வெள்ளி, 7 டிசம்பர், 2012

கே. ஈஸ்வரலிங்கம் (கண் திருஷ்டி) 9598) உள்ளத்து உணர்வுகளை வெளிப்படுத்தும் உறுப்பு எது? கண் 9599) அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று சொல்லக் காரணம் என்ன? கண்கள்தான் 9600) மற்றவர் கண்களை நேருக்கு நேர் பார்த்துப் பேசுபவர்கள் யார்? நேர்மையானவர்கள் 9601) நேருக்கு நேர் பேசத் தயங்குபவர்கள் யார்? பொய் பேசுபவர்கள் 9602) அன்பு, கருணை, பாசம், காதல், ஆசை, வெறுப்பு, பொறாமை, கோபம் என்று அனைத்து உணர்ச்சிகளும் மற்றவருக்கு எதன் வழியே பரவுகின்றன? கண் வழியே 9603) இந்த உணர்ச்சிகளில் மற்றவரைப் பெரிதும் பாதிப்பது எது? பொறாமை 9604) இந்த பொறாமையை என்னவென்று சொல்வார்கள்? கண் திருஷ்டி 9605) பிறந்த குழந்தைகளை கண் திருஷ்டியிலிருந்து காப்பாற்ற என்ன செய்வார்கள்? கருஞ்சாந்துப் பொட்டு வைப்பார்கள் 9606) கட்டடங்கள் எழுப்பும் போது கண் திருஷ்டியிலிருந்து தப்ப என்ன செய்வார்கள்? பூதம் போன்ற பொம்மை வைப்பார்கள் 9607) திருஷ்டியிலிருந்து தப்புவதற்கு கிராமங்களில் என்ன செய்வார்கள்? உப்பையும் செத்தல் மிளகாயையும் சேர்த்து தலையைச் சுற்றி நெருப்பில் போடுவார்கள். 9608) வியாபார நிறுவனங்களில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் தேங்காய் உடைப்பது ஏன்? திருஷ்டியிலிருந்து தப்ப 9609) திருஷ்டி தோஷம் இருக்காத இடங்கள் எவை? உக்ர தெய்வங்களான காளி, நரசிம்மர், துர்க்கை போன்ற தெய்வ வழிபாடு செய்யும் இடங்களில். 9610) ஒருவர் தனக்குத் தானே சோறிட்டுக் கொண்டால் என்ன நடக்கும்? ஆயுளைக் குறைக்கும் 9611) இஞ்சி, பாகற்காய், கஞ்சி, கட்டித் தயிர், இலைக்கறி (கீரை) நெல்லிக்காய் இரவில் சாப்பிடலாமா? கூடாது 9612) இவ்வாறு இரவில் சாப்பிட்டால் என்ன நடக்கும்? லட்சுமி அவ் வீட்டில் வாசம் செய்யமாட்டாள் தட்டாரத்தெரு ஸ்ரீ துர்க்கையம்மன் ஆலய கும்பாபிஷேகம் கே. ஈஸ்வரலிங்கம் எதிர்வரும் 4ம் திகதி காலை 8 மணி முதல் இரவு 7.00 மணி வரை எண்ணெய் காப்பு சார்த்தும் நிகழ்வு இடம்பெறும். எதிர்வரும் 5ம் திகதி நடைபெறும் கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படும். 48 நாட்களுக்கு மண்டலாபிஷேகம் நடைபெறும் கொழும்பு 12, பண்டாரநாயக்க மாவத்தை சில்வர் சிமித் ஒழுங்கையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ துர்க்கையம்மன் தேவஸ்தானத்தின் புனராவர்தன பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகம் எதிர்வரும் 2012-12-05 ம் திகதி முற்பகல் 11.15 மணிக்கு நடைபெறவுள்ளது. ஆலய வரலாறு திருமூலராய் ‘சிவபூமி’ என போற்றப்பட்ட இலங்கைத் திருநாட்டிலே நீதியும், நேர்மையும், உண்மையும், சத்தியமும் வெற்றிபெற்று நிலைத்து நிற்க வேண்டும் என்று வாய்மையால் வாதாடும் வக்கீல்களும் நீதி தவறாது தீர்ப்பு வழங்கும் நீதிபதிகளும் காலைப் பொழுதானால் சோம்பல் இன்றி வீரத்தின் அடையாளமாய் சுறு சுறுப்பாய் இயங்கிக் கொண்டிருக்கின்ற நீதிமன்றங்களும் நிறைந்து விளங்கும் புதுக்கடை என அழைக்கப்படும் ஹல்ஸ்டொப் சில்வர் சிமித் ஒழுங்கையில் அமைந்துள்ளது ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயம். இலங்கையிலே துர்க்கை அம்மனை மூல மூர்த்தியாக கொண்டுள்ள தலங்கள் இரண்டே இரண்டு தான் உள்ளன. அதில் ஒன்று யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் உள்ளது. அடுத்தது கொழும்பு தட்டாரத்தெருவில் அமைந்துள்ள இத்திருத்தலமாகும். இத்தலம் நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைமை வாய்ந்தது. இற்றைக்கு 102 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1910 ஆம் ஆண்டு வைகாசியான மே மாதம் 27 ஆம் திகதி இத்திருத்தலத்தை அமைப்பதற்கான அடித்தளமிடப்பட்டு அதற்கான திருப்பணிகள் மேற்கொண்டதன் விளைவாக இவ்வாலயம் முளையிடப்பட்டது. அன்று முதல் ஸ்ரீ துர்க்கை அம்பாளின் அருள் மகிமை இப்பகுதி எங்கும் வியாபித்து தூபமிடத் தொடங்கியது. ‘அவளின்றி அணுவும் அசையாது’ என்ற அடை மொழிக்கு அமைய மடாலயமாக இருந்தது. ஆலயமானது. குடிலாக இருந்தது கோபுரமானது. இந்த அரும்பெரும் கைங்கரியம் நிறைவேற முத்தாக வித்தாகியவர் அ. பெருமாள் செட்டியார். இவர் தான் இந்த ஆலயத்தை முதன் முதலில் அமைத்தவர். இவர் அம்பாளின் திருவடியை எய்திய பின் அ. சுப்பையா செட்டியார், ஏ.பி.எஸ். ஆறுமுகம் செட்டியார, ஏ.பி.எஸ். அருணாசலம் செட்டியார் ஆகியோருக்கு இவ்வாலயத்தின் பரிபாலன அறப்பணிகளை மேற்கொள்ள அம்பாளின் அருட்கடாட்சம் கிடைத்தது. இவர்களுக்குப் பின் ஏ. ரத்னவேல் செட்டியாருக்கு இத்திருத்தலத்தை பரிபாலிக்கக்கூடிய அரிய வாய்ப்பு கிடைத்தது. இந்தக் காலகட்டத்தில் தான் இவ்வாலயத்தின் அருமை பெருமை இப்பகுதி எங்கும் பரவத் தொடங்கியது. இதுவரை காலமும் காலியாக இருந்த கஜானாவின் மீது ஸ்ரீ லட்சுமி அம்பாளின் அருட் பார்வை படத்தொடங்கியது. இவரைத் தொடர்ந்து பி. கலியப் பெருமாள், க. சுப்பிரமணியம் ஆகியோரிடம் இவ்வாலய திருப்பணிகள் ஒப்படைக்கப்பட்டன. இவர்களது காலத்தில் தான் இத்திருத்தலத்தில் கர்ப்பக் கிரகம், மகாமண்டபம், கோபுரம் ஆகியன அமைக்கப்பட்டன. ஆகம விதிகளுக்கு அமைய அமைக்கப்பட்ட இத்திருத்தலத்தில் சாஸ்திர சம்பிரதாயங்களுக்கு ஏற்ப கும்பாபிஷேகம் நடத்தக்கூடிய வாய்ப்பு கிடைத்தது 1982 ஆண்டிலாகும். 1982.03.02 ஆம் திகதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்த கும்பாபிஷேகத்திற்குப் பின் தான் ஆலய தலைவராக லயன் முத்துக்கிருஷ்ண ராஜா கேசவராஜா ஜே.வி.யும் உப தலைவராக பி. ராஜேந்திரனும் செயலாளராக எஸ். ஸ்ரீ காந்தும் உப தலைவராக ஆர். பாலசுப்பிரமணியமும் நியமக்கப்பட்டனர். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆலயங்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்பது ஆகம விதி. ஆனால் 1982 ஆம் ஆண்டுக்குப் பின் நீண்டகாலமாக ஆகம விதிக்கு ஏற்ப இங்கு மகா கும்பாபிஷேகம் நடத்தப்படவில்லை. அதன் பின் ஆலய அறங்காவலர் சபைத் தலைவராக லயன் எம். கேசவராஜா நீண்ட காலம் பணியாற்றி வந்தார். அவரது பார்வையில் புதிய நிர்வாக சபையொன்று அமைக்கப்பட்டது. அப்போது தலைவராக லயன் எம். கேசவராஜாவும், செயலாளராக கே. ஈஸ்வரலிங்கமும், பொருளாளராக பீ. முருகேசுவும், உப தலைவர்களாக டி.சீ. மூர்த்தி, பி. ராஜேந்திரன் ஆகியோரும் நிர்வாக சபை உறுப்பினர்களாக எஸ். ஸ்ரீகாந்த், ஆர். சுப்பிரமணியம், கே. பாலசுப்பிரமணியம், ஆர்.எஸ்.எஸ். முரளி, டீ. சுவேந்திரராஜா, கே. உதயச்சந்திரன் ஆகியோரும் கணக்காளராக என். முருகதாஸ¤ம் தெரிவு செய்யப்பட்டனர். இந்தக் குறையை போக்கும் வண்ணம் ஆலய புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ள ஆலயத் தலைவர் லயன் எம். கேசவராஜாவினால் பிரபல தொழிலதிபர் எஸ். சந்திரசேகர் தலைவராகவும் வர்த்தகரான டி.சி. மூர்த்தி பொருளாளராகவும் கொணடு 1999 ஆம் ஆண்டு திருப்பணிச் சபையொன்று அமைக்கப்பட்டு 1999 வைகாசியில் பாலஸ்தாபனம் செய்யப்பட்டது. 2000 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11 ஆம் திகதி மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதன் பின் மேற்கொள்ளப்பட்ட திருப்பணியின் போது அஷ்ட லஷ்மிகள், நவதுர்க்கைகள், லக்ஷ்மி நாராயணன், உமையொருபாகன், வைரப் பெருமான் ஆகிய பரிவார மூர்த்திகளுக்கு பண்டிகைகள் அமைக்கப்பட்டு திருவுருவச் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இதற்கமைய இவ்வாலயத்தில் கஜ லக்ஷ்மி, சந்தான லக்ஷ்மி, வீரலக்ஷ்மி, விஜய லக்ஷ்மி, தான்ய லக்ஷ்மி, ஐஸ்வர்ய லக்ஷ்மி, தனலக்ஷ்மி, அருள் லக்ஷ்மி ஆகிய அஷ்ட லக்ஷ்மிகளினதும் வன துர்க்கை, ஆலனி துர்க்கை, ஜாத வேதோ துர்க்கை, சாந்தி, துர்க்கை, சபரி துர்க்கை, ஜ்வலத் துர்க்கை, லவண துர்க்கை, தீப துர்க்கை, ஆஸார துர்க்கை என நவ துர்க்கைகளினதும் திருவுருவச் சலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. பாடகர் சிதம்பரம் தியாகராஜhவின் காட்டுக்குள்ளே ஐயனுக்கு திருவிழா இறுவட்டு வெளியீட்டு விழா கே. ஈஸ்வரலிங்கம் ஆன்மீகப் பாடகர் சிதம்பரம் தியாகராஜாவின் 14வது பக்தி இறுவட்டு வெளியீட்டு விழா எதிர்வரும் 8 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4.01 மணிக்கு கொட்டாஞ்சேனை ஐங்கரன் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. காட்டுக்குள்ளே ஐயனுக்கு திருவிழா என்ற இந்த இறுவட்டை வெளியிட்டு வைக்கவுள்ள இவர், வருடாந்தம் சுவாமி ஐயப்பனின் புகழ்பாடி இறுவட்டுக்களை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஐயப்பன் மீது அளவில்லாத பக்தி கொண்ட இவர், ஆரம்ப காலத்தில் பஜனை பாடல்களை பாடிக்கொண்டு வந்துள்ளார். காலப் போக்கிலே ஐயப்பனின் புகழ்பாடி ஒரு இறுவட்டை வெளியிட வேண்டும் என்ற எண்ணம் இவரது உள்ளத்துள் உதித்தது. அதன் விளைவாக ஒரு இறுவட்டை வெளியிட்டவர் இன்று 18 இறுவட்டுக்களை வெளியிட்டு மகிழ நினைக்கிறார். இதுவரை 140 பாடல்களை பாடியுள்ள இவர், இந்த இறுவட்டு வெளியீட்டின் மூலம் கிடைக்கின்ற நிதியில் வறிய ஐயப்ப பக்தர்கள் மலை செல்ல உதவுகிறார். அதுபோல் ஏழை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் உதவி வருகின்றார். தொடர்ந்து சில சமூக பணிகளுக்கும் உதவ எண்ணியுள்ளதாக இவர் கூறுகிறார். இவரது இந்த இறுவட்டில் அடங்கியுள்ள சில பாடல்கள் இன்று சபரிமலையிலும் லண்டனிலும் ஒலித்துக்கொண்டிருக்கின்றன. இவரது இறுவட்டு வெளியீட்டு விழாவொன்று சுவிஸ் நாட்டிலும் நடந்துள்ளது. கடந்த வருடம் இவரது தாயார் ஐயனின் திருவடியை எய்தியதால் அந்தாண்டு இறுவட்டை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டது என்று கூறும் இவர், இந்தாண்டு வெளியிடும் இந்த இறுவட்டு அந்த அன்னையின் திருப்பாதங்களுக்கு சமர்ப்பணமாக அமைய சுவாமி ஐயப்பன் அருள் புரியட்டும் என்று வேண்டுகின்றார். இலங்கையில் தமிழ் இசைத் துறையில் சாதிப்பது என்பது கடினமானதாக இருக்கையில், ஆன்மீக இசைத் துறையில் வெற்றி பெறுவதற்கு இவருக்கு ஆரம்பம் முதல் ஐயப்பனும் இவரது அதீத நம்பிக்கையும் மனைவி பிள்ளைகளும் நண்பர்களும் இலங்கையிலுள்ள பிரபல பாடலாசிரியர்களும் இசையமைப்பாளர்களும் ஒலிபரப்பாளர்களும் உறுதுணையாக இருப்பதாக கூறுகிறார். இசையமைப்பாளர் எம். எஸ். செல்வராஜா, ஒலிப்பதிவாளர் ஜனாப் பசால், அதிகமான பாடல்களை இயற்றிக் கொடுத்த கவிஞர் கே.செல்வராஜா, கவிஞர் செ. மோகன்ராஜ், ஸ்ரீ பால ரவிசங்கர சர்மா, சசாங்கன் சர்மா, கனிவுமதி, மறைந்த கலைஞர் ஸ்ரீதர் பிச்சையப்பா ஆகியோர் இவருக்கு இசையமைத்தும் பாடல்கள் இயற்றிக் கொடுத்தும் உதவியவர்களாவர். இவரிடம் எந்த பாடலாசிரியரும் ஊதியமும் பெற்றதில்லை என்று இவர் கூறுகிறார். நவோதய மக்கள் முன்னணியின் இளைஞர் முன்னணி தலைவர் டொக்டர் எஸ். கே. கிருஷ்ணா இந்த விழாவில் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டு இவரை ஊக்குவிக்கவுள்ளார். இவரைப் போலவே இவரது குழந்தைகளும் ஓரளவு பாடும் திறமை கொண்டவர்களாக இருப்பதால், அவர்களுக்கும் அவர் இதில் களம் அமைத்துக் கொடுத்திருக்கிறார். இதன்மூலம் எதிர்காலத்தில் அவர்களும் அவரைப் போலவே இத்துறையில் மிளிர வாய்ப்பு ஏற்படுத்துவதற்காக இதனை அவர் செய்துள்ளார். இதுபோல் பிற குழந்தைகளும் இதில் பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது. கே. ஜே. ஜேசுதாஸின் பாடல்களை விரும்பி கேட்கும் இவர், அவ்வாறான சாயலில் அமைந்த பாடல்களையும் வேகமான பாடல்களையும் இதில் பாடியுள்ளார். இவர் ஐயப்பன் பாடல்களை மட்டுமன்றி மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் பாடல்களையும் பாடி இறுவட்டு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதுமட்டுமன்றி அன்னை புகழ்பாடும் பாடல்களையும் இவர் பாடியுள்ளார். எதிர்காலத்தில் வேறு வகையான பாடல்களையும் பாட இவர் எண்ணம் கொண்டுள்ளார். இவர் வெளியிடும் இறுவட்டுக்கள் ஐயனின் அருளால் இரண்டே நாட்களில் விற்பனையாகி விடுவதாகவும், இதனால் இவருக்கு இதுவரை எந்த நஷ்டமும் ஏற்படவில்லை என்று இவர் மனமகிழ்ச்சியுடன் கூறுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812