வியாழன், 12 செப்டம்பர், 2019

அறநெறி அறிவு நொடி

திருவிழாவாவது யாது?

ஆலயங்களில் பத்து அல்லது பன்னிரண்டு நாட்கள் மிகச் சிறப்பாகப் பூசைகள் நடத்தி அங்குள்ள மூர்த்திகளின் திருவுருவங்களைப் பலவித வாகனங்களின் மேல் எழுந்தருளச் செய்து நடத்துவிக்கும் விழாவுக்கு திருவிழா என்று பெயர். இதனை மகோத்ஸவம் எனவும் கூறுவர்.

மகோத்ஸவம் என்பதன் பொருள் என்ன?

மஹா - பெரிய

உத் - உயர்வான

ஸவ - படைத்தல் முதலிய காரியங்கள். உயர்ந்த படைத்தல் முதலிய ஐந்தொழில்களைக் குறிக்கும் குறி என்பதாம்.

கொடியேற்று எவ்வாறு நடைபெறுகிறது?

நந்தி உருவத்தை ஒரு துணியில் எழுதி அதற்குப் பூசைகள் செய்து கயிற்றில் கட்டிக் கொடி மரத்தின் உச்சிக்கு ஏற்றுவது கொடியேற்றமாம்.

திருவிழாவில் பவனி வரும் பஞ்சமூர்த்திகள் யாவர்?

விநாயகர், சுப்பிரமணியர், சோமாஸ்கந்தர் (சிவபெருமான்), பார்வதி, சண்டீசர்

சைவ சமயிகள் ஓதவேண்டிய தமிழ் வேதங்கள் எவை?

தேவாரம், திருவாசகம் இரண்டுமாம்.

தேவாரம் செய்தருளினவர் யாவர்?

திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார், திருநாவுக்கரசு நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் என்னும் மூவர்.

திருவாசகம் செய்தருளியவர் யாவர்?

மாணிக்கவாசக சுவாமிகள்.

திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் எங்கே திருவவதாரம் செய்தருளினார்?

சோழ நாட்டில் உள்ள சீர்காழியிலே திருவவதாரம் செய்தருளினார்.திருநாவுக்கரசு நாயனார் எங்கே திருவவதாரம் செய்தருளினார்?

திருமுனைப்பாடி நாட்டில் உள்ள திருவாமூரிலே திருவவதாரம் செய்தருளினார்.

சுந்தரமூர்த்தி நாயனார் எங்கே திருவவதாரம் செய்தருளினார்?

திருமுனைப்பாடி நாட்டில் உள்ள திருநாவலூரிலே திருவவதாரம் செய்தருளினார்.

மாணிக்கவாசக சுவாமிகள் எங்கே திருவவதாரம் செய்தருளினார்?

பாண்டி நாட்டில் உள்ள திருவாதவூரிலே திருவவதாரம் செய்தருளினார்.

திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் முதலிய நால்வரும் எவ்வாறு பெயர் பெறுவார்கள்?

சைவசமயக் குரவர்கள் எனப் பெயர் பெறுவார்கள்.

யாது காரணத்தினால் இவர்கள் சைவ சமயக் குரவர்கள் எனப் பெயர் பெறுவார்கள்?

சைவத்தின் வழி உய்வு பெற வழியினைத் தம் பாடல்கள் மூலம் அருளிப் பல அற்புதங்களைக் கொண்டு சைவ சமயமே மெய்ச் சமயம் என்று நிலைநாட்டியமையால் சைவ சமயக் குரவர்கள் (குருமார்கள்) எனப் பெயர் பெறுவார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812