திங்கள், 15 ஆகஸ்ட், 2011

ஆடிவேல் விழாவில் இன்று தீர்த்தோற்சவம் எல். ஆர். ஈஸ்வரியின் இன்னிசை கச்சேரி




ஆறுமுகனின் பன்னிரு திருக்கரங்களில் எத்தனையோ ஆயுதங்கள் இருந்தாலும் தனிச் சிறப்பு மிக்கது வேல் மட்டுமே. இறைவனது ஆயுதங்களில் தனியே வைத்து வழிபடும் முறை வேலுக்கு மட்டும் தான் உள்ளது. பழங்காலத்தில் இருந்தே வேல் வழிபாடு நடந்து வருவது சிலப்பதிகாரத்தில் குறிப் பிடப்பட்டுள்ளது. வேல் ஞானத்தின் அம்சம். அந்த வேலைத் தாங்கி இருக்கின்ற முருகப்பெருமானை ஞானவேல் முருகன் என போற்றுகின்றனர். வேலை வழிபட்டால் ஞானம் உண்டாகும். குமரகுருபர சுவாமிகள் நீண்ட காலம் வாய் பேச முடியாத நிலையில் இருந்தார். திருச்செந்தூர் முருகனை மனதார வேண்டி அவனே கதி என இருந்தார். ஒருநாள் தன் பக்தனின் வேண்டுதலை ஏற்று குமர குருபரனின் முன் தோன்றி குருபரா உனக்கு பேசுகின்ற திறனோடு என்னைப் பாடுகின்ற புலமையினையும் வழங்கியுள்ளோம் எனக் கூறி அவரது நாவில் ஞானவேல் கொண்டு எழுதினார். முருகனின் பேராற்றலால் குருபரன் கந்தர் கலிவெண்பாவை பாடினார்.

வேல் பூஜைக்கு மேல் சிறந்த பூஜை எதுவும் இல்லை. இத்தகைய சிறப்பு வாய்ந்த வேலுக்கு விழா எடுப்பது வருடாந்தம் கொழும்பில் நடந்து வரும் ஒரு கைங்கரியமாகும்.

இது இன்று, நேற்று ஒன்று ஆரம்பித்தது இல்லை. 137 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து நடந்து வரும் ஒரு விழாவாகும். வருடாந்தம் ஆடி மாதத்தில் நடைபெறும் கதிர்காம உற்சவத்துடன் ஒட்டியதாக இவ்விழா நடந்து வருவது குறிப்பிடத் தக்கது. இலங்கைத் திருநாட்டின் தலை நகராம் கொழும்பு மாநகரிலே செல்வம் தழைத்தோங்கும் வர்த்தகர்கள் நிறைமிகு புறக்கோட்டை முதலாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ளது சம்மாங்கோடு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தானம். இந்த தேவஸ்தானத்தின் ஆடிவேல் விழா இவ்வாண்டு கடந்த 10 ஆம் திகதி காலை 7 மணியளவில் ஆரம்பமானது.

இவ்வாலயத்தில் கடந்த 11 ஆம் திகதி காலை 8.05 மணியளவில் மூலவருக்கும் உற்சவர் வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ முத்துகுமார சுவாமிக்கும் விசேட பூஜைகள் நடத்தப்பட்டபின் உள்வீதி வலம் வருதல் இடம்பெற்றது.

அதன்பின் முதலாம் குறுக்குத்தெரு தேவஸ்தானத்திலிருந்து சித்திரத் தேர் ரத பவனி ஆரம்பமாகியது. ஆலயத்தில் இருந்து புறப்பட்ட முருகப் பெருமான் மெயின் வீதி, கோட்டை, ஜனாதிபதி மாவத்தை, காலி முகத்திடல், கொள்ளுப்பிட்டி சந்தி, பம்பலப்பிட்டி சந்தி வழியாக சம்மாங்கோடு ஸ்ரீ மாணிக்க விநாயகர் ஆலயத்தை வந்தடைந்தார்.

நேற்று (12.08.2011) பம்பலப்பிட்டி ஸ்ரீ மாணிக்க விநாயகர் ஆலயத்தில் வேல் விழா சுவாமி வீற்றிருக்க ஸ்ரீ துர்க்கை அம்பாளுக்கு நவகலச அபிஷேகம் நடத்தப்பட்டதுடன் நேற்று மு. ப. 11.30 மணிக்கு வேல் விழாவுக்கு விசேட பூஜை நடத்தப்பட்டது. நேற்று மாலை விசேட நாதஸ்வர தவில் கச்சேரியும் விசேட சமய சொற்பொழிவும் நிகழ்த்தப்பட்டன.

இன்று (13.08.2011) காலை 7 மணிக்கு வழமையான பூஜையுடன் கதிர்காம பதியின் மாணிக்க கங்கை யில் இருந்து எடுத்துவரப்பட்ட புண்ணிய நீரினால் தீர்த்தோற்சவம் நடத்தப்படும். இதன்போது ஸ்ரீ மாணிக்க விநாயகர் ஆலயத்தில் சுவாமி மயில் வாகனக் காட்சி, ஆடிவேல் அர்ச்சனை என்பன நடைபெறும்.

அதனைத் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படும். இன்று மாலை 4 மணிக்கு ஸ்ரீ துர்க்கை அம்மனுக்கு நவகலசாபிஷேகமும் சாயரட்சை பூஜையும் வேல் விழா அர்ச்சனையும் விசேட நாதஸ்வர தவில் கச்சேரியும் இடம்பெறும். இன்று மாலை 7 மணி முதல் திரைப்படப் புகழ் கலைஞர்கள் கலைமாமணி டாக்டர் எல். ஆர். ஈஸ்வரி, இளைய குன்னக்குடி வயலின் மணிபாரதி, டிரம்ஸ் ராஜா கலந்துகொள்ளும் இன்னிசைக் கச்சேரி இடம்பெறும்.

இலங்கைக் கலை வல்லுனர், மிருதங்க வித்துவான், லயஞானபூபதி க. சுவாமிநாதனுடன் இன்னிசை நாயகன் எம். மோஹன்ராஜின் அப்சராஸ் இசைக் கலைஞர்களின் இன்னிசை நிகழ்ச்சியும் இதில் இடம்பெறவுள்ளது.

இவ்வாலயத்தில் நாளை 14 ஆம் திகதி காலை முதல் வழமையான பூஜையுடன் ஆடிவேல் விழா அர்ச்சனை இடம்பெறும். அதனைத் தொடர்ந்து திருவமுது போஜனம் வழங்கப்படும்.

நாளை மாலை 6.30 மணிக்கு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி அலங்கரிக்கப்பட்ட சித்திரத் தேரில் எழுந்தருளி பம்பலப்பிட்டி ஸ்ரீ மாணிக்க விநாயகர் ஆலயத்திலிருந்து புறப்பட்டு காலி வீதி ஊடாக பம்பலப்பிட்டி சந்தி கொள்ளுப்பிட்டி சந்தி வழியாக பின்னிரவு 12 மணிக்கு காலி முகத்திடலை அடைந்து பக்தர்களுக்கு அருட்காட்சி புரிவார்.

15 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 6 மணிக்கு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி அலங்கார புருஷராக சித்திரத் தேரில் ஆரோகணித்து ஜனாதிபதி மாவத்தை, கோட்டை, கான் மாணிக்கூட்டு கோபுர சுறுற்றுவட்டம் , மெயின் வீதி, சைனா வீதி, ரெக்ளமேஷன் வீதி, காளிகோவில் சுற்றுவட்டம், செட்டியார் தெரு, ஐந்து லாம்பு சந்தி, மெயின் வீதி, நான்காம் குறுக்குத் தெரு, குமார வீதி, மூன்றாம் குறுக்குத் தெரு, நான்காம் குறுக்குத் தெரு, கெயிசர் வீதி, இரண்டாம் குறுக்குத் தெரு, ஒல்கொட் மாவத்தை, முதலாம் குறுக்குத் தெரு, பேங்ஷால் வீதி வழியாக தேவஸ்தானத்தை வந்தடைவார்.



கே. ஈஸ்வரலிங்கம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812