திங்கள், 2 ஏப்ரல், 2012

கம்பளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மகோற்சவம்

மத்திய மாகாணத்தின் தலைநகரான கண்டியையும் நுவரெலியாவையும் இணைக்கும் நகரமாக விளங்கும் கம்பளை நகரில் கோவில் கொண்டு ஆன்ம கோடிகளைக் காத்து இரட்சிக்கும் லோக மாதாவாகிய அன்னை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மகோற்சவம் கடந்த 27 ஆம் திகதி கரகஸ்தாபனத்துடன் ஆரம்பமாகியது. இங்கு தொடர்ந்து திருவிழா நடைபெற்று வருகின்றது. இங்கு தினமும் காலை 9 மணிக்கு அபிஷேகமும் மாலை 6.30 மணிக்கு விசேட பூஜையும் நடைபெற்று வருகின்றன.

இவ்வாலயத்தின் தேர்த்திருவிழா எதிர்வரும் 04 ஆம திகதி நடைபெறுவதுடன், தீர்த்தத் திருவிழா 5 ஆம் திகதி நடைபெறும். இவ் ஆலயத்தில் திருவிழா காலத்தில் தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

வரலாறு

கம்பளை எனும் பெயரைப் பெறுமுன் இந்நகர் “மகா வலிகம்” உறுவேலகம் என்றெல்லாம் விளிக்கப்பட்டுள்ளது. இடத்தால் நதிக்கும் நதியால் இடத்திற்குமாக இக் காரணப் பெயர் வழக்கத்தில் பழக்கமாகி ஐக்கியமாகிவிட்டது. கங் + பல, (நதியில் + ஏறு இறங்குதுறை) = கம்பொல எனப் பெயர் மாறியது. 1860 ம் ஆண்டளவில் இங்கிருந்து தமிழ்நாடு சென்ற சிலரிடம் தனது தங்கை மகனை அதாவது காளிமுத்துவை அழைத்து வரச் சொல்லி இருக்கிறார் அவரது மாமனார்.

1866/67 களில் எட்டே வயது நிரம்பிய காளிமுத்துவை இவர் நம்பிக்கையான நபர் மூலம் அழைத்து வரச் செய்தார். காளிமுத்து தேவரோடு வந்த 10, 15 பேரைக் கொண்ட குழுவில் குறிப்பிடத்தக்கவர்கள்.

மாண்டித் தேவர், வேலுத் தேவர், குப்புசாமித் தேவர் ஆவர். இதில் பாண்டித் தேவர், “ஓர் வேல்” தோட்டத்திலும், வேலுத் தேவர் “சமர்செட்” தோட்டத்திலும் தங்கிவிட குப்புசாமித் தேவரும் நாகலிங்கத் தேவரும் வேறு தோட்டங்களிலும் குடியேற காளிமுத்து தேவர் கம்பளையிலேயே தங்கிவிட்டார்.

அமரர் காளிமுத்துத் தேவரும் அவரது நண்பர்களும் மாலை வேளைகளில் விளையாடுவது வழக்கம். தற் சமயம் கோயிலிருக்கும் இடம் முன்பு வேறு மதத்தைச் சேர்ந்த ஒருவருக்கு சொந்தமாக இருந்தது. இவ் விடத்தில் விளையாடுவது வழக்கமாகும். அவ்விடயத்தில் சூரியகாந்திச் செடிகளை வெட்டி ஒரு பக்கமாக இழுத்துக் குவிக்கத் தலைப்பட்ட போது காளிமுத்து வெட்டி வேரோடு இழுத்த சூரியகாந்திச் செடியின் அடியில் ஏதோ இலிங்கம் போன்ற ஒரு பொருளைக் கண்டு மயங்கி விழுந்துவிட்டார்.

செய்தியறிந்த ஏனையவர்கள் அவ் விடத்தை வந்து பார்வையிட்ட போது அங்கு ஓர் இலிங்க வடிவினைக் கொண்ட ஒரு பொருளிருப்பதைக் கண்டனர். அதனை அடிப்படையாகக் கொண்டு இங்கு ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. கம்பளையைச் சேர்ந்த முன்னாள் உதவி கல்விப் பணிப்பாளர் ஏ. சொக்கலிங்கம் இந்தத் தகவல்களை வழங்கினார். ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் பல வருட காலமாக ஆலய பரிபாலன சபையின் தலைவரான சிவன் ஞானசேகர் தலைமையில் பல திருவிழாக்களை கண்டு வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812