ஞாயிறு, 24 மார்ச், 2013

கொழும்பு டி.எஸ்.சேனாநாயக்க கல்லூரி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம்

கொழும்பு மாநகரிலே பொரளைக்கு அண்மித்ததாக கொழும்பு 7இல் 1967 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி கொழும்பு டி. எஸ். சேனாநாயக்கா கல்லூரி ஒரு கனிஷ்ட பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்டது. அப்போது முதலாம் வகுப்பிலிருந்து 6 ஆம் வகுப்பு வரைதான் வகுப்புக்கள் இருந்தன. இந்தப் பாடசாலை ஆரம்பிக்கப்படும் போது 120 மாணவர்களும் 5 ஆசிரியர்களும் மட்டுமே இருந்தனர். அதில் 28 பிள்ளைகள் தமிழ் மொழி மூல பிள்ளைகளும், ஒரேயொரு தமிழ் ஆசிரியரும் இருந்தது குறிப்பிடத்தக்கது. அப்பொழுது ஆசிரியராகக் கடமையாற்றிய ஒரேயொரு தமிழ் ஆசிரியர் சி. தாமோதரம்பிள்ளை என்பவராவார். காலப்போக்கில் இவர் தமிழ்ப் பிரிவின் தலைமை ஆசரியராக கடமையாற்றினார். இவரது தலைமையில் 1969 ஆம் ஆண்டு முதல் இப்பாடசாலையில் சரஸ்வதி பூஜை செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறாக இயங்கிக்கொண்டிருந்த பாடசாலையில் காலப்போக்கில் (க. பொ. த. சா.தரம்) 10 ஆம் வகுப்பு வரை வகுப்புகள் நடைபெற தரமுயர்த்தப் பட்டதுடன் அதன் பின் உயர்தரம் வரை வகுப்புகள் நடைபெறும் வண்ணம் தரமுயர்த்தப்பட்டது. ஆர். ஐ. டீ. அலஸ் அதிபராக இருந்தபோது 1988 ஆம் 89 ஆம் ஆண்டுகளில் இலங்கையிலுள்ள நான்கு மதங்களுக்குமுரிய வணக்கஸ்தலங்கள் அமைக்க வேண்டுமென பேசப்பட்டது. இவ்வாறாகப் பேசப்பட்டு 1990 ஆம் 91 ஆம் ஆண்டுகளில் நான்கு மாதங்களையும் சேர்ந்த வணக்கஸ்தலங்களும் அமைக்கப்பட்டதுடன் 1992 ஆம் ஆண்டு இங்கு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயம் அமைக்கப்பட்டு பிரதிஷ்ட கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. 2002 ஆம் ஆண்டு மீண்டும் ஆலயத்தில் வர்ணப் பூச்சு வேலைகளைச் செய்து முதலாவது கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. 1967 ஆம் ஆண்டு இலங்கையின் பிரதமராக இருந்த டட்லி சேனநாயக்க தனது தந்தையின் திருநாமத்தால் ஒரு பாடசாலையை அமைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்த டி. எஸ். சேனநாயக்க கல்லூரியை ஸ்தாபித்தார். 1969 ஆம் ஆண்டு தலைமை ஆசிரியராக தாமோதரம்பிள்ளை தெரிவானது குறிப்பிடத்தக்கது. இவர் 1967 ஆம் ஆண்டிலிருந்து 1976 ஆம் ஆண்டு வரை அங்கு ஆசிரியராக கடமையாற்றினார். 1976 ஆம் ஆண்டு இவர் ஓய்வுபெற்றுச் சென்றதையடுத்து இ. க. குலசேகரம் என்பவர் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். இவர் 1976 ஆம் ஆண்டிலிருந்து 1983 ஆம் ஆண்டு வரை கடமையாற்றினார். இந்தப் பாடசாலையில் கடமையாற்றிய ஆசிரியர்களான திருமதி வேலய்யா, செல்வகுமார், இந்திரன் ஆகியோர் இந்தப் பாடசாலையில் இந்து மத வளர்ச்சிக்கும் ஆலய வளர்ச்சிக்கும் அரும் பணியாற்றியவர்களாவர். இவர்கள் கடமையாற்றிய பாலஸ்தாபனத்தின் போது அடிக்கல் நாட்டப்படுகிறது காலத்திலே யாழ்ப்பாணம் தெல்லிப்பழையிலிருந்து தங்கம்மா அப்புக்குட்டி, புலவர் கீரன் போன்ற மதப் பெரியார்களை அழைத்துவந்து பிரசங்கங்கள் நடத்தப்பட்டன. செல்லையா இராஜதுரை, செளமியமூர்த்தி தொண்டமான், பி. பி. தேவராஜ். பெ. சந்திரசேகரன் ஆகிய அரசியல்வாதிகளையும் இந்தப் பாடசாலைக்கு அதிதிகளாக அழைத்து இந்து மதப் பணிக்கு ஒத்துழைப்புகள் பெறப்பட்டன. அது மாத்திரமன்றி முன்பு சிவராத்திரி வருகின்ற போது இந்தப் பாடசாலை மாணவர்களை முன்னேஸ்வரம் ஸ்ரீ முன்னைநாதர் தேவஸ்தானத்திற்கு அழைத்துச் சென்று இரவு முழுவதும் கண் விழிக்க வைத்து விரதம் இருக்கச் செய்து மறுநாள் அழைத்து வருவதுமுண்டு என்று இந்தப் பாடசாலையின் பழைய மாணவரும் இந்தப் பாடசாலை ஆசிரியராகக் கடமையாற்றிய வருமான கணேசராஜா தெரிவித்தார். தற்பொழுது இந்தப் பாடசாலையின் அதிபராக டி. எம். டி. திசாநாயக்கவும், உப அதிபராக பரமேஸ்வரனும், உதவி அதிபராக திருமதி சிவபாலனும் கடமையாற்றிக் கொண்டிருப்பதுடன் இந்து மன்ற பொறுப்பாளராக ஆசிரியர் ஜெயரத்தினம் சேவையாற்றி வருகின்றனர். இப்பொழுது ஆலயம் புதுப்பிக்கப்பட்டு புனர்நிர்மாணம் செய்து எதிர்வரும் 18 ஆம் திகதி மகா கும்பாபிஷேகம் நடத்தப்படவுள்ளது. தற்பொழுது சரஸ்வதி தேவியின் திருவுருவச் சிலையும் புதிதாக இங்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலயம் அமைக்கப்பட்டதிலிருந்து ஆலயத்தில் ஆகம விதிகளுக்கு ஏற்ப பூஜை புனஸ்காரங்களை செய்யவும் விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி போன்ற விரதங்களுக்கு ஏற்ப பூஜைகளை செய்யவும் வழி அமைத்து கொடுக்கப்பட்டது. இப்பாடசாலையில் கடமையாற்றிய அதிபர்களும், உப, உதவி அதிபர்களும் ஏனைய மதங்களைச் சேர்ந்த ஆசிரியர்களும் மாணவர்களும் இதற்கு மேலும் உறுதுணையாக இருந்து வருகின்றனர். கே.ஈஸ்வரலிங்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812