திங்கள், 16 ஜனவரி, 2012

பஞ்சிகாவத்தை ஸ்ரீதேவி கருமாரி அம்மன் ஆலயம்




இலங்கைத் திருநாட்டில் கொழும்பு மாநகரில் பாடசாலைகள், வர்த்தக நிலையங்கள், வங்கிகள், கடைகள் என இன்னொரன்ன நிறுவனங்கள் நிறைந்து விளங்கும் ஓர் நகரம் பஞ்சிகாவத்தை ஆகும். வாகன உதிரிப்பாக வர்த்தகம் மும்முரமாக நடைபெறும் இந்த பஞ்சிகாவத்தை சந்திக்கு அருகில் பிரதான வீதியையொட்டி பட்டித் தோட்டம் என்று அழைக்கப்படும் இடத்தில் 198/24 ஆம் இலக்கத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ தேவி கருமாரி அம்மன் ஆலயம்.

1950 ஆம் ஆண்டளவில் ஜல் ஜல் என சவாரி போகும் மாட்டு வண்டிகள் நிறைந்து விளங்கும் ஓர் பகுதியாக இந்த பஞ்சிகாவத்தை பட்டித் தோட்டம் விளங்கியது. மாடுகளும் மாட்டு வண்டிகளும் நிறைந்து விளங்கியதால் இது 'பட்டித் தோட்டம்' என அழைக்கப்படலாயிற்று. மாட்டு வண்டிகள் வாடகைக்கு விடப்படும் இடமாக இது திகழ்ந்தது.

இந்த பட்டித் தோட்டத்தில் 1950 ஆண்டளவில் 40, 50 தமிழ் குடும்பங்கள் வாழ்ந்து வந்துள்ளன.

மாட்டு வண்டிகளை வாடகைக்கு விட்டு அதில் வரும் வருமானத்தை வைத்து இவர்கள் தமது ஜீவனோபாயத்தை நடத்தி வந்துள்ளனர். வாகனப் போக்குவரத்து குறைந்து காணப்பட்ட காலம் என்பதால் மாட்டு வண்டி சவாரிகளுக்கு பெரும் கிராக்கி நிலவியது. இப்பகுதியில் வசித்தோர் இங்குள்ள புளிய மரத்தடியில் ஸ்ரீ தேவி கருமாரி அம்மனின் திருவுருவச் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தனர். இவ்வாறு 10 ஆண்டுகளாக வழிபட்டு வந்தோர் அதன்பின் இத் தோட்டத்து மக்களின் உதவியுடன் இந்த புளியமரத்தடியில் ஸ்ரீதேவி கருமாரி அம்மனுக்கு ஆலயம் அமைத்தனர்.

முதன் முதலில் சின்னஞ்சிறு ஆலயமாக இருந்த ஸ்ரீதேவி கருமாரி அம்மன் ஆலயம் காலப்போக்கில் தோட்டத்து மக்களின் உதவியுடன் மடாலயமாக கட்டியெழுப்பப்பட்டது. இம் மடாலயத்தை கோயிலாக எண்ணி வழிபட்டு வந்தவர்கள் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆலயங்களில் கும்பாகிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்பதை உணர்ந்தனர். இதன் விளைவாக தோட்டத்து மக்கள் ஒன்றுகூடி நிர்வாக சபையொன்றை அமைத்தனர். இதன் தலைவராக என். சந்தனமும் உப தலைவராக கே. சுரேஸ் குமாரும் பொருளாளராக பீ. பிரதீப்பும் நியமிக்கப்பட்டதுடன், 18 பேரைக் கொண்ட நிர்வாக சபையும் அமைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து 2005.09.16 ஆம் திகதி பாலஸ்தாபன கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தற்போது இந்தத் தோட்டத்தில் 300 தமிழ் குடும்பங்கள் வாழ்கின்றன.

60 அடி நீளமும் 48 அடி அகலமும் கொண்ட இக்கோயிலில் 23 அடி உயரத்திற்கு புதிதாக கோபுரம் ஒன்று அமைக்கப்பட்டு வருகின்றது.

ஸ்ரீ துர்க்கை அம்மன், சிவன், விஷ்ணு, ஆஞ்சநேயர், தட்சிணாமூர்த்தி, ஐயப்பன், காளியம்மன், வைரவர், நவக்கிரக நாயகர்கள் ஆகிய பரிவார மூர்த்தங்களின் திருவுருவச் சிலைகளும் இவ்வாலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

ஆலய மூலஸ்தானத்தில் 62 ஆண்டுகளுக்கு முன் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீ தேவி கருமாரி அம்மனின் திருவுருவச் சிலையே பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. ஆலயத்திற்கு எதிரே காவல் தெய்வமான ஸ்ரீ முனியப்பரின் திருவுருவச் சிலை பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. இவ்வாலயத்தில் புதிதாக வசந்த மண்டபமும் அமைக்கப்படுகின்றது.

கொழும்பு, பஞ்சிகாவத்தை, பட்டித் தோட்டம், 198/24 ஆம் இலக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ தேவி கருமாரி அம்பாள் ஆலயத்தின் திருப்பணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இவ்வாலயத்தின் புனராவர்த்தன ஏக குண்ட மஹா கும்பாபிஷேகம் எதிர்வரும் 2012.02.05 ஆம் திகதி காலை 7.14 மணிக்கு நடைபெறவுள்ளது

எதிர்வரும் 2012.02.01 ஆம் திகதி மாலை 7 மணிக்கு விநாயகர் வழிபாடு, கணபதி ஹோமம் ஆகியவற்றுடன் மஹா கும்பாபிஷேக கிரியைகள் ஆரம்பமாகவுள்ளன.

எதிர்வரும் 2012.02.02 ஆம் திகதி மாலை 9 மணிக்கு புண்ணியாக வாசனம், கிராமசாந்தி, பிரவேசபலி, ரசேஷாக்ன ஹோமம் திசா ஹோமம், சாந்தி ஹோமம், சம்ஹிதா ஹோமம், மூர்த்தி ஹோமம், கோவாசம், நவக்கிரஹ ஹோமம், வாஸ்து சாந்தி என்பன நடைபெறும்.

2012.02.03 ஆம் திகதி காலை 8 மணிக்கு ஆதிவாசக் கிரியைகள், சூர்யாக்னி சங்கிரம், கங்கா தீர்த்த சங்கிரகணம், மிருத் சங்கிரகணம், ரக்ஷ¡பந்தனம், த்வஜஸ்தம்ப பூஜை (கொடித்தம்ப பூஜை) குருமாத பூஜை, என்பனவும் மாலையில் விஷேட்சந்தி, பிரசன்ன அபிஷேகம், பிரசன்ன பூஜை, கடகப்தாகனம், கலாகர்ஷணம், க்ஷணஹேழமம், யாகசாலை பிரவேசம், நைநோமீனலம் (கண் திறத்தல்) ஜலாதிவாசம் தான் யாதிவரசம், ஸ்தூபி ஸ்தாபனம், தீபஸ்தாபனம், யந்திரஸ்தாபனம், விம்பஸ்தாகனம், அஷ்டபந்தனம், யாகபூசை, தீபாராதனை என்பனவும் நடைபெறும்.

2012.02.04 ஆம் திகதி காலை 8 மணிக்கு புண்ணியாகவாசகம், தைலாப்யங்கம் (எண்ணெய்க் காப்பு) யாக பூஜை விசேட திரவிய ஹோமம் தீபாராதனை என்பனவும் மாலையில் விம்பசுத்தி ரசஷாபந்தனம், பூர்வ சந்தானம் (நியாசம்) ஸ்பர்சாகுதி, யாக பூஜை, தீபாராதனை என்பனவும் நடைபெறும்.

2012.02.05 ஆம் திகதி அதிகாலை 5.30 மணி முதல் புண்ணியாகவாசனம், யாகபூஜை, விசேட தீபாராதனை, வேதபாராயணம், தேவார பாராயணம், மஹா பூர்ணாகுதி, கும்ப ஊர்வலம், ஸ்தூபிகள், அபிஷேகம் என்பன நடைபெற்று அன்று காலை 7.14 மணிக்கு மஹா கும்பாபிஷேகம், மங்கள தரிசனம், எஜமான் அபிஷேகம், மஹா அபிஷேகம், மகேஸ்வர பூஜை என்பன நடத்தப்பட்டு அன்னதானம் வழங்கப்படும்.

சிவஸ்ரீ கணேச சிவபால குருக்கள், ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சி. சசிகாந்த குருக்கள், சிவஸ்ரீ சி. இராஜேந்திர குருக்கள், ஸ்ரீ சோமசுந்தர குருக்கள், குணானந்த குருக்கள், சிவானந்தன் குருக்கள், பார்த்தீபன் சர்மா, பிரதீப சர்மா மதிஅழகன் ஆகியோர் கும்பாபிஷேக கிரியைகளை செய்வார்கள். தென் இந்தியாவைச் சேர்ந்த விஸ்ப ஸ்ரீ நடராஜா குழுவினர் ஆலய கட்டிட திருப்பணி வேலைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விஸ்வஸ்ரீ எம். ரவீந்திரன் எம். சேனாதிராஜா ஆகியோர் ஆலய வர்ண வேலைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வடிவேல் குழுவினரின் மங்கள வாத்தியத்துடன் கும்பாபிஷேக கிரியைகள் யாவும் நடைபெறும்.

கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து மண்லாபிஷேக பூஜையும் திருவிழாவும் நடைபெறும். 2012.02.10 ஆம் திகதி திருவிழா ஆரம்பமாகும். இங்கு 18 ஆம் திகதி ஊர்வலமும் 19 ஆம் திகதி சங்காபிஷேகமும் மண்டலாபிஷேக பூர்த்தியும் தீர்த்தோற்சவமும் திருவூஞ்சல் திருவிழாவும் நடத்தப்பட்டு அன்னதானம் வழங்கப்படும். அன்று ஆலய பிரதம குருவின் ஆசியுரை ஆலய பரிபாலன சபைத் தலைவர் என் சந்தனம் ஆகியோரின் விசேட உரையும் இடம்பெறும். இதனை ஆலய செயலாளர் பீ. பிரதீப் தெரிவித்தார்.

இவ்வாலய திருப்பணி வேலைகளுக்கும் கும்பாபிஷேக கிரியைகளுக்கும் பெருமளவு நிதி தேவைப்படுவதால் பக்தர்கள் தங்களால் முடிந்தளவு நிதி உதவியை தந்துதவ வேண்டும் என ஆலய பொருளாளர் கே. சுரேஷ்குமார் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812