திங்கள், 2 ஏப்ரல், 2012

கண்டி ஸ்ரீ செல்வவிநாயகர் ஆலய தேர்த்திருவிழா

எழில் கொஞ்சும் மத்திய மாகாணத்தின் தலைநகரமான கண்டி மாநகரிலே கோயில் கொண்டு அடியார்களுக்கு அருள் பாலிக்கும் ஆலயம் ஸ்ரீ செல்வ விநாயகர் பெருமாள் ஆலயம். இவ்வாலயத்தின் ஸ்ரீ மீனாட்சி அம்பிகா சமேத ஸ்ரீ சோமசுந்தரேஷ்வர சுவாமிகளின் பங்குனி உத்தர மகோற்சவம் கடந்த 27 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

இங்கு எதிர்வரும் 04 ஆம் திகதி காலை 6.00 மணிக்கு ஆனந்த வல்லி சமேத சந்திரசேகர பெருமானின் வெளி வீதி வலம் வந்து அருள்பாலிப்பார். அதனைத் தொடர்ந்து பால்குட பவனியும் இடம்பெறும்.

அன்று காலை 9.00 மணி முதல் பகல் 12 மணி வரை பஞ்சமுக விநாயகருக்கும், ஸ்ரீ சோமஸ்கந்தருக்கும், வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சண்முகநாத பெருமானுக்கும் விசேட அஸ்டோத்திர சத சங்காபிஷேகமும், விசேட அலங்கார தீபாராதனையும் நடைபெறும்.

மாலை 4 மணி முதல் 6 மணி வரை விசேட மேளக்கச்சேரியும் பஜனையும் பூஜைகளும் நடைபெறும். அன்று மாலை 6 மணி முதல் வசந்த மண்டப பூஜையும் சுவாமிகள் உள் வீதி வலம் வருதலும் இடம் பெறும். அன்று இரவு 7.30 மணியளவில் பஞ்சரதத்தில் எழுந்தருளி இரத பவனி இடம் பெறும்.

இந்த ரத பவனி கோவிலிலிருந்து புறப்பட்டு பேராதனை வீதி வழியாக வந்து வடுகொட பிட்டிய வீதி வழியாக கொழும்பு வீதி, கொட்டுக்கொடல்ல வீதி, கந்த வீதி, மாநகர சபை சந்தி, திருகோணமலை வீதி வழியாக கொட்டுக்கொடலை வீதி மேல் பக்கம் சென்று தலதா வீதி கீழ் பக்கம் மணிக் கூண்டு ஊடாக பேராதனை வீதி, வெம்பிளி தியேட்டர் சந்தி வரை வந்து ஆலய வெளி வீதி வழியாக ஆலயத்தை வந்தடையும்.

பஞ்சரத பவனியில் கலந்து கொள்ளும் சகல அடியார்களுக்கும் போக்குவரத்து ஒழுங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

ஆலய வரலாறு

பதினேழாம் நூற்றாண்டின் முற் பகுதியில் தற்போது ஆலயம் அமைந்திருக்கும் இடத்திற்கு அருகாமையில் ஒரு பெரியகுளம் இருந்தது. அக்குளத்தின் அருகே ஓர் அரச மரமும் அதன் பக்கத்தில் குன்று ஒன்றும் அமைந்திருந்தன.

அக்குளத்தில் சலவைத் தொழிலாளர்கள் துணி துவைப்பது வழக்கமாக இருந்தது. குறிப்பாக அக்கால இராசதானியைச் சேர்ந்த பிரமுகர்களின் துணிகளை அக்குளத்திலே சலவை செய்ததாக அறியப்படுகிறது. இந்தியாவிலிருந்து வருகை தந்த சுவாமி ஸ்ரீ குருசாமி என்பவரும் அவரது உதவியாளர் ஒருவரும் அக் குளத்தின் அருகில் சிறிது காலம் தற்காலிகமாகத் தங்கி இருந்தனர். ஒரு நாள் சுவாமி ஓர் அதிசயமான கனவு கண்டார். விநாயகர் சிலையொன்று குளத்தின் குன்றின் அடிப்பாகத்தில் இருப்பது அவரது கனவில் தோன்றியது.

மறு நாள் சுவாமி அயலவர்களை குளத்தங்கரைக்கு அழைத்துச் சென்று பார்த்தபோது கனவில் தோன்றியவாறே அங்கு விநாயகர் சிலை இருப்பதைக் கண்ணுற்றார். சிலையின் முன்புறம் மணலில் குப்புறப் புதைந்தவாறு இருந்தது.

சிலையின் முதுகுப் புறத்தை சலவைத் தொழிலாளர்கள் துணி துவைக்கும் சலவைக் கல்லாகப் பாவித்தனர். சுவாமியவர்கள் அந்த விநாயகர் சிலையை மக்களின் உதவியோடு எடுத்து வந்து, தற்போது ஆலயம் அமைந்திருக்கும் இடத்தில் பிரதிஷ்டை செய்தார். முன்பு அழுக்கு நீக்குவதற்கு கருவியாகப் பயன்பட்ட விநாயகர் அன்று முதல் அடியார்களின் அக அழுக்குகளை நீக்கும் கர்த்தாவாகி அருள்பாலித்து வருகின்றார். இப்படி பல வரலாறுகளைக் கொண்ட இவ் ஆலயம் கண்டி நகரிலே புகழ் பெற்ற இந்து ஆலயமாக இருந்து வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812