திங்கள், 4 ஏப்ரல், 2011

ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்பாள் ஆலய வள்ளுவர் அறநெறி பாடசாலை



மட்டக்குளி, கதிரானவத்த, எக்கமுத்தபுரவில் கோயில் கொண்டு அருள்பாலித்து வருகின்றவள் ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்பாள்.

கொழும்பு நாரஹேன்பிட்டி, மாவத்தை ஆகிய பகுதிகளின் சேரிப்புறங்களில் வாழ்ந்தவர்கள் 1991 ஆம் ஆண்டு இங்கு குடியேற்றப்பட்டனர். நகர சபைக்கு சொந்தமான சதுப்பு நிலமாக இருந்த பகுதியில் சுமார் 3000 குடும்பங்கள் இரண்டு கட்டங்களாக குடியேற்றப்பட்டன. இவ்வாறு இங்கு வந்து குடியேறியோர் கோயில் இல்லாத குறையை கண்டனர். ‘கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்று கூறுவதால் இவர்கள் இங்கு கோயிலொன்றை எழுப்ப தலைப்பட்டனர். இதன் விளைவாக 1993ஆம் ஆண்டு இவ்வாலயம் அமைக்கப்பட்டது. இவ்வாலயத்தோடு சேர்ந்ததாக 1995 ஆம் ஆண்டு வள்ளுவர் அறநெறி மன்றம் அமைக்கப்பட்டது. கே. பி. பத்மராஜா இந்த மன்றத்தை ஸ்தாபித்து இதன் தலைவராக இன்றும் இருந்து வழிநடத்தி வருகிறார். இம்மன்றத்தின் வரழைத் தொடர்ந்து 1995.03.26 ஆம் திகதி இங்கு வள்ளுவர் அறநெறி பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது.

1ம் வகுப்பு முதல் 11ஆம் வகுப்புவரை உள்ள இந்தப் பாடசாலையில் இன்று 150 பிள்ளைகள் கல்வி கற்கின்றனர். 9 ஆசிரியர்கள் கடமையாற்றுகின்றனர். இவர்களுக்கு 1000 ரூபா தொடக்கம் 2000 ரூபா வரை மாதாந்தம் சம்பளம் வழங்கப்படுகிறது. திருமதி எஸ். பத்மராணி (நந்தினி) இதன் தலைமை ஆசிரியராகவும் எம். செல்வகுமார் நடன ஆசிரியராகவும் இங்கு பணிபுரிகின்றனர். இங்கு தற்போது ஆசிரியராக இருக்கும் விஸ்வலிங்கம் வித்தியா, கந்தசாமி முகுந்தினி ஆகிய இருவரும் இதே பாடசாலையில் கல்வி கற்றவர்கள். இவர்களைத் தவிர திருமதி மைக்கல் சித்ராதேவி, திருமதி எஸ். சாந்தி, திருமதி கருப்பையா புஷ்பலதா, திருமதி சிவராஜா சாந்தி, சிவசங்கர், கே. கோபிகா ஆகியோர் ஆசிரியர்களாக உள்ளனர்.

வள்ளுவர் அறநெறி மன்றத்தின் செயலாளராக எஸ். புனிதாவும், பொருளாளராக ஆர். நாகேஸ்வரனும் இருக்கின்றனர். இந்த மன்றத்தினரும் அறநெறி பாடசாலையின் மாணவ மாணவியரும் ஆசிரியர்களும் இந்த ஆலயத்தில் நடைபெறும் திருவிழா, சிவராத்திரி விழா, நவராத்திரி விழா, திருவெம்பாவைக்கு பஜனை ஆகியவற்றை ஆலய நிர்வாகத்தினருடன் இணைந்து சிறப்பாக நடத்தி வருகின்றனர்.

இந்த மன்றத்தின் ஸ்தாபகரும் தலைவரும் அறநெறி பாடசாலையின் பொறுப்பாசிரியருமான கே. பி. பத்மராஜா இந்த அறநெறி பாடசாலைக்கு என்று கையேடொன்றை வெளியிட வேண்டும் என்று எண்ணம் கொண்டிருந்தார். தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா என்பவற்றோடு மந்திரங்கள், அறநெறி கீதம், எழுச்சிப் பாடல்கள், மாணவர்கள் ஒழுக்க வழிகாட்டி என பல்வேறு அம்சங்களைக் கொண்ட அறநெறி தீபம் என்ற இந்த கையேடு அண்மையில் வெளியிட்டு வைக்கப்பட்டது. கல்விக்கு அதிபதியான கலைமகளின் வீணை ஏந்திய திருவுருவம் முன்புற அட்டை படத்தை அலங்கரித்துள்ளது. பின்புற அட்டையை திருவள்ளுவரின் திருவுருவம் தனதாக்கிக்கொண்டுள்ளது.

பண்பாடு மனித வாழ்க்கைக்கு உயிர்நாடி, இறை உணர்வு இல்லாத வாழ்வு துடுப்பு இல்லாத படகிற்குச் சமம் போன்ற தத்துவ முத்துக்கள் பல வித்தாகி இருப்பதை இந்நூலில் காணலாம்.

சுத்தம் அறநெறிக் கல்வியின் அவசியம், போன்ற பெற்றோரை அறிவுறுத்தும் கருத்துக்கள் பலவும் இந்நூலில் இடம் பிடிக்கத் தவறவில்லை. சுகமான சிந்தனைகளுடன் நலமான பல கருத்துக்கள் இதில் விளைந்துள்ளதால் இது பண்பட்ட ஒரு உள்ளத்தின் பாராட்டுக்குரிய கைங்கரியம் என போற்றுவது தகும் என எண்ணுகிறோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812