செவ்வாய், 24 செப்டம்பர், 2013

கே.ஈஸ்வரலிங்கம்

(10316) உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு என்பது ஏன்? உண்டி என்பது சாப்பாடு. சாப்பாடு செய்வதற்கான நேரம் அதிகமாகும் பட்சத்தில், பெண்கள் சமையலறையிலேயே முடங்கி விடுகிறார்கள். இதனால் இவர்கள் மற்றைய விடயங்களிலிருந்து பின்னுக்குப் போய் விடுகிறார்கள். இந்த நிலை மாறுவதற்கு அவர்கள் சுவையான சமையலை குறுகிய நேரத்துக்குள் செய்யக் கற்றுக்கொள்ள வேண்டும். இதுவே பெண்களுக்கு அழகு. (10317) நாயைக் கண்டால் கல்லைக் காணோம். கல்லைக் கண்டால் நாயைக் காணோம் என்பது ஏன்? பண்டைக் காலத்தில் அற்புத சிற்பங்கள் வடிக்கப் பட்டன. மாமல்லபுரம், தஞ்சை, காஞ்சி சிற்பங்கள் இதற்கு எடுத்துக் காட்டாக விளங்கின. இங்கே ஒரு சிற்பி நாயின் உருவத்தை கல்லில் சிற்பமாக வடித்திருந்தான். அந்த சிற்பத்தை ஒருவன் மிகவும் ரசித்தான். அந்த சுவைஞனைச் சிற்பி கேட்டான் ‘என் சிற்பம் எப்படி? என்று, அதற்குச் சுவைஞன் சொன்ன பதில் ‘நாயைக் கண்டால் கல்லைக் காணோம், கல்லைக் கண்டால் நாயைக் காணோம்.’ கல்லைக் கண்டால் நாயைக் காணோம்’ என்பதாக இருந்தது. அதாவது அதில் நாயைப் பார்த்தால் கல் தெரியவில்லை. கல்லைப் பார்த்தால் நாய் தெரியவில்லை. (10318) பசி வந்திட பத்தும் பறந்து போகும் என்பது ஏன்? அறிவுடைமை, இன்சொல், ஈகை, தவம், காதல், தானம், தொழில், கல்வி, குலப்பெருமை, மானம் ஆகிய பத்து குணங்களும் பசி என்று வந்து விட்டால் பறந்து போகும் என்பது உண்மை. (10319) பாக்கத்தவனுக்கு போலிஸ் வேலை, வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை என்ற பழமொழியின் பொருள் என்ன? இந்த பழமொழியின் அர்த்தம், போக்கு கற்றவனுக்கு அல்லது கற்று கொடுப்பவனுக்கு போலிஸ் வேலை, வாக்கு கற்றவனுக்கு அல்லது கற்று கொடுப்பவனுக்கு வாத்தியார் வேலை என்பதாகும். (10320) ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும், என்ற பழமொழியின் பொருள் என்ன? இதன் அர்த்தம் ஒருவனின் மனைவி கர்ப்பமாக இருக்கும் போது (என்னதான் அவன் மனைவியாக இருந்தாலும் அவள் இன்னொருவன் அதாவது ஊரான் பிள்ளைதானே) அவளை நன்றாக கவனித்துக் கொண்டால், அவளின் வயிற்றில் வளரும் தன்பிள்ளை தானாக வளரும் என்பதாகும். (10321) சேலை கட்டிய மாதரை நம்பாதே, என்ற பழமொழியின் பொருள் என்ன? சேல் அகட்டிய மாதரை நம்பாதே என்பது தான் அதன் உண்மைப் பொருள். சேல் என்றால் கண். தன் கணவனுடன் இருக்கும் போது கண்களை அகட்டி வேறு ஒரு ஆடவனை பார்க்கும் பெண்களை நம்பாதே என்பது தான் உண்மைப் பொருள். (10322) மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே, என்ற பழமொழியின் பொருள் என்ன? மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே என்பதுதான் உண்மை. அதாவது ஆற்றுப் படுகைகளில் மண் குதிர்கள் இருக்கும். அவற்றில் கால் வைத்தால் கால்கள் உள்ளே பதியும். அந்த மண் குதிரை (குதிர் ஐ) நம்பி ஆற்றில் இறங்காதே என்பது தான் உண்மை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812