திங்கள், 5 மார்ச், 2012

கொழும்பு தட்டாரத்தெரு ஸ்ரீ துர்க்கையம்மன் ஆலயம்

திருப்பணிகளுக்கு உதவ திருவருள்

நீதியும் நியாயமும தர்மமும் நிலைத்து நிற்கக்கூடிய தளம் திருத்தலம். இத்தகைய சிறப்புகள் வாய்ந்த திருத்தலத்திலே எழுந்தருளி அல்லது வீற்றிருந்து அருள் பாலிக்கின்ற தெய்வங்கள் எத்தனை இருந்தாலும் நீதிக்கும் நியாயத்திற்கும் தர்மத்திற்கும் உரிய குல தெய்வமாக விளங்கக் கூடியவள் வீரத்திற்கு அதிபதியான ஸ்ரீ துர்க்கை அம்பாள் ஆவார்.

திருமூலராய் ‘சிவபூமி’ என போற்றப்பட்ட இலங்கைத் திருநாட்டிலே, நீதியும் நேர்மையும் உண்மையும் சத்தியமும் வெற்றிபெற்று நிலைத்து நிற்க வேண்டும் என்று வாய்மையால் வாதாடும் வக்கீல்களும் நீதி தவறாது தீர்ப்பு வழங்கும் நீதிபதிகளும் காலைப் பொழுதானால் சோம்பல் இன்றி வீரத்தின் அடையாளமாய் சுறுசுறுப்பாய் இயங்கிக்கொண்டிருக்கின்ற நீதிமன்றங்களும் நிறைந்து விளங்கும் புதுக்கடை என அழைக்கப்படும் ஹல்ஸ்டொப் சில்வர் சிமித் ஒழுங்கையில் அமைந்துள்ளது ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயம்.

இலங்கையிலே துர்க்கை அம்மனை மூல மூர்த்தியாக கொண்டுள்ள தலங்கள் இரண்டே இரண்டு தான் உள்ளன. அதில் ஒன்று யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் உள்ளது. அடுத்தது கொழும்பு தட்டாரத்தெருவில் அமைந்துள்ள இத்திருத்தலமாகும். இத்தலம் நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமை வாய்ந்தது.

இற்றைக்கு 102 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1910 ஆம் ஆண்டு வைகாசியான மே மாதம் 27 ஆம் திகதி இத்திருத்தலத்தை அமைப்பதற்கான அடித்தளமிடப்பட்டு அதற்கான திருப்பணிகள் மேற்கொண்டதன் விளைவாக இவ்வாலயம் முளையிடப்பட்டது. அன்று முதல் ஸ்ரீ துர்க்கை அம்பாளின் அருள் மகிமை இப்பகுதி எங்கும் வியாபித்து தூபமிடத் தொடங்கியது. ‘அவளின்றி அணுவும் அசையாது’ என்ற அடை மொழிக்கு அமைய மடாலயமாக இருந்தது ஆலயமானது. குடிலாக இருந்தது கோபுரமானது.

இந்த அரும்பெரும் கைங்கரியம் நிறைவேற முத்தாக வித்தாகியவர் அ. பெருமாள் செட்டியார். இவர் தான் இந்த ஆலயத்தை முதன் முதலில் அமைத்தவர்.

இவர் அம்பாளின் திருவடியை எய்திய பின் அ. சுப்பையா செட்டியார், ஏ.பி. எஸ். ஆறுமுகம் செட்டியார், ஏ. பி. எஸ். அருணாசலம் செட்டியார் ஆகியோருக்கு இவ்வாலயத்தின் பரிபாலன அறப்பணிகளை மேற்கொள்ள அம்பாளின் அருட்கடாட்சம் கிடைத்தது. இவர்களுக்குப் பின் ஏ. ரத்னவேல் செட்டியாருக்கு இத்திருத்தலத்தை பரிபாலிக்கக்கூடிய அரிய வாய்ப்பு கிடைத்தது.

இந்தக் காலகட்டத்தில் தான் இவ்வாலயத்தின் அருமை பெருமை இப்பகுதி எங்கும் பரவத் தொடங்கியது. இதுவரை காலமும் காலியாக இருந்த கஜானாவின் மீது ஸ்ரீ லட்சுமி அம்பாளின் அருட் பார்வை படத்தொடங்கியது. இவரைத் தொடர்ந்து பி. கலியப் பெருமாள், க. சுப்பிரமணியம் ஆகியோரிடம் இவ்வாலய திருப்பணிகள் ஒப்படைக்கப்பட்டன.

இவர்களது காலத்தில் தான் இத்திருத்தலத்தில் கர்ப்பக் கிரகம், மகாமண்டபம், கோபுரம் ஆகியன அமைக்கப்பட்டன. ஆகம விதிகளுக்கு அமைய அமைக்கப்பட்ட இத்திருத்தலத்தில் சாஸ்திர சம்பிரதாயங்களுக்கு ஏற்ப கும்பாபிஷேகம் நடத்தக்கூடிய வாய்ப்பு கிடைத்தது 1982 ஆண்டிலாகும்.

1982-03-02 ஆம் திகதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்த கும்பாபிஷேகத்திற்குப் பின் தான் ஆலய தலைவராக லயன் முத்துக்கிருஷ்ண ராஜா கேசவராஜா ஜே. வி. யும் உப தலைவராக பீ. ராஜேந்திரனும் செயலாளராக எஸ். ஸ்ரீ காந்தும் உப தலைவராக ஆர். பாலசுப்பிரமணியமும் நியமிக்கப்பட்டனர்.

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆலயங்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்பது ஆகம விதி. ஆனால் 1982 ஆம் ஆண்டுக்குப் பின் நீண்டகாலமாக ஆகம விதிக்கு ஏற்ப இங்கு மகா கும்பாபிஷேகம் நடததப்படவில்லை. அதன் பின் ஆலய அறங்காவலர் சபைத் தலைவராக லயன் எம். கேசவராஜா நீண்ட காலம் பணியாற்றி வந்தார். அவரது பார்வையில் புதிய நிர்வாக சபையொன்று அமைக்கப்பட்டது.

அப்போது தலைவராக லயன் எம். கேசவராஜாவும் செயலாளராக கே. ஈஸ்வரலிங்கமும், பொருளாளராக பீ. முருகேசுவும், உப தலைவர்களாக டி. சீ. மூர்த்தி, பி ராஜேந்திரன் ஆகியோரும் நிர்வாக சபை உறுப்பினர்களாக எஸ். ஸ்ரீகாந்த், ஆர். சுப்பிரமணியம், கே. பாலசுப்பிரமணியம், ஆர். எஸ். எஸ். முரளி, டீ. சுவேந்திரராஜா, கே. உதயச்சந்திரன் ஆகியோரும் கணக்காளராக என்.

முருகதாஸ¤ம் தெரிவு செய்யப்பட்டார். இந்தக் குறையை போக்கும் வண்ணம் ஆலய புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள ஆலயத் தலைவர் லயன் எம். கேசவராஜாவினால் பிரபல தொழிலதிபர் எஸ். சந்திரசேகர் தலைவராகவும் வர்த்தகரான டி. சி. மூர்த்தி பொருளாளராகவும் கொண்டு 1999 ஆம் ஆண்டு திருப்பணிச் சபையொன்று அமைக்கப்பட்டு 1999 வைகாசியில் பாலஸ்தாபனம் செய்யப்பட்டது. 2000 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11 ஆம் திகதி மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதன் பின் மேற்கொள்ளப்பட்ட திருப்பணியின்போது அஷ்ட லஷ்மிகள், நவதுர்க்கைகள், லக்ஷ்மி நாராயணன், உமையொருபாகன், வைரவப் பெருமான் ஆகிய பரிவார மூர்த்திகளுக்கு பண்டிகைகள் அமைக்கப்பட்டு திருவுருவச் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

இதற்கமைய இவ்வாலயத்தில் கஜ லக்ஷ்மி, சந்தான லக்ஷ்மி, வீரலக்ஷ்மி, விஜய லக்ஷ்மி, தான்ய லக்ஷ்மி, ஐஸ்வர்ய லக்ஷ்மி, தனலக்ஷ்மி, அருள் லக்ஷ்மி ஆகிய அஷ்ட லக்ஷ்மிகளினதும் வன துர்க்கை, ஆலனி துர்க்கை, ஜாத வேதோ துர்க்கை, சாந்தி, துர்க்கை, சபரி துர்க்கை, ஜ்வலத் துர்க்கை, லவண துர்க்கை, தீப துர்க்கை, ஆஸ¤ர துர்க்கை என நவ துர்க்கைகளினதும் திருவுருவச் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

கதிரவனின் ஒளிக் கதிர்கள் கோபுர கலசத்தின் ஊடாகக் கர்ப்பக் கிரகத்திற்கு ஊடுருவிப் பாயும் வண்ணம் கோபுரத்தை அண்டியுள்ள முகட்டுப் பகுதி திறந்தவெளியாக்கப்பட்டது. அடியார்களின் உள்ளத்து உணர்வுகளை அம்பாள் ஈர்த்து உணர்ந்து கொள்ள இலகுவாகும் வண்ணமும் அம்பாளின் அருளை அடியார்கள் உவந்து பெற்றுக்கொள்ள இலகுவாகவும் ஆலய வாயிலிருந்து கர்ப்பக்கிரகம் வரை குளுகுளுவென குளுமையூட்டக் கூடிய கருங்கற்கள் பதிக்கப்பட்டன.

ஆலயம் முழுவதும் தெய்வீகக் கலை வண்ணம் மிளிரும் வகையில் ஆலய முகட்டில் தாமரை மலர்கள் அமைக்கப்பட்டன. இவ்வாறு திருப்பணிகள் பல மேற்கொள்ளப்பட்டு 2000ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு பன்னிரண்டு ஆண்டுகள் நிறைவடையவுள்ளதால் கடந்த 2011.11.14ஆம் திகதி பாலஸ்தானம் செய்யப்பட்டு தற்போது ஆலயத்தின் திருப்பணி வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எதிர்வரும் 2012.04.06ஆம் திகதி இவ்வாலயத்தின் கும்பாபிஷேகம் நடத்தப்படவுள்ளது. இத்திருப்பணிகளை மேற்கொள்ளவும் கும்பாபிஷேகம் நடத்தவும் 30 இலட்சம் ரூபா செலவாகும் என மதிப்பீடு செய்யப்படவுள்ளதால் இத்திருப்பணிகளுக்கு பக்தர்களின் உதவிகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812