஏற்ற மாதம் என்று பெரியோர்களால் சொல்லப்படுகிறது. எனவே இந்த மாதத்தில் இறைவனை வழிபட்டு இன்பமுற்று வாழ்வோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812