திங்கள், 25 ஜூலை, 2011

அறநெறி அறிவுநொடி

கே. ஈஸ்வரலிங்கம்,

தலைவர் / ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்


8613 விட்டகுறை தொட்ட குறை என்று கூறுவதன் அர்த்தம் என்ன?


பூர்வ ஜென்மத் தொடர்பையே விட்டகுறை தொட்ட குறை என்று கூறுகின்றனர். ஒரு சிலர் பெண்களை மையப்படுத்தி இதனைப் பொருள் கொள்கின்றனர். ஒரு பெண்ணைத் தொட்டு அங்கு அநாதையாக விட்டு விட்டால் அவருக்கு பாவம் ஏற்பட்டு விடும் என்றும் கூறுகின்றனர்.

இது தவறான அர்த்தமாகும். தொட்டு வந்த துறை விட்டு வந்த துறை என்று கூறுவதே இந்தக் கூற்றுக்கு சரியான அர்த்தமாக அமையும். கடந்த பிறவியில் என்ன கர்ம வினைகள் செய்தோமோ அதற்குத் தகுந்தாற்போல் இந்தப் பிறவியில் பலனை (நல்லது கெட்டது) அனுபவிப்பதையே விட்டகுறை தொட்ட குறை என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.

வாழ்க்கை என்பது தனிப்பிறவி எடுப்பது அல்ல பூர்வ ஜென்மத்தில் எந்த இடத்தில் விட்டு வந்தோமோ அதனை மறுபிறவில் வேறு உடலில் இருந்து தொடர்கிறோம் என்பதே விட்டகுறை தொட்டகுறை என்று கூறுவதன் உண்மையான உட்பொருளாகும்.


8614 ஆயிரம் பொய் சொல்லி திருமணம் செய் என்பதன் பொருள் என்ன?

ஆயிரம் முறை பொய் சொல்லி திருமணம் செய் என்பதே உண்மையான பழமொழியாகும். காலப் போக்கில் ‘போய்சொல்லி’ என்ற வார்த்தை பொய் சொல்லி என மாற்றப்பட்டுவிட்டது.

பழங்காலத்தில் சுற்றத்தினர் பற்றி அவ்வளவாக அறியப்படாத காரணத்தால் பெண் கொடுக்கும் முன் அந்தக் குடும்பத்தினர் பலமுறை யோசனை செய்வர் அதனால் மாப்பிள்ளை வீட்டிற்கு நெருக்கமானவர்கள் பெண் வீட்டாரிடம் பலமுறை சென்று நல்ல வரன்தான். நீங்கள் தாராளமாக பெண் கொடுக்கலாம் என சொல்லி வலியுறுத்துவர். இதைத்தான் ஆயிரம் முறை போய் சொல்லி திருமணம் செய் என்று குறிப்பிட்டனர்.

இந்தப் பழமொழி மருவி ஆயிரம் பொய் சொல்லி திருமணம் செய் எனக் கூறப்படுவதால் பலர் மாப்பிள்ளை பெண் வீட்டாரிடம் சில உண்மைகளை மறைத்து திருமணம் செய்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812